அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அதிக எண்ணிக்கையிலான மக்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது குறித்து கவலைகள் எழுந்துள்ள நிலையில், டிரம்ப் வரும் ஜனவரி மாதம் பதவியேற்பதற்கு முன் சர்வதேச மாணவர்கள் மற்றும் ஊழியர்களை வளாகத்திற்குத் திரும்புமாறு அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மின்னஞ்சல் அனுப்புகின்றன.
” சர்வதேச மாணவர்கள் அனைவரும் இப்போது கவலையுடன் உள்ளனர்” என்று கொலராடோ டென்வர் பல்கலைக்கழக பேராசிரியர் சோலி ஈஸ்ட் பிபிசியிடம் கூறினார்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்ப், வரலாற்றில் மிகப்பெரிய மக்கள் வெளியேற்ற நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாகவும் இதற்கு அமெரிக்க ராணுவ உதவியை பயன்படுத்துப்போவதாகவும் கூறியுள்ளார்.
400,000 க்கும் மேற்பட்ட ஆவணமற்ற மாணவர்கள் அமெரிக்காவில் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர் என உயர்கல்வித் துறையின் குடியேற்றம் தொடர்பான தளம் கூறுகிறது.
நாட்டை விட்டு வெளியேற்றப்படுபவர்களின் பட்டியலில் உள்ள ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை தங்க வைக்க மிகப்பெரிய தங்குமிடம் உருவாக்கப்படுமென டிரம்ப்பின் புதிய நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயண ஆலோசனையை வழங்கிய பல்கலைக்கழகம்
குற்றவாளிகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுபவர்கள், நாட்டிலிருந்து அகற்றப்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று டிரம்ப்பின் புதிய நிர்வாகத்தின் எல்லை பாதுகாப்பு அதிகாரியான டாம் ஹோமன் கூறினார். ஆனால் அது உயர்கல்வித்துறையின் கவலையை போக்கவில்லை.
“குடியேற்றத்தைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மையின் விளைவாக மாணவர்கள் இப்போது நம்பமுடியாத அளவிற்கு அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்” என்று பேராசிரியர் ஈஸ்ட் பிபிசியிடம் கூறினார்.
“பல மாணவர்களுக்கு அவர்களின் விசா குறித்தும் அவர்கள் கல்வியைத் தொடர அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்தும் கவலைகள் உள்ளன.”
நவம்பரில், மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகம் அதன் சர்வதேச மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயண ஆலோசனையை வழங்கியது. ஜனவரி 20 அன்று டிரம்ப் பதவியேற்பதற்கு முன்பு, குளிர்கால விடுமுறையிலிருந்து மீண்டும் வளாகத்திற்குத் திரும்புமாறு அவர்களை வலியுறுத்துகிறது.
“2016-ஆம் ஆண்டில் டிரம்ப்பின் முதல் ஆட்சிக் காலத்தில் பயணத்தடை இயற்றப்பட்டது. அது தொடர்பான முந்தைய அனுபவத்தின் அடிப்படையில், உலக விவகாரங்கள் துறை அலுவலகம் மிகுந்த எச்சரிக்கையுடன் இவ்வாறு ஆலோசனை கூறியுள்ளது” என்று மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்தது.
டிரம்ப் 2017ஆம் ஆண்டு பதவியேற்ற முதல் வாரத்தில், பல முஸ்லிம் நாடுகளின் குடிமக்கள், வட கொரியா மற்றும் வெனிசுவெலாவைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்கு வருவதை டிரம்ப் தடை செய்தார்.
ஒபாமா காலத் திட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முயன்ற டிரம்ப்
மேலும் அவர் தனது முதல் பதவிக் காலத்தில் மாணவர் விசாக்களில் சில வரம்புகளையும் முன்மொழிந்தார்.
மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் வெஸ்லியன் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களும் பயண ஆலோசனைகளை வழங்கியுள்ளன.
அதில் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் டிரம்ப்பின் பதவியேற்பு நாளுக்கு முன்னதாக அமெரிக்காவிற்கு திரும்புமாறு வலியுறுத்தியுள்ளனர்.
குடியேற்றக் கொள்கை மாற்றங்கள் தொடர்பாக மாணவர்கள் கொண்டுள்ள கவலைகள் குறித்து பேசுவதற்காக யேல் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர்கள் மற்றும் அறிஞர்களின் அலுவலகம் இந்த மாதம் ஒரு பயிலரங்கம் நடத்தியது என்று ஒரு மாணவர் செய்தித்தாள் செய்து வெளியிட்டுள்ளது
வெளிநாட்டில் பிறந்து, டெகா திட்டத்தின் மூலம் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதில் இருந்து பாதுகாக்கப்பட்ட மாணவர்களும் இதில் அடங்குவர்.
குழந்தைகளாக அமெரிக்காவிற்கு வந்த அரை மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோரை, நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதில் இருந்து பாதுகாக்கும் ஒபாமா காலத் திட்டத்தை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் முயன்றார்.
டிரம்பின் கீழ் அமெரிக்க-சீனா உறவுகள் குறித்து ஆசியாவைச் சேர்ந்த மாணவர்கள், குறிப்பாக சீனாவைச் சேர்ந்த மாணவர்கள் “நிலையற்ற தன்மையை” உணர்கிறார்கள் என்று பேராசிரியர் ஈஸ்ட் கூறினார்.
இந்தியானாவில் உள்ள ஏர்ல்ஹாம் கல்லூரியில் படிக்கும் ஜப்பானைச் சேர்ந்த சர்வதேச மாணவி அயோய் மேடா, தனது எதிர்காலக் கல்வி குறித்து கவலை கொண்டுள்ள பல மாணவர்களில் ஒருவர்.
“நான் மே 2026 இல் பட்டம் பெறத் திட்டமிட்டுள்ளேன். ஆனால் இப்போது நிர்வாகம் இன்னும் சற்று ஆபத்தானதாக இருக்கப் போகிறது, மேலும் விஷயங்கள் நன்றாக நடக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை,” என்று அவர் கூறினார்.
“டிரம்ப், சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதில் மட்டுமே ஆர்வமாக இருப்பதாகக் கூறுகிறார், ஆனால் அதை கடந்தும் அவரது திட்டங்கள் இருக்கின்றன” என மேடா தொடர்ந்தார்.
“விசா உள்ள சர்வதேச மாணவர்கள் பாதிக்கப்படலாம், ஏனென்றால் எங்களை வெளியேற்றுவது எளிதானது என நான் உணர்கிறேன்.” என்றும் மேடா தெரிவித்தார்.