பட மூலாதாரம், Getty Images
டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சுங்க வரி தொடர்பான புதிய அறிவுப்பு வர்த்தக உலகை உலுக்கியுள்ளது. ஆனால் இத்தகைய அறிவிப்பு வாய்ப்புகளை வழங்கவும் தவறவில்லை.
ஏப்ரல் 9ஆம் தேதி முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருகிறது. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 27% வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. (டிரம்பின் சுங்க வரி பட்டியலில் இந்தியாவுக்கு 26% வரி விதிப்பு என்று குறிப்பிட்டிருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அது 27% என்றுள்ளது. இந்த வேறுபாடு மற்ற நாடுகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் வரியிலும் காணப்படுகிறது).
வெள்ளை மாளிகை அறிவிப்பின்படி, இந்த வரி விதிப்புக்கு முன்னதாக அமெரிக்கா முழுவதும் வர்த்தகக் கூட்டாளியாக இருக்கும் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட சுங்க வரியானது சராசரியாக 3.3 சதவிகிதமாக இருந்தது.
சர்வதேச அளவில் மிகவும் குறைவான வரி விகிதமாக இது இருந்தது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கான சுங்க வரி 17% ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பட மூலாதாரம், Reuters
இருப்பினும், சீனா (54%), வியட்நாம் (46%), தாய்லாந்து (36%), வங்கதேசம் (37%) போன்ற நாடுகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி ஜவுளி, மின்னணு சாதனங்கள் மற்றும் இயந்திரத் துறையில் இந்தியாவுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளதாக டெல்லியில் செயல்படும் சிந்தனைக் களமான க்ளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேடிவ் (ஜி.டி.ஆர்.ஐ) கூறுகிறது.
சீனா மற்றும் வங்கதேசத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் அதிகபட்சமான சுங்க வரி, இந்திய ஜவுளி உற்பத்தியை அமெரிக்க சந்தைகளில் விரிவுப்படுத்த ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
செமி-கண்டக்டர் உற்பத்தியில் தைவான் தலைசிறந்து விளங்கினாலும், வலுவான உள்கட்டுமானம் மற்றும் ஆதரவான கொள்கைகள் இருக்கும் பட்சத்தில், இந்தியா பேக்கிங்க், சோதனை மற்றும் கடைநிலை ‘சிப்’ உற்பத்தியில் தனக்கான இடத்தை உறுதி செய்து கொள்ளலாம்.
தைவானுக்கு 32% வரி விதிக்கப்பட்டிருக்கும் சூழலில், விநியோகச் சங்கிலியில் ஏற்படும் சிறு அளவிலான மாற்றம்கூட இந்தியாவுக்கு சாதகமான சூழலை உருவாக்கும்.
சீனா மற்றும் தாய்லாந்து, இயந்திரங்கள், ஆட்டோமொபைல்ஸ் மற்றும் பொம்மைகள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன. ஆனால் சுங்க வரி விதிப்பால் இதில் மாற்றங்கள் நிகழலாம். முதலீட்டை ஈர்த்து, உற்பத்தியைத் துரிதப்படுத்தி, அமெரிக்காவுக்கு ஏற்றுமதியை அதிகரித்தால் இந்தியா இதன்மூலம் ஆதாயம் அடைய இயலும் என்று ஜி.டி.ஆர்.ஐ. வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா இந்த சூழலை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமா?
பட மூலாதாரம், Getty Images
தற்போது விதிக்கப்பட்டிருக்கும் வரியானது, உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளைச் (value chains) சார்ந்திருக்கும் நிறுவனங்களின் செலவீனங்களை அதிகரித்துள்ளது. இந்த அம்சம் சர்வதேச சந்தைகளில் இந்தியா போட்டியிடுவதைத் தடுக்கும் காரணியாகச் செயல்பட்டு வருகிறது.
சேவை தொடர்பான ஏற்றுமதி அதிகரித்து வந்தபோதும், இந்தியா குறிப்பிடத்தக்க வர்த்தகப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. உலகளாவிய ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு வெறும் 1.5% மட்டுமே. டிரம்ப் இந்தியாவை “வரி ராஜா” என்றும் வர்த்தக உறவுகளை “அதிகளவில் துஷ்பிரயோகம் செய்யும் நாடு,” என்றும் பலமுறை குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது அவர் விதித்திருக்கும் புதிய வரி காரணமாக, ஏற்றுமதியில் இந்தியா போட்டியிடுவது குறைந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
“ஒட்டுமொத்தமாக அமெரிக்காவின் இந்த சுங்க வரி, உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்படவுள்ள மாற்றத்தால் இந்தியாவுக்கு நன்மை விளைவிக்கலாம்,” என்று கூறுகிறார் ஜி.டி.ஆர்.ஐ அமைப்பைச் சேர்ந்த அஜய் ஶ்ரீவஸ்தவா.
“இந்தப் பலனை முழுமையாக அனுபவிக்க, இந்தியா வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்புகளை எளிமையாக்க வேண்டும். தளவாடங்கள் மற்றும் உள்கட்டுமானங்களில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். மேலும் நிலையான கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், உலகளாவிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துறையில், வரும் ஆண்டுகளில் இந்தியா முக்கிய இடத்தைப் பெறக்கூடும்,” என்றும் அவர் கூறினார்.
சவால்கள் என்ன?
பட மூலாதாரம், Getty Images
“இவற்றைக் கூறுவது எளிது. ஆனால் செயல்படுத்துவது கடினம்,” என்கிறார் பிஸ்வஜித் தார். டெல்லியில் செயல்படும் சிந்தனைக் களமான சோஷியல் டெவலப்மென்ட்டில் வர்த்தக நிபுணராக இருக்கும் அவர், இந்தியாவை காட்டிலும் இந்த விவகாரத்தில் மலேசியாவும் இந்தோனீசியாவும் சிறப்பான இடத்தில் உள்ளதாகக் கூறுகிறார்.
“வங்கதேசத்திற்கு அதிகமாக சுங்க வரி விதிக்கப்பட்டிருப்பதால், ஆயத்த ஆடைகள் துறையில் நாம் இழந்த இடத்தை மீண்டும் பிடிக்கலாம். ஆனால் நாம் அந்தத் துறையில் தேவையான முதலீட்டைச் செய்யாமல் கைவிட்டுவிட்டோம். திறனை அதிகரிக்காமல், நாம் இந்த சுங்க வரியால் ஏற்படும் மாற்றத்தின் மூலம் எவ்வாறு ஆதாயம் அடைவோம்,” என்று கேள்வி எழுப்புகிறார் பிஸ்வஜித்.
பிப்ரவரி மாதம் முதலே, டிரம்பின் நம்பிக்கையைப் பெறுவதற்காக இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அமெரிக்க எரிசக்தி இறக்குமதியில் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உறுதி அளித்தது. வாஷிங்டனை முதன்மை ராணுவ தேவைகளுக்கான விநியோகஸ்தராக இணைத்து எஃப்-35 போர் விமானங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்தது. வர்த்தக பதற்றத்தைக் குறைக்க, 6% டிஜிட்டல் விளம்பர வரியை ரத்து செய்தது. போர்பன் விஸ்கி மீது விதிக்கப்பட்டிருந்த 150% இறக்குமதி வரியை 100% ஆக குறைத்தது. மேலும் சொகுசு கார்கள் மற்றும் சோலார் செல்களுக்கான சுங்க வரியை ரத்து செய்தது.
அதேநேரத்தில் ஈலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை எட்டியது. இந்தியாவுடனான அமெரிக்காவின் 45 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க இரு நாடுகளும் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்த ஆரம்பித்தன.
இத்தனை முயற்சிகளை மேற்கொண்ட பிறகும்கூட இந்த இறக்குமதி வரி விவகாரத்தில் இருந்து இந்தியாவால் தப்பிக்க முடியவில்லை.
இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தின் (Indian Institute of Foreign Trade), உலக வர்த்தக நிறுவன படிப்புகளுக்கான மையத்தின் முன்னாள் தலைவர் அபிஜித் தாஸ் இதுகுறித்துப் பேசும்போது, “இதுபோன்ற வர்த்தக பேச்சுவார்த்தைகள் காரணமாக, பரஸ்பர வரிகளில் இருந்து இந்தியாவுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. அதையும் தாண்டி தற்போது இந்திய பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன்மீது இந்தியா கவனம் செலுத்த வேண்டும்,” என்று கூறுகிறார்.
நம்பிக்கைக்குரிய மறு பக்கம்
பட மூலாதாரம், Getty Images
மருந்துகளுக்கு மட்டும் பரஸ்பர விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது நம்பிக்கைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு தேவையான ஜெனரிக் மருந்துகளில் (Generic Medicines) பாதியை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. குறைந்த விலையுள்ள இந்த மருந்துகள் அங்குள்ள 90% மருந்து பரிந்துரைகளை நிவர்த்தி செய்கிறது.
இருப்பினும் மின்னணு சாதனங்கள், பொறியியல் சார்ந்த பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், தொழிற்சாலை இயந்திரங்கள் மற்றும் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதியில் கடுமையான பாதிப்பு ஏற்படலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க இந்தியாவில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (production-linked incentives), போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டிருப்பதால் மின்னணு சாதனங்கள் துறையில் கடுமையான இடையூறுகள் ஏற்படக் கூடும்.
“நம்முடைய ஏற்றுமதி திறன் குறித்து எனக்கு அச்சம் இருக்கிறது. ஏனெனில் உற்பத்தியாளர்களில் பெரும்பாலானோர் 27% இறக்குமதி வரி உயர்வைத் தாங்கிக்கொள்ள சிரமப்படும் சிறு குறு உற்பத்தியாளர்கள். இந்த வரி உயர்வு சந்தையில் அவர்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். அதிகப்படியான தளவாட விலை, அதிகரிக்கும் வர்த்தக செலவீனங்கள், மோசமடையும் வர்த்தக உள்கட்டுமானம் போன்றவை இந்த சவாலை அதிகரிக்கும். பெரிய பின்னடைவில் இருந்து நாம் தொடங்குகிறோம்,” என்கிறார் தார்.
டிரம்ப் இறக்குமதி வரியை வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்துவார் என்று பலரும் கருதுகின்றனர். அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் சமீபத்திய அறிக்கை, இந்தியாவின் வர்த்தகக் கொள்கையால் அமெரிக்கா அதிருப்தி அடைந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
திங்கள் கிழமையன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், பால், பன்றி இறைச்சி மற்றும் மீன் மீது இந்தியா விதித்துள்ள கடுமையான இறக்குமதி விதிகள் குறித்துக் குற்றம் சாட்டுகிறது. மரபணு மாற்றப்பட்ட பொருட்களுக்கு ஒப்புதல் வழங்க ஆகும் கால தாமதம், ஸ்டென்ட்கள் மற்றும் இம்ப்ளான்ட்களுக்கான உச்சவரம்புகளையும் விமர்சித்துள்ளது இந்த அறிக்கை.
காப்புரிமைகளுக்கு இருக்கும் குறைவான பாதுகாப்பு, போதுமான வர்த்தக ரகசிய சட்டங்கள் இல்லாமை போன்ற காரணங்களால் எழுந்துள்ள அறிவுசார் சொத்துரிமை தொடர்பான கவலைகள் இந்தியாவை ‘முதன்மையாகக் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில்’ சேர்த்துள்ளது என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தரவுகளை உள்ளூர்மயமாக்குவதற்கான உத்தரவு, கட்டுப்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் கொள்கைகள் போன்ற அம்சங்கள் வர்த்தகத்தை மேலும் பாதிப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவின் வர்த்தகத்திற்கான ஒழுங்குமுறை அணுகுமுறை சீனாவில் நடைமுறையில் இருக்கும் அணுகுமுறையைப் பிரதிபலிப்பதாகவும் அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது.
இந்தத் தடைகள் நீக்கப்பட்டால், ஆண்டுதோறும் குறைந்தது 5.3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதி அதிகரிக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
“இந்த அறிவிப்பு இதைவிட மோசமான நேரத்தில் வந்திருக்க முடியாது. வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் நடுவே நாம் இருக்கும்போது வந்துள்ள இந்த அறிவிப்பானது நமக்கு அதிகமாக பாதகத்தையே ஏற்படுத்துகிறது. இது வெறும் சந்தையைக் கைப்பற்றுவது தொடர்பானது மட்டுமல்ல. வியட்நாம் அல்லது சீனாவை பின்னுக்குத் தள்ளி ஒரு நல்ல இடத்தில் இந்தியாவை நிலை நிறுத்திக் கொள்வது ஒரே இரவில் நடந்துவிடாது. அதற்கான வாய்ப்புகள், அவர்களுடன் போட்டியிடுவதற்கான வலிமை இரண்டையும் உருவாக்க காலம் எடுக்கும்,” என்றும் தார் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.