• Fri. Apr 4th, 2025

24×7 Live News

Apdin News

டிரம்பின் வரி விதிப்பால் கோவை – திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு லாபமா?

Byadmin

Apr 3, 2025


ஆடைச் சந்தை

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
  • பதவி, பிபிசி தமிழ்

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பால், ‘இந்திய ஜவுளித்துறைக்கு பெரும் சாதகம்’ ஏற்படுமென்று ஜவுளித் தொழில்முனைவோர் தெரிவித்துள்ளனர்.

தற்போதுள்ள 27 சதவிகித வரிவிதிப்பின்படி, அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரிக்கும் என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நம்புகின்றனர். (வரிவிதிப்பு குறித்த செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் காண்பித்த விளக்கப்படத்தில் இந்தியாவுக்கு 26% வரி என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதிகாரப்பூர்வ உத்தரவில் 27% என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு மற்ற சில நாடுகளுக்கான வரிவிதிப்புகளிலும் காணப்பட்டது)

இந்தியாவுக்கு பெரும் வாய்ப்பா?

டிரம்ப் அறிவித்துள்ள புதிய பரஸ்பர வரி, இந்திய ஆடைத்துறைக்கு ஆகச்சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தும் என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார், இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் (ITF-Indian Texprenuers Federation) ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன்.

”பரஸ்பர வரியில், இந்தியாவுக்கு 27 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் ஆடைத்துறையில் கடும் போட்டியாளர்களாக உள்ள வியட்நாமுக்கு 46%, இலங்கைக்கு 44 %, வங்கதேசத்துக்கு 37 % , சீனாவுக்கு 34% என்ற அளவில் வரி விதிக்கப்பட்டுள்ளது. உற்பத்திக்கான செலவு, போட்டித் தன்மையை ஒப்பிட்டால் இது இந்தியாவுக்கு மிகத்தெளிவாக பெரும் நன்மையைத் தரும் என நம்புகிறோம்.” என்கிறார் பிரபு தாமோதரன்.

By admin