பட மூலாதாரம், Getty Images
யுக்ரேன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. அந்தப் போரை நிறுத்த ரஷ்யாவுக்கு அழுத்தம் தரும் வகையில் அமெரிக்கா சமீபத்தில் எடுத்திருக்கும் முடிவு, இந்தியாவை எதிர்பாராத விதமாக முக்கிய இலக்காக மாற்றியுள்ளது.
ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா வாங்குவதைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப், புதன்கிழமையன்று, இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை 25%-ல் இருந்து 50% ஆக உயர்த்தி அறிவித்தார். இந்த முடிவை இந்தியா, நியாயமற்றது என்று தெரிவித்துள்ளது
ரஷ்யா கச்சா எண்ணெய் விற்பனை மூலம் ஈட்டும் வருவாயை தடுத்து நிறுத்தி, யுக்ரேனுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தவே இந்த வரி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய இறக்குமதி வரி ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வருகிறது.
இந்த நடவடிக்கையின் மூலம், ஆசியாவில் அதிகமான வரி விதிப்பிற்கு உள்ளான அமெரிக்காவின் வர்த்தக கூட்டாளி நாடாக இந்தியா மாறியுள்ளது.
கடுமையான வரிவிதிப்பை சந்திக்கும் பிரேசில் நாட்டுடன், இந்தியாவும் இணைந்துள்ளது.
சந்தைக் காரணிகளை அடிப்படையாக கொண்டு தான் இறக்குமதி அமைந்துள்ளது என்றும் எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்யவே இறக்குமதி செய்யப்படுகிறது என்றும் இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது.
ஆனால் டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தல் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உள்ளது.
இந்த வரி விகிதம் நீடித்தால், அமெரிக்காவுக்கு இந்தியா ஆண்டுதோறும் 86.5 பில்லியன் டாலர் மதிப்பில் ஏற்றுமதி செய்யும் பொருட்கள் அனைத்தும் வணிக ரீதியாக நஷ்டமடையக் கூடும்.
பெரும்பாலான இந்திய ஏற்றுமதியாளர்கள், அவர்களால் 10 முதல் 15% வரையிலான வரியைக் கூட தாங்கிக் கொள்ள இயலாது என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 50% வரி என்பது அவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது.
இந்த வரி நடைமுறைக்கு வந்தால், ” குறிப்பிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது உடனடியாக நின்றுவிடும்” என ஜப்பானைச் சேர்ந்த பங்குச்சந்தை தரகு நிறுவனமான நோமுரா ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியில் 18% அமெரிக்காவுக்கு செல்கிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.2% ஆகும். 25% இறக்குமதி வரியை அமெரிக்கா அறிவித்தாலும் கூட, இந்த உள்நாட்டு உற்பத்தியானது 0.2 முதல் 0.4% ஆக வீழ்ச்சியை சந்திக்கக் கூடும். இந்த ஆண்டின் வளர்ச்சி வீதம் 6%-க்கும் கீழ் குறையும் அபாயத்தைக் கொண்டிருக்கும்.
நிபுணர்கள் கூறுவது என்ன?
கூடுதல் வரி விதிப்பில் இருந்து தற்போது இந்தியாவின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் “அதிக-உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகள், ரத்தினங்கள், மற்றும் நகைகள் ஆகியவற்றின் ஏற்றுமதிகளில் சரிவு ஏற்பட்டு இந்த வரிவிதிப்பின் தாக்கம் உணரப்படும்,” என்று சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்ட ஆலோசனை நிறுவனமான ஆசியா டிகோடடில் பணியாற்றும் பிரியங்கா கிஷோர் கூறுகிறார்.
இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் ராகேஷ் மெஹ்ரா, இந்த வரி விதிப்பு இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு “மிகப்பெரிய பின்னடைவு,” என்று கூறுகிறார்.
மேலும் அமெரிக்க சந்தையில் போட்டியை பலவீனப்படுத்தும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
தற்போது பதற்றம் அதிகரித்து வருகின்ற சூழலில், டிரம்பின் முடிவு அதிக பின்விளைவுகளைக் கொண்ட சூதாட்டம் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா மட்டும் வாங்கவில்லை. சீனாவும், துருக்கியும் கூட அங்கிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கின்றன. இருப்பினும், முக்கியமான கூட்டாளியாக அறியப்பட்ட இந்தியாவையே அமெரிக்கா இலக்காக மாற்றியுள்ளது.
ஆனால் மாறியது என்ன? விளைவு என்னவாக இருக்கும்?
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல், இந்த அறிவிப்பின் மூலம் இந்தியாவின் “மோசமான அச்சம்,” உண்மையாகியுள்ளது என்று கூறுகிறார்.
“இந்த வரி விதிப்பானது குறுகிய காலத்திற்கானது. இந்த மாதம் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மேம்படும் என்று நம்பலாம். இல்லையெனில், ஒரு தேவையற்ற வர்த்தகப் போர் ஏற்படலாம். தற்போதைய ஆரம்ப கட்டத்தில் அதை அளவிடுவது கடினம்,” என்று உர்ஜித் படேல் லிங்கடின் பக்கத்தில் எழுதியுள்ளார்.
இந்த அறிவிப்பால் ஏற்படும் மோசமான தாக்கத்தின் காரணமாகவே சிலர் இந்த வரி விதிப்பானது நீடிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். 27-ஆம் தேதி அன்று புதிய வரி அமலுக்கு வருகின்ற சூழலில், அடுத்த சுமார் 20 நாட்கள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. பதற்றத்தில் இருக்கும் சந்தைகள், இந்தியா இக்காலகட்டத்தில் எடுக்கும் நகர்வுகளை உன்னிப்பாக கவனிக்கும்.
முக்கியமான கேள்வி என்னவென்றால், இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, “ரஷ்யாவுடனான வர்த்தக உறவுக்கான அபராதத்தை,” தவிர்க்க நரேந்திர மோதி தலைமையிலான அரசு ரஷ்யாவுடனான வர்த்த உறவை கைவிடுமா அல்லது அமெரிக்காவுக்கு எதிராக நிற்குமா என்பது தான்.
“ராணுவ உபரணங்களுக்காக ரஷ்யாவை சார்ந்திருப்பதை குறைப்பதற்கும், எண்ணெய் இறக்குமதியை பன்முகப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இது டிரம்ப் நிர்வாகம் தரும் அழுத்தங்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. எனவே இந்தியா, தற்போது செயல்பாட்டில் இருக்கும் வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் சில சமரசங்களை ஏற்படுத்த இயலும்,” என்று சத்தம் ஹவுஸின் முனைவர் செய்டிஜ் பாஜ்பாய் தெரிவிக்கிறார்.
மேற்கொண்டு பேசிய அவர், இந்த உறவு “கட்டுப்படுத்தப்பட்ட சரிவில்” இருப்பதாகவும், ஆனால் ரஷ்யா வருங்காலத்திலும் இந்தியாவிற்கு ஒரு முக்கிய கூட்டாளியாக தொடரும் என்றார்.
இருப்பினும், டிரம்பின் இந்த சமீபத்திய நடவடிக்கைகள், இந்தியா தன்னுடைய உத்தி ரீதியிலான உறவுகள் குறித்து மறுபரிசீலனை செய்ய வாய்ப்புகளை வழங்கியுள்ளதாக சில நிபுணர்கள் நம்புகின்றனர்.
பட மூலாதாரம், AFP via Getty Images
மாற்று வாய்ப்பு
அமெரிக்காவின் நடவடிக்கைகள், “இந்தியா தன்னுடைய உத்தி ரீதியிலான சார்பை மறுபரீசிலனை செய்ய தூண்டும். மேலும் ரஷ்யா, சீனா மற்றும் பல நாடுகளுடனான உறவை ஆழப்படுத்தக் கூடும்,” என்று அஜய் ஶ்ரீவஸ்தவா தெரிவிக்கிறார்.
அவர் டெல்லியைச் சேர்ந்த சிந்தனைக் களமான க்ளோபல் டிரேட் ரிசர்ச் இனிசியேட்டிவில் பணியாற்றுகிறார்.
மோதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய மாநாட்டிற்காக சீனா செல்வார். 2020-ஆம் ஆண்டு நடந்த கால்வான் எல்லை சண்டைகளுக்கு அடுத்து முதன்முறையாக அவர் அங்கே செல்ல உள்ளார். இந்தியா – ரஷ்யா – சீனா என மூன்று நாட்டு உறவுகள் புதுப்பிக்கப்படலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
அமெரிக்க குழு ஒன்று இந்தியாவுக்கு வருகை புரிவதால், ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் வர்த்தக பேச்சுவார்த்தை உடனடி கவனம் பெறுகிறது. முன்னதாக விவசாயம் மற்றும் பால்வளத்துறை தொடர்பான பேச்சுவார்த்தை முடங்கியது. இந்த இரண்டு துறைகளிலும் அமெரிக்க அதிக அணுகலைக் கோருகிறது. ஆனால் இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.
இந்தியா அதிக சிரத்தை எடுத்து பாதுகாத்து வரும் பால் மற்றும் விவசாயத் துறைகளில் சலுகைகள் ஏதேனும் இருக்குமா அல்லது அதற்கான அரசியல் விலை அதிகமாக இருக்குமா?
விநியோகச் சங்கிலி மற்றும் முதலீட்டை பன்முகப்படுத்த சீனாவுடன் இன்னும் ஒரு நாட்டிலும் உற்பத்தி செய்ய விரும்பும் நிறுவனங்களை இந்தியா ஈர்த்து வரும் நிலையில், இது போன்ற தொழிற்சாலைகள், முதலீட்டை பெறுவதில் இனி இந்தியவின் நிலை என்ன என்பது அடுத்த மிகப்பெரிய கேள்வி.
வியட்நாம் போன்ற நாடுகள் குறைவான வரியை கொண்டிருப்பதால் டிரம்பின் இந்த அறிவிப்பு இந்தியாவின் வேகத்தை குறைக்கும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது.
ஆனால் முதலீட்டாளர்களின் உணர்வில் ஏற்படும் தாக்கம் குறைவாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்தியா இன்னும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களை ஈர்த்து வருகிறது. அந்த நிறுவனம் ஏற்கன்வே இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்கிறது. மேலும் செமிகண்டக்டர்கள் மீது வரி விதிக்கப்படாததால் அது பெரும்பாலும் பாதிக்கப்படவில்லை.
2019 -ல் பதிலடி
இந்தியா தன்னுடைய ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவாக என்ன செய்யப் போகிறது என்பதையும் நிபுணர்கள் கவனிக்க உள்ளனர்.
“இந்திய அரசாங்கம் இதுவரை, ஏற்றுமதியாளர்களுக்கு நேரடி மானியம் எதையும் அறிவிக்கவில்லை. ஆனால் தற்போது வர்த்தக நிதி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்க சாதமாக முன்மொழியப்பட்டிருக்கும் திட்டங்கள், இத்தகைய வரிவிதிப்பின் தாக்கத்தை சமாளிக்க போதுமானதாக இருக்காது,” என்று நோமுரா தெரிவிக்கிறது.
அபாயங்கள் அதிகமாக இருப்பதால், சில வாரங்களுக்கு முன்பே எட்டியிருக்க வேண்டிய வர்த்தக ஒப்பந்தத்தை உயர்மட்ட ராஜ்ஜிய அளவிலான பேச்சுவார்த்தைகள் மட்டுமே புதுப்பிக்க இயலும் என்று வர்த்தக நிபுணர்கள் கருதுகின்றனர்.
தற்போது இந்தியா தன்னுடைய வலிமையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. “தன்னுடைய நாட்டின் நலன்களை பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்,” என்று கூறியுள்ளது.
எதிர்க்கட்சியினரும் தங்களின் கருத்துகளை முன்வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, டிரம்பின் 50% வரி விதிப்பை, “பொருளாதார மிரட்டல்,” என்று கூறியுள்ளார். மேலும் நியாயமற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவை மிரட்டும் முயற்சி இது,” என்றும் கூறியுள்ளார்.
மோதியால் புகழ்ச்சியுடன் கூறப்பட்ட, அமெரிக்காவுடனான “மெகா பார்ட்னர்ஷிப்” என்பது அவருடைய (அரசின்) பெரிய வெளியுறவுக் கொள்கைக்கான சோதனையா? இந்தியா பதிலடி தருமா?
இந்தியாவின் பதிலடி சாத்தியமற்றது என்று கூறிவிட இயலாது என்று பார்க்ளேஸ் வங்கியின் ஆய்வு கூறுகிறது. ஏன் என்றால் இதற்கு முன்பும் இப்படியான ஒரு சூழலை இந்தியா எதிர்கொண்டுள்ளது.
“2019-ஆம் ஆண்டு இந்தியாவின் எஃகு மற்றும் அலுமினியம் பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ஆப்பிள் மற்றும் பாதாம் உள்ளிட்ட 28 பொருட்களுக்கு வரி விதித்திருந்தது. 2023-ஆம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பின் தீர்வுக்குப் பிறகு சில பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி 2023-ஆம் ஆண்டு திரும்பிப் பெறப்பட்டது,” என்றும் பார்க்ளேஸ் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு