பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் மீது 25% கூடுதல் இறக்குமதி வரி (tariff) விதித்துள்ளார். இந்த புதிய வரிகள் ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25% வரியுடன் சேர்த்து மொத்தம் 50% வரியாக இருக்கும்.
கூடுதல் வரி விதிப்பை அறிவித்த போது, இந்திய அரசு இன்னமும் ரஷ்யாவிலிருந்து எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது என்பதால் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது என அமெரிக்கா தெரிவித்தது.
இந்த கூடுதல் வரி ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
ஆனால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதில் சீனா பல மடங்கு முன்னிலையில் இருந்தபோதும் அமெரிக்கா இந்தியாவை குறிவைத்து இறக்குமதி வரியை விதிப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
இதுமட்டுமல்ல, ஐரோப்பாவை சேர்ந்த பல நாடுகள் முதல் துருக்கி வரை ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கிக்கொண்டிருக்கின்றன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது கசப்புணர்வுடன் இருக்க வேறு பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
நிபுணர்கள் பார்வையில் இப்படிப்பட்ட ஐந்து காரணங்களைப் பார்க்கலாம்.
1. பிரிக்ஸ் மீது கோபம்
பட மூலாதாரம், Getty Images
பிரிக்ஸ் என்பது வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் ஒரு கூட்டமைப்பு ஆகும். இதில் இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, மற்றும் இரான், எத்தியோப்பியா, இந்தோனீசியா, எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை அடங்கும்.
இந்த நாடுகள் அனைத்தும் அமெரிக்க டாலரை பயன்படுத்துவதைக் குறைப்பதற்கு ஆதரவாக உள்ளன, இது அதிபர் டிரம்புக்கு முற்றிலும் பிடிக்காத ஒரு விஷயம். பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவிகிதம் வரை வரிகளை விதிக்கப்போவதாக அவர் மிரட்டி வருகிறார்.
பிரிக்ஸ் நாடுகள் தங்கள் சொந்த நாணயத்தை பயன்படுத்த முயற்சித்தால், அமெரிக்காவுடனான வர்த்தகத்தை முடித்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மீது தடைகளை விதித்தது முதலே சீனா ரஷ்யாவிடமிருந்து ரூபிள் (ரஷ்ய நாணயம்) மூலம் எண்ணெய் வாங்கி வருகிறது.
அமெரிக்க காங்கிரஸின் ஆராய்ச்சி சேவையின் படி, 2022ஆம் ஆண்டு சர்வதேச வர்த்தகத்தில் கிட்டத்தட்ட பாதி அமெரிக்க டாலரில் நடைபெற்றது. உலக பொருளாதாரத்தின் மீது அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த காரணமாக இருப்பது டாலர்தான்.
ஃபோர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் சர்வதேச வணிகம் மற்றும் புவி-அரசியல் பேராசிரியராக இருக்கும் ஃபைசல் அகமது பிரிக்ஸ் விரிவடைந்து வருவதாக நம்புகிறார்.
அவர், “இரானும் இப்போது இதில் தொடர்பு கொண்டிருக்கிறது, உள்ளூர் நாணயத்தை பயன்படுத்துவது குறித்து பேசப்படுவதால் அமெரிக்கா அச்சம் கொண்டிருக்கிறது. நீங்கள் வலுவாக இருந்தால்தான் டாலரை பலவீனப்படுத்த முடியும். கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டால், பொருளாதாரம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவின் ஆதிக்கம் தொடரும்,” என தெரிவித்தார்.
மறுபுறம்,கேட்வே ஹவுஸ் சிந்தனை குழுவைச் சேர்ந்த நயனிமா பாசு, “மற்ற பிரிக்ஸ் நாடுகள் பல விஷயங்களை கொண்டுவர விரும்புகின்றன, ஆனால் இந்தியாவின் மந்தமான அணுகுமுறையால் அவற்றால் அதை செய்யமுடியவில்லை. அமெரிக்காவின் பொருட்டு பிரிக்ஸ் அமைப்பை இந்தியா பலவீனப்படுத்துவதாக மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.” என்று சொல்கிறார்.
“இந்தியா மட்டுமல்ல, பிற பிரிக்ஸ் நாடுகளும் அமெரிக்காவை சார்ந்திருக்கின்றன. அப்படி இருந்தும் இது போன்ற வரிகளை இந்தியா எதிர்கொள்கிறது,” என்கிறார் அவர்.
2. வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்படாதது
இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா பல ஆண்டுகளாக முயற்சித்து வந்திருக்கிறது. அதிபர் டிரம்பின் முதல் ஆட்சிக்காலத்திலும் இந்த முயற்சி எடுக்கப்பட்டது, ஆனால் அது வெற்றிபெறவில்லை.
இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் இந்திய சந்தைகளை அமெரிக்காவுக்கு திறக்கும் என டிரம்ப் நம்புகிறார், ஆனால் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருக்கிறது.
“வர்த்தக ஒப்பந்தம் என்ற அதன் வாக்குறுதியிலிருந்து, இந்தியா பின்வாங்கியிருக்கிறது. அமெரிக்கா இந்திய சந்தைக்கு கூடுதல் அணுகலை வலியுறுத்துவதால் அவ்வாறு பின்வாங்க அதற்கு நியாயமான காரணங்கள் இருந்தன,” என நயனிமா பாசு சொல்கிறார்.
இந்தியா அமெரிக்கா இடையே வேளாண் வர்த்தகம் சுமார் 8 பில்லியன் டாலர் மதிப்புள்ளதாக இருக்கிறது. இந்தியா அமெரிக்காவுக்கு அரிசி மற்றும் மசாலா பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன், உலர்பழங்கள், ஆப்பிள்கள் மற்றும் பயறு வகைகளை இறக்குமதி செய்கிறது.
இந்தியா அமெரிக்காவுக்கு சலுகைகளை அளித்தால், முன்புபோல் விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் பொருட்களை வாங்கமுடியாது என்றும் இது இந்தியாவில் பெரிய பிரச்னை என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.
பால் பொருட்கள், அரிசி மற்றும் கோதுமையைத்தான் இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரம் நம்பியுள்ளது.
3. சீனாவுடன் நெருக்கம்
பட மூலாதாரம், Getty Images
2020ஆம் ஆண்டில் கல்வான் கால்வாயில் இந்திய – சீனா ராணுவ மோதலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோதி முதல்முறையாக சீனாவுக்கு செல்லவிருக்கிறார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோதி சீனாவுக்கு செல்வார். இந்த பயணம் ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை நிகழும்.
கடந்த வருடம் அக்டோபரில் ரஷ்யாவின் கசானின் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோதியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்துக்கொண்டனர்.
2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் பீஜிங்கை அடைந்தனர். அதன் பின்னர், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் சீனாவுக்கு சென்றார்.
ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையில் பேராசிரியர் ரேஷ்மி காஜி, இந்தியாவும் சீனாவும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த முயற்சிப்பதாக கூறுகிறார்.
“அமெரிக்காவுக்கு ஒரு நாடு சவால் விடுகிறது என்றால், அது சீனா தான். ஒரு காலத்தில் இந்த இடத்தில் ரஷ்யா இருந்தது, ஆனால் இப்போது சீனாவே அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. சீனாவை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு இந்தியாவின் தேவை உள்ளது,” எனகிறார் ரேஷ்மி காஜி.
“இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோதி சீனாவுக்கு சென்ற பிறகு, பீஜிங்குக்கும் டெல்லிக்கும் இடையே நேரடி விமான சேவையும் தொடங்கப்படும் என்று நினைக்கிறேன். சீனா இதை கோரி வருகிறது. விசா கட்டுப்பாடுகளும் எதிர்காலத்தில் நீக்கப்படும்.” என்கிறார் நயனிமா பாசு.
“இவை அனைத்தும் அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை அது ஒரு சாக்காக பயன்படுத்துகிறது. இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், அமெரிக்கா இந்தியாவின் மீது வரிகளை விதிக்காதா?” என அவர் கேள்வி எழுப்புகிறார்.
“பிரதமர் மோதி அமெரிக்காவுக்கு சென்றபோது இந்தியாவை ‘வரி மன்னன்’ என டிரம்ப் விமர்சித்தார். எனவே, வரிகளை தவிர்ப்பது கடினமானதாகத்தான் இருந்திருக்கும். குறைந்தபட்சம் அது குறிப்பிட்ட வரம்புக்குள் வைக்கப்பட்டிருக்கலாம்,” என்கிறார் பாசு.
4. ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதற்கு பெயர் கிடைக்காதது
பட மூலாதாரம், Getty Images
கடந்தமுறை டிரம்ப் இந்தியாவை எவ்வளவு மென்மையாக அணுகியதாக தோன்றியதோ, தற்போது அதே அளவு கடுமையுடன் அணுகுவதாக தோன்றுகிறது.
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக எதிர்வினையாற்றியது. இருப்பினும், இருநாடுகளும் போர்நிறுத்தத்தை அறிவித்தன.
தாமே போர்நிறுத்தத்தை கொண்டுவந்ததாக அதிபர் டிரம்ப் திரும்ப திரும்ப கூறினார், ஆனால் அதில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை என இந்தியா தெளிவுபடுத்தியது.
ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, அது இந்தியா பாகிஸ்தான் இடையே ஒரு ராணுவ மோதலாக மாறியது.
“ஆபரேஷன் சிந்தூருக்காக பிரதமர் மோதி தன்னை ஓரளவாவது பாரட்டவேண்டும் அல்லது குறைந்தபட்சம் தொலைபேசியில் அழைக்கவேண்டும் என டிரம்ப் விரும்பினார். ஆனால் அது நடைபெறவேயில்லை. இதுதான் தற்போதைய மனக்கசப்புக்கான காரணமாக தெரிகிறது,” என்கிறார் நயனிமா பாசு.
பேராசிரிய ரேஷ்மி காஸியும் அதேயேதான் சொல்கிறார். அதிபர் டிரம்ப் நோபல் பரிசை பெற விரும்புகிறார் என அவர் சொல்கிறார்.
“பாகிஸ்தான், கம்போடியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை அளிக்கவேண்டும் என வலியுறுத்துகின்றன, ஆனால் இந்தியா இந்த விவகாரத்தில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை,” என்கிறார் அவர்.
5. வரிகள் அல்லாத தடைகள்
பட மூலாதாரம், Getty Images
வரி மற்றும் வரி அல்லாத தடைகள் (non tariff barriers) இடையேயான வேறுபாடு வர்த்தக கொள்கை மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி கட்டுப்பாடு தொடர்புடையது.
“ஒரு பொருளின் இறக்குமதி-ஏற்றுமதி மீது வரி விதிக்கப்படும்போது அது டாரீஃப் (tariff) என அழைக்கப்படுகிறது. ஆனால், வரிகள் அல்லாத தடைகளில் பொருட்களின் அளவை கட்டுப்படுத்துதல், உரிமம் வழங்குதல், ஆய்வு மற்றும் தர சோதனைகள் போன்றவை அடங்கும்,” என்கிறார் பேராசிரியர் ஃபைசல் அகமது.
“நீண்ட காலமாக வரிகள் அல்லாத விதிகளைப் பற்றி அமெரிக்கா அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறது. டிரம்பின் இந்தியா மீதான கோபத்துக்கு இது ஒரு முக்கிய காரணம். ஒவ்வொரு நாடும் வரிகள் அல்லாத தடைகளை விதிக்கிறது, என்றாலும் அமெரிக்கா இதில் சலுகைகளைப் பெற விரும்புகிறது.” என அவர் மேலும் கூறுகிறார்,
“இந்தியா ஒரு வளரும் நாடு, ஆனால் அமெரிக்கா வளர்ந்த நாடு. எனவே, இரு நாடுகளையும் ஒரே தளத்தில் வைத்து ஒப்பிட முடியாது. இந்தியாவின் முக்கிய கவனம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதில் உள்ளது,” என பேராசிரியர் ஃபைசல் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு