பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள கூடுதல் வரிகள் 50% ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் தோல் மற்றும் காலணி ஏற்றுமதி கடுமையான சவால்களை எதிர்கொள்ள உள்ளது.
இந்த வரிகள் அமெரிக்க சந்தையில் போட்டியிட முடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளன. இதனால், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் (கான்பூர்) உள்ளிட்ட முக்கிய ஏற்றுமதி மையங்களில் தயாரிப்புகள் நிறுத்தப்பட்டு, வேலை இழப்பு அபாயத்தில் உள்ளன.
புதிய தயாரிப்புக்கான ஆர்டர்கள் ஏற்கெனவே நிறுத்தப்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்களும் தயாரிப்பாளர்களும் தெரிவிக்கின்றனர்.
ஏற்றுமதி இழப்புகள்
அமெரிக்காவிற்கான இந்தியாவின் தோல் மற்றும் காலணி ஏற்றுமதி 2025 நிதியாண்டில் மொத்தம் 1.2 பில்லியன் டாலராக இருந்தது. இந்தத் துறையில் இந்தியாவின் உலகளாவிய ஏற்றுமதியில் 20% அமெரிக்க ஏற்றுமதியாகும்.
இப்போது அமெரிக்கா விதித்துள்ள 50% இறக்குமதி கட்டணம் மற்ற உலக நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை விடவும் மிக அதிகமாகும். இதனால் அமெரிக்க இறக்குமதியாளர்கள் (Buyers- உற்பத்திக்கு மொத்த ஆர்டர் கொடுத்து வாங்குவோர்) இந்தியாவின் மீது ஆர்வமிழப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அமெரிக்க சந்தையில் இந்திய தனது பாரம்பரிய சிம்மாசனத்தை இழக்க நேரிடும்.
“இவ்வளவு அதிகமான வரிகள், இந்த தொழிலை கொன்றுவிடும்” என்று பிபிசி தமிழிடம் பேசிய உலக வர்த்தக ஆய்வு முன்னெடுப்பின் தலைவரும் முன்னாள் இந்திய வர்த்தக சேவை அதிகாரியுமான அஜய் ஶ்ரீவத்சவா கூறுகிறார். “அடுத்த ஆறு மாதங்களில் ஏற்றுமதிகள் 20% குறையும். அதன் பின் படிப்படியாக குறைந்து, கிட்டத்தட்ட 60% வரை குறையக்கூடும்” என அச்சப்படுகிறார் அவர்.
தோல் தொழில்கள் சந்தை இரண்டு விதமாக அமைகிறது. முதலாவது விலைமதிப்பு மிக்க தனித்துவ தயாரிப்புகளுக்கான சந்தை, இரண்டாவது வழக்கமான தயாரிப்புகளுக்கான சந்தை.
இதில் “தனித்துவமான தயாரிப்புகளுக்கு உதாரணமாக கோலாபூர் காலணியை பயன்பாட்டு காரணத்துக்காக அல்லாமல், அதன் மதிப்புக்காகவே வாடிக்கையாளர்கள் வாங்குவார்கள்.
அது போன்ற தயாரிப்புகளின் ஏற்றுமதி 50% அளவிலும் ஷூ , பேக் போன்ற வழக்கமான தயாரிப்புகளின் ஏற்றுமதி 70% குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது” என்று அஜய் ஶ்ரீவத்சவா சுட்டிக்காட்டுகிறார்.
பட மூலாதாரம், Ajay Srivatsava
வேலை இழப்புகளும், உற்பத்தி நிறுத்தமும்
தமிழ்நாட்டில் ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, உத்தரபிரதேசத்தில் ஆக்ரா, கான்பூர் போன்ற பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள் குவிந்துள்ள முக்கிய இடங்கள் ஆகும்.
இங்கே ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் ரத்து செய்யப்படுவதாகவும், இதே நிலை தொடர்ந்தால் வேலை இழப்புகள் ஏற்படும் என்றும் கவலை ஏற்பட்டுள்ளது.
” தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உற்பத்தியை பாதியிலேயே நிறுத்தத் தொடங்கியுள்ளன. உலகளாவிய பிராண்டுகளுக்கு முக்கிய உற்பத்தி மையமான தமிழ்நாட்டின் ஆம்பூர்-ராணிப்பேட்டை பகுதிகளில் அமெரிக்க ஏற்றுமதிகள் தேக்கமடைந்திருப்பதால் உற்பத்தி, விநியோகம் சார்ந்த வேலைகள் உடனடி அச்சுறுத்தலில் இருக்கின்றன” என்று டிரம்ப் வரிகளின் தாக்கம் குறித்து உலக வர்த்தக ஆய்வு முன்னெடுப்பு (Global Trade Research Initiative) ஆகஸ்ட் 26ம் தேதி வெளியிட்ட விரிவான அறிக்கையில் கூறியுள்ளது.
தோல் தயாரிப்பு நிறுவனங்களும், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் குவிந்துள்ள தமிழ்நாட்டின் வாணியம்பாடியில் உள்ள உற்பத்தியாளர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.
ஹிஜாஸ் குரோடா க்ளவ் கம்பெனி எனும் கையுறைகள் தயாரிக்கும் கூட்டு நிறுவனத்தின் இயக்குநரான படேல் முகமது யூசூப், பிபிசி தமிழிடம் பேசும் போது, “50% வரிகள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது முதலே புதிய ஆர்டர்கள் வரவில்லை. வரி விதிப்பு குறித்த பேச்சுகள் இரண்டு மாதங்களாக நடைபெறுகின்றன. இந்த காலக்கட்டத்தில் ஒரு மாத தயாரிப்புகள் அப்படியே தேக்கமடைந்துள்ளன. இந்த தயாரிப்புகளை அப்படியே நிறுத்திவைக்கும்படி அமெரிக்க இறக்குமதியாளர்கள் தெரிவித்து விட்டனர். தற்போது வரிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இனி நாங்கள் விலையை குறைத்துக்கொள்ளும்படி எங்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்துவார்கள். இந்த பொருட்கள் குறிப்பிட்ட இறக்குமதியாளர்களுக்காக பிரத்யேகமாக செய்யப்படுகின்றன, இதில் பிராண்ட் பெயர்கள் இடம் பெற்றிருக்கும். எனவே இவற்றை வேறு சந்தையில் விற்பது முடியாத காரியம்” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் பாதிப்பு இருக்கும்
வேலை இழப்புகள் பிரதானமாக சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும், கான்பூர் போன்ற தொழிற்சாலைகள் இருக்கும் நகரங்களிலும் அதிகம் இருக்கும் என அஜய் ஶ்ரீவத்சவா குறிப்பிடுகிறார்.
தனது நிறுவனத்திலும் அப்படியான சூழல் நிலவுகிறது என்கிறார் படேல் யூசூஃப். அவரது நிறுவனத்தில் 800 பேர் கையுறை தயாரிப்பு நிறுவனத்திலும், 300 பேர் தோல் பதனிடும் தொழிற்சாலையிலும் பணிபுரிகின்றனர். “தோல் பதனிடும் தொழிற்சாலையில் பெரும்பாலும் ஆண்கள் இருப்பார்கள். ஆனால் தயாரிப்பு நிறுவனத்தில் பெரும்பாலும் பெண்களே. 800 பேரில் 600 ஊழியர்கள் பெண்கள்.” என்கிறார்.
தோல் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் தொழில், பெரும்பாலும் மனித உழைப்பை நம்பியே உள்ளது என்றும் இந்த துறையில் ஆட்டோமேஷன் (இயந்திரமயமாக்கல்) செய்வதற்கான சாத்தியங்கள் குறைவு என்றும் துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். நுணுக்கங்களுடன் தையல் செய்வது இந்த துறையின் முக்கிய வேலைகளில் ஒன்றாக இருக்கும் போது, மனித உழைப்பு அதிகம் தேவை என்கின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
மதிப்புச் சங்கிலியில் தாக்கம்
அமெரிக்க வரிகளின் தாக்கம் இறுதி தயாரிப்பு மேற்கொள்ளும் ஏற்றுமதியாளர்கள் மீது மட்டுமல்ல, முழு மதிப்புச் சங்கிலியிலும் இதன் பாதிப்பு உள்ளது. அதனால் தோல் பதனிடும் தொழிற்சாலைகள், தையல் நிறுவனங்கள், மற்றும் இந்த தொழில் சார்ந்த பிற சிறு குறு நிறுவனங்கள் அனைத்திலும் ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது.
போட்டி நாடுகளுக்கு சாதகம்
அமெரிக்க தோல் ஏற்றுமதி சந்தையில் இந்தியாவுடன் போட்டியிடும் முக்கிய நாடுகளில் சில வியட்நாம், கம்போடியா, இந்தோனேசியா, சீனா. இந்தியாவுக்கு விதிக்கப்படும் வரிகளை ஒப்பிடும் போது, இந்த நாடுகள் மீதான வரிகள் குறைவாக உள்ளன. எனவே அமெரிக்க இறக்குமதியாளர்கள் இந்தியாவிலிருந்து இந்த நாடுகளுக்கு தங்கள் வர்த்தகத்தை மாற்ற வாய்ப்புள்ளது.
” ஷூ மற்றும் சின்தடிக் காலணிகளுக்காக வியட்நாம், சீனா, இந்தோனேசியா, கம்போடியா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க இறக்குமதியாளர்கள் தங்கள் ஆர்டர்களை திருப்பி விடுகின்றனர். ஏனெனில் இந்த நாடுகள் மிகக் குறைந்த வரிகளை எதிர்கொள்கின்றன (வியட்நாம் – 20%, சீனா – 30%). அதே போல இத்தாலி, மெக்ஸிகோ ஆகியவை உயர்தர தோல் தயாரிப்புக்கான சந்தையை கைப்பற்றக் கூடும். அடிப்படை தோல் பொருட்கள் சந்தையை வங்கதேசமும், பாகிஸ்தானும் ஆக்கிரமிக்க தயாராக உள்ளன” என்று உலக வர்த்தக ஆய்வு முன்னெடுப்பு தனது அறிக்கையில் கூறுகிறது.
அமெரிக்க வாங்குபவர்கள் வேறு சந்தைகளுக்கு செல்வது போல, இந்திய ஏற்றுமதியாளர்கள் வேறு சந்தைகளில் தங்கள் பொருட்களை விற்பது எளிதானதல்ல. ” அமெரிக்காவை ஒப்பிடும் போது ஐரோப்பிய சந்தை மிக சிறியது. மேலும் அந்த பிராந்தியத்தில் போரின் காரணமாக வர்த்தகம் செய்வதற்கு உகந்த சூழல் இல்லை. அமெரிக்காவுக்கு பதிலாக வேறு சந்தையை தேடுவது இந்தியாவிற்கு மிகவும் சிரமம்” என்கிறார் படேல் யூசூஃப்.
மேலும், “வியட்நாம், கம்போடியா நாடுகளில் ஏற்கெனவே வலுவான உற்பத்தி துறை உள்ளது. இந்த வரி சூழல் அவர்களுக்கு மேலும் சாதகமாக இருக்கப் போகிறது” என்கிறார் யூசூஃப்.
பட மூலாதாரம், Getty Images
விலையை குறைக்கவும் முடியாது
இதே கவலையை தெரிவிக்கும் அஜய் ஶ்ரீவத்சவா, இந்தியா மீதான வரிகள் காரணமாக உடனடி பலன் பெற போவது 20% வரிகள் கொண்ட வியட்நாம், மற்றும் 19% வரிகள் கொண்ட வங்கதேசம் ஆகிய நாடுகளே என்று கூறுகிறார். “தனித்துவமான தயாரிப்புகளுக்கு 20 முதல் 25% லாபமும், வழக்கமான தோல் தயாரிப்புகளுக்கு 10 முதல் 15% லாபமும் வைத்து பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும். எனவே இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்கள் விலைகளை குறைப்பதன் மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. 50% என்பது பெரிய அளவிலான வரி, இதன் தாக்கத்தை குறைக்க அரசுகளும் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை” என்கிறார் அவர்.
“எனது நிறுவனத்தில் இருப்பது போல இந்தப் பகுதியில் உள்ள பிற தயாரிப்பு நிறுவனங்களிலும் பெண்களே அதிகமாக வேலை செய்கின்றனர். கல்வியறிவு குறைந்த பெண்கள் இவ்வாறு உழைத்து தங்கள் அடுத்த தலைமுறையை படிக்க வைக்கின்றனர். இந்த நெருக்கடியால் நேரடியாக பாதிக்கப்படுவது இவர்களாக தான் இருப்பார்கள்” என்கிறார் யூசூஃப்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு