11
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் புளோரிடா மாநில பாம் பீச்சில் அமைந்துள்ள மார்-ஏ-லாகோ இல்லத்தின் பாதுகாப்பு வளையத்திற்குள் அத்துமீறி நுழைந்த சுமார் 20 வயது நபரை ரகசிய சேவை அதிகாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் அந்த நபர் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததாகவும், அவரிடம் ஒரு துப்பாக்கியும் பெட்ரோல் கேனும் இருந்ததாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் ஆயுதங்களை கீழே வைக்குமாறு எச்சரித்தபோது, அவர் பெட்ரோல் கேனை மட்டும் கீழே போட்டு, துப்பாக்கியைச் சுடும் நிலையில் உயர்த்தியதாக கூறப்படுகிறது. இதனை அச்சுறுத்தலாக கருதிய அதிகாரிகள், உடனடியாக சுட்டு நடவடிக்கை எடுத்து அந்த நபரை நடுநிலைப்படுத்தினர்.
சம்பவ நேரத்தில் டிரம்ப் புளோரிடாவில் இல்லை. அவர் தனது மனைவி சகிதம் வாஷிங்டன் டிசியில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த ரகசிய சேவை அதிகாரிகளுக்கும் ஷெரிப் அலுவலக அதிகாரிகளுக்கும் எந்தவிதக் காயமும் ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பாக எஃப்.பி.ஐ தீவிர விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரித்து வருகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் அடையாளம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. பாதுகாப்பு அதிகாரிகள் உடலில் அணிந்திருந்த கேமராக்களில் இந்த முழு சம்பவமும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் மீது அச்சுறுத்தல்கள் ஏற்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் ஜூலை 2024-இல் பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், அவரது காதில் காயம் ஏற்பட்டது. அதேபோல், செப்டம்பர் 2024-இல் புளோரிடாவில் உள்ள அவரது கோல்ஃப் கிளப்பில் துப்பாக்கி ஏந்திய மற்றொரு நபர் பிடிபட்ட சம்பவமும் குறிப்பிடத்தக்கது.