பட மூலாதாரம், Getty Images
மார்ச் 4 ஆம் தேதி, கனடா மற்றும் மெக்ஸிகோ மீது அமெரிக்கா வரி விதிப்பு நடவடிக்கையைத் தொடங்க உள்ளது. மேலும், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஃபென்டனில் அமெரிக்காவிற்குள் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இறக்குமதி பொருட்களுக்கான வரிகள், ஏற்கனவே பிப்ரவரியில் அமலுக்கு வர வேண்டியிருந்தது. ஆனால் வரி விதிப்பில் ஒரு மாத கால தாமதம் ஏற்பட்டது.
இரு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார், ஆனால் இறுதியாக விதிக்கப்படும் வரி விகிதம் அதைவிட குறைவாக இருக்கக்கூடும்.
சுங்க வரி என்றால் என்ன?
சுங்க வரி என்பது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரிகளாகும்.
சுங்க வரி என்பது ஒரு பொருளுடைய விலையின் ஒரு பகுதி. மேலும் இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் மீது விதிக்கப்படும் இந்த வரி, ஏற்றுமதியாளரின் மீது விதிக்கப்படுவதில்லை.
உதாரணமாக, ஒரு நிறுவனம் 50,000 டாலர் மதிப்புள்ள கார்களை இறக்குமதி செய்கிறது என்றால், 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டால், அந்த நிறுவனம் ஒவ்வொரு காருக்கும் 12,500 டாலர் வரி செலுத்த வேண்டும்.
அமெரிக்க இறக்குமதியாளர்கள், வரிச்சுமையைக் குறைக்க சில்லறை விலைகளை உயர்த்தினால், அந்தப் பொருளாதாரச் சுமை அமெரிக்க நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
டிரம்ப் சுங்க வரியை ஆதரிப்பது ஏன்?
வரிகள் அமெரிக்க உள்நாட்டு வேலைவாய்ப்புகளை பாதுகாத்து உருவாக்குகின்றன என்றும், அவை அமெரிக்க பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும், வரி வருவாய்களை அதிகரிப்பதற்கும் ஒரு வழியாக இருக்கிறது என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் அடிக்கடி கூறியுள்ளார்.
“எனது திட்டத்தின் கீழ், அமெரிக்கத் தொழிலாளர்கள் தங்களது வேலைவாய்ப்புகளை வெளிநாடுகளிடம் இழப்பதைப் பற்றிக் கவலைப்பட தேவையில்லை. அதற்கு பதிலாக, வெளிநாடுகள் தங்களது வேலைவாய்ப்புகளை அமெரிக்காவிடம் இழப்பதைப் பற்றிக் கவலைப்படுவார்கள்” என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்கத் தேசிய பாதுகாப்பிற்காக எஃகு மீதான வரிகள் முக்கியம் என்றும், உள்நாட்டு எஃகு தயாரிப்பாளர்கள் தங்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க அவை ஊக்கமளிக்கக்கூடும் என்றும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
போர்க் காலங்களில் இறக்குமதிகளைச் சார்ந்திருக்காமல், தேவையாள அளவுக்கு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் திறன் அமெரிக்காவுக்கு இருக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம்.
“எங்களது பாதுகாப்பு – தொழில்துறையின் அடித்தளம்” என சுங்க வரியை டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விற்பனையை குறைப்பதற்கும், உள்நாட்டு பொருட்களின் விற்பனையை மேம்படுத்துவதற்குமான வழியாக, டிரம்ப் சுங்க வரியை ஆதரிக்கிறார். இந்த நோக்கில் தான் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது கடந்த காலத்தில் வரி விதித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“அவர்கள் எங்கள் கார்கள் வாங்க மாட்டார்கள், எங்கள் விவசாயப் பொருட்களை வாங்க மாட்டார்கள், எதையும் வாங்க மாட்டார்கள், ஆனால் நாங்கள் அவர்களிடமிருந்து எல்லாவற்றையும் வாங்குகிறோம்,” என்று டிரம்ப் கூறினார்.
டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் விதித்த வரிகள் யாவை?
பட மூலாதாரம், Getty Images
2018 ஆம் ஆண்டில், இறக்குமதி செய்யப்பட்ட வாஷிங் மெஷின்கள் மற்றும் சூரியவொளித் தகடுகள் (சோலார் பேனல்கள்) மீது டிரம்ப் 50 சதவீதம் வரை வரி விதித்தார்.
இந்த இரு துறைகளிலும் உள்ள அமெரிக்க உற்பத்தியாளர்கள் வெளிநாடுகளில் இருந்து நியாயமற்ற போட்டியை எதிர்கொள்வதாக அமெரிக்க அரசாங்கம் கூறியது.
அதே ஆண்டில், வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (நாஃப்டாவில்) அமெரிக்காவுடன் கூட்டணி வைத்திருந்த மெக்ஸிகோ மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மீது 25 சதவீதம் மற்றும் அலுமினியத்தின் மீது 10 சதவீதம் வரி விதித்தார் டிரம்ப்.
பின்னர், 2020ஆம் ஆண்டு நாஃப்டா ஒப்பந்தத்தை மாற்றியமைத்து, அமெரிக்காவுக்கு சாதகமானதாக கருதப்படும் ‘அமெரிக்கா-மெக்ஸிகோ-கனடா ஒப்பந்தம்’ கையெழுத்தானதை அடுத்து, அமெரிக்கா இந்த வரிகளை நீக்கியது.
ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு அதிக அளவில் எஃகு ஏற்றுமதி செய்வதால், ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) மீது விதிக்கப்பட்ட வரிகள் குறிப்பாக இந்த இரு நாடுகளையும் பாதிக்கின்றன.
இதற்கான பதிலடியாக, அமெரிக்காவின் ஜீன்ஸ், மது (போர்பன் விஸ்கி) மற்றும் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரி விதித்தது.
இறைச்சி முதல் இசைக்கருவிகள் வரையிலான 360 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்களுக்கும் டிரம்ப் வரி விதித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 110 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான அமெரிக்க பொருட்கள் மீது சீனா வரி விதித்தது.
அதிபர் ஜோ பைடன் ஆட்சியின் கீழ், சீனா மீதான வரிகள் பெரும்பாலும் நீடித்தது. கூடுதலாக, மின்சார வாகனங்கள் போன்ற பொருட்களுக்கு புதிய வரிகள் விதிக்கப்பட்டன.
முதல் பதவிக் காலத்தில் டிரம்ப் விதித்த வரிகள் மற்ற நாடுகளில் ஏற்படுத்திய தாக்கம் என்ன ?
டிரம்பின் வரிகளால், சில நாடுகளிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களின் அளவு குறைந்தன. ஆனால், பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் அளவு அதிகரித்தது.
2018-ஆம் ஆண்டுக்கு முன், மொத்த அமெரிக்க இறக்குமதியில் 22 சதவீத சீனப் பொருட்கள் இருந்தன. 2024 ஆம் ஆண்டில், அமெரிக்க சென்சஸ் ஆணையத்தின்படி, அவை 13.5 சதவீதமாக மட்டுமே இருந்தன.
2023ம் ஆண்டிற்குள் அமெரிக்காவுக்கு பொருட்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில், சீனாவை முந்தி மெக்ஸிகோ முதலிடத்தை பிடித்தது. அமெரிக்காவுக்கு மெக்ஸிகோவிலிருந்து 476 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 427 பில்லியன் டாலராக உள்ளது.
பல நிறுவனங்கள் குறிப்பாக கார் உற்பத்தியாளர்கள், அமெரிக்காவுடனான மெக்ஸிகோவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தையும், அங்குள்ள குறைந்த உற்பத்திச் செலவையும் பயன்படுத்திக் கொள்ள மெக்ஸிகோவிற்கு உற்பத்தியை மாற்றியதை இதற்குக் காரணமாகக் கூறலாம்.
பட மூலாதாரம், Getty Images
டிரம்பின் ஆட்சியில் சீனாவுக்கு விதிக்கப்பட்ட கடுமையான இறக்குமதி வரிகளால், கிழக்காசிய நாடுகளின் அமெரிக்க ஏற்றுமதி அதிகரித்தது.
அமெரிக்க நுகர்வோருக்கு சீன பொருட்களைவிட இந்நாடுகளின் பொருட்கள் மலிவாக இருந்ததாலும், அமெரிக்கா விதித்த வரிகளைத் தவிர்க்க பல சீன நிறுவனங்கள் இந்நாடுகளுக்கு உற்பத்தி மையங்களை மாற்றியதாலும் இந்த ஏற்றுமதி அதிகரித்தது.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் வழங்கிய தகவலின்படி, தென் கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள இந்தோனீசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் 2016ல் 158 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தன. 2022ல் இந்த மதிப்பு 336 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது என அறியப்படுகின்றது.
“2018 இல் விதிக்கப்பட்ட சுங்க வரிகளால் மிகுந்த பாதிப்புக்குள்ளான நாடு சீனாதான்,” என்று பிரிட்டனில் உள்ள சசெக்ஸ் பல்கலைக்கழக பொருளாதார நிபுணர் முனைவர் நிக்கோலோ டாம்பெரி கூறினார்.
மேலும் “இந்தச் சுங்க வரிகளிலிருந்து மிகப்பெரிய ஆதாயம் பெற்ற நாடு வியட்நாம்தான்,” என்றும் டாம்பெரி கூறினார்.
பீட்டர்சன் சர்வதேச பொருளாதார நிறுவனத்தின்படி, (PIIE) இந்த சுங்க வரி அமல்படுத்தப்பட்டதன் மூலம் அமெரிக்காவில் எஃகு மற்றும் அலுமினிய உற்பத்தி அதிகரித்தன. ஆனால் உலோகங்களுக்கான விலைகளும் உயர்ந்தன.
இதன் விளைவாக பிற உற்பத்தித் தொழில்களில் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர் என்றும் அறியப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து, டிரம்பின் சுங்க வரி நடவடிக்கைகள் அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்தி, அமெரிக்க நுகர்வோருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக பீட்டர்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள வரிகள் யாவை? இனி எந்தெந்த வரிகளை விதிக்க உள்ளது ?
பட மூலாதாரம், Getty Images
கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து வரும் பொருட்களுக்கு மார்ச் 4 முதல் அமெரிக்கா வரி விதிக்கத் தொடங்கும் என அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறியிருந்தார்.
இரு நாடுகளும் தங்களது எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்த அவற்றுக்குக் அவகாசம் அளிக்கும் வகையில், வரி விதிப்பில் ஒரு மாத கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
“அதிபரும் அவரது குழுவினரும் பேச்சுவார்த்தை நடத்தி, வரிகளைக் குறித்து அறிவிப்பார்கள்” என்று ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவித்தார் ஹோவர்ட் லுட்னிக்.
மேலும், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் எண்ணெய் போன்ற பொருட்களுக்கு கனடா 10 சதவீத வரி செலுத்த உள்ளது.
பிப்ரவரி 4 அன்று அமெரிக்கா சீன இறக்குமதிகளுக்கு 10 சதவீத வரி விதித்தது. மார்ச் 4 ஆம் தேதி சீன இறக்குமதிகள் மீது மேலும் 10 சதவீதம் வரி விதிக்கப்படலாம் என்று டிரம்ப் கூறினார்.
அமெரிக்க நிலக்கரி, எண்ணெய், எரிவாயு, வேளாண் இயந்திரங்கள் மற்றும் பெரிய எஞ்சின் கார்கள் மீது சீனா வரி விதித்ததுடன், மின்னணு மற்றும் ராணுவ உபகரணங்கள் தயாரிக்க தேவையான பல அரிய கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதையும் சீனா தடை செய்துள்ளது.
மார்ச் 12ஆம் தேதி முதல் உலகின் எந்த நாட்டில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கும் அமெரிக்கா 25 சதவீத வரி விதிக்க உள்ளது.
இது பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, மெக்ஸிகோ, நெதர்லாந்து, தென் கொரியா, வியட்நாம் போன்ற முக்கிய எஃகு உற்பத்தியாளர்களையும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் போன்ற பெரிய அலுமினிய உற்பத்தியாளர்களையும் பாதிக்கும்.
மறுபுறம், அமெரிக்காவில் எஃகு விலையை சுங்க வரி உயர்த்தும் என்ற குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்துள்ளார்.
“இறுதியில் இது மலிவானதாக இருக்கும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்திய சுங்க வரிகள் கனடா மற்றும் மெக்ஸிகோவுக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் ?
பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான தேசிய பொருளாதார மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் ஸ்டீபன் மில்லார்டின் கூற்றுப்படி, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய இரண்டும் பொது வரிகளால் பெரிதும் பாதிக்கப்படும் என அறியப்படுகின்றது.
இந்த இரு நாடுகளும் அமெரிக்காவையே அதிகம் நம்பியிருக்கின்றன.
மெக்ஸிகோ தனது அனைத்து பொருட்களிலும் 83 சதவீதத்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது மற்றும் கனடா அதன் மொத்த ஏற்றுமதியில் 76 சதவீதத்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது.
“அமெரிக்காவுக்கு பெருமளவில் எண்ணெய் மற்றும் இயந்திரங்களை கனடா ஏற்றுமதி செய்கிறது,” என்று மில்லார்ட் கூறினார். மேலும், “25% வரி விதிப்பு ஐந்து ஆண்டுகளில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 7.5 சதவீதம் குறைக்கக்கூடும்”என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த வரிகள் ஐந்து ஆண்டுகளில் மெக்ஸிகோவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை12.5 சதவீதம் குறைக்கக்கூடும். இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ” என்றார்.
மெக்ஸிகோ தொழிலாளர்களுக்கு அமெரிக்க வரிகள் “பேரழிவை ஏற்படுத்தும்” என்று அமெரிக்க சிந்தனைக் குழுவான வில்சன் மையத்தின் மெக்ஸிகோ நிறுவனத்தைச் சேர்ந்த லிலா அபேட் கூறுகிறார்.
“தோராயமாக ஐந்து மில்லியன் அமெரிக்க வேலைகள் அமெரிக்க-மெக்ஸிகோ வர்த்தகத்தை சார்ந்துள்ளது. மேலும், மெக்ஸிகோவில் சுமார் 14.6 மில்லியன் வேலைகள் அதன் வட அமெரிக்க கூட்டாளிகளுடனான வர்த்தகத்தை நம்பியிருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மது முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் வரையிலான அமெரிக்கப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என கனடா பதிலடி கொடுத்துள்ளது. மேலும் மெக்ஸிகோவும் பதிலடி நடவடிக்கைகளுக்கு உறுதியளித்துள்ளது.