
“நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால், பல ஆண்டு காலமாக நீடித்து வரும் துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்த வெறுப்பு மற்றும் மோதலை நிறுத்தவும், இந்தப் பிராந்தியத்திற்கும் உலகம் முழுவதற்குமான அழகான, நிலையான, மகத்தான அமைதியை உருவாக்க முடியும்.”
டாவோஸ் பொருளாதார மன்றத்தின் மேடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது புதிய ‘அமைதி வாரியத்தை’ தொடங்கி வைத்தபோது அளித்த வாக்குறுதி இது .
ஆனால், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் தலைநகரங்களில் இருக்கும் பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கருத்தின்படி, இது போருக்குப் (இரண்டாம் உலகப்போர்) பிந்தைய சர்வதேச கட்டமைப்பைச் சிதைத்து, டிரம்ப் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் புதிய நிறுவனங்களைக் கொண்டு அவற்றை மாற்றியமைக்க முயற்சிப்பதற்கான மற்றொரு சான்றாகும்.
“யாரும் எங்களை வைத்து விளையாட அனுமதிக்க மாட்டோம்,” என்று போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் சமூக ஊடகங்களில் கடுமையாக எச்சரித்துள்ளார்.
பட மூலாதாரம், Reuters
ஆனால், ஐரோப்பாவில் டிரம்பின் மிகப்பெரிய ஆதரவாளரான ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பனிடமிருந்து பாராட்டுக்கள் கிடைத்தன.
“டிரம்ப் இருந்தால், அமைதி இருக்கும்” என்றார் அவர்.
டிரம்பால் நிரந்தரமாகத் தலைமை தாங்கப்படவுள்ள இந்த வாரியம், சரியாக என்ன செய்யும்? இது உண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறிய நகலை உருவாக்குவதற்கான முயற்சியா?
வாரியத் தலைவரின் அதிகாரம்
கடந்த ஆண்டு காஸா போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளில் பிறந்து, ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த யோசனை, இப்போது மிகப் பெரிய மற்றும் உலகளாவிய லட்சியமாக மாறியுள்ளது.
மேலும், இது டிரம்பை மையப்படுத்தியே சுழல்கிறது.
கசிந்த வரைவு சாசன விபரங்களின்படி, டிரம்ப் பதவியில் இருந்து விலகிய பிறகும், இந்த வாரியத்தின் வாழ்நாள் தலைவராக இருப்பார். அந்தச் சாசனத்தின் கீழ் அவருக்கு பரந்த அதிகாரங்கள் இருக்கும். உறுப்பு நாடுகளை அழைப்பது அல்லது நிராகரிப்பது, துணை அமைப்புகளை உருவாக்குவது அல்லது கலைப்பது மற்றும் அவர் பதவி விலகும் போதோ அல்லது அவரால் செயல்பட முடியாத நிலை ஏற்படும் போதோ தனது வாரிசை நியமிக்கும் அதிகாரம் ஆகியவற்றை அவர் கொண்டிருப்பார்.
வேறு ஏதேனும் நாடு இதில் நிரந்தர உறுப்பினராக விரும்பினால், அதற்கான கட்டணம் 1 பில்லியன் டாலர் ஆகும்.
ஏற்கனவே பல்வேறு நிகழ்வுகள் நடந்து கொண்டுள்ள இந்த மாதத்தில், இந்த சமீபத்திய செய்தி ஒரு வெடிகுண்டு போல வந்து விழுந்துள்ளது.
கடந்த சில வாரங்களில் மட்டும், வெனிசுவேலா தலைவரை அமெரிக்கா சிறைபிடித்தது, இரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான டிரம்பின் மிரட்டல்கள், கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கான யோசனை போன்றவை ஐரோப்பாவையும் பிற நாடுகளையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
பட மூலாதாரம், Reuters
பல நாடுகள் தயக்கம்
அர்ஜென்டினா முதல் அஜர்பைஜான் வரை, முன்னாள் சோவியத் குடியரசுகள் முதல் வளைகுடா நாடுகள் வரை என உலகின் அனைத்து திசைகளிலிருந்தும் பத்தொன்பது நாடுகள் இந்த வாரியத்தின் தொடக்க விழாவிற்காக டாவோஸ் வந்திருந்தன.
இன்னும் பல நாடுகள் இதில் “சேர ஒப்புக்கொண்டுள்ளதாக” கூறப்படுகிறது.
இருப்பினும், நாடுகள் இதில் சேர மறுத்துவிட்டன.
“இது பரந்த சிக்கல்களை எழுப்பக்கூடிய ஒரு ஒப்பந்தத்தைப் பற்றியது. மேலும், அமைதியைப் பற்றிப் பேசும் ஒன்றில் அதிபர் புதின் ஒரு அங்கமாக இருப்பது குறித்து எங்களுக்கு கவலைகள் உள்ளன” என்று பிரிட்டன் வெளியுறவுத்துறைச் செயலாளர் இவெட் கூப்பர் தெரிவித்தார்.
ரஷ்யா இதில் இணைந்திருப்பதாக டிரம்ப் கூறுகிறார், ஆனால் ரஷ்யாவிடம் இருந்து வந்த செய்தியோ, அவர்கள் இன்னும் “கூட்டாளிகளுடன் ஆலோசித்து வருவதாகவே” தெரிவிக்கிறது.
”இப்போதுள்ள ஒப்பந்த ஆவணத்தில் உள்ள கருத்துக்களின்கீழ் நாங்கள் இதில் இணையவில்லை” என்று ஸ்வீடன் பதிலளித்தது.
“இந்த முன்மொழிவு பதிலளிக்கப்படாத பல கேள்விகளை எழுப்புகிறது, அதற்கு அமெரிக்காவுடன் கூடுதல் பேச்சுவார்த்தை தேவை” என்பது நார்வேயின் பதிலாக இருந்தது.
ஆறு அரபு நாடுகள், துருக்கி மற்றும் இந்தோனீசிய ஆகியவை காஸாவின் மறுசீரமைப்பு உட்பட அங்கு ஒரு “நியாயமான மற்றும் நிலையான அமைதிக்காகவே” தாங்கள் இதில் இருப்பதாகத் தெளிவுபடுத்தியது.
இருப்பினும், வெளியில் கசிந்த வாரியத்தின் சாசன விபரங்களில் காஸாவைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை.
பட மூலாதாரம், Reuters
ஐ.நா பற்றி டிரம்ப் கருத்து
இதில் இணையத் தயங்கும் சில நாடுகள் உள்ளிட்ட விமர்சகர்களைப் பொறுத்தவரை, இது ஒரு அதிபரின் பெருமைக்கான திட்டமாகும்.
2009-ஆம் ஆண்டு தனது முதல் பதவிக்காலத்தின் தொடக்கத்திலேயே ஒபாமா வென்ற நோபல் அமைதிப் பரிசை, தானும் வெல்ல வேண்டும் என்ற தனது தீவிர விருப்பத்தை டிரம்ப் வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த புதிய கூட்டணியில் இணையாமல் இருப்பதற்கு ஒரு விலையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதும் உலகத் தலைவர்களுக்குத் தெரியும்.
“அவரது ஒயின்கள் மற்றும் ஷாம்பெயின்கள் மீது நான் 200% வரி விதிப்பேன், அப்போது அவர் இணைவார். ஆனால் அவர் இணைய வேண்டிய அவசியமில்லை” தனக்கு விருப்பமான வர்த்தகப் போர் ஆயுதத்தை ஏந்தி, பிரான்ஸ் அதிபர் மக்ரோங்குக்கு டிரம்ப் அளித்த கண்டனம் இது.
ஸ்லோவேனியா மட்டுமே பலரும் சொல்லத் தயங்கிய உண்மையை வெளிப்படையாகப் பேசியது.
அந்த நாட்டின் பிரதமர் ராபர்ட் கோலோப் தனது கவலையைத் தெளிவாகத் தெரிவித்தார். இது “சர்வதேச ஒழுங்கமைப்பில் ஆபத்தான முறையில் தலையிடுகிறது”என்று அவர் கூறியிருந்தார்.
டிரம்ப் இந்தக் கவலையை நேரடியாக எதிர்கொண்டார்.
“இந்த வாரியம் முழுமையாக அமைக்கப்பட்டவுடன், நாம் எதைச் செய்ய விரும்புகிறோமோ அதைச் செய்யலாம். மேலும் நாம் அதை ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்தே செய்வோம்” என்று அவர் கூறினார்.
அவரது ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த அந்த அரங்கம் முழுவதும் கூட்டம் நிறைந்திருந்தது.
ஆனால், உலகை ஒரு குழப்பமான நிலையிலேயே வைத்திருக்க டிரம்ப் விரும்புகிறார்.
ஒரு நாளுக்கு முன்பு, ஃபாக்ஸ் டிவி செய்தியாளர் ஒருவர், இந்த வாரியம் ஐநா சபையை மாற்றிவிடுமா என்று கேட்டபோது, “அப்படியும் நடக்கலாம். ஐ.நா சபை அந்த அளவிற்கு உதவியாக இருந்ததில்லை,” என்று பதிலளித்தார்.
பின்னர் அவர் மேலும் கூறுகையில், “நான் ஐ.நா சபையுடைய ஆற்றலின் பெரிய ரசிகன். ஆனால் அது ஒருபோதும் தனது முழுத் திறனையும் வெளிப்படுத்தியதில்லை. நான் தீர்த்து வைத்த ஒவ்வொரு போரையும் ஐ.நா சபையே தீர்த்து வைத்திருக்க வேண்டும்,” என்றார்.
புதிய போட்டியாளரா?
193 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை, தனது பங்கான ‘அமைதியை நிலைநாட்டும் பொறுப்பை’ இழந்து நீண்ட காலம் ஆகிவிட்டது.
2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், பாதுகாப்பு சபையின் அரிய ஒருமித்த அங்கீகாரத்தைப் பெற்ற சில மணிநேரங்களில், அந்தோனியோ குட்டெரெஸ் தனது முதல் பதவிக்காலத்தின் முதல் நாளில் எனக்கு அளித்த பேட்டியில், “அமைதிக்கான ராஜீயத்தில் ஒரு எழுச்சியை ” ஏற்படுத்துவதாக உறுதியளித்தார்.
கடந்த பத்தாண்டுகளாக, ஐ.நா.வின் முயற்சிகள் பல காரணங்களால் முடக்கப்பட்டு வந்தன.
“போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் டிரம்பின் செயல்பாட்டை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும்,” என்று ஐ.நாவில் அதிகாரியாக இருந்த மார்ட்டின் கிரிஃபித்ஸ் கூறுகிறார்.
இந்த புதிய முயற்சி “நிச்சயமாக ஐநா பாதுகாப்பு சபை மற்றும் ஒட்டுமொத்த ஐ.நாவின் தோல்வியின் பிரதிபலிப்பாகும்” என்று அவர் கருதுகிறார்.
”கடந்த 80 ஆண்டுகளில் பல தோல்விகள் மற்றும் தடைகள் மூலம் நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டோம்.அது அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் உலகளாவிய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மதிப்பு ஆகும், இது வெறும் டிரம்பின் நண்பர்களை மட்டும் கொண்டதாக இருக்கக்கூடாது,” என்றார்.
தாம் எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருவது குறித்து பிபிசி ‘டுடே’ நிகழ்ச்சியில் கேட்கப்பட்டபோது, “அவை வெறும் சண்டை நிறுத்தங்கள் மட்டுமே,” என்று குட்டெரெஸ் பதிலளித்தார்.
அவற்றில் சில ஏற்கனவே முறிந்துவிட்டன. ருவாண்டா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு இடையிலான தற்காலிக அமைதி ஒப்பந்தம் விரைவில் சிதைந்தது. கம்போடியா மற்றும் தாய்லாந்து தங்கள் எல்லைகளில் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை வீசத் தொடங்கின. மேலும் பாகிஸ்தானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் டிரம்பின் முக்கியப் பங்கு இருந்ததை இந்தியா ஏற்கவில்லை.
பட மூலாதாரம், EPA
இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்த 12 நாள் போரை டிரம்பின் வலிமையான மத்தியஸ்தம் மட்டுமே முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும்.
காஸாவில் அவரது நேரடித் தலையீடு இறுதியாக ஒரு போர்நிறுத்தத்தை உறுதி செய்தது. இது பாலத்தீனியர்களின் துயரத்தையும், இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் வேதனையையும் தணித்தது.
ஆனால் காஸா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தின் முதற்கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்வது என்ற இந்த வாரியத்தின் முதல் சோதனையே மிகவும் சவாலானது.
இந்த புதிய வாரியம் மெதுவாக வடிவம் பெற்று வரும் நிலையில், பாலத்தீன நாடு உருவாவதைத் தடுப்பதாக சபதம் எடுத்துள்ள நெதன்யாகுவும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்து பாலத்தீனிய சுய ஆட்சி அமைவதே நிலையான அமைதிக்கான ஒரே வழி என்று வலியுறுத்தும் அரபுத் தலைவர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் செயல்திட்டத்தில் உள்ள மற்றொரு பெரிய போர் யுக்ரேன் ஆகும்.
ரஷ்யா மற்றும் பெலாரூஸ் ஆகியவற்றுடன் ஒரே மேசையில் அமர்வதற்கு அதிபர் ஸெலன்ஸ்கி தயக்கம் காட்டியுள்ளார்.
இந்த வாரியத்தின் கீழ் மூன்று அடுக்குகள் உள்ளன. அதில் ஒரு ‘நிர்வாக வாரியம்’, ஒரு ‘காஸா நிர்வாக வாரியம்’, மற்றும் ‘காஸாவிற்கான நிர்வாக தேசிய குழு’ ஆகியவை உள்ளன. இவை பெரும்பாலும் காஸாவில் கவனம் செலுத்துகின்றன
இவை மூத்த அமெரிக்க அதிகாரிகள், செல்வந்தர்கள், முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் காஸாவை நன்கு அறிந்த முன்னாள் ஐ.நா பிரதிநிதிகள், அரபு அமைச்சர்கள், உளவுத்துறை தலைவர்கள் மற்றும் பாலத்தீனிய தொழில்நுட்ப வல்லுநர்கள் என அனைவரையும் ஒன்றிணைக்கின்றன.
பட மூலாதாரம், Reuters
சில விமர்சகர்கள் கூட, ஒரு வேறுபட்ட வகையான நீண்டகாலப் போராட்டத்தை மேடைக்குக் கொண்டு வந்ததற்காக அதிபரைப் பாராட்டுகிறார்கள். அது ஐ. நா-வின் போருக்குப் பிந்தைய கட்டமைப்பைச் சீர்திருத்த வேண்டும் என்ற இடைவிடாத கோரிக்கை.
குறிப்பாக, உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள முக்கிய நாடுகளின் தற்போதைய அரசியல் சூழலுடன் ஒத்துப்போகாத பாதுகாப்பு சபை, இனி அதன் நோக்கத்திற்குப் பொருத்தமானது அல்ல.
“டிரம்ப் செய்தவற்றின் எதிர்பாராத ஒரு நல்ல விளைவு என்னவென்றால், இந்தச் சிக்கல்கள் மீண்டும் சர்வதேச செயல்திட்டத்தின் முன்னுரிமைப் பட்டியலுக்குத் தள்ளப்படும்,” என்று ஐ.நா முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் மார்க் மல்லோக் பிரவுன் குறிப்பிட்டார்.
“நாங்கள் ஐநாவின் மிகவும் பலவீனமான தலைமைத்துவக் காலத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கிறோம், இது ஒரு விழிப்புணர்வுக்கான அழைப்பாக அமையும் என்று நான் நினைக்கிறேன்”என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், உலகை அமைதிப் பாதைக்கு இட்டுச் செல்ல டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சி, இந்த ஆண்டின் இறுதியில் தனது இரண்டாவது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் குட்டெரெஸுக்கு மாற்றாக யாரை நியமிப்பது என்ற விவாதங்கள் பல தலைநகரங்களில் வேகமெடுத்து வரும் நேரத்தில் நடைபெறுகிறது என்பது ஒரு முரண்.

யுக்ரேன் போரை ஒரே நாளில் முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று முன்பு அறிவித்த அதிபர் டிரம்ப், அமைதியை உருவாக்குவது என்பது ஒரு நீண்டகால மற்றும் ஆபத்தான செயல்முறை என்பதைக் அறிந்துகொண்டார்.
இருப்பினும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இப்போது ஒரு சில “சிறிய தீப்பொறிகள்” மட்டுமே எரிவதாகக் கூறிப் பாராட்டினார்.
யுக்ரேனில் ஒரு தீர்வு “மிக விரைவில் வரப்போகிறது” என்றும் டிரம்ப் உறுதியளித்தார்.
மேலும், தனது புதிய ‘முதன்மை அமைதி காப்பாளர்’ என்ற பாத்திரத்தில் மிகவும் மகிழ்ச்சியடைந்த டிரம்ப், “இது உலகிற்கானது!” என்று முழங்கினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு