பட மூலாதாரம், EPA/Shutterstock
காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால், ஹமாஸ் இதுகுறித்து இன்னும் அதிகாரபூர்வ பதிலை வெளியிடவில்லை.
அமெரிக்காவால் வழங்கப்பட்ட இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
1. அமைதியான, அண்டை பகுதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாத, பயங்கரவாதத்திலிருந்து விடுபட்ட பகுதியாக காஸா இருக்கும்.
2. அதிகளவிலான துன்பங்களால் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு பயனளிக்கும் வகையில் காஸா மீட்டுருவாக்கம் செய்யப்படும்.
3. இரு தரப்பும் இந்த முன்மொழிவுக்கு ஒப்புக்கொண்டால், போர் உடனடியாக நிறுத்தப்படும். பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு தயாராகும் வகையில் இஸ்ரேலிய படைகள் திரும்பப் பெறப்படும். இந்த சமயத்தில் வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதல் உள்ளிட்ட அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்படும். மேலும், திட்டமிடப்பட்டபடி படைகள் முழுவதும் திரும்பப் பெறப்படும் வரை போரிடும் பகுதிகளில் துருப்புகள் நகராது.
4. இந்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பொதுவெளியில் ஒப்புக்கொண்ட 72 மணிநேரத்திற்குள் உயிருடன் உள்ள பணயக்கைதிகள் நாடு திரும்புவர், இறந்த பணயக்கைதிகளின் உடல்களும் ஒப்படைக்கப்படும்.
5. அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்ட பின்னர், இஸ்ரேல் தங்களிடம் உள்ள 250 ஆயுள்தண்டனை சிறைவாசிகள், அக்டோபர் 7, 2023க்குப் பிறகு தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1,700 பேரையும் விடுவிக்கும். விடுவிக்கப்படும் ஒவ்வொரு இறந்த இஸ்ரேலிய பணயக்கைதிக்கும், அந்நாடு காஸாவை சேர்ந்த இறந்த 15 பேரின் உடல்களை திரும்பி வழங்கும்.
பட மூலாதாரம், Reuters
6. அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்ட பின்னர், அமைதியுடன் இணைந்து வாழவும் தங்கள் ஆயுதங்களை கைவிடவும் தயாராக உள்ள ஹமாஸ் உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். காஸாவை விட்டு வெளியேற விரும்பும் ஹமாஸ் உறுப்பினர்களுக்கு, அவர்கள் செல்லும் நாடுகளுக்கு பாதுகாப்பான வழி ஏற்படுத்தித் தரப்படும்.
7. இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடனேயே, காஸாக்கு அனைத்து விதமான உதவிகளும் அனுப்பப்படும். இந்தாண்டு ஜனவரி 19ம் தேதி ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள மனிதநேய உதவிகளான, மறுவாழ்வுக்கான கட்டமைப்புகள் (தண்ணீர், மின்சாரம், கழிவுநீர் வசதி), மருத்துவமனைகள் மற்றும் பேக்கரிகளை மீட்டுருவாக்கம் செய்தல் மற்றும் இடிபாடுகளை அகற்றுவதற்கு தேவையான உபகரணங்களை வழங்குதல் மற்றும் சாலைகளை திறந்துவிடுதல் ஆகியவற்றுக்குக் குறையாமலும், இவற்றை ஒத்த உதவிகளும் வழங்கப்படும்.
8. காஸாவில் உதவிகளை வழங்குவது, இருதரப்பின் தலையீடும் இன்றி ஐ.நா மற்றும் அதன் முகமைகளான செம்பிறைச் சங்கம் ஆகியவை மூலமும் இருதரப்புடனும் தொடர்பில் இல்லாத சர்வதேச நிறுவனங்களுடனும் சேர்ந்து வழங்கப்படும். இரு திசைகளிலும் ரஃபா எல்லையை திறந்துவிடுவதற்கு, ஜனவரி 19, 2025 ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் பின்பற்றப்படும்.
9. காஸா மக்களுக்கு அன்றாட பொதுச் சேவைகள் மற்றும் நகராட்சி நிர்வாகத்தை வழங்கும் பொறுப்பைக் கொண்ட வல்லுநர்கள் அடங்கிய, அரசியல் சார்பற்ற பாலத்தீனக் குழுவால் ஒரு இடைக்கால நிர்வாகத்தின் கீழ் காஸா ஆளப்படும்.
இக்குழுவில் தகுதியான பாலத்தீனர்கள் மற்றும் சர்வதேச வல்லுநர்கள் இடம்பெறுவார்கள். இந்தக் குழுவை ஒரு புதிய சர்வதேச இடைக்கால “அமைதி வாரியம்” (Board of Peace) மேற்பார்வை செய்யும்
இந்த அமைதி வாரியத்திற்குத் டொனால்ட் டிரம்ப் தலைமை தாங்குவார். இதில் இடம்பெறும் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் உட்பட மற்ற உறுப்பினர்கள் மற்றும் உலகத் தலைவர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள்.
டிரம்பின் 2020 அமைதித் திட்டம் மற்றும் செளதி-பிரெஞ்சு திட்டம் உட்பட பல்வேறு முன்மொழிவுகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி பாலத்தீன அதிகார சபை தனது சீர்திருத்தத் திட்டத்தை நிறைவேற்றி பாதுகாப்பாகவும் திறம்படவும் காஸாவின் கட்டுப்பாட்டை மீண்டும் எடுத்துக் கொள்ளும் வரை, இந்த வாரியம் காஸாவின் மறுசீரமைப்புக்கான கட்டமைப்பை உருவாக்கி, நிதி விவகாரங்களைக் கையாளும்.
காஸா மக்களுக்குச் சேவை செய்யும் மற்றும் முதலீட்டை ஈர்க்க உதவும் நவீன மற்றும் திறமையான நிர்வாகத்தை உருவாக்க இந்த வாரியம் சிறந்த சர்வதேச தரநிலைகளைப் பயன்படுத்தும்.
10. காஸாவை மீண்டும் கட்டியெழுப்பவும், புத்துயிர் ஊட்டவும், டிரம்பின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் ஒன்று உருவாக்கப்படும். மத்திய கிழக்கில் சில செழிப்பான நவீன நகரங்களின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்த நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைப்பதன் மூலம் இந்தத் திட்டம் உருவாக்கப்படும்.
பல நல்லெண்ணம் கொண்ட சர்வதேசக் குழுக்களால் முதலீட்டு முன்மொழிவுகளும், அற்புதமான மேம்பாட்டு யோசனைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பட மூலாதாரம், Getty Images
11. ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும், இதில் பங்கேற்கும் நாடுகளுடன் வரி மற்றும் அணுகல் விதிகள் குறித்து பேச்சுவார்த்தை செய்து ஒப்புக்கொள்ளப்படும்.
12. யாரும் காஸாவைவிட்டு வெளியேற வற்புறுத்தப்பட மாட்டார்கள், அதேசமயம் யாரெல்லாம் காஸாவை விட்டு வெளியேற நினைக்கிறார்களோ அவர்கள் அதை செய்யலாம், மீண்டும் காஸாவுக்கே கூட திரும்பலாம். காஸாவிலேயே மக்கள் இருக்க ஆதரிக்கப்படும். சிறப்பான காஸாவை உருவாக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
13. ஹமாஸ் மற்றும் பிற பிரிவினர் காஸாவின் நிர்வாகத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது எந்த வடிவத்திலோ எந்தப் பங்கையும் வகிக்கக் கூடாது என்று ஒப்புக்கொள்கின்றனர்.
சுரங்கங்கள் மற்றும் ஆயுத உற்பத்தி வசதிகள் உட்பட அனைத்து ராணுவ, பயங்கரவாத மற்றும் தாக்குதல் உள்கட்டமைப்பும் அழிக்கப்படும், மீண்டும் கட்டப்படாது. காஸாவில் சுயாதீன கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையின் கீழ் ராணுவ நீக்க (Demilitarisation) செயல்முறை இருக்கும்.
இதில், இணக்கம் காணப்பட்ட வழிமுறையின் மூலம் ஆயுதங்களை நிரந்தரமாகப் பயன்படுத்த முடியாதவாறு அகற்றுவது மற்றும் சர்வதேச அளவில் நிதியளிக்கப்பட்ட மறுசீரமைப்புத் திட்டம் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் சுயாதீனக் கண்காணிப்பாளர்களால் சரிபார்க்கப்படும். புதிய காஸா, வளமான பொருளாதாரத்தை உருவாக்குவதிலும், அதன் அண்டை நாடுகளுடன் அமைதியாக சகவாழ்வு வாழ்வதிலும் முழுமையாக உறுதியுடன் இருக்கும்.
14. ஹமாஸ் மற்றும் பிற பிரிவினர் தங்கள் வார்த்தைக்கு இணங்குவதையும், புதிய காஸா அதன் அண்டை நாடுகளுக்கோ அல்லது அதன் மக்களுக்கோ எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் உறுதிப்படுத்த பிராந்தியப் பங்காளிகளால் ஓர் உத்தரவாதம் வழங்கப்படும்.
15. காஸாவில் உடனடியாக நிலைநிறுத்தப்பட ஒரு தற்காலிக சர்வதேச ஸ்திரப்படுத்தும் படையை (International Stabilisation Force – ISF) உருவாக்குவதற்கு அரபு மற்றும் சர்வதேசப் பங்காளிகளுடன் அமெரிக்கா இணைந்து பணியாற்றும்.
ISF படை, காஸாவில் பாலத்தீனப் போலீஸ் படைகளுக்குப் பயிற்சி அளித்து ஆதரவளிக்கும். மேலும், இந்தத் துறையில் விரிவான அனுபவம் கொண்ட ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகளுடன் கலந்தாலோசிக்கப்படும்.
இந்தப் படையே நீண்ட கால உள்நாட்டுப் பாதுகாப்புத் தீர்வாக இருக்கும். ISF படையானது, புதிதாகப் பயிற்சி பெற்ற பாலத்தீனப் போலீஸ் படைகளுடன் இணைந்து எல்லைப் பகுதிகளைப் பாதுகாக்க இஸ்ரேல் மற்றும் எகிப்துடன் இணைந்து செயல்படும்.
காஸாவில் ஆயுதங்கள் நுழைவதைத் தடுப்பதும், காஸாவை மீண்டும் கட்டியெழுப்பவும் புத்துயிர் ஊட்டவும் பொருட்களின் விரைவான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை எளிதாக்குவதும் மிக முக்கியமானது.
16. இஸ்ரேல் காஸாவை ஆக்கிரமிக்கவோ அல்லது இணைத்துக் கொள்ளவோ செய்யாது. ISF படை கட்டுப்பாடு மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டும் போது, இஸ்ரேல் ராணுவம் வெளியேறும்.
இந்த வெளியேற்றம் இஸ்ரேல் ராணுவம், ISF, உத்தரவாதம் அளிக்கும் நாடுகள் மற்றும் அமெரிக்கா இடையே ஒப்புக் கொள்ளப்படும் தரநிலைகள், மைல்கற்கள் மற்றும் காலக்கெடு ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும்.
இஸ்ரேல், எகிப்து அல்லது அதன் குடிமக்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத ஒரு பாதுகாப்பான காஸாவை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். நடைமுறையில், இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமித்துள்ள காஸா பகுதியை, இடைக்கால நிர்வாகத்துடன் மேற்கொள்ளும் ஒப்பந்தத்தின்படி ISF படையிடம் படிப்படியாக ஒப்படைக்கும், பயங்கரவாத அச்சுறுத்தல் எதுவும் மீண்டும் ஏற்படாதவாறு காஸா முறையாகப் பாதுகாக்கப்படும் வரை ஒரு பாதுகாப்புச் சுற்றளவு இருப்பு மட்டும் தொடரும்.
17. இந்த முன்மொழிவை ஹமாஸ் தாமதப்படுத்தினால் அல்லது நிராகரித்தால், மேலே கூறப்பட்டவை, குறிப்பாக அதிகரித்த உதவிகளை வழங்கும் நடைமுறை, இஸ்ரேல் ராணுவத்தால் ISF-இடம் ஒப்படைக்கப்படும் பயங்கரவாதம் இல்லாத பகுதிகளில் தொடரும்.
18. அமைதியால் கிடைக்கும் நன்மைகளை வலியுறுத்துவதன் மூலம் பாலத்தீனர்கள் மற்றும் இஸ்ரேலியர்களின் மனநிலையையும், கருத்துக்களையும் மாற்ற முயற்சிக்கும் ‘மதங்களுக்கு இடையேயான உரையாடல் செயல்முறை’ (Interfaith dialogue process), சகிப்புத்தன்மை மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகிய மதிப்புகளின் அடிப்படையில் நிறுவப்படும்.
19. காஸா மீள் உருவாக்கம் தொடர்ந்து, பாலத்தீன அதிகார சபை (PA) சீர்திருத்தம் நம்பிக்கையுடன் செயல்படுத்தப்பட்டால், பாலத்தீன மக்களின் விருப்பமான பாலத்தீன தன்னாட்சி மற்றும் சுதந்திரமான நாடு உருவாவதற்கான நம்பகமான பாதைக்கான சூழல்கள் உருவாக்கப்படும்.
20. அமைதியுடனும் நல்லிணக்கத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கான அரசியல் கட்டமைப்பை உருவாக்க இஸ்ரேல் மற்றும் பாலத்தீனர்களுக்கு இடையே அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.