பட மூலாதாரம், M WATSON/AFP via Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது விதித்துள்ள 50% வரி ஆசிய பிராந்தியத்தில் விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வரியாகும். இந்த வரி ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
முன்னதாக, டிரம்ப் இந்தியா மீது 25 சதவீத வரி விதித்திருந்தார். இதன் பின்னர், ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதால் ஏற்பட்ட அதிருப்தியை வெளிப்படுத்த 25 சதவீத கூடுதல் வரியை அறிவித்துள்ளார்.
அமெரிக்காவும், ஐரோப்பாவும் ரஷ்யாவிடமிருந்து யுரேனியமும், உரமும் வாங்கும் நிலையில் இந்தியாவுக்கு எதிராக இரட்டை நிலைப்பாடு எடுக்கப்படுவது ஏன் என இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.
பிபிசி இந்தியின் வாராந்திர நிகழ்ச்சியான ‘தி லென்ஸ்’ இல், கலெக்டிவ் நியூஸ்ரூமின் செய்தித்துறை இயக்குநர் முகேஷ் ஷர்மா, இந்தியாவின் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகள், இந்தியா-அமெரிக்க உறவு மற்றும் தற்போதைய சூழலில் இந்தியாவுக்கு முன் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றி பேசினார்.
இந்த விவாதத்தில், முகேஷ் ஷர்மாவுடன் இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலர் ஷஷாங்கும், ராஜ்ஜிய விவகார பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மாவும் பங்கேற்றனர்.
இந்தியா – அமெரிக்கா உறவுகள் மாறுகின்றனவா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாம் முறையாக பதவியேற்றது முதலே வரிகள் பற்றிய விவாதங்கள் தொடர்ச்சியாக எழுந்து வருகின்றன. வரிகள் விஷயத்தில் டிரம்ப் தொடர்ந்து இந்தியாவை குறிவைத்து வருகிறார்.
ஆனால் இதற்கு முன், இந்தியா அமெரிக்கா இடையேயான உறவுகள் ஒவ்வொரு நிர்வாகத்தின் கீழும் தொடர்ந்து மேம்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இதைப் போன்றதொரு சூழலில், இந்தியா அமெரிக்கா இடையேயான உறவுகள் மாறுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.
கடந்த 20 முதல் 25 ஆண்டுகளில் இந்தியா மற்றும் அமெரிக்காவில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் சரி, அது உலகில் உருவாகும் புதிய தரநிலைகளுக்கு ஏற்ப தங்களது பரஸ்பர உறவை வடிவமைக்க முயற்சி செய்திருப்பதாக இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த ஷஷாங் சொல்கிறார்.
இந்தியா அமெரிக்கா இடையேயான தற்போதைய உறவுகளின் நிலைக்கு டிரம்பின் அணுகுமுறைதான் காரணம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
“ஒரு புறம் டொனால்ட் டிரம்ப், அவரது ஆளுமை மற்றும் அரசியல் இருக்கிறது. டொனால்ட் டிரம்பிற்கு கொள்கைகளோ, விதிகளோ, நெறிமுறைகளோ இல்லை. 2016ல் அவர் முதல் முறை அதிபரானதுபோது அவருடைய நிர்வாகம் எவ்வாறு செயல்பட்டது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்,” என்றார் ஸ்மிதா ஷர்மா.
“அந்த சமயத்திலும் இந்தியாவுக்கு சாதகமற்ற இதே போன்ற பல முடிவுகளை டொனால்ட் டிரம்ப் எடுத்தார். டிரம்ப் நிர்வாகத்தின் அழுத்தம் காரணமாக 2019ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்தியா இரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்தவேண்டிருந்தது,” என ஸ்மிதா ஷர்மா சொல்கிறார்.
பட மூலாதாரம், MANDEL NGAN/AFP via Getty Images
இந்தியா எடுத்துள்ள பல வர்த்தக நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் அவர்கள் எதிர்பார்க்கும் அளவு வளர்ச்சியடைய முடியவில்லை என அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் கருதுவதாக ஸ்மிதா சொல்கிறார்.
பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மாவும் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஷஷாங்கும் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவுகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கு புவிசார் அரசியலும் ஒரு காரணமாக கருதுகின்றனர்.
“அடுத்த இருபது ஆண்டுகளில் அமெரிக்காவை பின்னுக்கத் தள்ளி உலகின் முன்னணி நாடாவோம் என சீனா கூறியுள்ளது, எனவே உண்மையான நிலையை அறிந்துகொள்ள டிரம்ப் இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டார் என்றே கருதுகிறேன். பிரிக்ஸ் நாட்டில் முக்கியமான இரண்டு நாடுகளாக இந்தியாவும், பிரேசிலும் அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு இதை ஒரு வாய்ப்பாக அவர் கருதினார்,” என ஷஷாங் கூறுகிறார்.
இந்தியா அதன் அணி சேர கொள்கையை கைவிட்டு ஏதேனும் ஒரு பக்கத்தை தேர்ந்தெடுக்கவேண்டும் என அமெரிக்க நிர்வாகத்தில் கருத்து கூறப்படுவதாகவும், இது இந்திய வெளியுறவுக் கொள்கையின் கோட்பாடுகளில் இல்லை எனவும் ஸ்மிதா கூறுகிறார்.
இந்தியா அதன் அணி சேரா நிலையை தொடர முடியுமா?
அணி சேராமல் இருப்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. தற்போதைய சூழலில், ரஷ்ய விவகாரத்தில் இந்தியாவுக்கு அழுத்தம் அளிக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது.
இந்தியா தொடர்ந்து அணி சேராமல் இருக்கமுடியுமா, இன்றைய காலகட்டத்திற்கு அது ஒரு பொருத்தமான தீர்வாக இருக்குமா?
“உள்ளூர் அரசியலில் எவ்வளவு சர்ச்சைகள் இருந்தாலும் நமது வெளியுறவு கொள்கையில் அடிப்படையில் சில கோட்பாடுகள் இருந்திருக்கின்றன. ஒரு போரில் இந்தியா எந்தவொரு பெரிய மேற்கத்திய சக்திக்கு ஒருபோதும் கூட்டாளி ஆகாது என்பது அவற்றில் ஒன்று” என்கிறார் ஸ்மிதா ஷர்மா.
அதே நேரம், பல விஷயங்களில் இந்தியாவில் உள்ள சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“கடந்த சில ஆண்டுகளில், மோதி அரசின் கீழ் இஸ்ரேலுடனான உறவு மிகவும் நெருக்கமாகியுள்ளது வேறு விஷயம். பாலத்தீன விவகாரத்தில் நமது பாரம்பரிய நிலைப்பாட்டிலிருந்து பெருமளவு மாறியுள்ளோம், ஆனால் அதிலும் சமநிலையை பேண முயற்சித்தோம்,” என்கிறார் அவர்.
கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவுடனான இந்தியாவின் நெருக்கம் சற்று அதிகமாகியுள்ளதாகத் தோன்றியதாக ஸ்மிதா கூறினார்.
பட மூலாதாரம், ALEXANDER NEMENOV/AFP via Getty Images
“இந்தியா கடந்த சில ஆண்டுகளில் ரஷ்யாவிடமிருந்து பாதுகாப்புத் துறையில் இறக்குமதியை பெருமளவு குறைத்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியா ரஷ்யாவிடமிருந்து 75 சதவீத ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை இறக்குமதி செய்தது. இப்போது இது 38 முதல் 40 சதவீதமாக உள்ளது. இந்தியா இப்போது பிரான்ஸ், இஸ்ரேல், மற்றும் அமெரிக்காவிலிருந்து உபகரணங்களை வாங்குகிறது,” என்கிறார் அவர்.
ரஷ்யாவுடனான உறவில் பிளவு ஏற்படுவதை இந்தியா விரும்பவில்லை. ஆனால் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ஐரோப்பாவில் நடைபெறும் மோதல்களில் ரஷ்யாவின் செல்வாக்கு குறைந்து, சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகத் தோன்றுவதாக ஷஷாங் சொல்கிறார்.
“இந்தியா எப்போதும் ரஷ்யாவுடன் நட்பு உறவை வைத்திருக்கவே முயன்று வருகிறது. அதேசமயம், ரஷ்யா – சீனா உறவு மிகவும் நெருக்கமாகி, உலகில் சோவியத் ஒன்றியம் வகித்த இடத்தை சீனா பிடிக்காதபடி பார்த்து வருகிறது.”
அமெரிக்க வரிகள் குறித்து இந்தியா செய்யக்கூடியது என்ன?
இப்போது இந்தியாவுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் டிரம்பை சமாளிப்பதுதான் என ஸ்மிதா ஷர்மா நம்புகிறார். டிரம்பின் ஆளுமையை கருத்தில்கொள்ளும்போது, அவரை சமாளிக்க ஒன்று அவரை எதிர்த்து நிற்கவேண்டும் அல்லது அவருக்கு சவால் விடவேண்டும் என்று அவர் சொல்கிறார்.
ஆனால் அவரை பொறுத்தவரை துரதிர்ஷ்டவசமாக டிரம்பிற்கு சவால் விடவோ, அமெரிக்காவின் மீது பதிலடி வரிகளை விதிக்கவோ இந்தியாவுக்கு வாய்ப்பு இல்லை என ஸ்மிதா ஷர்மா சொல்கிறார்.
இதற்கு காரணம், இந்தியாவின் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களில் பலவற்றை அமெரிக்கா பிற போட்டி சந்தைகளிலிருந்து பெற முடியும் என்று அவர் விளக்குகிறார்.
அமெரிக்கா இந்தியாவை விட குறைவாக வரி விதித்துள்ள வங்கதேசம், இந்தோனீசியா, கம்போடியா, மற்றும் வியட்நாம்தான் இந்த போட்டி சந்தைகள்.
செமிகண்டக்டர்கள், அரிய பூமி தாதுக்களை சீனா ஏற்றுமதி செய்வதால் டிரம்பை எதிர்த்து நிற்கமுடிவதைப் போல் இந்தியாவால் முடியாது என்கிறார் ஸ்மிதா.
“டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த உங்களிடம் இப்போது என்ன இருக்கிறது என்பதுதான் பெரிய சவால். ஏனெனில் விவசாயம், பால், மற்றும் மீன்பிடித்துறைகளை திறக்க மாட்டீர்கள் என்றால் உங்கள் முன் உள்ள பிற வாய்ப்புகள் என்ன?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
பட மூலாதாரம், SAJJAD HUSSAIN/AFP via Getty Images
விவசாயம் மற்றும் மீன் சந்தைகளை திறப்பது இந்தியாவில் ஆட்சிக்கு வரும் எந்தவொரு கட்சிக்கும் கடினம் என்பது ஸ்மிதா ஷர்மாவின் கூற்றாக இருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் இந்தியா என்ன செய்யவேண்டும், இந்தியா செய்யக் கூடியது என்ன?
இந்த கேள்விக்கு பதிலளித்த ஸ்மிதா ஷர்மா, “இந்த நேரத்தில் அமெரிக்காவிலிருந்து என்ன வாங்கமுடியும் என்பதை இந்தியா பார்க்கவேண்டியிருக்கும். முடிந்தவரை அதிகமாக பாதுகாப்பு உபகரணங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குவதாக இந்தியா டிரம்பிடம் கூறலாம்.” என்று கூறினார்.
இதைத் தவிர, இப்போது எல்லாம் பரிவர்த்தனை அல்லது வணிகத்துடன் தொடர்புடையது, அதுதான் உண்மையான வலிமை என்பதால் இந்தியா தற்போது அதன் உள்ளூர் பொருளாதார சீர்திருத்தங்களை விரைவுபடுத்தவேண்டிருக்கும் என்பதே அவரது கூற்று.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு