பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆலன் லிட்டில்
- பதவி, மூத்த செய்தியாளர், பிபிசி நியூஸ்
-
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய மற்றும் நீடித்த நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளது.
ஒரு நிபுணரின் கருத்துப்படி, ‘டிரம்பிசம் அவரது அதிபர் பதவிக் காலத்தைவிட நீண்ட காலம் நீடிக்கும்.”
ஆனால் அமெரிக்கா பின்வாங்கும்போது, எந்த நாடுகள் முன்னணியில் நிற்கத் தயாராக உள்ளன?
கடந்த 1947ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் ஒரு நாளில், காலை 09:00 மணிக்கு, பிரிட்டனின் தூதர் லார்ட் இன்வர்சேப்பல், அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் ஜார்ஜ் மார்ஷலிடம், முக்கியமான தகவல் என்பதைக் குறிக்கும் நீல நிறக் காகிதத்தில் அச்சிடப்பட்ட இரு ராஜதந்திர செய்திகளை வழங்க வெளியுறவுத் துறைக்குள் நுழைந்தார்.
அதில், ஒன்று கிரீஸ், மற்றொன்று துருக்கியைப் பற்றியது.
மிகவும் களைப்புற்று, பிளவுபட்டு, அமெரிக்காவிடம் கடனில் மூழ்கியிருந்த பிரிட்டன், ஆயுதமேந்திய கம்யூனிஸ்ட் கிளர்ச்சியை எதிர்த்துப் போராடும் கிரேக்க அரசாங்கப் படைகளுக்கு இனி ஆதரவைத் தொடர முடியாது என்று அமெரிக்காவிடம் கூறியது.
மேலும் பாலத்தீனம் மற்றும் இந்தியாவில் இருந்து வெளியேறி எகிப்தில் தனது இருப்பைக் குறைக்கும் திட்டங்களை பிரிட்டன் ஏற்கெனவே அறிவித்திருந்தது. மறுபுறம், கிரீஸ் கம்யூனிஸ்டுகளின் மூலம் சோவியத்தின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிடும் ஆபத்தை அமெரிக்கா உடனடியாக உணர்ந்தது.
கிரீஸ் வீழ்ந்தால், துருக்கியும் அதன் பின்னால் சென்று, சூயஸ் கால்வாய் உள்பட கிழக்கு மத்திய தரைக் கடல் மாஸ்கோவின் கட்டுப்பாட்டுக்குள் வரலாம் என்று அமெரிக்கா அஞ்சியது. இது ஒரு முக்கிய உலகளாவிய வர்த்தகப் பாதை.
பின்னர் கிட்டத்தட்ட ஒரே இரவில், பிரிந்து சென்ற பிரிட்டிஷார் விட்டுச் சென்ற வெற்றிடத்திற்குள் அமெரிக்கா நுழைந்தது.
சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் உத்திகள் மாறப் போகின்றனவா?
பட மூலாதாரம், Getty Images
“ஆயுதமேந்திய சிறுபான்மையினரால் அல்லது வெளிப்புற அழுத்தத்தால் அடிமைப்படுத்தப்படுவதை எதிர்க்கும் சுதந்திர மக்களை ஆதரிப்பது அமெரிக்காவின் கொள்கையாக இருக்க வேண்டும்” என்று அதிபர் ஹாரி ட்ரூமன் அறிவித்தார்.
அதுதான் பின்னர், ‘ட்ரூமன் கோட்பாடு’ என்று அறியப்பட்டதன் தொடக்கம். வெளிநாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க உதவுவது அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு இன்றியமையாதது என்ற கருத்து அதன் மையமாக இருந்தது.
அதைத் தொடர்ந்து அமெரிக்கா இரண்டு முக்கிய முயற்சிகளை மேற்கொண்டது.
அதில் ஒன்று, ஐரோப்பாவின் சிதைந்த பொருளாதாரங்களை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான ஒரு பெரிய உதவித் தொகுப்பான மார்ஷல் திட்டம்.
இரண்டாவது 1949இல் நேட்டோ உருவாக்கம். இது ஐரோப்பாவின் கிழக்குப் பகுதியில் தனது கட்டுப்பாட்டை நீட்டித்திருந்த சோவியத் யூனியனிடம் இருந்து ஜனநாயகங்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்டது.
மேற்கத்திய உலகின் தலைமை பிரிட்டனிடம் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற தருணமாக இதைப் பார்ப்பது எளிது. இன்னும் துல்லியமாகச் சொன்னால், அது ஏற்கெனவே நடந்துவிட்டதை வெளிப்படுத்திய தருணம் அது.
இரண்டு பெருங்கடல்களால் பாதுகாக்கப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட தேசமாக இருந்த அமெரிக்கா, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சுதந்திர உலகின் தலைமையாக உருவெடுத்தது.
தனது சக்தியை உலகளாவிய ரீதியில் செலுத்திய அமெரிக்கா, போருக்குப் பின்னர் பல ஆண்டுகளாக உலகின் பெரும்பகுதியைத் தனது வழியில் மறுவடிவமைத்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிறந்த (பேபி பூமர்) தலைமுறை, அமெரிக்காவை போலவே தோற்றமளித்து, நடந்துகொள்ளும் உலகில் வளர்ந்தது. இதன் விளைவாக, அமெரிக்கா மேற்கத்திய உலகின் கலாசார, பொருளாதார, ராணுவ மேலாதிக்க சக்தியாக மாறியது.
ஆயினும், அமெரிக்கா தனது புவிசார் இலக்குகளை வடிவமைத்த முக்கிய உத்திகள் தற்போது மாற வாய்ப்புள்ளது.
பட மூலாதாரம், Getty Images
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பல ஆண்டுகளுக்கு முன்னர் தனது நாடு தனக்காக அமைத்துக் கொண்ட முறையை சவால் செய்த முதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
மேலும், பழைய உலக ஒழுங்கு முடிந்துவிட்டதாகவும், புதிய உலக ஒழுங்கு இன்னும் வடிவம் பெறவில்லை என்றும் பலருக்குத் தோன்றும் வகையில் அவர் இதைச் செய்கிறார்.
‘இதன் அடிப்படையில் எந்த நாடுகள் முன்னோக்கிச் செல்லும்? இதுவரை இல்லாத அளவுக்கு ஐரோப்பாவின் பாதுகாப்பு அதிக அழுத்தத்தில் இருப்பதால், தற்போதைய குழப்பத்தில் உள்ள அதன் தலைவர்களால் தேவையான பதிலைக் கண்டுபிடிக்க முடியுமா?’ என்பவையே தற்போது இருக்கும் கேள்விகள்.
ட்ரூமன் மரபுக்கு ஏற்பட்டுள்ள சவால் என்ன?
கடந்த 1945ஆம் ஆண்டுக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கு குறித்த அதிபர் டிரம்பின் விமர்சனம் பல ஆண்டுகளுக்கு முந்தையது.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் ஜனநாயகங்களை பாதுகாப்பதில் அமெரிக்காவின் பொறுப்பு குறித்துக் கேள்வி எழுப்பியவராக, அவர் மூன்று முக்கிய அமெரிக்க நாளிதழ்களில் முழுப் பக்க தகவல்களை வெளியிட்டார்.
“பல ஆண்டுகளாக , ஜப்பானும் பிற நாடுகளும் அமெரிக்காவை சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன,” என்று அவர் 1987இல் எழுதினார்.
“இந்த நாடுகள் தங்கள் நலன்களைப் பாதுகாக்க நாம் இழக்கும் மனித உயிர்களுக்கும் பில்லியன் கணக்கான டாலர்களுக்கும் அமெரிக்காவுக்கு ஏன் பணம் செலுத்தவில்லை?”
“நமக்குச் சொந்தமில்லாத கப்பல்களைப் பாதுகாக்கிறோம். நமக்குத் தேவையில்லாத எண்ணெயை ஏற்றிச் செல்கிறோம். மேலும் உதவ மறுக்கும் நட்பு நாடுகளுக்காக அதை வழங்குகிறோம். உலகம் அமெரிக்காவின் அரசியல்வாதிகளைப் பார்த்துச் சிரிக்கிறது” என்று அவர் எழுதினார்.
இரண்டாவது முறையாகப் பதவியேற்றதில் இருந்து அவர் தொடர்ச்சியாக இந்த நிலைப்பாட்டை முன்னெடுத்து வருகிறார்.
அமெரிக்க நிர்வாகத்தின் உறுப்பினர்கள் சிலருக்கு, ஐரோப்பா அமெரிக்காவை மிகையாகச் சார்ந்திருப்பதாகக் கருதி எழுந்த கோபம், ஏமனில் உள்ள ஹூதி படைகள் மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் குறித்துக் கசிந்த செய்திகளில் வெளிப்பட்டது.
அந்தச் செய்திகளில், துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் என்ற பெயரில் இருந்த ஒரு கணக்கு, ஐரோப்பிய நாடுகள் இந்தத் தாக்குதல்களால் பயன் பெறக்கூடும் என்று குறிப்பிட்டது. மேலும், “ஐரோப்பாவை தொடர்ச்சியாக அமெரிக்கா சிக்கலில் இருந்து காப்பாற்றிக் கொண்டிருப்பது வெறுப்பாக உள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.
பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் என அடையாளம் காணப்பட்ட மற்றொரு கணக்கு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு பதிலளித்தது.
“துணைத் தலைவர் அவர்களே, ஐரோப்பா இலவசமாகப் பெறும் ஆதரவு மீதான உங்கள் வெறுப்பு எனக்கும் உள்ளது. இது மிகவும் பரிதாபகரமானது” என்று பதிலளித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் தாராள மனப்பான்மையைப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறுபவர்களை விமர்சிப்பதைக் கடந்தும், டிரம்பின் சொந்த நிலைப்பாடு நீள்கிறது.
தனது இரண்டாவது அதிபர் பதவியின் தொடக்க காலத்தில், அவர் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை அரவணைத்து, யுக்ரேனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி வழங்கப்படாது என்றும், இழந்த பிரதேசத்தை மீண்டும் பெற எதிர்பார்க்கக்கூடாது என்றும் ரஷ்யாவிடம் கூறினார்.
பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன் இரண்டு முக்கியமான பேரம் பேசும் சாதகங்களை ஒப்படைத்துவிட்டதாகப் பலர் இதைக் கருதினர். அதற்குப் பதிலாக ரஷ்யாவிடம் இருந்து அவர் எதையும் கேட்கவில்லை என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.
மறுபுறம், டிரம்பின் சில ஆதரவாளர்கள் தாங்கள் பகிரும் பல பாரம்பரிய கொள்கைகளைப் பிரதிபலிக்கும் ஒரு வலுவான தலைவராக புதினை பார்க்கிறார்கள். சிலர் புதினை, “முற்போக்குவாதத்துக்கு எதிரான போரில்” ஒரு கூட்டாளியாகக் கருதுகிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவுக்குள் இருக்கும் கலாசார மோதல்கள் ஓரளவுக்கு அதன் வெளியுறவுக் கொள்கை முடிவுகளில் செல்வாக்கு செலுத்துகின்றன.
கூடுதலாக, ஐரோப்பாவின் பாதுகாப்பு, அதனுடன் முரண்பட்டு நிற்கும் அமெரிக்காவின் இரண்டு சித்தாந்தங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிளவு டிரம்பின் தனிப்பட்ட கருத்துகளை மட்டுமல்ல, அதை விடவும் அதிகம் என்றும், அவரது பதவிக்காலம் முடியும் வரை ஐரோப்பா காத்திருக்க முடியாது என்றும் சிலர் கருதுகிறார்கள்.
“அமெரிக்கா ஐரோப்பிய மதிப்புகளில் இருந்து விலகிக் கொண்டிருக்கிறது,” என்று லண்டன் ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்டின் (RUSI) மூத்த ஆய்வாளர் எட் அர்னால்ட் தெரிவிக்கிறார்.
“இதை ஐரோப்பியர்கள் ஏற்றுக்கொள்வது கடினம், ஏனெனில் இது ஒரு கட்டமைப்பு மற்றும் கலாசார மாற்றமாகவே காணப்படுவதால், நீண்ட காலத்துக்குத் தொடர்வதற்கும் வாய்ப்புள்ளது.”
“ஒரு தனிப்பட்ட நபராக, அமெரிக்காவின் தற்போதைய போக்கு டிரம்புக்கு பிறகும் நீடிக்கும் என்று நான் நினைக்கிறேன். டிரம்பிசம் அவரது அதிபர் பதவியைக் கடந்தும் நீடிக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
நேட்டோ ஒப்பந்தத்தின் 5வது பிரிவு எதிர்கொள்ளும் சிக்கல்
ஐரோப்பிய பாதுகாப்பிற்கு இனி முதன்மை உத்தரவாதமாக அமெரிக்கா இருக்காது என்றும், ஐரோப்பிய நாடுகள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்று அதற்கான செலவை ஏற்க வேண்டும் என்றும் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
“[நேட்டோ நாடுகள்] பணம் கொடுக்கவில்லை என்றால், நான் அவர்களைப் பாதுகாக்கப் போவதில்லை. இல்லை, நான் அவர்களைப் பாதுகாக்கப் போவதில்லை” என்று அதிபர் டிரம்ப் இந்த மாதத் தொடக்கத்தில் கூறினார்.
கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாக, ஐரோப்பிய பாதுகாப்பின் ஆதாரமாக வட அட்லான்டிக் ஒப்பந்தத்தின் ஐந்தாவது பிரிவு அமைந்துள்ளது.
இந்தப் பிரிவின்படி, கூட்டணியின் எந்தவொரு உறுப்பு நாடு மீதான தாக்குதலும், கூட்டணியின் அனைத்து நாடுகளின் மீதான தாக்குதலாகவே கருதப்படும்.
கடந்த மாதம், வெள்ளை மாளிகைக்குச் செல்வதற்கு முன்பு, பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் சர் கியர் ஸ்டார்மர் அளித்த ஒரு நேர்காணலில், அமெரிக்கா இன்னும் நேட்டோவின் முதன்மை உறுப்பினராக உள்ளதாகவும், டிரம்ப் தனிப்பட்ட முறையில் ஐந்தாவது பிரிவுக்கான உறுதிப்பாட்டில் நிலைத்திருப்பதாகவும் என்னிடம் கூறினார்.
மற்றவர்கள் அந்த விஷயத்தில் அவர் அளவுக்கு உறுதியாக இருக்கவில்லை.
பட மூலாதாரம், Getty Images
கடந்த கன்சர்வேடிவ் அரசாங்கத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்த பென் வாலஸ், “பிரிவு ஐந்து குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கிறது என நான் நினைக்கிறேன்” என்று இந்த மாதத் தொடக்கத்தில் என்னிடம் கூறினார்.
“பிரிட்டன் உள்பட ஐரோப்பாவும் முன்னேறி, பாதுகாப்பில் பெரிய முதலீடு செய்யவில்லை என்றால், நேட்டோவும், பிரிவு ஐந்தும் முடிவுக்கு வரும்.”
“இப்போது, ரஷ்யா தாக்கினால் பிரிவு ஐந்து செயல்படும் என்று நான் உறுதியாகச் சொல்ல முடியாது. அமெரிக்கா மீட்புக்கு வரும் என்று நான் நிச்சயமாக நம்பமாட்டேன்” என்றார் அவர்.
பிரெஞ்சு நிறுவனமான இன்ஸ்டிட்யூட் எலாபே நடத்திய கருத்துக் கணிப்பின்படி, கிட்டத்தட்ட முக்கால்வாசி பிரெஞ்சு மக்கள் இப்போது அமெரிக்கா பிரான்சின் நட்பு நாடு அல்ல என்று நினைக்கிறார்கள்.
வரலாற்று ரீதியாக அமெரிக்க சார்பு நாடுகளான பிரிட்டனில் பெரும்பான்மையினரும் டென்மார்க்கில் மிகப்பெரிய பெரும்பான்மையினரும் அமெரிக்காவை பற்றிய எதிர்மறை பார்வையைக் கொண்டுள்ளனர்.
“நேட்டோவிற்கு டிரம்ப் ஏற்படுத்திய சேதம் அநேகமாக சரிசெய்ய முடியாதது” என்று வாஷிங்டன் டிசி-யில் உள்ள ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டின் மூத்த உறுப்பினரும், எழுத்தாளரும், டிரம்பை நீண்ட காலமாக விமர்சிப்பவருமான பழமைவாத அரசியல் வர்ணனையாளர் ராபர்ட் ககன் கூறுகிறார்.
“இனி நம்பகமானதாக இல்லாத அமெரிக்க உத்தரவாதத்தையே இந்தக் கூட்டணி இதுவரை நம்பியிருந்தது.” ஆயினும்கூட, ஐரோப்பாவை தனது பாதுகாப்பு செலவினங்களை ஒழுங்கமைக்கச் சொன்ன முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் இல்லை.
கடந்த 2016ஆம் ஆண்டில், பராக் ஒபாமா நேட்டோ நட்பு நாடுகளைத் தங்கள் செலவினங்களை அதிகரிக்குமாறு வலியுறுத்தினார். “ஐரோப்பா சில நேரங்களில் அதன் சொந்தப் பாதுகாப்பில் மெத்தனமாக இருந்து வருகிறது” என்று அவர் கூறியிருந்தார்.
மேற்கத்திய நாடுகளின் கூட்டணி உடையத் தொடங்கி விட்டதா?
பட மூலாதாரம், Getty Images
இவை அனைத்தும் புதினுக்கு சாதகமான செய்தி.
‘யூரோ-அட்லான்டிக் பாதுகாப்பு அமைப்பு நம் கண்களுக்கு முன்பாக உடைந்து வருகிறது. உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஐரோப்பா ஓரங்கட்டப்படுகிறது, குடியேற்றம் போன்ற சவால்களின் குழப்பத்தில் மூழ்கி வருகிறது. சர்வதேச செல்வாக்கையும் தனது கலாசார அடையாளத்தையும் இழக்கிறது’ என்று அவர் கடந்த ஆண்டு கூறினார்.
மார்ச் மாதத் தொடக்கத்தில், வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் வான்ஸுடன் வொலோதிமிர் ஸெலன்ஸ்கியின் மோசமான சந்திப்பு நடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் ‘மேற்கத்திய உலகின் பிரிவினை தொடங்கிவிட்டது’ என்று அறிவித்தார்.
“ஐரோப்பாவில் ரஷ்யாவின் நோக்கங்களைப் பாருங்கள்,” என்று சாத்தம் ஹவுஸில் உள்ள ஐரோப்பிய திட்டத்தின் தலைவர் ஆர்மிடா வான் ரிஜ் கூறுகிறார்.
“ஐரோப்பாவில் அதிர்ச்சியை உருவாக்குவதுதான் அதன் இலக்கு. நேட்டோவை பலவீனப்படுத்தி, அமெரிக்க படைகளை இங்கிருந்து வெளியேற்றுவது அதற்கான முக்கியக் குறிக்கோள்.”
“தற்போது, ஐரோப்பாவில் ரஷ்யா தனது இலக்குகளை அடைவதாகத் தெரிகிறது. இது வெற்றிகரமாக, பிராந்தியத்தில் உறுதியற்ற தன்மையை உருவாக்கி நேட்டோவை பலவீனப்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறுமாறு ரஷ்யாவால் அமெரிக்காவை இன்னும் கட்டாயப்படுத்த முடியவில்லை என்றாலும், இது எதிர்காலத்தில் நடக்குமா இல்லையா என்று யாருக்குத் தெரியும்?” என்று அவர் கேள்வியெழுப்புகிறார்.
ஐரோப்பா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்ன?
பட மூலாதாரம், Getty Images
ஐரோப்பா இங்கிருந்து எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று, போதுமான பாதுகாப்பு திறன்களை எவ்வாறு உருவாக்குவது என்பதுதான்.
எண்பது ஆண்டுகளாக அமெரிக்காவின் வலிமையை நம்பியிருப்பது பல ஐரோப்பிய ஜனநாயகங்களை பாதிப்படையச் செய்துள்ளது.
உதாரணமாக, பனிப்போரின் உச்சக்கட்டத்தில் இருந்து பிரிட்டன் தனது ராணுவ செலவினங்களைக் கிட்டத்தட்ட 70% குறைத்துள்ளது.
(கடந்த 1990களின் முற்பகுதியில், பனிப்போர் முடிவடைந்தபோது, ஐரோப்பா அமைதியான சூழலின் பலனை அனுபவிக்க முடிவு செய்து, பாதுகாப்பு செலவினங்களைத் தளர்த்தும் நீண்டகால செயல்முறையைத் தொடங்கியது.)
“(பனிப்போரின் போது), எங்களுக்குப் பெரிய பாதுகாப்பு வரவு செலவுத் திட்டங்கள் இருந்தன, அமைதியின் பயன்களை அனுபவித்தோம். அந்த நேரத்தில் அது நியாயமானது என்ற வாதத்தை முன்வைக்கலாம்” என்று வாலஸ் கூறுகிறார்.
“பிரச்னை என்னவென்றால், ராணுவ செலவினங்களைக் குறைத்த காலகட்டத்திற்குப் பிறகு, நிதியை வேறு துறைகளுக்கு மறு ஒதுக்கீடு செய்வதற்காக, பாதுகாப்புக்கான வரவு செலவுத் திட்டமானது எப்போதும் செலவைக் குறைக்கக்கூடிய துறையாகிப் போனது. அங்குதான் நாம் வரலாற்றுப் பாடங்களை மறந்துவிட்டோம்.”
பிரிட்டன் 2027ஆம் ஆண்டுக்குள் தனது பாதுகாப்பு செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக உயர்த்தும் என்று பிரதமர் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் அது போதுமா?
“தற்போதைய பாதுகாப்பைப் பராமரிப்பதற்கு மட்டும்தான் அது போதுமானதாக இருக்கும். பலவீனங்களை நிவர்த்தி செய்வதற்கும், நமது ராணுவம் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யவும், அமெரிக்கர்கள் வெளியேறினால் ஏற்படும் குறைபாடுகளை நிரப்பவும் இது போதாது” என்கிறார் வாலஸ்.
பட மூலாதாரம், Getty Images
பின்னர் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு பற்றிய கேள்விகளும் அதிகமாக உள்ளன.
“மேற்கத்திய நாடுகளின் ராணுவ ஆள் சேர்ப்பு குறையத் தொடங்கியுள்ளது. இது பிரிட்டனில் மட்டுமல்ல,” என்றும் “தற்போது, இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதில்லை. அது ஒரு பிரச்னையாக உள்ளது” என்றும் வாலஸ் கூறுகிறார்.
ஆனால் ஜெர்மனியின் புதிய தலைவர் பிரீட்ரிக் மெர்ஸ், ஐரோப்பா அமெரிக்காவில் இருந்து தன்னைச் சுதந்திரமாக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், நேட்டோவை “ஐரோப்பியமயமாக்குவதற்கு,” தற்போது அமெரிக்கா மட்டுமே கொண்டிருக்கும் திறன்களை வழங்கக்கூடிய ஒரு சொந்த ஐரோப்பிய ராணுவ-தொழில்துறை வளாகத்தை உருவாக்க வேண்டும்.
மற்றவர்கள் ஐரோப்பா ராணுவ ரீதியாக அதிக தன்னம்பிக்கை அடைய வேண்டும் என்ற கருத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் சிலர் முழு ஐரோப்பாவும் இதில் உடன்படவில்லை என்றும் கவலை தெரிவிக்கிறார்கள்.
“தற்போது நாம் இருக்கும் நிலைமையில், பெரும்பாலான கிழக்கு ஐரோப்பியர்களுக்கு இதை மறுபடியும் நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து மேற்கு ஐரோப்பாவுக்கு, குறிப்பாக ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளை நோக்கிச் செல்லச் செல்ல, அங்குள்ள நாடுகள் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களைக் குறைவாகக் கருதுகின்றன” என்று ஐரோப்பிய சீர்திருத்த மையத்தின் துணை இயக்குநர் இயன் பாண்ட் கூறுகிறார்.
“ஐரோப்பாவில் தற்போதுள்ள பார்வை என்னவென்றால், இது இனி ஒரு விவாதப் பொருள் அல்ல. நாம் இதை எவ்வாறு செயல்படுத்தலாம், ஒருவேளை எவ்வளவு விரைவாகச் செய்யலாம் என்பதே விவாதமாக உள்ளது. ஆனால், இதை நாம் இப்போது செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது,” என்று ஆர்னால்ட் ஒப்புக்கொள்கிறார்.
புதிய உலக ஒழுங்கை ஒன்றாக இணைத்தல்
வரலாற்றாசிரியர் டிமோதி கார்டன் ஆஷின் கூற்றுப்படி, அமெரிக்கா மட்டுமே தற்போது வழங்கும் “மிக முக்கியமான விஷயங்களின்” பட்டியல் ஒன்று உள்ளது.
“இவை மூலோபாய செயல் திறனை வழங்குபவை என அழைக்கப்படுகின்றன,” என்று அவர் கூறுகிறார். “செயற்கைக்கோள்கள், உளவுத்துறை, பேட்ரியாட் ஏர் டிபென்ஸ் பேட்டரிகள் ஆகியவை மட்டுமே ரஷ்ய பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீழ்த்த முடியும். மேலும், மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள், நாம் [அமெரிக்கா தவிர மற்ற நாடுகள்] இவற்றுக்கான சொந்த வடிவத்தை உருவாக்க முயல வேண்டும்.”
“மாற்றத்தை நோக்கிய இந்தப் பயணத்தில், அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இருந்து நீங்கள் முழுவதுமாக ஐரோப்பியமயமாக்கப்பட்ட ஒரு நேட்டோவை பெறுவீர்கள்.
அமெரிக்க அதிபர் ‘எங்களை இதில் சேர்க்க வேண்டாம்’ என்று கூறினாலும்கூட, அதன் படைகள், தேசிய சக்திகள், மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் திறன்கள் இணைந்து ஐரோப்பாவை பாதுகாக்கும் அளவிற்கு அது வலுவாக இருக்கும். ஆனால் இதை எப்படி அடைவது என்பதுதான் கேள்வி.
ஐரோப்பாவிற்குச் சொந்தமான ஐரோப்பிய பாதுகாப்பு தொழில்துறை தளத்தை உருவாக்குவது அவசியம் என்று வான் ரிஜ் வலியுறுத்துகிறார். அதேபோல் அதை அடைவதில் உள்ள சிரமங்களை அவர் முன்கூட்டியே கணித்துள்ளார்.
“உண்மையில் இதை எப்படிச் செய்வது, உண்மையில் இதைச் செய்யலாமா வேண்டாமா என்பது குறித்து ஐரோப்பாவிற்குள் உள்ள பிளவுகள்தான் மிகவும் கடினமானவை.”
பட மூலாதாரம், Getty Images
ஐரோப்பிய ஆணையமும் நிபுணர்களும் பல ஆண்டுகளாக இந்தப் பாதுகாப்பு அமைப்பு எவ்வாறு செயல்பட முடியும் என்பதைக் கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர்.
“பாரம்பரியமாக, தேசிய நலன்களின் காரணமாக இது மிகவும் சிக்கலானதாக இருந்து வந்திருக்கிறது. எனவே, இப்போது இதைச் செயல்படுத்துவதும் எளிதாக இருக்காது.”
இதற்கிடையில், பனிப்போருக்குப் பிந்தைய, விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கை மறுக்கவும், இறையாண்மை கொண்ட நாடுகள் தங்கள் சொந்த எதிர்காலத்தையும் கூட்டணிகளையும் தேர்வு செய்யும் உரிமையைக் கேள்விக்கு உட்படுத்தவும் டிரம்ப் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.
ரஷ்யா தனது ஜார் மற்றும் சோவியத் பேரரசுகளின் காலத்தில் செய்ததுபோல், சர்வதேச உடன்பாடுகளால் கட்டுப்படுத்தப்படாத பெரிய சக்திகள், சிறிய, பலவீனமான நாடுகளின் மீது தங்கள் விருப்பத்தைத் திணிக்கச் செய்யும் விருப்பத்தை விளாதிமிர் புதனுடன் அவர் பகிர்ந்து கொள்வதாகத் தெரிகிறது.
இது, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நாற்பது ஆண்டுகளாக நிலவிய ‘வட்டாரக் கட்டுப்பாட்டு’ அமைப்புக்குத் திரும்புவதை வெளிப்படுத்துகிறது.”
டொனால்ட் டிரம்ப், ஒரு நேட்டோ நாடு தாக்கப்படுமானால் என்ன செய்வார் என்பது நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவின் உதவிக்கான உத்தரவாதம் இனி தானாகக் கிடைக்காது என்பது முக்கியமான விஷயம். அதாவது, ஐரோப்பா இதற்குப் பதில் அளிக்க வேண்டும்.
ஒற்றுமையாக நிலைத்திருக்க வேண்டும், இறுதியாகத் தனது பாதுகாப்பிற்குப் போதுமான நிதியளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் எந்தவொரு பெரிய வல்லரசின் “செல்வாக்கு வட்டத்திற்குள்” இழுக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு