ரஷ்யா மற்றும் வட கொரிய தலைவர்களுடன் இணைந்து சீன அதிபர் ஷி ஜின்பிங் அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்வதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
சீனாவின் ராணுவ வலிமையை வெளிப்படுத்தும் வகையில், இன்று (புதன்கிழமை) பீஜிங்கில் புதின் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில், சீனா நடத்திய மிகப்பெரிய வெற்றி தின அணிவகுப்பு விழா குறித்து டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், “அமெரிக்காவுக்கு எதிராக நீங்கள் சதி செய்யும்போது விளாடிமிர் புதின் மற்றும் கிம் ஜாங் உன்னுக்கு எனது வணக்கங்களைத் தெரிவிக்கவும்.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
சீனா, ரஷ்யா மற்றும் பிற நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் ஏற்படும் மாற்றம் உலக அரங்கில் அமெரிக்காவுக்கு ஒரு சவாலாக உள்ளது என்பது போன்ற கருத்துகளை டிரம்ப் முன்னதாக நிராகரித்தார்.
இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா சீனாவுக்கு அளித்த “பெரும் ஆதரவு மற்றும் ‘உயிர்த் தியாகம்'” பற்றியும் டிரம்ப் குறிப்பிட்டார். இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், ஆக்கிரமிப்புக்கு எதிரான சீனாவின் வெற்றியையும் சீனாவின் இந்த ராணுவ அணிவகுப்பு குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“சீனாவின் வெற்றிக்காக பல அமெரிக்கர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அவர்களது துணிச்சல் மற்றும் தியாகம் சரியான முறையில் கௌரவிக்கப்படும் மற்றும் நினைவுகூரப்படும் என்று நம்புகிறேன்!” என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
கிம் மற்றும் புதின் உட்பட 26 நாட்டுத் தலைவர்கள் ஜின்பிங்குடன் இந்த ராணுவ அணிவகுப்பில் இணைந்தனர்.
டிரம்பின் வரிகள் உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கை உலுக்கிய பிறகு, அமெரிக்காவுக்கு சாத்தியமான மாற்றாக சீனா தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றுள்ளது.
பட மூலாதாரம், Sputnik/Pool via Reuters
படக்குறிப்பு, விளாடிமிர் புதின் மற்றும் ஷி ஜின்பிங்
அமெரிக்க நலன்களையும் தொழில்துறையையும் பாதுகாப்பதற்கு இந்த வரிகள் அவசியம் என்று டிரம்ப் கூறியுள்ளார். இதற்காக, எந்தவொரு இராஜதந்திர ரீதியான இழப்பையும் சந்திக்க அவர் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.
சீனாவும் அதன் நட்பு நாடுகளும் அமெரிக்காவை எதிர்க்க ஒரு சர்வதேச கூட்டணியை உருவாக்க முயற்சிப்பதாக நம்புகிறீர்களா என்று பிபிசி கேட்டதற்கு, “இல்லை. இல்லவே இல்லை. சீனாவுக்கு நாங்கள் தேவை.” என்று டிரம்ப் கூறினார்.
“ஜின்பிங்குடன் எனக்கு மிகவும் நல்ல உறவு இருப்பது உங்களுக்குத் தெரியும். எங்களுக்கு சீனா எவ்வளவு தேவையோ அதைவிட அதிகமாக அவர்களுக்கு நாங்கள் தேவை. ஆகவே, எனக்கு அப்படி நடப்பதாக தெரியவில்லை.”
செவ்வாயன்று ஒரு வானொலி நேர்காணலில், ரஷ்யா – சீனா கூட்டணி உருவாவது குறித்து தனக்கு கவலை இல்லை என்று டிரம்ப் கூறினார்.
ஸ்காட் ஜென்னிங்ஸ் வானொலி நிகழ்ச்சியில் பேசிய அவர், அமெரிக்கா உலகின் மிக சக்திவாய்ந்த ராணுவப் படைகளைக் கொண்டுள்ளது என்றும் அவர்கள் தங்கள் ராணுவத்தை எங்களுக்கு எதிராக ஒருபோதும் பயன்படுத்த மாட்டார்கள் என்றும் கூறினார்.
“அது அவர்கள் செய்யக்கூடிய மிக மோசமான காரியமாக இருக்கும்” என்று அவர் கூறினார்.
கடந்த மாதம் அலாஸ்காவில் நடந்த சந்திப்பின் போது யுக்ரேனுக்கான சமாதான ஒப்பந்தத்தை எட்டத் தவறிய பின்னர், புதினிடம் “மிகவும் ஏமாற்றமடைந்ததாக” டிரம்ப் அந்த நேர்காணலில் கூறினார்.
“புதினிடம் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன், அதை உறுதியாக சொல்ல முடியும்,” என்று டிரம்ப் கூறினார். யுக்ரேன் மக்களுக்கு உதவ அமெரிக்கா ஏதாவது செய்யும் என்று தெரிவித்த அவர், குறிப்பிட்டு எதையும் கூறவில்லை.
புதினின் முழு அளவிலான படையெடுப்பை சீனா விமர்சிக்கவில்லை. சீனா இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களை வழங்குவதன் மூலமும் ரஷ்ய எண்ணெய் வாங்குவதன் மூலமும் ரஷ்யாவின் போர் முயற்சிக்கு உதவியதாக மேற்கு நாடுகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை சீனா மறுக்கிறது.
இதற்கிடையில், யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷ்யா போர்முனையின் சில பகுதிகளில் புதிய துருப்புகளை குவிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
“[புதின்] சமாதானத்துக்கு உடன்பட மறுக்கிறார்,” என்று ஜெலென்ஸ்கி தனது இரவு காணொளி உரையில் கூறினார்.