பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி இந்தியா செய்தியாளர்
-
உலக அளவில் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்திலும், வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரமாகவும் இந்தியா உள்ளது.
ஆனால் சமீபத்திய காலங்களில், இறக்குமதிகளை கட்டுப்படுத்தி, உள்நாட்டு வர்த்தக பாதுகாப்பை மையமாக கொண்ட கொள்கைகளைப் பின்பற்றி இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள், அதன் உலகளாவிய போட்டிச்சூழலை கடினமாக்கி உள்ளன.
இந்தியாவின் சுங்க வரிகள் அதிகமாக உள்ளன.
மேலும் உலகளாவிய ஏற்றுமதிகளில் இந்தியாவின் பங்கு 2 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
இந்தியாவின் விரிவான உள்நாட்டு சந்தையே அதன் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது.
ஏனெனில் உலகின் பிற பகுதிகள் மந்தமாக வளர்ச்சியடைந்துவரும் நிலையில், இந்தியா பல நாடுகளை விட வேகமாக முன்னேறியுள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் வரி விதிப்பு நடவடிக்கைகளால் உலக நாடுகள் கொந்தளிப்பாக உள்ள இச்சூழலில், பல நாடுகள் பிற நாடுகளில் இருந்து பொருட்கள் வாங்குவதைக் குறைத்து, தங்களை பாதுகாக்க முயற்சிக்கின்றன.
இந்தியா உலக வர்த்தகத்தில் குறைவாக ஈடுபட்டதால், தற்போதைய வர்த்தக நெருக்கடியில், குறுகிய காலத்துக்கு அது இந்தியாவுக்கு பாதுகாப்பானதாக இருக்கலாம்.
வரிவிதிப்புகளில் தற்காலிக பாதுகாப்பு வழங்கும் இந்தியாவின் வர்த்தகக் கொள்கை
பட மூலாதாரம், Reuters
டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் தனது சுங்க வரி அறிவிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்துள்ளார். இதுபோல் மாற்றம் அடையும் அமெரிக்க வர்த்தகத் திட்டங்களுக்கு பல நாடுகள் பதிலளிக்க முயற்சித்து வருகின்றன.
ஆனால், இந்தியா உலக வர்த்தகத்தில் குறைவாக ஈடுபட்டிருந்ததால், வர்த்தகத்தை அதிகமாக நம்பியுள்ள பிற நாடுகளை விட, இந்தியாவால் இச்சூழலை சுலபமாக சமாளிக்க முடிந்திருக்கலாம்.
“உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவின் ஈடுபாடு குறைவாக இருப்பது நமக்கு சாதகமாக அமையலாம். சுங்க வரிகளால் ஏற்படும் அழுத்தத்தால், ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரங்கள் பாதிப்படையும்போது, நாம் தொடர்ந்து 6 சதவிகித வளர்ச்சி பெறுகிறோம் என்றால், ஒப்பிட்டுப் பார்க்கும்போது நாம் வலிமையாகத் தோன்ற தொடங்குவோம். குறிப்பாக, நம்மிடம் ஒரு பெரிய உள்நாட்டு சந்தை இருப்பது முக்கியமான ஆதரவாக இருக்கும்,” என்கிறார் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திரா காந்தி மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் பொருளாதார இணைப் பேராசிரியர் ராஜேஸ்வரி சென்குப்தா.
இந்தியா, உலக வர்த்தகத்தில் குறைவாக ஈடுபட்டது, இப்போது நமக்கு ஒரு நன்மையாக மாறியுள்ளது.
ஆனால் அதனை மட்டும் நம்பி இருக்க முடியாது.
புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்த, இந்தியா விரைவாக செயல்பட வேண்டும், படிப்படியாக மற்றும் திட்டமிட்ட வகையில் வர்த்தகத்தை மெதுவாக விரிவாக்கும் எண்ணத்தோடு இருக்க வேண்டியதும் அவசியம்,” என்கிறார் ராஜேஸ்வரி சென்குப்தா.
வர்த்தகத் தடைகள் மற்றும் சுங்க வரிகளுடன் இந்தியாவுக்கு நீண்டகால மற்றும் சிக்கலான தொடர்பு உள்ளதால், இது எளிதாக நடக்காது.
பட மூலாதாரம், Getty Images
கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணரும், நன்கு அறியப்பட்ட வர்த்தக ஆராய்ச்சியாளருமான அரவிந்த் பனகாரியா, “இந்தியாவின் வர்த்தகக் கொள்கை: 1990கள் மற்றும் அதற்குப் பிறகு” என்ற தனது நூலில், இந்தியாவின் வர்த்தக அணுகுமுறையின் சிக்கலான மற்றும் பெரும்பாலும் சீரற்ற வளர்ச்சியை விளக்கியுள்ளார்.
போருக்கு இடைப்பட்ட காலத்தில், ஜவுளி, இரும்பு மற்றும் எஃகு போன்ற தொழில்கள் அதிக பாதுகாப்பை வலியுறுத்தி, அதனை பெற்றுக்கொண்டன.
இரண்டாம் உலகப் போரின் காரணமாக நீடித்த பற்றாக்குறைகள், இன்னும் கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு வழிவகுத்தன.
இவை, பின்னர் இறக்குமதிக்கான உரிமம் பெறும் முறைகளால் கட்டுப்படுத்தப்பட்டன.
தைவான், தென் கொரியா, சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகள் 1960களில் ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி உத்திகளை பின்பற்றிக் கொண்டு ஆண்டுதோறும் 8–10 சதவிகிதம் என்ற வளர்ச்சி விகிதங்களை அடையத் தொடங்கின.
ஆனால் அதற்குப் பதிலாக, இறக்குமதிகளை குறைத்து, உள் நாட்டுக்குள் உற்பத்தியை ஊக்குவிக்கும் இறக்குமதி கொள்கையை இந்தியா வலுப்படுத்த நினைத்தது.
இதன் விளைவாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1957–58ல் 10 சதவிகிதத்தில் இருந்த இறக்குமதிகள், 1969–70ல் 4 சதவிகிதமாக குறைந்தன.
1960களின் நடுப்பகுதியில், இந்தியா நுகர்வோர் பொருட்களின் இறக்குமதியை முழுமையாகத் தடை செய்தது.
இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு தரத்தை மேம்படுத்தும் அழுத்தம் இல்லாமல் போனது.
மேலும், உலகத்தரம் வாய்ந்த பொருட்கள் மற்றும் நவீன உலகத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பும் அவர்களுக்கு மறுக்கப்பட்டது. இந்தியப் பொருட்கள் உலகச் சந்தைகளில் தங்களது போட்டித்தன்மையை இழந்தன, ஏற்றுமதிகள் தேக்கமடைந்தன.
இதன் விளைவாக ஏற்பட்ட அந்நியச் செலாவணி பற்றாக்குறை இறக்குமதி கட்டுப்பாடுகளை இன்னும் இறுக்கமாக்கியது.
இந்த நிலை வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு மோசமான சூழலை உருவாக்கியது.
1951 முதல் 1981 வரையிலான 30 ஆண்டுகளில், நாட்டின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு சராசரியாக வெறும் 1.5% மட்டுமே வளர்ந்தது.
1990களில் ஏற்பட்ட மாற்றம்
இச்சூழலில் 1991 ஆம் ஆண்டு திருப்புமுனை ஏற்பட்டது.
அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்ட இந்தியா, பல இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி, ரூபாயின் மதிப்பை குறைக்க அனுமதித்தது.
இந்த முடிவுகள், இறக்குமதிகளுடன் போட்டியிடும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு தேவைப்படும் ஊக்கத்தை வழங்கின.
உலக வர்த்தக அமைப்பு (WTO) நுகர்வோர் பொருட்களின் இறக்குமதி உரிமத்துக்கு (இறக்குமதி உரிமம் வழங்கும் நடைமுறை) எதிராக தீர்ப்பளித்த பிறகு, 2001 ஆம் ஆண்டில் அந்த நடைமுறை முடிவுக்கு வந்தது,
அதன் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
2002-2003 மற்றும் 2011–12 ஆண்டுகளுக்கிடையில், இந்தியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி ஆறு மடங்கு அதிகரித்து, 75 பில்லியன் டாலரிலிருந்து 400 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது.
வர்த்தக தாராளமயமாக்கல் மற்றும் பிற சீர்திருத்தங்களின் காரணமாக, ஒட்டுமொத்த 20ஆம் நூற்றாண்டு முழுவதிலும் இருந்ததைவிட, 21ஆம் நூற்றாண்டின் முதல் 17 ஆண்டுகளில், இந்தியாவின் தனிநபர் வருமானம் அதிகமாக வளர்ந்துள்ளது என்று பேராசிரியர் பனகாரியா கூறுகிறார்.
ஆனால் வர்த்தக கொள்கைகளுக்கான எதிர்ப்பு தொடர்ந்து நீடித்து வருகின்றது.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் தாராளமயமாக்கல் கொள்கையின் விளைவுகள்
இந்தியாவின் வர்த்தக தாராளமயமாக்கல், முதலில் 1996–97ஆம் ஆண்டிலும், பின்னர் 2018ம் ஆண்டிலிருந்து, இரண்டு முறை சீரமைக்கப்பட்டுள்ளது.
இதில் போட்டி நாடுகள் மிகக் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்வதைத் தடுக்கும் நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்தது என பேராசிரியர் பனகாரியா கூறுகிறார்.
“காலனித்துவத்துக்கு பிந்தைய, இந்தியா போன்ற பல்வேறு நாடுகள், சர்வதேச வர்த்தகம் என்பது காலனித்துவத்தின் புதிய வடிவமே என்ற ஆழமான சந்தேகத்தைக் கொண்டுள்ளன.
துரதிருஷ்டவசமாக, இந்த மனநிலை இன்னும் சில கொள்கை வகுப்பாளர்களிடையே நீடிக்கிறது. இது வருத்தமளிக்கும் விஷயம்,” எனக் கூறுகிறார் கனடாவின் கார்ல்டன் பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர் விவேக் டெஹெஜியா.
உள்நாட்டு தொழில்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும் விதமாக செயல்பட்ட கொள்கைகள், கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டதால், பிரதமர் நரேந்திர மோதியின் “மேக் இன் இந்தியா” திட்டம் பாதிக்கப்பட்டதாக, பல பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தத் திட்டம் மூலதனம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்த நிலையில், ஜவுளி போன்ற உழைப்பு சார்ந்த தொழில்கள் புறக்கணிக்கப்பட்டன.
இதன் விளைவாக, உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை.
“வெளிநாட்டினர் தங்கள் பொருட்களை நமக்கு விற்க முடியாதபட்சத்தில், அவர்கள் நம்மிடமிருந்து வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்த அவர்களிடம் வருவாய் இருக்காது.
நாம் அவர்களின் பொருட்களை வாங்குவதை குறைத்துவிட்டால், அவர்கள் நம்முடைய பொருட்களை வாங்குவதையும் குறைக்க வேண்டியிருக்கும்” என்று பேராசிரியர் பனகாரியா குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு புதிய வாய்ப்புகள் திறக்கக் கூடும்
உள்நாட்டுத் தொழில்களை பாதுகாக்கும் இத்தகைய கொள்கைகளால், சில நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
” சுங்க வரிகள், உள்நாட்டுத் தொழில்களைப் பாதுக்காக்க வேண்டும் என்ற மனப்பான்மையை உருவாக்கியுள்ளன. இதனால், ஏற்கனவே வசதியான நிலையில் உள்ள நிறுவனங்கள், தங்களின் செயல்திறனை அதிகரிக்க தேவையான முதலீடுகளைச் செய்ய விருப்பம் காட்டவில்லை. அதே நேரத்தில், அவர்கள் சந்தையை ஆட்சி செய்யக்கூடிய அளவுக்கு தங்களை வலுப்படுத்திக்கொள்ளும் நிலையை அடைந்துள்ளனர்” என்று நியூயார்க் பல்கலைக்கழக ஸ்டெர்ன் வணிகப் பள்ளியின் பொருளாதார பேராசிரியர் வைரல் ஆச்சார்யா கூறுகிறார்.
அமெரிக்கா தனது நாட்டின் நலன்களை முதன்மைப்படுத்தி செயல்படத் தொடங்கியுள்ளது. மறுபுறம், சீனா அழுத்தமான சூழலில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள் நம்பகமான வர்த்தக கூட்டாளிகளை ஏற்கனவே தேடி வருகின்றன .
இந்தியா அவற்றில் ஒன்றாக மாறக்கூடும்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்த, இந்தியா வரிகளைக் குறைக்க வேண்டும், ஏற்றுமதியில் போட்டிச்சூழலை மேம்படுத்த வேண்டும்.
மேலும் உலகளாவிய வர்த்தகத்திற்கான திறந்த மனப்பான்மையை வெளிப்படுத்த வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஆடைகள், ஜவுளி மற்றும் பொம்மைகள் போன்ற துறைகள், குறிப்பாக நடுத்தர மற்றும் சிறு தொழில்களுக்கு, ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகின்றன.
ஆனால் கடந்த பத்தாண்டு கால தேக்க நிலைக்குப் பிறகு, தற்போதுள்ள முக்கிய கேள்வி என்னவென்றால், இத்துறைகள் வளர்ச்சி பெறுமா?
அதற்குத் தேவையான ஆதரவை அரசாங்கம் அளிக்குமா என்பது தான்?
பட மூலாதாரம், Getty Images
இந்திய வளர்ச்சிக்கான வாய்ப்புகள் என்ன?
பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை இடைநிறுத்தியுள்ள டிரம்ப், மீண்டும் தனது சுங்க வரி திட்டங்களைப் முன்னெடுத்தால், இந்த ஆண்டு இந்தியா அமெரிக்காவிற்கான ஏற்றுமதியில் 7.76 பில்லியன் டாலர் அல்லது 6.4% வீழ்ச்சியைக் காணக்கூடும் என்று டெல்லியைத் தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) மதிப்பீடு செய்துள்ளது. (2024 ஆம் ஆண்டில், இந்தியா அமெரிக்க சந்தைக்கு 89 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது.)
“டிரம்பின் வரிகள், அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் இந்தியாவுக்கு சிறிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் அமைப்பைச் சேர்ந்த அஜய் ஸ்ரீவாஸ்தவா கூறுகிறார்.
அமெரிக்காவுடன் சமநி லையான ஒப்பந்தம் ஒன்றை உறுதி செய்த பிறகு, இந்தியா தனது வர்த்தக தளத்தை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்துகிறார்.
இதற்குள் ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் மற்றும் கனடாவுடன் ஒப்பந்தங்களை விரைவாக நிறைவேற்றுதல், அதே நேரத்தில் சீனா, ரஷ்யா, ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆசிய நாடுகளுடனான வர்த்தக உறவுகளை மேலும் ஆழப்படுத்துதல் ஆகியவையும் அடங்கும்.
உள்நாட்டில், உண்மையான மாற்றத்தை உருவாக்கும் சக்தி சீர்திருத்தங்களைச் சார்ந்துள்ளது.
சுங்க வரிகளை எளிமைப்படுத்தல், பொருட்கள் மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி) முறையை மேம்படுத்துதல், வர்த்தக செயல்முறைகளைச் சீரமைத்தல் மற்றும் தரக் கட்டுப்பாடுகளை நியாயமான முறையில் நடைமுறைப்படுத்தல் ஆகியவை முக்கியம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு