படக்குறிப்பு, லாட்வியாவில் நேட்டோ பயிற்சியின் போது பயிற்சி பெறும் ஸ்வீடன் நாட்டு வீரர்கள் .கட்டுரை தகவல்
அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் நடந்த வாக்குவாதத்திற்கு முன்பே டொனால்ட் டிரம்புக்கும் வொலோதிமிர் ஜெலன்ஸ்கிக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமாக இருந்தது.
முன்னதாக, ஜெலன்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி என்று அழைத்திருந்த அதிபர் டிரம்ப், யுக்ரேன் போரைத் தொடங்கியது அவர் தான் என்றும் தவறான தகவலைக் கூறினார்.
மேலும் ஜோ பைடனின் ஆட்சியில் வலுப்பெற்ற அமெரிக்க-யுக்ரேன் கூட்டணி தற்போது உடைந்துவிட்டது.
இந்த கூட்டணியில் ஏற்பட்டுள்ள முறிவு, ஐரோப்பிய நேட்டோ உறுப்பினர்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு பெரிய நெருக்கடி உருவாகி வருவதையும் குறிக்கிறது.
யுக்ரேன் மட்டுமின்றி, பிற ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு குறித்த அமெரிக்காவின் உறுதிப்பாடு குறித்து இன்னும் பல சந்தேகங்களும் கேள்விகளும் எழும்.
நேட்டோ கூட்டாளியின் மீதான தாக்குதலை அமெரிக்காவின் மீதான தாக்குதலாகக் கருதுவதாக 1949-இல் ஹாரி ட்ரூமன் அளித்த வாக்குறுதியை அதிபர் டிரம்ப் காப்பாற்றுவாரா என்பது மிகப்பெரிய கேள்வி.
இந்த கவலைகள், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் வலுவான உறவை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற டிரம்பின் தீர்மானத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.
டிரம்ப் யுக்ரேனுக்கு கடும் அழுத்தத்தைக் கொடுத்து, புதினுக்கு பெரிய சலுகைகளை வழங்கியுள்ளார்.
ஆனால் அவற்றின் விளைவுகளை யுக்ரேனியர்களே ஏற்க வேண்டும்.
யுக்ரேனின் பாதுகாப்பு இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், ஐரோப்பியர்களும் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலைப்படுகிறார்கள்.
மறுபுறம், ரஷ்யாவுக்கு சலுகை வழங்கக் கூடாது என்ற ஜெலன்ஸ்கியின் வாதம் டிரம்பை கோபப்படுத்தியுள்ளது.
ஜெலன்ஸ்கி கையெழுத்திட மறுத்தது, கனிம ஒப்பந்தத்தில் மட்டுமல்ல.
ஏனென்றால், யுக்ரேனியர்கள் தங்களது தேசத்தின் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான போரில் இருப்பதாக நம்புகின்றனர். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக புதின் எந்தவொரு வாக்குறுதிகளை அளித்தாலும், கட்டுப்பாடுகள் இல்லையெனில் அவர் அந்த வாக்குறுதிகளை மீறுவார் என்றும் யுக்ரேனியர்கள் கருதுகிறார்கள்.
அதனால்தான் ஜெலன்ஸ்கி அமெரிக்காவிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதங்களை தொடர்ச்சியாக கேட்டு வருகிறார். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலையிட்ட பிறகு, அந்தக் சந்திப்பில் மோதல் ஏற்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
ஒரு ராஜ தந்திர பார்வையாளர் குறிப்பிட்டபடி, பொதுவெளியில் நடந்துள்ள இந்த மோதல் திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் இப்போது எழுந்துள்ளன.
அமெரிக்கா எதிர்பார்க்கும் வகையில் ஜெலன்ஸ்கியை செயல்பட வைக்க அல்லது அடுத்து என்ன நடந்தாலும் அவரையே குற்றம்சாட்டும் வகையிலான ஒரு குழப்ப நிலையை உருவாக்க செய்யப்பட்ட சூழ்ச்சியாக இது இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.
பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ராணுவ உதவி நிறுத்தி வைக்கப்பட்டாலும், யுக்ரேன் தொடர்ந்து போராடும். ஆனால், யுக்ரேன் எத்தனை காலத்திற்கு, எவ்வளவு திறம்படப் போராடும் என்பதே கேள்வி.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் உதவி நிறுத்தப்பட்டால், யுக்ரேனின் ஐரோப்பிய நட்பு நாடுகள் யுக்ரேனுக்கு உதவ வேண்டிய அழுத்தமும் அதிகரிக்கும்.