படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இருவரும் தொலைபேசியில் உரையாடினர் (கோப்புப் படம்)கட்டுரை தகவல்
எழுதியவர், பெர்ண்ட் டெபுஸ்மேன் ஜூனியர், மைக்
பதவி, பிபிசி நியூஸ்
அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் புதினுடன் புதன்கிழமை தொலைபேசி மூலம் பேசினார். ஒன்றரை மணிநேரம் நீடித்த இந்த உரையாடலில், யுக்ரேன் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்க இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். அந்த உரையாடல், “நீண்ட, பலனுள்ளதாக” இருந்தது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரூத் சோசியல் என்ற தனது சமூக ஊடகப் பக்கத்தில், இருநாடுகளின் “குழுவினருன் உடனடியாக பேச்சுவார்த்தைகளை தொடங்க ஒப்புக்கொள்ளப்பட்டது” என்று டிரம்ப் பதிவிட்டிருந்தார்.
அதன் பின்னர், யுக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி டிரம்புடன், “நீடித்த, நிலையான அமைதி” குறித்து பேசியதாக தெரிவித்திருந்தார்.
டிரம்ப் மற்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் இருவரும் யுக்ரேன் நேட்டோ கூட்டமைப்பில் சேராது என்று கூறியிருந்தனர். இது யுக்ரேனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும், இந்த நிலையிலேயே தொலைபேசி உரையாடல்கள் நடைபெற்றன.
முனிச் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெறும் யுக்ரேன் தொடர்பான பாதுகாப்பு உச்சி மாநாட்டின்போது அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோரை சந்திப்பதாக ஸெலன்ஸ்கி கூறினார்.
டிரம்ப் “இந்த அபத்தமான போரை நிறுத்துவதற்கான நேரம் இது, அங்கு பெரியளவிலான, முற்றிலும் தேவையற்ற இறப்புகள் மற்றும் அழிவு ஏற்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் யுக்ரேன் மக்களை கடவுள் ஆசீர்வதிப்பார்!” என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.
புதினுடன் நேருக்கு நேர் சந்திப்பதற்கான தேதியை டிரம்ப் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனால் பின்னர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “நாங்கள் சௌதி அரேபியாவில் சந்திப்போம்.” என்றார்.
ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இணைந்து செயல்படுவதற்கான நேரம் வந்துவிட்டது என்ற டிரம்பின் யோசனையை புதின் ஆதரிப்பதாகக் கூறினார்.
புதினுக்கும் டிரம்புக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் நீடித்தது. அந்த உரையாடலின்போது, மாஸ்கோவுக்கு வருமாறு டிரம்புக்கு புதின் அழைப்பு விடுத்தார் என்று பெஸ்கோவ் கூறினார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், யுக்ரேன் அதன் 2014க்கு முந்தைய எல்லைகளுக்குத் திரும்புவது சாத்தியமில்லை என்று கூறினார். ஆனால், பிபிசியின் கேள்விக்கு பதிலளித்த அவர், “அந்த நிலத்தில் சில (பகுதிகள்) திரும்பி கிடைக்கும்” என்று கூறினார்.
நேட்டோ உச்சி மாநாட்டில் யுக்ரேன் ராணுவக் கூட்டணியில் சேர்வதற்கான சாத்தியக்கூறு இல்லை என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஹெக்செத் புதன்கிழமை பேசியிருந்தார். அந்த கருத்தை ஆமோதிப்பதாக டிரம்ப் கூறினார்.
“அது அநேகமாக உண்மையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்,” என்று டிரம்ப் தெரிவித்தார்.
பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, யுக்ரேன் – ரஷ்யா போரை நிறுத்துவதற்கான நேரம் இது என கூறியுள்ளார், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
யுக்ரேனுக்கு பிரிட்டன் ஆதரவு
ரஷ்யாவுக்கு எதிரான யுக்ரேனின் பாதுகாப்புக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று பிரிட்டன் அரசாங்கம் கூறியுள்ளது. பிரிட்டன் துணை பிரதமர் ஏஞ்செலா ரெய்னர் ஐடிவிக்கு அளித்தப் பேட்டியில், யுக்ரேனுக்கு பிரிட்டனின் ஆதரவு “உறுதியானது” என்று கூறினார்.
யுக்ரேன் தலைநகரின் மனநிலை குறித்த தனது மதிப்பீட்டில், பிபிசியின் ஜேம்ஸ் வாட்டர்ஹவுஸ், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளரின் கூற்று யுக்ரேனுக்கு பலத்த அடியாக இருந்திருக்கும் என்று கூறுகிறார்.
புதிய அமெரிக்க நிர்வாகம் அதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்களை விட யுக்ரேனுக்கு குறைந்த அனுதாபத்தையே காட்டுகிறது என்பது நீண்டகாலமாக தெரிந்தது என்றாலும், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளரின் ஒவ்வொரு வார்த்தையும் ரஷ்யாவை மட்டுமே மகிழ்வித்திருக்கும் என்று ஜேம்ஸ் வாட்டர்ஹவுஸ் மேலும் கூறுகிறார்.
நேட்டோ உறுப்பினர் அந்தஸ்து மறுக்கப்பட்டது, யுக்ரேன் வெல்ல முடியாது என்ற ஒரு பார்வை மற்றும் போர்க்களத்தின் எல்லைகளை எதிர்காலத்தில் யார் கண்காணிப்பார்கள் என்பதில் தெளிவற்றத்தன்மை – இவை அனைத்தும் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் 11 ஆண்டுகால ஆக்கிரமிப்புக்கு உறுதியான பலனைக் கொடுத்தன என்று ஜேம்ஸ் வாட்டர்ஹவுஸ் கூறுகிறார்.
“யுக்ரேன் இல்லாமல் யுக்ரேன் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது” என்று ஸெலன்ஸ்கி பலமுறை தெரிவித்துள்ளார். ஆனால், டிரம்ப்-புதின் தொலைபேசி அழைப்பு அவர் இல்லாமல் தான் நடைபெற்றது.
டிரம்புடன் ஸெலன்ஸ்கி உரையாடல்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் யுக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி (கோப்புப் படம்)
டிரம்புடன் பேசியிருந்த ஸெலன்ஸ்கி, அந்த உரையாடல் பல்வேறு பிரச்னைகள் குறித்த “நல்ல மற்றும் விரிவான கலந்துரையாடல்” என்று கூறினார். மேலும், யுக்ரேனுக்கு வருகை தந்துள்ள அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட்டையும் சந்தித்ததாக தெரிவித்தார்.
“யுக்ரேனைவிட வேறு யாரும் அமைதியை அதிகம் விரும்பவில்லை. அமெரிக்காவுடன் இணைந்து, ரஷ்ய ஆக்கிரமிப்பை நிறுத்துவதற்கும், நீடித்த, நம்பகமான அமைதியை உறுதி செய்வதற்கும் எங்கள் அடுத்த நடவடிக்கைகளை நாங்கள் வகுத்து வருகிறோம்” என்று ஸெலன்ஸ்கி பதிவிட்டார்.
“மேலும் தொடர்பைப் பேணவும், வரவிருக்கும் சந்திப்புகளைத் திட்டமிடவும் நாங்கள் ஒப்புக்கொண்டோம்.” என்றார்.
அமெரிக்கா மற்றும் யுக்ரேன் தலைவர்களுக்கு இடையிலான தொலைபேசி அழைப்பு ஒரு மணிநேரம் நீடித்ததாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.
செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட தி கார்டியன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இரு நாடுகளும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற நாட்டு பகுதிகளை விடுவிக்கலாம் என்று ஸெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை, யுக்ரேனில் ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு மாற்றாக பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் பரிந்துரைத்தார்.
“இது சாத்தியமற்றது,” என்று புதினின் செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
“ரஷ்யா அதன் பிராந்திய பரிமாற்றம் குறித்து ஒருபோதும் விவாதித்ததில்லை, விவாதிக்காது. யுக்ரேனிய படைப்பிரிவுகள் இந்த பிராந்தியத்திலிருந்து வெளியேற்றப்படும். அழிக்கப்படாதவர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள்.” என்றார்.
தனது நாட்டுக்கான எந்தவொரு பாதுகாப்பு குறித்த நடவடிக்கையிலும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல, அமெரிக்காவும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் ஸெலன்ஸ்கி வலியுறுத்தி வருகிறார்.
“அமெரிக்கா இல்லாத பாதுகாப்பு உத்தரவாதங்கள் உண்மையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் அல்ல,” என்று அவர் கூறினார்.
மற்றொரு தருணத்தில் பேசும்போது, டிரம்ப் “ஒரு கட்டத்தில் நீங்கள் யுக்ரேனில் தேர்தலைச் சந்திக்கப் போகிறீர்கள்” என்று கூறினார். 2024-ம் ஆண்டு மே மாதம் ஸெலன்ஸ்கியின் அதிபர் பதவிக்காலம் முடிவடைந்தது, எனினும் போர் காரணமாக அங்கு தேர்தல்கள் நடைபெறவில்லை. இதுகுறித்து தான் டிரம்ப் பேசியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
யுக்ரேனில் தொடரும் ரஷ்ய படையெடுப்பு மற்றும் ராணுவச் சட்டம் ஆகியவை புதிய அதிபர் தேர்தலை நடத்துவதை சாத்தியமற்றதாக்குகின்றன என்று ஸெலன்ஸ்கி கூறுகிறார்.
மாஸ்கோவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நடத்துவதற்கான ஸெலன்ஸ்கியின் சட்டபூர்வமான தன்மையை ரஷ்ய அதிபர் புதின் பலமுறை கேள்வி எழுப்பியுள்ளார்.
பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் புதின்
2014-ல் யுக்ரேனின் ரஷ்ய-ஆதரவு அதிபர் தூக்கி எரியப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்யா கருங்கடல் தீபகற்பமான கிரைமியாவை இணைத்துக்கொண்டதுடன், கிழக்கு யுக்ரேனில் நடைபெற்ற கடுமையான சண்டையில் ரஷ்ய-ஆதரவு பிரிவினைவாதிகளை ஆதரித்தது.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுத்தபோது, இந்த மோதல் முழு வீச்சிலான போராக வெடித்தது.
யுக்ரேன் தலைநகரை கைப்பற்ற ரஷ்யா எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. ஆனால், ரஷ்ய படைகள் கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள யுக்ரேனின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை கைப்பற்றியுள்ளன, மேலும் நாடு முழுவதும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், யுக்ரேன் பீரங்கி மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தி வருகிறது, அத்துடன் ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தின் மீது தரைவழித் தாக்குதலையும் நடத்தி வருகிறது.
ரஷ்ய மற்றும் யுக்ரேனிய அரசாங்கங்கள் ரகசியமாக இருப்பதால், போரில் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற துல்லியமான எண்ணிக்கை தெரிவது கடினம். எனினும், பெரும்பாலான படையினர் உட்பட பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது படுகாயம் அடைந்துள்ளனர், லட்சக்கணக்கான யுக்ரேனிய குடிமக்கள் நாட்டை விட்டு வெளியேறி அகதிகளாகியுள்ளனர் என்று மதிப்பிடப்படுகிறது.