படக்குறிப்பு, இந்தியா மீது 25% வரி அமெரிக்காவில் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உட்பட பல நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய வரிகள் விதித்துள்ளார். இந்தியா சரக்குகள் மீது 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், யாருக்கு எவ்வளவு வரி, அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய பத்து விஷயங்கள் :
25% வரி : அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய சரக்குகள் மீது 25% வரி விதித்துள்ளார். அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு 90 நாள் அவகாசம் வழங்கப்பட்டது. அந்த அவகாசம் ஆகஸ்ட் 1ம் தேதி முடிவடையும் நிலையில், 25% வரிகள் அமலுக்கு வருகிறது. இந்தியா அமெரிக்கா இடையில் இது வரை நான்கு சுற்று வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. எனினும் வரிகள் குறைப்பு குறித்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. மேலும் ரஷ்யாவிடமிருந்து ராணுவ உபகரணங்கள் மற்றும் எரிசக்தி வாங்குவதற்காக அபராதம் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
முடிவுறாத பேச்சுவார்த்தை : ஏப்ரல் மாதம் டிரம்ப் பதவியேற்ற போது சுமார் 100 நாடுகள் மீது வரிகள் விதிக்கப்பட்டன. அமெரிக்க சரக்குகள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகளின் சரக்குகள் மீது அமெரிக்கா பதில் வரி விதிக்கும் என்று கூறப்பட்டது. இந்தியாவுக்கு முதலில் 26% வரி விதிக்கப்பட்டது. அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு ஜூலை 9ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. பின்பு இது ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. எனினும் இந்த அவகாசம் முடியும் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியா மீது 25% வரி விதித்து டிரம்ப் அறிவித்துள்ளார்.
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாத நிலையில், வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
3. ‘இந்தியா மீது அதிருப்தி’ : இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதிபர் டிரம்ப் மற்றும் ஒட்டுமொத்த வர்த்தகக் குழுவும் இந்தியா மீது சற்று ‘அதிருப்தியில்’ உள்ளனர் என நிதித்துறை செயலர் ஸ்காட் பெசண்ட் கூறியுள்ளார். “இந்தியா முதலில் பேச்சுவார்த்தைக்கு வந்தது, ஆனால் அதன் பிறகு விசயங்களை மெதுவாகவே நகர்த்தி வருகிறது. மேலும் தடை செய்யப்பட்ட எண்ணெய்யை ரஷ்யாவிலிருந்து பெறும் பெரிய இறக்குமதியாளர்களில் இந்தியாவும் ஒன்று, அதை அவர்கள் பிறகு சுத்திகரித்து விற்கிறார்கள்” என்றும் அவர் கூறினார்.
4. பியூஷ் கோயல் விளக்கம் :நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், புதிய வரி விதிப்புகளின் தாக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார். இந்திய விவசாயிகள், தொழிலாளர்கள், ஏற்றுமதியாளர்கள், தொழில் முனைவோர், சிறு குறு நிறுவனங்கள் என அனைவரின் நலன் குறித்தும் அரசு “மிகுந்த முக்கியத்துவம்” கொடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், SANSAD TV
படக்குறிப்பு, அமெரிக்க வரி விதிப்பின் தாக்கம் குறித்து ஆலோசித்து வருவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
5. ஆறு இந்திய நிறுவனங்களுக்கு தடை : இரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஆறு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. “இரான் மத்திய கிழக்கில் போரை ஊக்குவித்து, கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஸ்திரமற்ற நிலைகளை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. எனவே இரானின் எண்ணெய், எண்ணெய் பொருட்கள், பெட்ரோகெமிகல் தொழில் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள 20 நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்படுகின்றன” என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அந்த பட்டியலில் அல்கெமிகல் சொல்யூஷன்ஸ் பிரவைட் லிமிடெட், க்ளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட், ஜூபிடர் டை கெம் ப்ரைவேட் லிமிடெட், ராமனிக்லால் எஸ். கோசைலா & கோ, பெர்சிஸ்டண்ட் பெட்ரோகெம் ப்ரைவேட் லிமிடெட் மற்றும் காஞ்சன் பாலிமர்ஸ் ஆகிய ஆறு இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு சர்வதேச சட்டத்தையும் தேசிய இறையாண்மையையும் மீறுகிறது என்று இரான் கண்டனம் தெரிவித்துள்ளது. இது நவீன பொருளாதார ஏகாதிபத்தியம் என்றும் இரான் விமர்சித்துள்ளது.
6. பிரேசிலுக்கு 50% வரி : மேலும் பல நாடுகளுக்கு புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக பிரேசிலுக்கு 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள பட்டியலில் பிரேசிலுக்கு 10% என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள 40% வரியை சேர்த்தே இது கணக்கிடப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது வர்த்தகத்தின் அடிப்படையிலானது அல்ல, அரசியல் ரீதியானது என்கிறார் பிபிசியின் தென் அமெரிக்கா செய்தியாளர் ஐயோன் வெல்ஸ், “ஜூலை மாதத்தில் பேசிய டிரம்ப், பிரேசில் உடன் வர்த்தக குறைபாடு இருப்பதாக பொய்யாக கூறியிருந்தார், உண்மையில் அமெரிக்காவுக்கு பல மில்லியன் டாலர் கூடுதலாக கிடைக்கிறது. பிரேசிலின் முன்னாள் அதிபர், வலது சாரியான ஜெய்ர் பொல்சொனாரோ மீது நடைபெற்ற விசாரணைகளுக்கு எதிர்வினையாக இந்த வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரும் அவரது ஆதரவாளர்களும் ஆட்சிக் கலைக்க முயன்று, தற்போதைய அதிபர் லுலா டா சில்வாவை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவிக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அதிகபட்சமாக பிரேசிலுக்கு 50% வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
7. கனடாவுக்கு அதிகரித்த வரி : கனடாவுக்கான வரி விதிப்பு 25% முதல் 35% ஆக அதிகரித்து விதித்துள்ளது அமெரிக்கா. கனடா போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க போதிய முயற்சிகள் எடுக்காததால் வரிகளை அதிகப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8. எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு வரி? : சிரியாவுக்கு 41% விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக உள் நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு வரும் நாட்டுக்கு இது உயரிய வரி விதிப்பாகும். அடுத்ததாக லாவோஸ் மற்றும் மியான்மாருக்கு தலா 40% வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆசிய பொருளாதாரங்களை டிரம்பின் வரி விதிப்பு பாதிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்து வந்திருந்தனர்.
9. அதிக வர்த்தகம் செய்தும் அதிக வரி : சுவிட்சர்லாந்துக்கு 39% வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் சுறுசுறுப்பான வர்த்தகத்தில் ஈடுபட்டும், அதிக வரிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் ஒரே நாடு இதுவாகும். இராக் மற்றும் செர்பியா ஆகிய நாடுகளுக்கு தலா 35% வரி விதித்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அல்ஜீரியா, போஸ்னியா, ஹெர்ஸ்கோவினா, லிபியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு தலா 30% வரி விதிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பாகிஸ்தானுக்கான வரிகளி 29%லிருந்து 19% ஆக குறைத்ததற்கு அமெரிக்க அதிபருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் நன்றி தெரிவித்துள்ளார்.
10. பாகிஸ்தானுக்கு குறைந்த வரி : தெற்கு ஆசியாவிலேயே குறைந்த வரி பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு 19% வரி விதிக்கப்பட்டுள்ளது. முந்தைய 29% வரி விதிப்பை குறைத்ததற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவித்திருந்தார். இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதாரக் கூட்டுக்கான புதிய தொடக்கமாக இருக்கும் என பாகிஸ்தான் நிதி அமைச்சர் அறிக்கையில் தெரிவித்தார். குறைந்த வரி விதிப்பு பாகிஸ்தானின் ஆடை துறையை ஊக்குவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் மொத்த ஏற்றுமதியில் 60% ஆடைகளாகும். இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அமெரிக்காவுக்கு ஆடை ஏற்றுமதி செய்யும் இந்தியா, வங்கதேசம், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு பாகிஸ்தானை விட அதிக வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக பாகிஸ்தானின் எண்ணெய் வளங்களை மேம்படுத்த ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவும் பாகிஸ்தானும் இறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.