பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் நேற்று (மார்ச் 18) தொலைபேசி மூலம் காலந்துரையாடியுள்ளனர்.
அதில் யுக்ரேன் போரில் உடனடியான மற்றும் முழுமையான போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதற்கு புதின் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் யுக்ரேனின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை மட்டும் வெறும் 30 நாட்களுக்கு மட்டும் நிறுத்துவதாக புதின் வாக்குறுதி அளித்துள்ளார்.
அமெரிக்காவோ ரஷ்யாவிடம் இருந்து முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை விரும்பியது. ஆனால், புதினின் முடிவுகள் அதற்கு அருகில்கூட வரவில்லை.
“மிகவும் பயங்கரமான இந்தப் போரை” முடிவுக்குக் கொண்டு வர முடியும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வாக்குறுதி அளித்த போர் இன்னும் தீவிரமாகவே நடந்து வருகிறது.
சமீபத்தில் சௌதி அரேபியாவில், அமெரிக்க அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஒருங்கிணைக்கப்பட்ட விரிவான ஒரு மாத கால போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு யுக்ரேன் ஒப்புக்கொண்டது. ஆனால் ரஷ்ய அதிபர் புதின் அதில் கையெழுத்திட மறுத்துவிட்டார்.
வெளிநாடுகளில் இருந்து யுக்ரேனுக்கு கிடைக்கும் ராணுவ உதவியும், உளவுத் தகவல் பகிர்வும் முடிவுக்கு வந்தால் மட்டுமே முழுமையான போர் நிறுத்தத்தைச் செயல்படுத்தப்பட முடியும் என்றார் புதின். இவ்வாறு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை, இதற்கு முன்பே யுக்ரேனின் ஐரோப்பிய கூட்டணி நாடுகள் நிராகரித்துள்ளன.
யுக்ரேன் தொடர்பாக அமெரிக்கா முன்னெடுத்துள்ள போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து நடைபெறும் என மத்திய கிழக்குப் பகுதிக்கான அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்கோஃப் தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தக் கடுமையான போரில், ஆறு மாதங்களுக்கு முன்பு யுக்ரேனின் ஊடுருவலால் கைப்பற்றப்பட்ட கர்ஸ்க் பிராந்தியத்தை ரஷ்யா சமீபத்தில் மீண்டும் கைப்பற்றியுள்ளது.
நேற்று, டிரம்புக்கும் புதினுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் முடிவுகள், கடந்த வாரம் அமெரிக்கா முன்னெடுத்த நிலைப்பாட்டில் ஒரு பின்னடைவையே குறிக்கிறது.
இருப்பினும் இரு தலைவர்களும் மத்திய கிழக்கில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் உடனடியாக நடைபெறும் என்று ஒப்புக்கொண்டனர்.
இந்த அழைப்புக்கு முன்னதாக, டொனால்ட் டிரம்ப் உண்மையில் ரஷ்யா மீது அழுத்தம் கொடுப்பார் என்று சிலர் யோசித்தனர். ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் தாமதமாகி வருகிறது என்பதே ஒரு வாரத்திற்கும் மேலாக தெளிவாகத் தெரிகிறது.
டிரம்ப், புதின் தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு தாக்குதலா?
பட மூலாதாரம், Reuters
கடந்த செவ்வாய்கிழமையன்று அமெரிக்க அதிகாரிகள் குழு யுக்ரேனிய பிரதிநிதிகளைச் சந்தித்தபோது, நிலம், கடல், வான் எல்லைகளில் “உடனடி” 30 நாள் போர் நிறுத்தத்திற்கான தங்களது முன்மொழிவை ஏற்றுக் கொள்ளுமாறு யுக்ரேனிய அரசைச் சம்மதிக்க வைத்தது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினின் தொலைபேசி உரையாடல் முடிவடைந்த சிறிது நேரத்திலேயே, செவ்வாய்க் கிழமையன்று அதிகாரப்பூர்வ பயணமாக ஃபின்லாந்தின் ஹெல்சின்கிக்கு வந்த யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி, எரிசக்தி உள்கட்டமைப்பை உள்ளடக்கிய ஒரு போர்நிறுத்த யோசனையை யுக்ரேன் வரவேற்பதாகத் தெரிவித்தார். ஆனால், அதற்கான கூடுதல் விவரங்களை முதலில் அறிய விரும்புவதாகவும் கூறினார்.
ரஷ்யாவின் டிரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து புதின் போர் நிறுத்தத்தை நிராகரித்ததை யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி குற்றம் சாட்டினார். அவர்கள் தாக்குதல் நடத்திய இடங்களில் சுமியில் உள்ள ஒரு மருத்துவமனையும், ஸ்லோவியன்ஸ்கில் உள்ள மின் விநியோக நிலையங்களும் அடங்கும் என்று ஸெலென்ஸ்கி கூறினார்.
“துரதிர்ஷ்டவசமாக, இந்தத் தாக்குதல்களில் சில பொது உட்கட்டமைப்புகள் மீது நடந்துள்ளன,” என்றும், “இன்று, புதின் முழுமையான போர்நிறுத்தத்திற்கான திட்டத்தை நிராகரித்துள்ளார்” என்றும் ஸெலென்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
மறுபுறம், ரஷ்ய தலைவருடனான தனது உரையாடல் “மிகவும் சிறப்பாக, பயனுள்ளதாக இருந்ததாக” அதிபர் டிரம்ப் சமூக ஊடகங்களில் முன்பு பதிவிட்டிருந்தார். இந்த உரையாடலில் அமைதிக்கான ஒப்பந்தத்தின் பல கூறுகள் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
“முழுமையான போர் நிறுத்தத்தைக் கொண்டு வரவும், இறுதியில் ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான இந்தக் கடுமையான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் விரைவாகச் செயல்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், தற்போது அனைத்து எரிசக்தி நிலையங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீதான உடனடி போர் நிறுத்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
யுக்ரேனின் எரிசக்தி உட்கட்டமைப்பில் சுமார் 80 சதவீதம் ரஷ்ய குண்டுகளால் அழிக்கப்பட்டுவிட்டதாக கடந்த செப்டம்பர் மாதம் ஸெலென்ஸ்கி கூறியிருந்தார். அதற்குப் பதிலடியாக, ரஷ்ய எல்லைக்குள் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு தளங்கள் மீது டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை யுக்ரேன் நடத்தியது.
எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதலை நிறுத்த புதின் ஒப்புக்கொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, ரஷ்யாவும் யுக்ரேனும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இரு நாடுகளும் மாறி மாறி குற்றம் சாட்டிக்கொண்டன.
டிரம்ப், புதின் இடையிலான தொலைபேசி அழைப்புக்குப் பிறகு சில மணிநேரங்களில் ரஷ்யா யுக்ரேனுக்கு எதிராக 40க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவியதாக ஸெலென்ஸ்கி கூறினார்.
இதற்கிடையில், தெற்கு ரஷ்ய பிராந்தியமான கிராஸ்னோடரில் உள்ள அதிகாரிகள், யுக்ரேனிய டிரோன் தாக்குதல் எண்ணெய்க் கிடங்கில் ஒரு சிறிய தீயை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தனர்.
கடந்த வாரம் ஜெட்டாவில் நடந்த பேச்சுவார்தையைத் தொடர்ந்து, யுக்ரேனியர்கள் அமெரிக்காவின் முழுமையான போர்நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்ட பிறகு, தற்போது “முடிவு” ரஷ்யாவின் கையில் உள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியிருந்தார்.
ஆனால் டிரம்புக்கும் புதினுக்கும் இடையே நேற்று நடைபெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து வெளியான வெள்ளை மாளிகையின் அறிக்கை, யுக்ரேன் உடனான அந்த ஒப்பந்தத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
புதின் நேரத்தை இழுத்தடிக்க முயல்கிறாரா?
பட மூலாதாரம், Reuters
அதற்குப் பதிலாக, “எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்புகளுக்கான போர்நிறுத்த ஒப்பந்தத்துடன், அமைதிக்கான செயல்பாடுகள் தொடங்குவதற்கு” இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து “கருங்கடலில் கடல்சார் போர் நிறுத்தம், முழுமையான போர்நிறுத்தம் மற்றும் நிரந்தர அமைதி” குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்தன என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
ஆனால், யுக்ரேன் உடனான எந்தவொரு ஒப்பந்தத்தையும் செயல்படுத்துவதில் “குறிப்பிடத்தக்க சிக்கல்கள் தொடர்ச்சியாக உள்ளன” என்று ரஷ்யா வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. யுக்ரேனுக்கு வழங்கப்படும் வெளிநாட்டு ஆதரவு மற்றும் உளவுத் துறையின் உதவிகள் முடிவுக்குக் கொண்டு வரப்படுவது ஒரு “முக்கிய நிபந்தனையாக இருக்கும்” என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கா இதில் எதற்கும் இன்னும் உடன்படவில்லை என்பது யுக்ரேனுக்கு ஒரே நம்பிக்கையாக இருக்கிறது. டிரம்ப் மற்றும் புதின் ஒரு நீண்ட கால தீர்வை நோக்கி உடனடியாக தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்த ஒப்புக்கொண்டனர்.
மேலும் இது “முழுமையானதாக, நிலையானதாக, நீண்ட காலத்திற்கானதாக” இருக்க வேண்டும் என்று ரஷ்யா கூறியது.
ஆனால் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நேரடியாக நடைபெறுமா அல்லது ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நேரடியாக நடைபெறுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தொழில்முறை அமெரிக்க மற்றும் ரஷ்ய வீரர்களுக்கு இடையே ஐஸ் ஹாக்கி போட்டிகளை நடத்தும் புதினின் யோசனையை டிரம்ப் ஆதரிப்பதாகவும் ரஷ்யா கூறியது. ரஷ்யா 2022இல் யுக்ரேன் மீது படையெடுத்த பின்னர், வெளிநாடுகளில் ஐஸ் ஹாக்கி நிகழ்வுகளில் பங்கேற்பதில் இருந்து ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால், அதிபர் டிரம்புக்கும் புதினுக்கும் இடையே செவ்வாயன்று நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் முடிவை, எந்தவொரு தீர்வுக்கும் கடுமையான நிபந்தனைகளை விதித்து, அதற்கிடையே நேரத்தை இழுத்தடிக்கும் புதினின் யோசனையாகவே யுக்ரேன் பார்க்கக்கூடும்.
புதிய அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ரஷ்யா கைப்பற்றியுள்ள யுக்ரேன் நிலங்களைத் தாங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும், மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடைகள் தளர்த்தப்பட வேண்டும் என்றும், ரஷ்ய அதிபர் புதின் முன்னதாகவே வலியுறுத்தியுள்ளார்.
அது மட்டுமின்றி, யுக்ரேனுக்கான அமெரிக்க ஆதரவை நிறுத்துவதற்கு, டிரம்ப் தயாராக இருப்பதை புதின் ஏற்கெனவே உணர்ந்துவிட்டார். அதையே அவர் மீண்டும் செய்ய வேண்டுமென்றும் புதின் முயல்கிறார். அதே நேரத்தில், யுக்ரேன் மீது அழுத்தத்தை ஏற்படுத்தவும் புதின் முயல்கிறார்.
மொத்தத்தில் யுக்ரேனுக்கு இந்தப் பேச்சுவார்த்தைகளின் மூலம் பலன் ஏதும் கிடைக்கவில்லை. இந்தப் பேச்சுவார்த்தையில் நிலையான முடிவு எடுக்கப்படாதது அமெரிக்காவுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால், ரஷ்யாவுக்கு இதுவொரு சிறப்பான நாளாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்கும்போது அவர்கள் தங்களுக்குச் சாதகமான பாதையில் பேச்சுவார்த்தை செல்லும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
பட மூலாதாரம், Getty Images
இந்த மாதத் தொடக்கத்தில், அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் டிரம்ப் மற்றும் ஸெலென்ஸ்கி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, யுக்ரேனுக்கான ராணுவ மற்றும் உளவுத்துறை உதவிகளை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியது.
அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோர், ஸெலென்ஸ்கி மீது குற்றம் சாட்டி சர்வதேச ஊடகங்கள் முன்பாக அமெரிக்க ஆதரவுக்கு நன்றியற்றவர் என்று சித்தரித்தனர்.
செவ்வாய்க் கிழமையன்று பெர்லினில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் இணைந்து பேசிய ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், “வரையறுக்கப்பட்ட போர் நிறுத்த திட்டம் ஒரு முக்கியமான முதல் படி. ஆனால் முழுமையான போர் நிறுத்தம் அவசியம்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், டிரம்ப்-புதின் உரையாடலுக்குப் பிறகு, பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர், யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் உரையாடினார். அப்போது, யுக்ரேனுக்கு “பிரிட்டனின் வலுவான மற்றும் நிலையான ஆதரவை உறுதிப்படுத்தினார்” என பிரிட்டன் பிரதமரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு