பட மூலாதாரம், Getty Images
இந்தியா- அமெரிக்கா இடையேயான நிலைமை இரண்டு ஆண்டுகளில் முற்றிலும் மாறியிருக்கிறது. இது ஆச்சரியமளிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான், பிரதமர் நரேந்திர மோதிக்கு வெள்ளை மாளிகையில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவரது பேச்சுக்கு பலமான கரவொலி இருந்தது. பிளவுபட்டு நிற்கும் உலகில், இந்தியா அமெரிக்காவின் நம்பகமான கூட்டாளி என்பதன் அடையாளமாக இருந்த தருணம் அது.
அதிபர் ஜோ பைடன் மோதியை விரித்த கரங்களுடன் வரவேற்றார். இதன் பின்னால் இரண்டு உத்தி ரீதியான குறிக்கோள்கள் இருந்தன. முதலாவது யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் இந்தியா ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என அமெரிக்கா விரும்பியது
இரண்டாவது சீனாவின் அதிகரிக்கும் செல்வாக்கை எதிர்க்கக் கூடிய ஒரு கூட்டணியில் இந்தியாவை சேர்ப்பது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரை, அமெரிக்காவின் கண்களில் இந்தியா ஒரு கூட்டாளியாக மட்டும் இருக்கவில்லை, மாறாக ஆசியாவில் ஜனநாயகத்தின் ஒரு தூணாக பார்க்கப்பட்டது.
டிரம்பின் இந்த வர்த்தகப் போர் இந்தியாவை குறுகிய காலத்தில் பாதிக்கும் என்றாலும், இதன்மூலம் அமெரிக்கா சீனாவுக்கு எதிராக தனக்கு துணையாக நிற்கக்கூடிய ஒரு நெருக்கமான கூட்டாளியை இழக்கக்கூடும் என சில தூதரக அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் நம்புகின்றனர்.
வரி விதிக்கும் டிரம்பின் முடிவு இந்தியாவுக்கு ஒரு பெரிய அடி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் இந்த தாக்கத்திற்கு ஏற்கனவே தயாராகி வந்தனர்.
பட மூலாதாரம், Mikhail Svetlov/Getty Images
இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு (FIEO) இந்த முடிவு மிகவும் அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளது. வரி விதிக்கும் முடிவு இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு செய்யப்படும் பாதிக்கும் மேற்பட்ட ஏற்றுமதிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்த அமைப்பு நம்புகிறது.
டெல்லியைச் சேர்ந்த ‘குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ்’ (GTRI) என்ற சிந்தனைக் குழு, அமெரிக்காவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி 40 முதல் 50 சதவீதம் வரை குறையலாம் என்று மதிப்பிடுகிறது.
GTRI-யின் நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா, பொறுமையை கடைபிடிப்பது அவசியம் என அறிவுறுத்துகிறார். “இந்தியா அமைதியாக இருக்க வேண்டும். அச்சுறுத்தல் அல்லது நம்பிக்கையின்மை நிலவும் சூழலில் பயனுள்ள பேச்சுவார்த்தைகள் நடைபெற முடியாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.
சில ஆய்வாளர்கள், டிரம்பின் கோபத்திற்கு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தாதது மட்டுமல்ல, யுக்ரேனில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த முடியாததும் காரணம் என்று கருதுகின்றனர்.
தேர்தலுக்கு முன்பு, 24 மணி நேரத்தில் ரஷ்யா- யுக்ரேன் போரை நிறுத்துவேன் என்று டிரம்ப் பெருமையாகக் கூறியிருந்தார். ஆனால், அவர் பதவியேற்று ஏழு மாதங்கள் ஆகியும் இது சாத்தியமாகவில்லை.
இந்தச் சூழலில், இந்தியா ஒரு எளிதான இலக்காக மாறிவிட்டதா?
பட மூலாதாரம், Andrew Harnik/Getty
‘இந்தியா அழுத்தத்திற்கு அடிபணியாது’
சில நிபுணர்கள் டிரம்பின் கொள்கையில் ஆழமான உத்தி குழப்பம் இருப்பதை பார்க்கின்றனர். பெய்ஜிங்கை சேர்ந்த அரசியல் அறிவியல் பேராசிரியர் ஹுவாங் ஹுவா இந்த வரிவிதிப்பு தாக்குதல் தொலைநோக்கு இல்லாதது என நம்புகிறார்.
“இந்தியா இழப்புகளை சந்திக்கும். ஆனால் டிரம்பின் வெளிநாட்டு கொள்கை இந்தியாவைப் பொறுத்தவரை தவறான பாதையில் செல்வதால் அமெரிக்கா அதைவிட அதிக இழப்புகளை சந்திக்கும் என நான் நம்புகிறேன்,” என்கிறார் ஹுவாங்.
இது இந்தியாவை சீனாவுக்கு நெருக்கமாக கொண்டுவரக்கூடும் எனவும் அவர் நினைக்கிறார். எதிர்காலத்தில் அமெரிக்காவின் அழுத்தத்தை சமாளிக்க இந்தியாவும், சீனாவும் ஒன்றாக நிற்கும் என ஹூவாங் கருதுகிறார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோதி சீனாவுக்கு செல்லக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சூழலில், மோதி ஷி ஜின்பிங்குடன் மேடையை பகிர்ந்துகொண்டாலே, அது இந்தியாவை அழுத்தத்தால் அடிபணிய வைக்கமுடியாது என்ற செய்தியை அளிக்கும்.
இந்தியாவுக்கு பெரிய பின்னடைவு
டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் இந்தியாவுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்படாது என தோன்றுகிறது. பிரேசிலுக்கு பிறகு இப்போது இந்தியாவுக்கும் 50 விழுக்காடு மொத்த வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தொடர்ந்து ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்வதுதான் இதற்கு காரணம் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்தியா தொடர்ந்து ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்வது ரஷ்யாவை தனிமைப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சியை பலவீனப்படுத்துவதாக டிரம்ப் சொல்கிறார்.
இந்த அறிவிப்புக்கு இந்தியா மிதமான பதிலையே அளித்துள்ளது. இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் இந்த முடிவு ‘பொருத்தமற்றது மற்றும் ஆதாரமற்றது.’ என விமர்சித்துள்ளது.
இந்தியா அதன் தேசிய நலன்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என அந்த அறிக்கை வலியுறுத்தியது.
ரஷ்யாவின் அணுகுமுறையால் டிரம்ப் அதிருப்தியடைந்திருக்கிறாரா?
பட மூலாதாரம், Chris Ratcliffe/Bloomberg via Getty
டிரம்பின் இரண்டாம் பதவிக்காலத்தில் அமெரிக்காவின் ராஜதந்திர அணுகுமுறை மாறியிருப்பதை புரிந்துகொள்வதும் அவசியம். இம்முறை டிரம்ப் தனது ராஜதந்திரத்தை வர்த்தகத்தை நோக்கி திருப்பியுள்ளார்.
முன்னாள் இந்திய தூதரக அதிகாரி ஷரத் சபர்வால், “கடந்த காலத்தில் பல நாடுகளை பற்றி அதிபர் டிரம்ப் அவசர முடிவு எடுத்துவிட்டு பின்னர் மாற்றியிருக்கிறார். பலமுறை பேச்சுவார்த்தையில் அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கு மட்டுமே அவரது அறிவிப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன.” என்கிறார்
இந்த வரிவிதிப்பு கொள்கை அமெரிக்காவுக்கு பாதகமாக அமையும் என பேராசிரியர் ஹுவாங் ஹுவா நம்புகிறார்.
டிரம்பிடமிருந்து வரும் இதுபோன்ற அழுத்தத்தை சமாளிக்க இந்தியா சீனா இடையே மேலும் வலுவான உறவுகள் ஏற்படவேண்டும் என்கிறார் அவர்.
இந்த விஷயத்தில் பிரதமர் மோதி சீனாவுக்கு மேற்கொள்ள சாத்தியமுள்ள பயணம் மிக முக்கியமானதாக அமையக்கூடும்.
இது வீம்புக்காக எடுக்கப்படும் நடவடிக்கையா?
தற்போதைய அமெரிக்க வெளியுறவுக் கொள்கை, நண்பர்களை வர்த்தகத்தின் மூலம் அழுத்தம் கொடுக்கும் உத்தியாக இருக்கலாம் என்பதால், டிரம்ப் உண்மையில் இந்தியாவின் மீது கோபமாக இல்லை என்று அதிகார வட்டாரங்களில் ஒரு கிசுகிசுப்பு உள்ளது.
ரஷ்யா போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டால், உறவுகள் மீண்டும் சீரடையும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஆனால் வரிப் போர் என்பது உண்மையில் ஒரு கொள்கையா, அல்லது டிரம்ப் அதை பேச்சுவார்த்தைக்கு ஒரு கருவியாக பயன்படுத்துகிறாரா? என்பதுதான் கேள்வி.
முன்னாள் இந்திய தூதரக அதிகாரி சபர்வால் “டிரம்ப் இந்தியாவின் மீது 50% வரியை உண்மையில் அமல்படுத்துவாரா என்பதை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும். இந்த கூடுதல் 25% வரி அமலாகவிருக்கும் 27ஆம் தேதிக்கு சில நாட்களுக்கு முன்னர் இரு நாடுகளுக்கிடையே அடுத்த கட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.” என்கிறார்
அதாவது, பேச்சுவார்த்தைக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவுக்கு வாய்ப்புகள் உள்ளன, இதை அறிந்திருக்கிறது.
இதுவரை தனது பதிலில் மோதி அரசு மிகவும் எச்சரிக்கையாக இருந்து வருகிறது.
ஆனால் இந்தியாவின் முன்னுரிமைகள் தெளிவாக இருப்பதாக சபர்வால் நம்புகிறார்.
“இந்திய அரசு அதன் தேசிய நலன்களையும், எரிசக்தி பாதுகாப்பையும் காக்கும் என கூறியுள்ளது. அரசின் முன் உள்ள உறுதியான வாய்ப்புகள் என்னவென்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நாம் பேச்சுவார்த்தை நடத்தும் வழிகளை திறந்து வைத்திருக்கவேண்டும்.”
பாகிஸ்தான் பக்கம் சாய்கிறதா?
பட மூலாதாரம், Islam Safwat/Bloomberg via Getty
இவை அனைத்துக்கு மத்தியில், இந்தியாவை மேலும் கவலையடையச் செய்யக்கூடிய விஷயம், பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் நெருக்கம் அதிகரிப்பது.
சபர்வால், பாகிஸ்தானில் இந்தியாவின் தூதராகவும் பணியாற்றியவர். அவருக்கு அமெரிக்காவின் பாகிஸ்தான் கொள்கையில் ஒரு முறைமை தெரிகிறது.
“பாகிஸ்தானுடன் மீண்டும் ஒரு ‘கொடுக்கல்-வாங்கல்’ அடிப்படையிலான உறவு உருவாகி வருவதாகத் தோன்றுகிறது,” என்று சபர்வால் கூறுகிறார்.
கொடுக்கல்-வாங்கல் பற்றிய பேச்சில், டிரம்ப் குடும்பத்தின் கிரிப்டோ வணிக நலன்கள் மற்றும் பாகிஸ்தானில் திடீரென தொடங்கப்பட்ட எண்ணெய் ஆய்வு பற்றிய குறிப்புகளை சபர்வால் சுட்டிக்காட்டுகிறார்.
தற்போது, பாகிஸ்தானில் பெரிய எண்ணெய் இருப்பு இல்லை, மேலும் அங்கு பாதுகாப்பு சூழலும் நிலையானவையாக இல்லை.
“உண்மையில், இந்த ஒத்துழைப்பு அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் போகலாம். பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, இந்தியாவின் மீது அழுத்தம் கொடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும் தோன்றுகிறது,” என்று சபர்வால் கூறுகிறார்.
இருப்பினும் இதனால் இந்தியா-அமெரிக்க உறவுகள் மீண்டும் மேம்பட முடியாது என்று அர்த்தமல்ல.
பாதுகாப்பு, தொழில்நுட்பம், கல்வி மற்றும் உளவு ஆகிய துறைகளில் நிறுவன உறவுகள் இன்னும் வலுவாக உள்ளன.
ஆனால், உறவுகளின் அடித்தளமாக இருப்பது மரியாதை ஆகும் — தற்போது அதுவே சோதிக்கப்படுகிறது.
டிரம்ப் இந்த பாதையில் தொடர்ந்தால், அவர் சர்வதேச அதிகார சமநிலையில் ஒரு முக்கிய பங்காற்றக்கூடிய ஒரு கூட்டாளியை அமெரிக்காவிலிருந்து விலகிச் செல்லவைக்கக்கூடும்.
டிரம்பின் நடவடிக்கைகள் இந்தியாவை சீனாவின் பக்கம் தள்ளாவிட்டாலும், சுதந்திரமான மற்றும் சமநிலையான நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம்.
அத்தகைய நடவடிக்கையில் அமெரிக்காவின் செல்வாக்கு குறையும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு