பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் நிர்வாகம் 24 மணி நேரத்திற்கும் குறுகிய நேரத்திலேயே 2 வெளியுறவுக் கொள்கைகளில் இருந்து பெரும் சவால்களை சந்தித்துள்ளது.
தோஹாவில் ஹமாஸை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மற்றும் போலாந்தில் ரஷ்யா டிரோன் தாக்குதல் வெள்ளை மாளிகைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது டிரம்ப் நிர்வாகத்திற்கு 2 பெரும் சவால்களாக இருக்கலாம்.
எல்லாவற்றுக்கும் மேல் யுக்ரேன் மற்றும் காஸா பிரச்னையை விரைவாகவும், எளிதாகவும் சரிசெய்து விடுவேன் என டிரம்ப் கூறியிருந்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இருவருமே வெள்ளை மாளிகையின் சமாதான முயற்சிகளை கடுமையாக சீர்குலைத்துள்ளனர்.
நேரம் பற்றி பார்க்கையில், காஸாவில் நடக்கும் போரை நிறுத்துவது தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட பிறகே இந்த தோஹா தாக்குதல் நடந்துள்ளது.
தனது சமூகவலைதளத்தில், இதுதான் இறுதி வாய்ப்பு என ஹாமாஸிடம் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
“பேச்சுவார்த்தையை ஏற்காவிட்டால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி ஹமாஸுக்கு நான் எச்சரிக்கை விடுத்திருந்தேன்” என டிரம்ப் தனது ட்ரூத் தளத்தில் ஞாயிறு அன்று பதிவிட்டிருந்தார்.
மேலும் “இதுதான் எனது கடைசி எச்சரிக்கை. இதற்கு மேல் எச்சரிக்கை விடுக்கமாட்டேன்” எனவும் குறிப்பிட்டிருந்தார்.
தோஹாவில் தங்களின் கோரிக்கையை முன்வைப்பதற்காக ஹமாஸின் மூத்த தலைவர்கள் ஒன்று கூடியிருந்தனர். ஆனால் இஸ்ரேல் அதைக் கேட்க விரும்பவில்லை.
இந்த தாக்குதலால் அமெரிக்காவின் சமீபத்திய முன்மொழிவு தகர்ந்தது மட்டுமன்றி டிரம்ப் நிர்வாகம் நம்பியிருந்த காஸாவுக்கான ரஜ்ஜிய முயற்சிகளையும் பாதித்துள்ளது.
மேலும் இஸ்ரேல் தாக்குதல் குறித்து அமெரிக்காவிற்கு எப்போது தெரிந்தது மற்றும் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது விவாதப் பொருளாகியுள்ளது.
உலகின் மிக முக்கியமான அமெரிக்க விமானப்படை தளங்களில் ஒன்று கத்தாரில் இருப்பதால், இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் வருவதை அமெரிக்கா கவனிக்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை என பலரும் நம்புகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு கடந்த 2 ஆண்டுகளில் மத்திய கிழக்குப் பகுதிகளில் இஸ்ரேல் தனது ராணுவ பலத்தைக் காட்டி வருகிறது. அதுவும் அமெரிக்காவின் மறைமுக அல்லது வெளிப்படையான ஆதரவுடன்.
இஸ்ரேல் இந்த பிராந்தியத்தின் மேலாதிக்க சக்தியாக மாறியுள்ளது. ஏமன் மற்றும் இரான் போன்ற தொலைதூர நாடுகளைத் தான் நினைக்கும்போதெல்லாம் தாக்கும் திறன் கொண்டுள்ளது.
ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும் அமெரிக்கா சம்பந்தப்பட்டுள்ளது, மேலும் குறிக்கோளையும் பகிர்ந்து கொண்டது. இது இஸ்ரேல் மீதான மற்றும் செங்கடலில் கப்பல்கள் மீதான ஹூத்தி தாக்குதல்களையும், இரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை தடுப்பதையும் நோக்கமாக கொண்டிருந்தது.
அமெரிக்காவின் முக்கிய பிராந்திய நட்பு நாடான கத்தார் மீதான தாக்குதல் முற்றிலும் மாறுபட்ட விஷயம் ஆகும்.
இது குறித்து மிகவும் மோசமாக உணர்ந்ததாக டொனால்ட் டிரம்ப் கூறினார்.
இஸ்ரேலிய தாக்குதல் தொடர்பான செய்தி மிகவும் தாமதமாக வந்ததாகவும், இதனால் கத்தாருக்கு முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்க முடியவில்லை என வெள்ளை மாளிகை தெரிவிக்கிறது.
”இறையாண்மை கொண்ட நாடாகவும் அமெரிக்காவின் கூட்டாளியாகவும் உள்ள கத்தாருக்குள் குண்டு வீசுவது தவறு. அமைதியை நிலைநாட்ட கத்தார் அமெரிக்காவுக்கு உதவி வருகிறது. இது இஸ்ரேல் அல்லது அமெரிக்காவின் இலக்குகளுக்கு உதவாது” என வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறினார்.
அமெரிக்காவுக்கு இதில் தொடர்பு இருப்பதாக மக்கள் சந்தேகிப்பதை நிறுத்த இது போதாது என்றாலும் இது உண்மையான கோபம் போலவே இருந்தது.
நெதன்யாகு தனது தரப்பில் இருந்து இது முழுக்க முழுக்க தன்னிச்சையான நடவடிக்கை என்பதை அழுத்தமாக பதிவு செய்யும் முனைப்பில் இருந்தார்.
ஹமாஸ் தலைவர்கள் கத்தாரில் குறிவைக்கப்பட மாட்டார்கள் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் உறுதியளித்த போதிலும், ‘ஆபரேஷன் சம்மிட் ஆஃப் ஃபயர்’ என அழைக்கப்படும் இஸ்ரேலியர்களின் தாக்குதல் நடந்தது என வாஷிங்டன் போஸ்ட்டில் டேவிட் இக்னேஷியஸ் எழுதியுள்ளார்.
அத்தகைய உத்தரவாதங்கள் வழங்கப்பட்டாலும், அவை வெளிப்படையாக நிராகரிக்கப்படுவது, வளைகுடாவில் அமெரிக்க பலவீனத்தின் அடையாளமாகக் காணப்படும்.
பட மூலாதாரம், Getty Images
போலாந்து பிரச்னை
ஒரு மாதத்திற்கு முன்பாக அலாஸ்கா உச்சி மாநாட்டிற்கு புதினை வரவேற்றிருந்தார் டிரம்ப். யுக்ரேனில் போருக்கான காரணமாக திகழும் புதினை அன்புடன் அரவணைத்தார். சில நாட்களுக்குப் பிறகு ஒரு பேட்டியில், பிரான்ஸ் அதிபர் மக்ரோங்கிடம் “புதின் எனக்காக ஓர் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்” எனக் கூறினார்.
ஆனால் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அந்த வாரத்தில் பிரச்னை வெடித்தது. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகரித்தன. இப்போது முதல் முறையாக, நேட்டோவில் உறுப்பினராக உள்ள நாடான போலாந்திலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
போலாந்தில் ரஷ்யா தாக்கியிருப்பது முதல்முறை அல்ல. ஆனால், இதற்கு முன் ஏவப்பட்ட ஏவுகணை எல்லைக்கு மிக அருகில் விழுந்திருந்தாலும் அது தவறுதலாக ஏவப்பட்டதாகவே தெரிகிறது.
ஆனால் நேற்று (புதன்கிழமை) காலையில் நடந்தது தவறுதலாக நடந்தது கிடையாது. 19 ரஷ்ய டிரோன்கள் ஏவப்பட்டதாக போலாந்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
“இரண்டாம் உலகப் போருக்குப் பின் வெளிப்படையான பிரச்னைக்கு மிக நெருக்கமான சம்பவம்” என இது குறித்து நாடாளுமன்றத்தில் போலாந்து பிரதமர் டெனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா இதை மறுத்தபோதிலும், இது நேட்டோவை சோதிக்க மாஸ்கோ வேண்டுமென்றே தொடுத்த ஒரு தாக்குதல் முயற்சி என்பதுதான் உலகளவில் ஒருமித்த கருத்தாக உள்ளது.
மேலும் இந்த கூட்டணியின் மிக சக்திவாய்ந்த உறுப்பினரான அமெரிக்கா இருப்பதால், டிரம்பையும் சோதிக்கிறது என்றே அர்த்தம்.
தோஹா தாக்குதல் பற்றிய அதிபரின் கடுமையான வார்த்தைகளைப் போல் அல்லாமல், இதற்கு பதிலளிக்க அவர் காட்டும் தயக்கமும் கவனிக்கப்படாமல் இல்லை.
பட மூலாதாரம், Getty Images
எதிர்பார்த்த வேளையில் டிரம்பின் ட்ரூத் சோசியல் பதிவு வெளியானது.
“ரஷ்யா போலந்தின் வான்வெளியை டிரோன்கள் மூலம் அத்துமீறுவதில் என்ன இருக்கிறது?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ”இதோ தொடங்குகிறோம்” என தெளிவற்ற முறையில் அவரின் பதிவு இருந்தது.
ஆனால், தொடக்கத்தில் அவரின் மௌனமும், ரஷ்யா மீதான புதிய தடைகள் குறித்த அச்சுறுத்தல்களை செயல்படுத்துவதில் அவர் காட்டிய வெளிப்படையான தயக்கமும், யுக்ரேனின் மேற்கத்திய நட்பு நாடுகளை, ‘டிரம்பின் ஆதரவு யாருக்கு’? என யோசிக்க வைக்கிறது.
முன்னதாக நேட்டோ மீது தெளிவில்லாத தன்மையைக் டிரம்ப் காட்டியதால், கூட்டாளி நாடுகள் ஒரு நட்பு நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது, அமெரிக்கா பதிலளிக்கும் என்பதை உறுதிப்படுத்த விரும்பினார்கள்.
யுக்ரேனுக்காக, நேட்டோ உறுப்பினர்கள் அமெரிக்க ராணுவ உபகரணங்களை வாங்கிக்கொள்ள அனுமதிக்கும் சமீபத்திய ஒப்பந்தம், உறுப்பினர்கள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக அதிக செலவு செய்ய உறுதியளித்ததுடன், கூட்டணிக்குள் உறவுகளை மேம்படுத்த நிறைய உதவியுள்ளது.
தங்கள் பங்கிற்கு, நேட்டோவின் ஐரோப்பிய உறுப்பினர்கள் தங்களின் சொந்த பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருப்பதை ஒப்புக்கொண்டனர். போலந்தின் வான்வெளி தளத்தை கண்காணிப்பது இதற்கு சிறந்த உதாரணம் ஆகும்.
ஆனால், அமெரிக்க ராணுவம் மற்றும் அரசியல் ரீதியாக பார்க்கையில் இந்தக் கூட்டணிக்கான அடித்தளத்தை கட்டமைக்கும் வலிமை இன்னும் உள்ளது. மேலும் அதைப் பயன்படுத்த அதிபரின் விருப்பம் குறித்து கேள்விகள் தொடர்ந்து நீடிக்கின்றன.
2 நாட்கள்.. 2 மோதல்கள்.. 2 பெரும் பிரச்னைகள்..
எதிர்ப்புகளை விரும்பாத தலைவரான டிரம்பிற்கு இது உண்மையில் பெரும் சோதனையாகவே உள்ளது. இவர் அந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு செயல்படுவாரா என்றே அனைவரும் காத்திருக்கின்றனர்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு