- எழுதியவர், லாரா பிளஸ்ஸி, ஜெசிக்கா மர்ஃப்பி
- பதவி, பிபிசி நியூஸ்
-
டொனால்ட் டிரம்ப் தான் பதவியேற்கும் முதல் நாளில் ‘தலைகளை சுற்றவைப்பேன்’ என்று கூறியிருந்தார்.
அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் திங்கட்கிழமை பொறுப்பேற்கிறார்.
டிரம்ப் பதவியேற்ற சில மணி நேரங்களில் பல அரசு உத்தரவுகளை பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த உத்தரவுகள் என்னவாக இருக்கலாம் என்ற முன்னோட்டத்தை டிரம்ப் அளித்துள்ளார். சட்டவிரோத குடியேற்றம், காலநிலை விதிகள், பன்முகத்தன்மை குறித்த கொள்கைகள், அரசு ரகசிய ஆவணங்கள் ஆகியவை குறித்து உத்தரவுகள் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர்கள் தாங்கள் பொறுப்பேற்கும் நாளில் பல உத்தரவுகளை பிறப்பிப்பது வழக்கமான ஒன்றாகும். இந்த உத்தரவுகள் சட்டத்துக்கு இணையானவை என்றாலும், அடுத்து வரும் அதிபர்கள் இவற்றை மாற்றியமைக்க முடியும். நீதிமன்றங்களின் மூலமும் இவற்றை மாற்ற இயலும்.
ஆனால் டிரம்ப் திட்டமிட்டிருக்கும் எண்ணிக்கை இதுவரை பார்த்திராதது ஆகும். இவற்றை எதிர்த்து வழக்குகள் தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
குடியேற்றம் மற்றும் எல்லை பிரச்னை
“அமெரிக்க வரலாற்றின் மிகப் பெரிய நாட்டை விட்டு வெளியேற்றும்” திட்டத்தை முதல் நாளிலேயே தொடங்கப் போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தேசிய எல்லை அவசர நிலையை அவர் அறிவிப்பார் என்றும் தெற்கு எல்லையை பாதுகாக்க ராணுவத்துக்கு உத்தரவிடுவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது என்று ஃபாக்ஸ் செய்திகள் கூறுகிறது.
குடியேற்ற அதிகாரிகள் தேவாலயங்களிலும் பள்ளிகளிலும் சோதனை நடத்துவதை தடுக்கும் நீண்ட கால கொள்கையை முடிவுக்கு கொண்டுவர போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதிக அளவிலான மக்களை நாட்டை விட்டு வெளியேற்றும் திட்டம் நடைமுறைச் சிக்கல்கள், கோடிக்கணக்கில் செலவுகள் மற்றும் பல சட்டப் போராட்டங்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.
மெக்ஸிகோவிலேயே இருங்கள்
“மெக்ஸிகோவிலேயே இருங்கள்” என்ற தனது கொள்கையை மீண்டும் அறிமுகப்படுத்த டிரம்ப் நடவடிக்கை எடுக்கலாம்.
கடந்த முறை அவர் அதிபராக இருந்த போது இந்த கொள்கையின் காரணமாக தஞ்சம் தேடி வந்த 70 ஆயிரம் மெக்ஸிகோ நாட்டை அல்லாதவர்கள், விசாரணைக்காக மீண்டும் மெக்ஸிகோவுக்கு அனுப்பப்பட்டனர்.
அமெரிக்க பிறப்புரிமை
அமெரிக்க மண்ணில் பிறக்கும் எவரும் அமெரிக்க குடிமகன் என்ற 150 ஆண்டு பழமையான அமெரிக்க அரசியல் சாசன சட்ட உரிமையை ‘அபத்தமானது’ என்று கூறிய டிரம்ப் அதனை முதல் நாளிலேயே அகற்ற போவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் அதனை நீக்குவது ஓர் அரசு உத்தரவின் மூலம் எளிதாக சாத்தியமாகிவிடாது. ஏனென்றால் அந்த பிறப்புரிமை அமெரிக்க அரசியல் சாசன சட்டத்தால் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார காரணத்துக்காக எல்லைகளை மூடுதல்
1944-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட டைடில் 42 என்ற விதி, பொதுமக்களின் உடல்நலனை காக்க குடியேற்றத்தை கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.
கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது இந்த விதி கடைசியாக பயன்படுத்தப்பட்டது. புதிதாக பொறுப்பேற்கும் டிரம்ப் அரசு, இந்த விதியை பயன்படுத்தி மெக்ஸிகோ எல்லையை மூடும் உத்தரவுகளை நியாயப்படுத்த, ஒரு நோயை தேடிக் கொண்டிருக்கிறது என்று அமெரிக்க ஊடக செய்திகள் கூறுகின்றன.
போதை கடத்தல் குழு
போதைப் பொருள் கடத்தல் குழுக்களை “வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு” என்று டிரம்ப் வகைப்படுத்த போவதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் போதைப் பொருள் கடத்தல் குழுக்கள், அல் கயீதா, ஐஎஸ், ஹமாஸ் போன்ற அமைப்புகளுக்கு இணையாக கருதப்படும்.
சுவரை எழுப்பு
2016-ஆம் ஆண்டு டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, எல்லையில் சுவர் எழுப்புவதற்கான அரசு உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த சுவரின் சில பாகங்கள் கட்டப்பட்டன, எனினும் பெரும்பகுதி இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. அவர் தொடங்கியதை இந்த முறை செய்து முடிப்பார் என்று கூறப்படுகிறது.
வர்த்தகம் மற்றும் பொருளாதாரம்
அமெரிக்க உற்பத்திக்கு முன்னுரிமை அளிப்பதாக அளித்த வாக்குறுதியின் ஒரு பகுதியாக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கடுமையான வரிகளை விதிக்க டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் சீனா மீதான சில வரிகள் உள்பட பல வரிகளை அறிமுகப்படுத்தினார். அதில் சிலவற்றை ஜோ பைடனும் பின்பற்றினார்.
ஆனால் இந்த முறை டிரம்ப் அனைத்து இறக்குமதிகளுக்கும் 10% வரிகளையும், கனடா மற்றும் மெக்ஸிகோ பொருட்களுக்கு 25% மற்றும் சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 60% வரியையும் உறுதியளித்துள்ளார். இதற்கான உத்தரவுகளில் முதல் நாளிலேயே கையெழுத்திடப் போவதாக அவர் கூறியுள்ளார்.
இத்தகைய வரிகள் நுகர்வோர் பொருட்களின் விலையை அதிகளவு உயர்த்தும் மற்றும் பணவீக்கத்தை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சில நாடுகள், இதற்கு பதிலடியாக வரிகளை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகின்றன.
காலநிலை மற்றும் ஆற்றல்
பதவியில் இருந்து வெளியேறும் அதிபர் ஜோ பைடன், பசுமை சார்ந்த வேலைகளை அதிகரிப்பதற்கும், மாசுபாட்டை ஒழுங்குபடுத்துவதற்கும், உள்கட்டமைப்புக்கு நிதியளிப்பதற்கும் தான் அளித்த தொடர்ச்சியான உத்தரவுகள், சட்டங்கள் மற்றும் நிதித் திட்டங்களை தனது மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகப் பார்க்கிறார்.
இதில் பலவற்றை நீக்கப் போவதாக டிரம்ப் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார்.
‘எண்ணெய்க்காக அதிகம் துளையிடுவோம்’ மற்றும் ‘அமெரிக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்போம், அதில் அமெரிக்காவின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவோம்’ போன்ற அவரது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், கடலிலும், அரசு நிலத்திலும் துளையிடுவதற்கான கட்டுப்பாடுகளை நீக்க அவர் நிர்வாக உத்தரவுகளைப் பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய காற்றாலை திட்டங்களுக்கு தடை விதிக்கவும், மின்சார வாகன ஆணைகளை ரத்து செய்யவும் அவர் உறுதியளித்துள்ளார்.
பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து மீண்டும் வெளியேறுவோம்
2017ஆம் ஆண்டில் பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள், டிரம்ப் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகினார். இது அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலையைக் கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு முக்கிய சர்வதேச ஒப்பந்தமாகும்.
2021ஆம் ஆண்டில் பதவியேற்ற முதல் நாளில் பைடன் மீண்டும் ஒப்பந்தத்தில் அமெரிக்காவை இணைத்தார். ஆனால் புதிய அதிபர் டிரம்ப் மீண்டும் அதிலிருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரகசிய ஆவணங்கள்
ஞாயிற்றுக்கிழமை தனது பதவியேற்புக்கு முந்தைய வெற்றி பேரணியில் பேசிய டிரம்ப், 1963இல் ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடியின் படுகொலை தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுவேன் என்று கூறினார். இந்தப் படுகொலையைச் சுற்றி எண்ணற்ற சதி கோட்பாடுகள் நிலவுகின்றன.
1968இல் செனட்டர் ராபர்ட் கென்னடி மற்றும் சிவில் உரிமைகள் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோரின் கொலைகள் தொடர்பான கோப்புகளும் அதைத் தொடர்ந்து வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.
வெளியுறவுக் கொள்கை
டிரம்ப் தனது அதிபர் பதவிக் காலத்தின் முதல் நாளில் ரஷ்யா- யுக்ரேன் இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவேன் என்று பிரசாரத்தின் போது கூறினார். தனக்கு இதற்கு ஆறு மாதங்கள் தேவைப்படலாம் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் தனது பதவிக்காலத்தின் ஆரம்ப நாட்களில் அவர் என்ன செய்வார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் குறித்த அமெரிக்காவின் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்குவதற்கான பைடனின் சமீபத்திய முடிவை திரும்பப் பெற, டிரம்ப் நிர்வாக உத்தரவுகளைப் பயன்படுத்தலாம்.
வெனிசுவேலா மீதான பொருளாதாரத் தடைகளையும் அவர் மீண்டும் கொண்டு வரலாம். அவரது முதல் பதவிக்காலத்தின்போது, இந்த இரு நாடுகளும் அவரது கோபத்திற்கு அடிக்கடி இலக்காகின.
பன்முகத்தன்மை மற்றும் பாலினம்
சமீபத்திய ஆண்டுகளில், அமெரிக்கா முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் வணிகங்கள் பெண்கள் மற்றும் இன சிறுபான்மையினரை ஆதரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளன.
பெரும்பாலும் ‘பன்முகத்தன்மை, சமபங்கு மற்றும் உள்ளடக்கம்’ (Diversity, equity and inclusion- DEI) ஆகியவற்றின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறைகள், பல பழமைவாதிகளை கோபப்படுத்தியுள்ளன மற்றும் சட்ட சவால்களையும் எதிர்கொண்டன.
அவற்றை கலைப்பதாக டிரம்ப் உறுதியளித்துள்ளார், மேலும் மெட்டா, வால்மார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் ஏற்கனவே இதுதொடர்பான முயற்சிகளை திரும்பப் பெறத் தொடங்கியுள்ளன.
டிஇஐ(DEI) திட்டங்களைக் கொண்ட பள்ளிகள் அல்லது பிற நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிதி செல்வதைத் தடுக்க, டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவைப் பயன்படுத்தலாம்.
கருக்கலைப்பு
அவருக்கு முந்தைய பெரும்பாலான குடியரசுக் கட்சி அதிபர்களைப் போலவே, கருக்கலைப்பு ஆலோசனை வழங்கும் சர்வதேச குழுக்களுக்கு அரசு உதவியை தடைசெய்யும் ‘மெக்ஸிகோ சிட்டி கொள்கையை’ டிரம்ப் மீண்டும் அமல்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விளையாட்டில் திருநங்கைகள்
பள்ளிகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் திருநங்கைகள் பணியாற்றுவதை டிரம்ப் பலமுறை விமர்சித்துள்ளார். குறிப்பாக பெண்கள் விளையாட்டுகளில் திருநங்கைகள் போட்டியிடுவதைத் தடுப்பதிலும் அவர் உறுதியாக உள்ளார்.
டிக்டாக்
சீன சமூக ஊடக தளமான டிக்டாக்கிற்கு தடை விதிக்கும் சட்டத்தை ஒத்திவைப்பதற்கான நிர்வாக உத்தரவை வெளியிடுவேன் என்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) காலை டிரம்ப் உறுதியளித்தார்.
இந்த உத்தரவு மூலம், தங்களது நிறுவனத்தில் 50% பங்குகளை வாங்க ஒரு அமெரிக்க கூட்டாளரைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு (டிக்டாக் நிர்வாகத்திற்கு) நேரம் கிடைக்கும் என்று டிரம்ப் கூறினார்.
டிரம்ப் முன்பு டிக்டாக் மீதான தடையை ஆதரித்தார், ஆனால் சமீபத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். கடந்த ஆண்டு, அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தின்போது, தனது வீடியோக்கள் டிக்டாக் செயலியில் பில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு