பட மூலாதாரம், BBC/ Xiqing Wang
“அமெரிக்காவுக்கான விற்பனைகள் குறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை,” என்கிறார் ஹு டியான்கியாங். அவருடைய ஃபைட்டர் ஜெட் பொம்மை ஒன்று, எங்கள் தலைக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது அவர் இதைத் தெரிவித்தார்.
பொம்மை விமானங்கள், சிறிய ட்ரோன்கள் என, வாங்குபவர்களை ஈர்க்கும் வகையில், அவரைச் சுற்றியுள்ள பொம்மைகளின் இரைச்சலுக்கு நடுவே அவர் பேசுவதைக் கேட்பது கடினமானது.
உலகிலேயே மிகப்பெரிய மொத்த விற்பனை சந்தைகளுள் ஒன்றான, சீனாவின் யிவூ எனும் சிறுநகரில் அமைந்துள்ள சந்தையில் ஹு டியான்கியாங்கின் ஸோங்ஸியாங் டாய்ஸ் எனும் கடை உள்ளது.
இந்தப் பகுதியில் 75,000க்கும் அதிகமான கடைகள் உள்ளன. மின்னும் கிறிஸ்துமஸ் விளக்குகள், குடைகள் முதல் மசாஜ் உபகரணங்கள் வரை பலவற்றை வாங்க மக்கள் இங்கே வருகின்றனர். இந்தச் சந்தையின் ஒரு பிரிவைச் சுற்றிப் பார்ப்பதற்கே ஒருநாளின் பாதி நேரம் செலவாகிவிடும். ஏனெனில் ஒவ்வொரு பிரிவிலும் பரந்த அளவிலான கடைகளில் ஏராளமான பொருட்கள் காட்சிக்கு உள்ளன.
ஸேஜியாங் எனும் மாகாணத்தில், சீனாவின் கிழக்குக் கடற்கரையில் யிவூ நகரம் உள்ளது. உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக விளங்கும் இங்கு 30க்கும் மேற்பட்ட துறைமுகங்கள் உள்ளன. கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு சீனாவில் இருந்து விற்பனையானதில் 17% விற்பனை இங்கிருந்துதான் நடைபெற்றது.
அதனால்தான், யிவூ நகரமும் இந்தப் பிராந்தியமும் அமெரிக்கா- சீனா வர்த்தகப் போரில் முன்னணியில் உள்ளன.
வரிசையாக வைக்கப்பட்டுள்ள கவர்ச்சிகரமான பொம்மை விமானங்கள், ஒலியெழுப்பும் நாய்கள், பஞ்சு பொதிக்கப்பட்ட பொம்மைகள், பார்பிக்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் வலம்வரும் ஸ்பைடர்மேன் பொம்மைகளுடன் ஹு டியான்கியாங்கும் அமர்ந்திருக்கிறார். இவற்றில், 2024ஆம் ஆண்டில் 34 பில்லியன் டாலர் மதிப்பிலான பொம்மைகள் சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன.
இதில், 10 பில்லியன் டாலர் மதிப்பிலான பொம்மைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின. ஆனால், தற்போது அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் இவை 245% வரை இறக்குமதி வரியை எதிர்கொள்கின்றன. உலக சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதாக சீனா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், 2018ஆம் ஆண்டில் சீனாவுக்கு எதிரான டிரம்பின் முதல் வர்த்தகப் போரில் இருந்ததைவிட இப்போது இங்கு நிலைமை மாறியுள்ளது. அந்த வர்த்தகப் போர் யிவூ நகருக்குப் படிப்பிணையை கொடுத்துள்ளது.
“மற்ற நாடுகளிடமும் பணம் இருக்கிறது” என்று அந்தப் படிப்பிணையைச் சுருக்கமாகக் கூறுகிறார் ஹு.
மற்றுமொரு கொந்தளிப்பான டிரம்ப் நிர்வாகத்துக்குத் தயாராகியுள்ள உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாட்டில், இந்த வர்த்தகப் போருக்கு நிலையான எதிர்ப்பு உள்ளது.
அமெரிக்கா, உலக நாடுகளை வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அச்சுறுத்துவதாகத் தொடர்ந்து கூறி வரும் சீன அரசு, வர்த்தகப் போரில் இருந்து இன்னும் பின்வாங்கவில்லை.
டிரம்பின் நடவடிக்கையால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மைக்கு மாற்றாக, சீனாவின் புதுமையான, ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு இணையத்தில் எழுந்துள்ள பாராட்டுகள் அதிகரித்து வருகின்றன.
சீனாவில் அதிகளவில் கட்டுப்பாடுகள் இருக்கக்கூடிய சமூக ஊடகங்களில், சீனா தொடர்ந்து போராடும் என்ற நாட்டின் தலைமையின் உறுதிமொழியைப் பிரதிபலிக்கும் பதிவுகள் அதிகம் உள்ளன.
டிரம்புடைய அமெரிக்காவை தாண்டி தங்களுக்கு மாற்று வழிகள் இருப்பதாக தொழிற்சாலைகள், சந்தைகள், தொழிலதிபர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். தனது வியாபாரத்தில் சுமார் 20%-30% அமெரிக்காவில் இருந்து வந்ததாக ஹு கூறுகிறார். ஆனால், இப்போது அப்படியல்ல.
பட மூலாதாரம், BBC/ Xiqing Wang
“அந்த 20-30% குறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை,” என்கிறார் ஹு. “இப்போது நாங்கள் பெரும்பாலும் தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்குக்கு விற்பனை செய்கிறோம். எங்களுக்கு வருமானத்தில் பற்றாக்குறை இல்லை, நாங்கள் பணக்காரர்களாக உள்ளோம்.”
டிரம்ப் குறித்துக் கேட்டபோது ஹுவின் சகாவான சென் லேங் பதில் கூறுகிறார். “அவர் சர்வதேச நகைச்சுவைகளைக் கூறுகிறார். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நகைச்சுவையைக் கூறுகிறார். வரியை உயர்த்துவதும் அவருக்கு ஒரு நகைச்சுவையைப் போன்றதுதான்.”
அந்தக் கடைக்கு அருகில், ஒலிப்பானுடன் கூடிய கார்களாக மாறக்கூடிய 100க்கும் அதிகமான ரோபோட்டுகளை வாங்குவதற்கு, இந்தச் சந்தைக்கு தினமும் வரக்கூடிய ஆயிரக்கணக்கானவர்களுள் ஒருவர் பேரம் பேசிக் கொண்டிருந்தார். கால்குலேட்டரில் பல எண்களைத் தட்டிப் பார்த்த பிறகு, இறுதி விலை சாக்பீஸ் கொண்டு தரையில் எழுதப்பட்டது.
தான் துபையில் இருந்து வந்ததாக அவர் கூறினார். ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா முழுவதிலும் இருந்து அங்கு வந்திருந்த பலரையும் பிபிசி கண்டது.
லின் ஸியுபெங் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் இங்கு பொம்மை விற்பனை அமெரிக்க வாங்குநர்களைச் சார்ந்திருப்பதில் இருந்து விலகி வந்துவிட்டதைத் தாம் கவனித்திருப்பதாகக் கூறுகிறார்.
“எங்களுக்குப் பக்கத்தில் உள்ள கடை ஒன்றுக்கு சில தினங்களுக்கு முன்பு, அமெரிக்க வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து ஆர்டர் வந்தது. அதன் மதிப்பு, 10 லட்சம் யுவானைவிட அதிகம். ஆனால், இறக்குமதி வரி காரணமாக, அந்த ஆர்டரை ரத்து செய்ய அந்த உரிமையாளர் முடிவெடுத்தார்,” என்று எங்களுக்குப் பருக தேநீர் கொடுத்துக் கொண்டே கூறினார்.
“அவர்களுக்கு (அமெரிக்கா) சீனா நிச்சயமாக தேவை,” எனக் கூறும் அவர் அமெரிக்க பொம்மைகள் சீனாவில் அதிகம் விற்பனை செய்யப்படுவதாகக் கூறினார்.
“சமீப நாட்களாக அமெரிக்காவில் விற்பனையாளர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நினைக்கிறேன்.”
பட மூலாதாரம், BBC/ Xiqing Wang
லின் சொல்வது சரிதான். இந்த வரி விதிப்பு தங்களுடைய தொழில்களுக்கு “பேரழிவை ஏற்படுத்துவதாக,” அமெரிக்க பொம்மைக் கடை உரிமையாளர்கள் பலரும் வெள்ளை மாளிகைக்குக் கடிதம் எழுதினர்.
“இந்த வரிவிதிப்பு காரணமாக அமெரிக்கா முழுவதும் உள்ள சிறு தொழில்கள் பாதிப்புகளைச் சந்தித்து வருவதாக,” லாஸ் ஏஞ்சலீஸில் பொம்மை நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் ஜொனாதன் கேத்தீ பிபிசியிடம் பேசியபோது கூறினார்.
கடந்த 2009ஆம் ஆண்டில் லாயல் சப்ஜெக்ட்ஸ் எனப்படும் தனது நிறுவனத்தில் தன்னுடைய கடைசி 500 டாலர்களை முதலீடு செய்திருந்தார் அவர்.
வெஸ்ட் ஹாலிவுட்டில் உள்ள இரண்டு அறைகளைக் கொண்ட பங்களாவில் இருந்து தனது நிறுவனத்தை நடத்திவந்தார். தற்போது அது பல லட்சக்கணக்கான டாலர் வணிகமாக உயர்ந்துள்ளதாகவும் ஆனால் வரிவிதிப்பு தமது திட்டங்களை அழித்துவிடும் என்றும் அவர் கூறினார்.
“ஒட்டுமொத்த பொம்மை தொழிலும் சரிவைச் சந்திக்கும். விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த சேதங்களைக் கவனித்து வருகிறோம். இன்னும் இது மோசமாகும்” என அவர் எச்சரிக்கிறார்.
விற்பனையாளர்களை மாற்றுவது கடினமான பணி என அவர் கூறுகிறார். “ஒரு பொம்மையை உற்பத்தி செய்ய களத்தில் நிறைய வளங்கள் தேவை. சீன வணிகர்கள் இந்தத் தொழிலை சுமார் 40 ஆண்டுகளாக நேர்த்தியாகக் கட்டமைத்துள்ளனர்.”
டிரம்பின் போர்
டிரம்ப் ஆட்சி பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் சீனா முக்கியப் பங்கு வகித்தது, டிரம்ப் நிர்வாகமும் சீனாவும் நேரடியாக எதிர்கொண்டது.
“ஒட்டுமொத்த உலகுக்கும் எதிராக அவர் (டிரம்ப்) போர் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது,” என (சீனாவின்) மக்கள் விடுதலை ராணுவத்தின் முன்னாள் கர்னல் ஸோவ் போ கூறுகிறார். “நிச்சயமாக, சீனாவை கடுமையாகத் தாக்குவதற்கு அவர் முயல்கிறார்,” என்றார் அவர்.
ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் நிறுவனத்தால் இயக்கப்படும் பனாமா கால்வாயை சீனா இயக்கி வருவதாகக் குற்றம்சாட்டும் டிரம்ப், அதை மீண்டும் கைப்பற்ற உறுதிபூண்டுள்ளார். சீனா ஏகபோகமாக அனுபவித்து வரும் அங்குள்ள அரிதான கனிமங்களை வெட்டி எடுப்பதற்கான வழிகளை அவர் யோசித்து வருகிறார்.
யுக்ரேனுடனான எந்தவொரு ஒப்பந்தம் ஏற்படுவதற்கும் முக்கியமான அம்சமாக பனாமா கால்வாய் உள்ளது. ஆர்டிக் பகுதியில் சீனாவின் நோக்கங்களை முறியடிக்கும் நோக்கிலேயே கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கான எச்சரிக்கையையும் டிரம்ப் விடுத்ததாகக் கருதப்பட்டது.
மேலும் மற்றொரு வர்த்தகப் போரையும் டிரம்ப் தொடங்கியுள்ளார். சீனாவின் வளர்ந்து வரும் விநியோகச் சங்கிலிக்கு முக்கியமாக உள்ள, அதன் அண்டை நாடுகளான வியட்நாம் மற்றும் காம்போடியாவை இந்த வர்த்தகப் போர் இலக்காக வைத்துள்ளது.
பட மூலாதாரம், BBC/ Xiqing Wang
சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரி பாதியாகக் குறைக்கப்படும் என டிரம்ப் கடந்த வாரம் கூறியிருந்தார். “சீனாவுடன் நியாயமான ஒப்பந்தத்தை” ஏற்படுத்துவது தொடர்பாகத் தனது நிர்வாகம் “முனைப்பாக” பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
ஆனால், இந்தக் கூற்றை சீனாவின் வர்த்தக துறை அமைச்சர் “அடிப்படையற்றது, உண்மைக்கு மாறானது” என மறுத்தார். சீன அரசு ஊடகமும் அதையே தெரிவித்திருந்தது. “அமெரிக்க வரலாற்றிலேயே டிரம்ப் மிக மோசமான ஓர் அதிபர்,” என அரசுத் தொலைக்காட்சியில் கூறப்பட்டது.
இதுதொடர்பாக சீன அதிபர் ஷி ஜின்பிங்கே நேரடியாகப் பேச வேண்டும் என அமெரிக்க அதிபர் காத்திருப்பதாகத் தெரிகிறது.
“சீனாவில் ஏதேனும் நிச்சயமற்ற சூழல்களில் சிறிது காத்திருக்க வேண்டும் எனக் கூறுவோம்,” என்கிறார் கோல் ஸோவ். “அதாவது, நிச்சயமற்ற சூழல்களில் அடுத்து என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. இத்தகைய பழிக்குப் பழி நடவடிக்கைகள் ஓரிரு மாதங்களுக்கு நீடிக்கலாம், மூன்று மாதங்களுக்கு மேல் அவை நீடிக்காது என நம்பலாம்.”
தொடர்ந்து நிலைமை அப்படியே இருக்காது எனக் கூறும் அவர் அப்படி தொடர்ந்தால் நன்றாக இருக்காது என்றும் கூறினார்.
நிச்சயமாக அது சீனாவுக்கு நல்லதல்ல. டிரம்பின் வரிவிதிப்பு மட்டும் அந்நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் அல்ல, உள்நாட்டிலும் அந்நாடு பொருளாதார நெருக்கடி, நுகர்வு விகிதம் குறைதல் முதல் வீட்டு நெருக்கடி வரை பல பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்தப் பிரச்னைகள் மக்களின் சேமிப்புகளையும் வருங்காலத்துக்கான நம்பிக்கையையும் சிதைத்துள்ளது.
இந்த மோசமான காலகட்டத்தில் டிரம்பின் வரி விதிப்பும் சீன தொழில்கள் மீது தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. கோல்ட்மேன் சச்ஸ் எனும் முதலீட்டு வங்கி நிறுவனம் இந்த ஆண்டு சீனாவின் பொருளாதாரம் 4.5% எனும் அளவில் உயரும் என்று கணித்துள்ளது, இது அரசின் இலக்கான 5%ஐ விடக் குறைவு.
ஏப்ரல் மாத மத்தியில், முக்கியமான வர்த்தக மையமான குவாங்ஸோவில் இருந்து பிபிசி செய்தி சேகரித்தது. அந்த நேரத்தில், அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகள் தொழிற்சாலைகளின் தரைகளில் குவிந்து கிடந்த நிலையில், அமெரிக்கா-சீன வர்த்தகம் தடைபட்டு நின்றது. அது இந்த மாதப் பொருளாதார தரவுகளில் நிரூபணமானது. அவை தொழிற்சாலைகளில் வர்த்தக செயல்பாடுகள் பெருமளவில் மெதுவாகியுள்ளதைக் காட்டின.
பட மூலாதாரம், BBC/ Xiqing Wang
அமெரிக்காவுக்கான பொருட்கள் ஏற்றுமதி மீண்டும் தொடங்கிவிட்டதா என விற்பனையாளர்களிடம் பிபிசி கேட்டபோது, அவர்களிடம் இருந்து வந்த பதில்கள் குழப்பத்தை ஏற்படுத்தின.
விற்பனையாளர் ஒருவர் வால்மார்ட்டுக்கு சுமார் 5 லட்சம் ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுவதற்குக் காத்திருப்பதாகக் கூறினார். மேலும் சிலரும் இதே நிச்சயமற்ற சூழலைப் பிரதிபலித்தனர். ஆனால், நாங்கள் பேசிய ஏற்றுமதியாளர்கள் இருவர், அமெரிக்க சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து சில பொருட்கள் இங்கு இறக்குமதியாவது மீண்டும் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.
சரக்கு கிரேன்கள், குடைகள் முதல் எல்லாவற்றையும் உள்ளடக்கிய இரு பொருளாதாரங்களுக்கு இடையிலான வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், வெவ்வேறு விதமான தொழில்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளே வரிவிதிப்பு தொடர்பாக எப்படி செயலாற்றுவது என்பதை முடிவு செய்கின்றனர்.
எந்தவித வணிகமாக இருந்தாலும் அமெரிக்க நுகர்வோர்கள் சீன பொருட்கள் இல்லாததையோ அல்லது அதிக விலையையோ அனுபவிப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அமெரிக்காவை தாண்டிய வாய்ப்புகள்
செல்போன்கள், கணினிகள், செமிகண்டக்டர்கள், மரச்சாமான்கள், ஆடைகள், பொம்மைகள் ஆகியவற்றுக்கு உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய அமெரிக்கா இன்னும் சீன உற்பத்தியையே பெரிதும் சார்ந்திருக்கிறது. அமெரிக்க இறக்குமதியில் 50% எலெக்ட்ரானிக் மற்றும் இயந்திரங்கள் மட்டுமே உள்ளன.
கடந்த வாரம் நடைபெற்ற கூட்டமொன்றில், அடுத்த மாதம் முதல் வணிகர்கள் காலியான அலமாரிகளையும் அதிக விலையையும் எதிர்கொள்வார்கள் என டிரம்பிடம் வால்மார்ட், டார்கெட் ஆகிய நிறுவனங்கள் கூறியதாகத் தகவல் வெளியானது. விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இத்தகைய அதிர்ச்சிகள், கிறிஸ்மஸ் வரை தொடரும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க வீடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அமைக்கப்படும் அலங்காரங்களில் சுமார் 90% சீனாவின் யிவூ நகரில் இருந்து வருகின்றன. வணிகர்கள் தற்போது தென் அமெரிக்காவில் விற்பனை செய்வதில் கவனம் செலுத்தி வருவதாக எங்களிடம் கூறினர்.
யிவூ நகரில் அந்தப் முயற்சிகளை பார்க்க முடிந்தது. கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பாக, அதிகாலையிலேயே மொத்த விற்பனை சந்தையில் வழக்கமான வார்த்தைகள் எதிரொலிக்கின்றன.
“ஷுக்ரன்” என அரபுமொழியில் ஓர் ஆசிரியர் கூறுகிறார். அதன் அர்த்தம் “நன்றி” என்று கற்பதற்கு முன்பே, அந்த வார்த்தையைச் சரியாக உச்சரிப்பதற்குச் சில முறை அதைக் கூறுகின்றனர். “ஆஃப்வான்” என்பது அதற்குப் பதிலாக வருகிறது, “யூ ஆர் வெல்கம்” என்பதுதான் அதன் அர்த்தம்.
பட மூலாதாரம், BBC/ Xiqing Wang
உள்ளூர் அரசு அமைப்பால் இந்த இலவச வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் பெரும்பாலான மாணவர்கள் பெண்களே, வாடிக்கையாளர்களை ஈர்க்க அவர்கள் நன்றாக ஆடை அணிந்துகொள்கின்றனர்.
“சீனா முழுவதும் இந்த வர்த்தகத்தின் முதுகெலும்பாக இந்தப் பெண்களே உள்ளனர்,” என ஒரு கடை உரிமையாளர் கூறுகிறார். இரானில் இருந்து வந்த இவர், ஆர்வம் மிக்க மாணவர் ஒருவருக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார்.
“ஒருவருக்கொருவர் சிறப்பாகச் செயலாற்றவும், போட்டியில் நிலைத்திருக்கவும் அவர்கள் இந்தப் பாடங்களைக் கற்கின்றனர்.”
பெரும்பாலான வணிகர்கள் ஏற்கெனவே சில ஆங்கில வார்த்தைகளைப் பேசுகின்றனர். தற்போது தங்கள் புதிய வாடிக்கையாளர்களிடம் ஸ்பானிய மொழி அல்லது அரபு மொழியில் பேச வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர். சீனாவின் மாறி வரும் வர்த்தக உறவின் ஒரு சிறிய, ஆனால் முக்கியமான சமிக்ஞையாக இது இருக்கிறது.
கொலம்பியாவை சேர்ந்த ஆஸ்கர், பஞ்சு அடைக்கப்பட்ட முயல் மற்றும் கரடி பொம்மைகள் நிறைந்த பைகளுடன், சந்தையில் உள்ள மற்ற கடைகளில் சுற்றி வந்தார்.
அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் உலகின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த வணிகர்களுக்கு “பல வாய்ப்புகளை” ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார்.
“அமெரிக்காவுடன் சமீப நாட்களில் வணிகம் செய்வது குறைந்துள்ளதால், சீனாவுடன் வணிகம் செய்வது முக்கியம்” என்று அவர் வலியுறுத்துகிறார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு