சீனாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டின்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாட்டு தலைவர்களின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு, சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஷென்சென் நகரில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டின்போது இடம்பெறும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒலிவியா வேல்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“உலகளவில் அணு ஆயுதங்களைக் குறைப்பது குறித்து அதிபர் டிரம்ப் விவாதிக்கவுள்ளார். அணு ஆயுதப் பரவல் மிகவும் ஆபத்தானது என்று அவர் கருதுகிறார்” என அவர் கூறினார்.
உலகின் மிகப்பெரிய அணுசக்தி வல்லரசுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்தச் சந்திப்பில், இரான் விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும், யுக்ரேன் போர் குறித்து விவாதிக்கப்படாது என்றும் தெரிகிறது.
இந்தச் சந்திப்பு குறித்து ரஷ்யாவோ அல்லது சீனாவோ இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் பெய்ஜிங்கிற்கு சென்றபோது
ஏபி மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனங்களிடம் அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவில் எந்தவொரு ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
21 உறுப்பு நாடுகள் பங்கேற்கும் இரண்டு நாள் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக, டிரம்ப் புதன்கிழமை இரவு ஷென்சென் நகரைச் சென்றடைவார். அங்கு சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் தனியாகவும் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார். 2025-ஆம் ஆண்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, இரு தலைவர்களும் சந்தித்துக்கொள்ளும் நான்காவது நிகழ்வு இதுவாகும்.
“அமெரிக்க அதிபர், சீன மக்கள் குடியரசின் அதிபர், ரஷ்ய கூட்டமைப்பின் அதிபர் ஆகிய மூவரும் பங்கேற்கும் முத்தரப்புச் சந்திப்புடன் டிரம்பின் சீனப் பயணம் நிறைவடையும்” என்று ஒலிவியா வேல்ஸ் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் உச்சிமாநாட்டில் பங்கேற்பது உள்ளிட்ட டிரம்பின் இந்தப் பயணம், “அமெரிக்க மக்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளைப் பெற்றுத் தருவதுடன், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலன்களையும் முன்னெடுத்துச் செல்லும்” என்று அவர் கூறினார்.
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான அணு ஆயுத பரவல் கட்டுப்பாடு ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதத்துடன் காலாவதியானது. இதனால், உலகின் மிகப்பெரிய அணு ஆயுதக் களஞ்சியங்களைக் கட்டுப்படுத்தி வந்த முக்கிய நடைமுறைகள் முடிவுக்கு வந்தன. அத்துடன், பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவர உதவிய ஆயுதக் கட்டுப்பாடு ஒத்துழைப்பும் முடிவுக்கு வந்தது.
இந்த ஒப்பந்தத்துக்குப் பதிலாகப் புதியதொரு கட்டமைப்பை உடனடியாக உருவாக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை இரு நாடுகளையும் வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையில், தற்போதைய ஒப்பந்தத்துக்குப் பதிலாக, தனது அணு ஆயுதக் களஞ்சியத்தை விரிவுபடுத்தி வரும் சீனாவையும் உள்ளடக்கிய விரிவான ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க முடியும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
ஆனால், சீனா மற்றும் ரஷ்யாவின் ஒத்துழைப்பைப் பெறுவதில் பெரும் சவால்கள் இருப்பதாகவும், புதிய ஒப்பந்தத்தை உருவாக்கப் பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் அமெரிக்காவின் முன்னாள் மூத்த அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, ரஷ்யா மற்றும் சீனத் தலைவர்களுடன் ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த அதிபர் டிரம்ப் விரும்புகிறார்
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரையும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சில நாட்கள் இடைவெளியில் பெய்ஜிங்கில் தனித்தனியாகச் சந்தித்தார். கடந்த செப்டம்பர் மாதம் வாஷிங்டனில் ஷி ஜின்பிங்கை டிரம்ப் வரவேற்றார்.
2022-ஆம் ஆண்டு யுக்ரேன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, சீனா ரஷ்யாவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியாக மாறியுள்ளது. இந்தப் போர் காரணமாக ரஷ்யா மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்வது தொடர்பான சர்ச்சைக்குரிய அமெரிக்க ஒப்பந்தமும், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிக அளவில் வாங்கும் சீனா உள்ளிட்ட நாடுகள் மீது விதிக்கப்படவிருந்த தடைகள் நிறுத்திவைக்கப்பட்டதும் ரஷ்யா மீதான டிரம்ப் நிர்வாகத்தின் மென்மையான அணுகுமுறை குறித்து ஐரோப்பிய நாடுகளிடையே கடந்த மாதம் கவலையை ஏற்படுத்தின.
இந்த ஆண்டு பெய்ஜிங் மற்றும் வாஷிங்டனில் நடைபெற்ற சந்திப்புகளின் போது, டிரம்பும் ஷி ஜின்பிங்கும் தங்களுக்கு இடையிலான உறவு சுமுகமாக இருப்பதாக வெளிப்படுத்த முயன்றனர். இருப்பினும், வர்த்தகம், செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஆதிக்கம் செலுத்துவதற்கான போட்டி, தைவான் விவகாரம் போன்ற முக்கியப் பிரச்னைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
இரானில் நடைபெற்று வரும் போரும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இரானின் எண்ணெயை அதிக அளவில் வாங்கும் நாடாகவும், அதன் முக்கிய வர்த்தகக் கூட்டாளியாகவும் சீனா உள்ளது.
ஏபெக் உச்சிமாநாட்டின்போது நடைபெறும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஷி ஜின்பிங் பங்கேற்பார் என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி சீன அரசு ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டன. ஆனால், டிரம்ப், புதின், ஷி ஆகிய மூவரும் பங்கேற்கும் முத்தரப்புச் சந்திப்பு குறித்து எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
உச்சிமாநாட்டின் போது இதுபோன்ற பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான “தயார்நிலையை உறுதிப்படுத்தும் அறிகுறிகள்” தென்படுவதாக ரஷ்ய அரசு ஊடகங்களிடம் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இம்மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.