பட மூலாதாரம், SAUL LOEB/AFP via Getty
இந்தியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்வதற்கான வரியை அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவிகிதம் உயர்த்தியுள்ளார்.
இந்தியா, ரஷ்யா-யுக்ரேன் போரை தூண்டிவிடுவதால் அதிக வரிகளை விதிப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதாவது, ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்குவதன் மூலம், யுக்ரேனில் போரைத் தொடர இந்தியா உதவி செய்கிறது என்று அவர் கூறுகிறார்.
50 சதவிகித வரிவிதிப்பை நியாயமற்றது என்று கூறும் இந்தியா, அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
தனது நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவிருப்பதாக இந்தியா கூறியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான டிரம்பின் நிலைப்பாடு, சர்வதேச நாடுகளில், குறிப்பாக அமெரிக்க ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.
மூலோபாய கூட்டாளி நாடுகளில் ஒன்றாக கருதப்பட்ட இந்தியா மீதான டொனால்ட் டிரம்பின் அணுகுமுறை ஏன் இவ்வாறு மாறியது என்று அமெரிக்க ஊடகங்களில் கேள்விகள் கேட்கப்படுகின்றன.
ரஷ்யாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியான சீனா, இந்தியாவை விட ரஷ்யாவிலிருந்து அதிக எண்ணெயை இறக்குமதி செய்கிறது. அமெரிக்க ஊடகங்களில் இது குறித்து நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன.
டிரம்பின் இந்த முடிவால் இந்தியா-அமெரிக்க உறவுகளில் ஏற்படும் தாக்கம் குறித்தும் அமெரிக்க ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது.
இது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை மூலோபாய ரீதியாக சவால் செய்வதிலும் தடைகளை உருவாக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியப் பொருளாதாரம் குறித்த டிரம்பின் கருத்துக்களை அமெரிக்க ஊடகங்கள் விமர்சிக்கின்றன. மேலும், உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் இந்தியா என்றும் அமெரிக்க ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
பட மூலாதாரம், Andrew Harnik/Getty
சீனாவிடம் மட்டும் மென்மையான அணுகுமுறை ஏன்?
அமெரிக்க செய்தித்தாள் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ இது தொடர்பாக ஒரு தலையங்கத்தை பிரசுரித்துள்ளது.
டிரம்பிடம், சீனா குறித்த கேள்வி ஒன்றை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் எழுப்பியுள்ளது.
பத்திரிகையின் ஆசிரியர் குழுவின் விமர்சனம் இது: “ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெயை தொடர்ந்து வாங்கினால் அதன் மீது 50 சதவிகித வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். ஆனால் இந்தியாவை விட அதிகமாக ரஷ்ய எண்ணெயை வாங்கும் சீனாவுக்கு ஏன் அந்த அளவு வரி விதிக்கப்படவில்லை?” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவை அமெரிக்காவின் 12வது பெரிய வர்த்தக கூட்டாளி என்று ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ வர்ணித்துள்ளது.
“50 சதவிகித வரி என்பது எந்தவொரு நாட்டுக்கும் விதிக்கப்பட்ட மிக உயர்ந்த அளவு வரிவிதிப்பாக இருக்கும். ஆனால், இது செனட்டில் நிலுவையில் உள்ள மசோதா ஒன்றில் இருப்பதைவிட மிகக் குறைவு” என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்ய எண்ணெய் வாங்குபவர்கள் மீது 500 சதவிகித வரி விதிக்கும் திட்டம் செனட்டில் நிலுவையில் இருப்பதாகவும் அந்த செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
80க்கும் மேற்பட்ட செனட்டர்கள் இந்த மசோதாவுக்கு இதுவரை தங்களது ஆதரவை அளித்துள்ளனர். இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு செப்டம்பரில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
ரஷ்யாவிடமிருந்து தன்னை தூர விலக்கிக் கொள்ள சீனா தயாராக வேண்டும் என்ற குறிப்பு இதன் மூலம் சீனாவுக்கு கூறப்படுவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியுள்ளது.
“இருப்பினும், ரஷ்யாவுக்கு முக்கிய போர் தொழில்நுட்பத்தை வழங்கி வருகிறது சீனா. அத்துடன், இந்த வாரம், கார்கிவ் அருகே சீன கூலிப்படையினர் ரஷ்யாவுடன் இணைந்து சண்டையிடுவதற்கான ஆதாரங்களை யுக்ரேன் சமர்ப்பித்துள்ளது.”
இந்தியா மீது வரி விதிக்கும் டிரம்பின் செயல், இந்தியா-அமெரிக்க உறவுகளையும் பாதிக்கும் என்று அந்த செய்தித்தாள் கூறியுள்ளது.
“இதற்குமுன், பல அமெரிக்க அதிபர்கள் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிரான ஒரு மூலோபாய சமநிலையாக இந்தியாவைக் கண்டுள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவை குறிவைக்கும் டிரம்ப், சீனாவை விட்டுவிடுவது என்பது இந்தியாவில் அமெரிக்காவுக்கு ஆதரவைப் பெற உதவாது” என்று அந்த செய்தித்தாள் எழுதியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கு தேவை அமெரிக்காவா அல்லது ரஷ்யாவா?
டிரம்பின் வரிவிதிப்பு முடிவால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள், கடந்த பத்தாண்டுகளில் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக அமெரிக்க செய்தித்தாள் ‘வாஷிங்டன் போஸ்ட்’ தெரிவித்துள்ளது.
டிரம்பின் முடிவு எதிர்பாராதது அல்ல என்றபோதிலும், இந்த அளவில் அதிக கட்டணங்கள் விதித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் அந்த செய்தித்தாள் கூறுகிறது.
பிரதமர் மோதி, தனது உள்நாட்டு ஆதரவாளர்களை திருப்திப்படுத்துவதற்கும் அமெரிக்காவை சமாதானப்படுத்துவதற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த முயற்சிப்பதாக வாஷிங்டன் போஸ்ட் எழுதியுள்ளது. அதே நேரத்தில், ரஷ்யாவுடனான கூட்டாண்மையைப் பேணுவதிலும் இந்தியப் பிரதமர் பிடிவாதமாக உள்ளார்.
“இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, கடந்த ஆண்டு உலக எண்ணெய் விலைகள் உயராமல் இருக்க, வரம்புக்குட்பட்ட விலையில் யாராவது அதை வாங்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்பியதால், ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்கியதாகக் கூறினார்” என்று வாஷிங்டன் போஸ்ட் எழுதியிருக்கிறது.
பாகிஸ்தானுடனான பதற்றம் குறித்த டிரம்பின் கூற்றை இந்தியா மறுத்தபோது, மோதியுடனான டிரம்பின் உறவுகள் மோசமடைந்ததாக வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் கூறியது. நீண்ட காலமாக மோதலைத் தவிர்த்து வந்த இந்தியா, இப்போது பகிரங்கமாக பதிலளிக்கத் தொடங்கியுள்ளது.
“எவ்வளவு அழுத்தம் கொடுக்கப்பட்டபோதிலும், ரஷ்யாவுடனான வர்த்தகத்தை மோதி முடிவுக்குக் கொண்டுவர மாட்டார். இந்தியாவுக்கு ரஷ்யாவை விட அமெரிக்கா அதிகம் தேவைப்படும் என்றாலும், இப்போதைக்கு அது இரண்டுக்கும் இடையில் சமநிலையைப் பேணுகிறது” என்று நிபுணர்கள் கூறியதாக மேற்கோளிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், JIM WATSON/AFP via Getty
சீனாவைக் கட்டுப்படுத்த அமெரிக்காவுக்கு இந்தியா தேவையில்லையா?
இந்தியா மீதான டிரம்பின் வரிகளை ‘பொருளாதாரப் போர்’ என்று நியூயார்க் டைம்ஸ் வர்ணித்துள்ளது, மேலும் இந்தியாவின் நிலைமையை பிரேசிலின் நிலைமையுடன் ஒப்பிட்டுள்ளது.
“புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 5) டிரம்ப் இந்தியாவுக்கு எதிரான பொருளாதாரப் போரை அறிவித்தார். டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில், சீனாவின் சவாலை எதிர்கொள்ள அவர் இந்தியாவைப் பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 50 சதவிகித வரி விதிப்பு என்பது, பிரேசிலைப் போல இந்தியாவை ஒரு ‘அரசியல் எதிரியாக’ முன்வைக்கிறது. டிரம்ப் அதன் இடதுசாரி அதிபருடனான மோதலின் போது கடுமையான வரி விதிப்புகளால் அச்சுறுத்தினார். இந்த சர்ச்சை தற்போது வர்த்தக விதிமுறைகள் என்ற வரையறைகளுக்கு அப்பாற்பட்டதாகிவிட்டது” என்று அந்த செய்தித்தாள் எழுதியது.
இந்த ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்க பயணம் குறித்து குறிப்பிட்ட நியூயார்க் டைம்ஸ், பிரதமர் மோதி அமெரிக்காவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு கூட்டாளியாக வர்ணித்தது. “அமெரிக்க மொழியில், இது ‘Make India Great Again’ அதாவது MIGA (மிகா) என்று அழைக்கப்படும். அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றிணையும்போது, மாகாவும் மிகாவும் இணைந்து ‘செழிப்புக்கான மெகா பார்ட்னர்ஷிப்’ ஆக மாறும்” என்று கூறினார்.
பிரதமர் மோதியின் இந்த விளக்கத்தைப் பார்த்து டிரம்ப் சிரித்ததாக செய்தித்தாள் எழுதியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆண்டு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் சுமார் 130 பில்லியன் டாலர்கள் என்று செய்தித்தாள் எழுதியுள்ளது. இந்தியாவில் இருந்து வாங்கப்பட்ட முக்கிய பொருட்களில் மருந்துகள், வாகன பாகங்கள், மின்னணு பொருட்கள் மற்றும் ரத்தினங்கள் அடங்கும்.
“டிரம்பின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு சிறப்பு நன்மையைக் கொண்ட மருந்துகள் மற்றும் குறைக்கடத்தித் தொழில்களையும் பாதிக்கும். அமெரிக்காவில் விற்கப்படும் ஜெனரிக் மருந்துகளில் சுமார் 40 சதவிகிதம் இந்தியாவில் தயாரிக்கப்படுபவை. அமெரிக்க நிறுவனமான மைக்ரான் 2.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்து குஜராத்தில் சிப் உற்பத்தியைத் தொடங்க திட்டமிட்டுள்ளது” என்று நியூயார்க் டைம்ஸ் எழுதியது.
கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, சீனாவைச் சார்ந்திருப்பதை இந்தியா குறைத்துள்ளது என்று அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது. ஆப்பிள், பிளாக்ஸ்டோன் மற்றும் பிற பெரிய சர்வதேச நிறுவனங்கள் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளன.
ஆனால், 50 சதவிகித வரிவிதிப்பு அச்சுறுத்தல் என்பது, இந்த முழு உத்தியையும் குறைமதிப்புக்கு உட்படுத்தக்கூடும்.
அமெரிக்காவுடனான இந்தியாவின் ஒத்துழைப்பு குறித்து சீனாவில் எழும் சந்தேகங்களை வெளிப்படுத்திய அந்த செய்தித்தாள், “சேவைத் துறையில் இந்தியாவின் நிலை வலுவாக உள்ளது. இந்தியா ஆண்டுதோறும் ஐடி மற்றும் பிற தொழில்முறை சேவைகளிலிருந்து 65 பில்லியன் டாலர்களை சம்பாதிக்கிறது, இது வர்த்தக பற்றாக்குறையை விட அதிகம். இருப்பினும், இந்தியா-அமெரிக்க ஒத்துழைப்பு இன்றைய நிலையிலேயே இருக்கும் என்பதை சீனா உறுதியாக நம்பவில்லை” என்று எழுதியது.
இந்திய பொருளாதாரம் உயிரற்றது என்று கூறும் டிரம்ப்
தனது இரண்டாவது பதவிக்காலம் தொடங்கிய ’24 மணி நேரத்துக்குள்’ யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக சொன்ன டிரம்ப், தனது இலக்கை தாமதமாகவாவது அடைய மிகப்பெரிய அபாயத்தை கையில் எடுத்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தனது மற்றொரு கட்டுரையில் எழுதியுள்ளது.
“ட்ரம்பின் இந்த முடிவு அமெரிக்காவுக்கும், ஆசியாவில் அதன் முக்கியமான மூலோபாய கூட்டாளியான இந்தியாவுக்கும் இடையிலான உறவை ஆபத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது” என்று அந்த செய்தித்தாள் எழுதியது.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின்படி, ரஷ்யாவின் மிகப்பெரிய கொள்முதல் நாடு சீனா. மேலும் யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு, துருக்கி ரஷ்யாவுடனான எரிசக்தி உறவுகளை அதிகரித்துள்ளது என்ற நிலையில், இந்த இரு நாடுகளுக்கும் ‘அதிக வரிவிதிப்பு’ என்ற தண்டனை எதுவும் விதிக்கப்படவில்லை.
நீண்டகாலமாக தொடரும் இந்தியா-அமெரிக்க உறவுக்கு டிரம்பின் ‘அழுத்தக் கொள்கை’ தீங்கு விளைவிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கூறியதாக செய்தித்தாள் மேற்கோளிட்டுள்ளது.
“சீனாவுடன் போட்டியிடுவதற்கு அமெரிக்காவுக்கு ஒரு முக்கியமான கூட்டாளியாக இந்தியா இருக்கும், மேலும் அதன் உற்பத்தியில் சிலவற்றை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்றியுள்ள ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்கும் இது முக்கியமானது” என்று அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு இந்தியா ‘குவாட்’ மாநாட்டை நடத்தும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கைத் தடுக்க இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக வரிவிதிப்பை அறிவித்த பிறகு, இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள டிரம்ப் இந்தியாவுக்கு வருவாரா, இல்லையா என்பது இப்போது தெளிவாகத் தெரியவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்தினால், இந்தியாவில் எரிபொருள் விலை அதிகமாகும், மறுபுறம், டிரம்பின் எச்சரிக்கையை புறக்கணித்தால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும் நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.
“டிரம்பின் அழுத்தத்தால் 86 பில்லியன் டாலர் அளவிலான அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி பாதியளவு பாதிக்கப்படலாம். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி அமெரிக்கா” என்று அந்த செய்தித்தாள் எழுதியது.
ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் வாங்குபவராக சீனா இருந்தாலும், அந்நாடுக்கு எதிராக, அதாவது இந்தியாவை கையாள்வது போன்ற கொள்கையை டிரம்ப் கடைபிடிப்பார் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று என்று நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.
“இந்தியாவின் பொருளாதாரம் ‘இறந்து விட்டது’ என்று டிரம்ப் கூறினார், ஆனால் உண்மை என்னவென்றால் அது உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம்” என்றும் அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
பிரிக்ஸ் நாடுகளை இலக்கு வைக்கும் டிரம்ப்
பிரதமர் மோதிக்கும் பிரேசில் அதிபர் லூலா டா சில்வாவுக்கும் இடையிலான உரையாடலையும், பிரதமர் மோடியின் சீனப் பயணத்தையும் ப்ளூம்பெர்க் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
“லூலாவுடனான மோதியின் பேச்சுவார்த்தைகளும், சீனாவுக்கான மோதியின் பயணமும் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தாலும், டிரம்ப் இந்தியா மீது 50 சதவிகித வரியை விதித்த பிறகு இந்தப் பயணங்கள் முக்கியத்துவம் பெற்றன” என்று ப்ளூம்பெர்க் கூறுகிறது .
“இந்தியா, பிரேசில், சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை பிரிக்ஸ் குழுவின் நிறுவன உறுப்பினர்கள். இந்த குழுவை அமெரிக்க எதிர்ப்பு என்று டிரம்ப் வர்ணித்துள்ளார். அமெரிக்க அதிபர் பிரேசிலுக்கு 50 சதவிகித வரியை விதித்துள்ளார்” என்றும் ப்ளூம்பெர்க் குறிப்பிட்டிருக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
நிபுணர்களின் கருத்து என்ன?
டிரம்பின் வரிவிதிப்பு குறித்து ராஜதந்திரம் மற்றும் சர்வதேச அரசியல் குறித்த நிபுணர்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
நோர்வேயின் முன்னாள் ராஜதந்திரி மற்றும் முன்னாள் அமைச்சரான எரிக் சோல்ஹெய்ம், டிரம்ப் ஏன் இந்தியா-அமெரிக்க உறவுக்கு தீங்கு விளைவிக்கிறார் என்பதை விளக்கியுள்ளார்.
“அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஆழமான உறவு உள்ளது. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, இந்தியாவில் அவரது புகழ் மிக அதிகமாக இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு புதிய உயரங்களை எட்டும் என்று பெரும்பாலான இந்தியர்கள் நினைத்தனர். ஆனால் சுமூகமாக இருக்கும் உறவை பலவீனப்படுத்த டிரம்ப் ஏன் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது கடினம்” என்று எக்ஸ் வலைதள பதிவில் எரிக் எழுதியுள்ளார்.
பழைய உறவுகளையும் நம்பிக்கையையும் டிரம்ப் பெரிதாக மதிக்கவில்லை என்பதை அனைத்து நாடுகளும் புரிந்து கொள்ள வேண்டும் என எரிக் கூறுகிறார்.
ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிட்யூஷன் என்ற சிந்தனைக் குழுவின் மூத்த உறுப்பினரான தன்வி மதன், சீனாவுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதே டிரம்பின் முன்னுரிமை என்று நம்புகிறார்.
“அமெரிக்காவைத் தவிர உலகில் வேறு எந்த சக்திகளும் இருந்தால், அவை சீனாவும் ரஷ்யாவும்தான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்புகிறார். டிரம்ப் இப்போதே சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார். அவருக்கு சீனாவுடனோ அல்லது ஷி ஜின்பிங்குடனோ எந்த தகராறும் இல்லை. அதுமட்டுமல்ல, அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்கும் திறன் சீனாவுக்கு உள்ளது” என்று தன்வி மதன் எழுதியுள்ளார் .
சீனாவுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதே டிரம்பின் முன்னுரிமை, அவருக்கு சீனாவுடனோ அல்லது ஷி ஜின்பிங்குடனோ எந்த தகராறும் இல்லை. அதுமட்டுமல்ல, அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்கும் திறன் சீனாவுக்கு உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு