• Sun. Oct 5th, 2025

24×7 Live News

Apdin News

டிரம்ப் கோரிக்கையை ஏற்ற ஹமாஸ்- விரைவில் முடிவுக்கு வருமா காஸா போர்?

Byadmin

Oct 5, 2025


காணொளிக் குறிப்பு, டிரம்ப் கோரிக்கையை ஏற்ற ஹமாஸ்- விரைவில் முடிவுக்கு வருமா காஸா போர்?

டிரம்ப் கோரிக்கையை ஏற்ற ஹமாஸ்- விரைவில் முடிவுக்கு வருமா காஸா போர்?

காஸாவில் அமைதிக்காக டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச திட்டத்தை பகுதியளவு ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. முன்னதாக, இந்தத் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என டிரம்ப் காலக்கெடு விதித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதை ஹமாஸுக்கான கடைசி வாய்ப்பு என்றும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

அக்டோபர் 7 தாக்குதலின் போது பிடிக்கப்பட்ட பணயக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது, அதே நேரம் அந்தத் திட்டத்தில் உள்ள சில விஷயங்கள் குறித்து மேலும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறி உள்ளது.

ஹமாஸின் இந்த முடிவை வரவேற்றுள்ள டிரம்ப், காஸாவில் இஸ்ரேல் குண்டு வீசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறி உள்ளார். மேலும், இது தொடர்பாக தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இது காஸா பற்றியது மட்டுமல்ல, மத்திய கிழக்கில் நீண்ட காலமாக தேவைப்படும் அமைதி பற்றியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சரி, டிரம்ப் முன்மொழிந்த திட்டத்தில் ஹமாஸ் ஏற்றுக்கொண்டது என்னென்ன?

மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

பாலத்தீன குழுக்களின் ஒருமித்த கருத்து மற்றும் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் ஆதரவுடன் உருவாக்கப்படும் அரசியல் சார்பற்ற நபர்கள் கொண்ட பாலத்தீன சுயாதீன அமைப்பிடம் காஸா நிர்வாகத்தை ஒப்படைக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

சரி, எதற்கெல்லாம் கூடுதல் பேச்சுவார்த்தையை ஹமாஸ் எதிர்பார்க்கிறது?

ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆயுதங்களை கைவிடுவது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அதே போல காசா நிர்வாகத்தில் எந்த பங்கும் வகிக்கக் கூடாது என்பதற்கும் ஹமாஸ் உடன்படவில்லை.

இது தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதை டிரம்ப் ஏற்றுக்கொள்வாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதே நேரம், மேற்கத்திய மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அவசியமானவை என கருதும் சில முக்கியமான அம்சங்களை ஹமாஸ் ஏற்றுக்கொண்டுள்ளது.

பின்னர், இது தொடர்பாக தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் ஒரு காணொளியையும் டிரம்ப் வெளியிட்டிருந்தார். அதில், இந்த முயற்சிக்கு உதவிய கத்தார், சௌதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப், பணயக் கைதிகள் குடும்பத்துடன் சேர்வதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்தப் போர் முடிந்து மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும் என்ற ஒருமித்த கருத்தை அடைவதில் மிக நெருக்கமாக இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.

காஸா போர் நிறுத்த விவகாரத்தில் முக்கிய பங்கு வகித்த கத்தார் ஹமாஸின் முடிவை வரவேற்றுள்ளது.

பணயக் கைதிகளைப் பாதுகாப்பாகவும் விரைவாகவும் மீட்டுக் கொண்டு வருவதற்கு ஏதுவாக உடனடி போர்நிறுத்தம் கொண்டு வர டிரம்ப் விடுத்துள்ள அழைப்பிற்கும் காஸாவில் பாலத்தீனர்கள் கொல்லப்படுவதை நிறுத்த விரைவான முடிவுகளை அடைவதற்கும் எங்களின் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம் என கத்தார் தெரிவித்துள்ளது.

மேலும், போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையை தொடங்க எகிப்து மற்றும் அமெரிக்காவுடன் பணிகளைத் தொடங்கிவிட்டதாகவும் கத்தார் தெரிவித்துள்ளது.

ஹமாஸின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைதிக்கான டிரம்பின் திட்டத்தில் அமெரிக்காவுடன் இணைந்து பணிபுரிய இஸ்ரேல் தயாராக இருப்பதாக கூறி உள்ளார்.

முழு விவரம் காணொளியில்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin