பட மூலாதாரம், White House
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரம்ப் – புதின் சந்திப்பு, யுக்ரேன் போரில் அமைதியைக் கொண்டு வர மிக முக்கியமான நகர்வாக முன்னிறுத்தப்பட்டது.
ஆனால் எந்த போர்நிறுத்த அறிவிப்பும் இல்லை, கூடுதலாக மாஸ்கோவுக்கு வருமாறு டிம்புக்கு அழைப்பு விடுத்துள்ளார் புதின். இரு தலைவர்கள் இடையேயான மூன்று மணி நேர சந்திப்பு பதில்களைவிடவும் கூடுதலாக கேள்விகளையே எழுப்பியுள்ளது.
அலாஸ்கா உச்சிமாநாட்டின் ஐந்து முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
ஷார்ட் வீடியோ
உலக அரங்கில் மீண்டும் சிவப்பு கம்பளத்துடன் வரவேற்கப்பட்ட புதின்
வெள்ளிக்கிழமை உச்சிமாநாட்டிற்காக புதின் அலாஸ்காவிற்கு வந்தபோது அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மறுபக்கம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரை வரவேற்க காத்திருந்தார்.
புதின் வந்தபோது அவரை கைதட்டி வரவேற்றார் டிரம்ப். இரண்டு தலைவர்களும் கைகளை குலுக்கிக் கொண்டு சிரித்தபடி இருந்தனர்.
யுக்ரேன் போருக்குப் பிறகு மேற்குலக நாடுகளால் தவிர்க்கப்பட்டு வந்த புதினுக்கு இது குறிப்பிடத்தகுந்த தருணமாக அமைந்தது. இடைப்பட்ட காலத்தில் புதினுடைய சர்வதேச பயணங்கள் வட கொரியா மற்றும் பெலாரஸ் போன்ற ரஷ்ய கூட்டமைப்பின் நட்பு நாடுகளுக்கு மட்டுமே இருந்தது.
அலாஸ்கா உச்சிமாநாடு நடந்ததே புதினுக்கு வெற்றி தான். ஆனால் இந்த வரவேற்பு ரஷ்யாவின் கனவுகளையும் மிஞ்சுவதாக அமைந்துவிட்டது. மேற்கு நாடுகளால் தீண்டப்படாமல் இருந்த புதின், ஆறு மாதங்களில் அமெரிக்க மண்ணில் ஒரு கூட்டாளியாகவும் நட்பு சக்தியாகவும் வரவேற்கப்பட்டுள்ளார்.
உச்சபட்ச தருணமாக புதின் தனது ரஷ்ய அரசு வாகனத்தில் ஏறாமல் முன்னறிவிப்பின்றி டிரம்பின் அதிகாரப்பூர்வ வாகனத்தில் ஏறிச் சென்றார். அதில் பின்வரிசை இருக்கையில் அமர்ந்து சிரித்தபடி இருந்தார் புதின்.
பட மூலாதாரம், Getty Images
இதுவரை சந்திக்காத கேள்விகளை எதிர்கொண்ட புதின்
ரஷ்ய அதிபராக இருந்து வரும் 25 ஆண்டுகளில், புதின் ஊடகங்கள் மீது முழுமையான கட்டுப்பாட்டை நிறுவி பத்திரிகையாளர் சுதந்திரங்களை நசுக்கி, தகவல்களைப் பரப்புரைகளாக மாற்றினார். ரஷ்யாவில் அவர் நட்புறவு இல்லாத பத்திரிகையாளர்களைச் சந்திக்கவே மாட்டார்.
ஆனால் அலாஸ்காவில் இறங்கிய சில நிமிடங்களில் பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் உரத்த குரலில் கேள்வி எழுப்பினார். “பொதுமக்களை கொல்வதை நீங்கள் நிறுத்துவீர்களா?” என்கிற கேள்வியை கண்டுகொள்ளாததைப் போல கடந்து சென்றுவிட்டார்.
அடுத்து பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தபோது பல கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது நிருபர் ஒருவர் ரஷ்ய மொழியில் முத்தரப்பு சந்திப்பிற்காக யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலென்ஸ்கி சந்திக்க தயாரா என்று கேள்வி கேட்டார். ஆனால் அதற்கு சிறு புன்னகையைத் தவிர புதினிடமிருந்து வேறு எந்த எதிர்வினையும் வரவில்லை.
பேச்சுவார்த்தை சீக்கிரமாகவே முடிந்த போது கூறப்பட்டது என்ன?
புதின் – டிரம்ப் பேச்சுவார்த்தை நடந்த அரங்கில் சர்வதேச ஊடகங்கள் குழுமியிருந்ததால் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இருவரும் விரிவாக மட்டும் பேசிவிட்டு எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் சென்றுவிட்டனர்.
வழக்கத்திற்கு மாறாக புதின் தான் முதலில் பேசினார். பேச்சுவார்த்தையில் “பரஸ்பர மரியாதைக்கான ஆக்கப்பூர்வமான சூழ்நிலை” நிலவியதாக புதின் பாராட்டினார். அதன் பிறகு ரஷ்யாவின் பகுதியாக அலாஸ்கா இருந்த வரலாற்றைப் பற்றி பேசினார்.
புதின் பேசியபோது டிரம்ப் அமைதியாக நின்று கொண்டிருந்தார். பேசத் தொடங்கிய சில நிமிடங்கள் கழித்து தான் யுக்ரேன் சூழ்நிலை பற்றி புதின் குறிப்பிட்டார். இந்த உச்சிமாநாட்டின் மையப் புள்ளியே யுக்ரேன் போர் தான். ஒப்பந்தம் கிட்டத்தட்ட ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அமைதியை அடைய வேண்டுமென்றால் மோதலில் முதன்மையான காரணங்கள் ஒழிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூற்று யுக்ரேனிலும் மற்ற நாடுகளிலும் எச்சரிக்கை மணியை எழுப்பியுள்ளது. இந்தப் போர் தொடங்கியதிலிருந்து போர்நிறுத்தம் ஏற்படுவதற்கு இந்தக் கோரிக்கைகள் தான் தடையாக இருப்பதாக புதின் கூறுகிறார்.
இது யுக்ரேன் பகுதிகளான க்ரைமியா, டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், சபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகியவை மீது ரஷ்யாவின் இறையாண்மை அங்கீகரிப்பது மற்றும் யுக்ரேன் ராணுவத்தை குறைக்க ஒப்புக்கொள்வது, நடுநிலைத்தன்மை வகிப்பது, வெளிநாட்டு ராணுவத்தின் ஈடுபாடு இல்லாமல் இருப்பது மற்றும் புதிய தேர்தல்கள் ஆகியவை உள்ளடங்கும். இது அடிப்படையில் சரணடைவதைத் தான் குறிக்கிறது. இது யுக்ரேனால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஆனால் மூன்றரை ஆண்டு போருக்குப் பிறகு ரஷ்யாவுக்கு இது தான் முதன்மையாக உள்ளது. இதன் மூலம் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்பது தெளிவாகிறது.
பட மூலாதாரம், Getty Images
கூறப்படாத விஷயங்கள் என்ன?
இந்த உச்சிமாநாடு மிகவும் தேவையான மற்றும் அவசியம் மிகுந்த ஒன்றாக உள்ள நிலையில், டிரம்ப் பேசியபோது யுக்ரேன் பற்றியோ அல்லது போர்நிறுத்தத்திற்கான சாத்தியம் பற்றியோ ஒருமுறை கூட குறிப்பிடவில்லை. “ஐந்து, ஆறு அல்லது ஏழு ஆயிரம் மக்கள் ஒவ்வொரு வாரமும் இறக்கிறார்கள்” எனக் குறிப்பிடபோது தான் இந்த மோதலைப் பற்றி மறைமுகமாகப் பேசினார் டிரம்ப். அப்போதும் புதின் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார் என்றும் தெரிவித்தார்.
வழக்கமாக அதிகமாக பேசும் டிரம்ப், இந்த முறை புதினைப் பற்றி குறைவாகவே பேசினார். அவரின் பேச்சு அசாதாரணமாகவும், சுருக்கமாகவும் தெளிவில்லாமலும் இருந்தது. “நாங்கள் ஒப்புக்கொண்ட பல விஷயங்கள் இருந்தன” எனக் கூறிய டிரம்ப், மிகவும் ஆக்கப்பூர்வமான இந்த சந்திப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது என்றும் தெரிவித்தார்.
ஆனால் அவர் எந்த தகவல்களும் வழங்கவில்லை. யுக்ரேன் மோதலுக்கு தீர்வு காண எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. எந்த முக்கியமான ஒப்பந்தம் அல்லது ஜெலென்ஸ்கி உடனான முத்தரப்பு சந்திப்பும் அறிவிக்கப்படவில்லை.
போர்நிறுத்தம் ஏற்படவில்லையென்றால் தீவிரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என டிரம்ப் எச்சரித்திருந்தது பற்றி எந்தக் குறிப்பும் இல்லாதது ரஷ்யாவுக்கு ஆறுதலாக அமைந்தது.
“நாங்கள் ஒப்பந்தத்தை எட்டவில்லை” என டிரம்ப் ஒப்புக்கொண்டார். அதன் பிறகு, “ஒப்பந்தம் ஏற்படுவதற்கான நல்ல சாத்தியம் உள்ளது” என்றும் தெரிவித்தார்.
அடுத்த சந்திப்பு மாஸ்கோவில் – ஆங்கிலத்தில் பேசிய புதின்
யுக்ரேனில் அமைதியை ஏற்படுத்த எந்த உறுதியான முன்னேற்றமும் இந்த உச்சிமாநாட்டில் ஏற்படவில்லை. ஆனால் ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே நல்லிணக்கம் ஏற்படுவதை இது உறுதி செய்துள்ளது.
இருவரும் கை குலுக்கிக் கொண்டு சிரித்தபடியே ஒன்றாக பயணித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. அதே போல புதனின் விமானத்திற்கு அமெரிக்க வீரர்கள் சிவப்பு கம்பளம் விரித்த புகைப்படங்களும் வைரலானது.
புதின் தனது பேச்சை முடிப்பதற்கு முன்பாக, டிரம்ப் தான் அதிபராகத் தொடர்ந்திருந்தால் யுக்ரேன் போர் தொடங்கியிருக்காது எனக் கூறி வருவதை ஆமோதித்து பேசியுள்ளார்.
நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினாலும் அலாஸ்கா உச்சிமாநாட்டில் எந்த முக்கியமான அறிவிப்பும் இடம்பெறவில்லை. ஆனாலும் இருவரும் அடுத்த சந்திப்பிற்கான கதவுகளைத் திறந்தே வைத்துள்ளனர். இந்த முறை ரஷ்ய மண்ணில் நடைபெற உள்ளது. “நான் விரைவில் மீண்டும் உங்களைச் சந்திப்பேன்” என டிரம்ப் தெரிவித்தார்.
எந்த உறுதிப்பாடும், சலுகையும், உத்திரவாதமும் வழங்காத அந்த பேச்சை இறுதியில் ஆங்கிலத்தில் பேசி முடித்தார் புதின். இது அரிதான ஒரு நிகழ்வு. டிரம்பை பார்த்து “அடுத்த முறை மாஸ்கோவில்” எனத் தெரிவித்தார் புதின்.
புதினின் அழைப்பை மிகவும் சுவாரஸ்யமான ஒன்று எனக் குறிப்பிட்ட டிரம்ப். “இதற்கு நான் நிறைய அழுத்தங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் அது நடப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவே நான் பார்க்கிறேன்” எனத் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு