பட மூலாதாரம், Reuters
எகிப்தில் நடந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எகிப்து, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் சேர்ந்து காஸாவில் அமைதியை மீட்டெடுப்பதற்கான ஓர் அறிவிப்பில் கையெழுத்திட்டார்.
உலக நாடுகளின் கவனம் இந்த உச்சி மாநாட்டின் மீது இருந்த அதே வேளையில், அங்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோதியின் பெயரைக் குறிப்பிடாமல், “இந்தியா ஒரு சிறந்த நாடு, அங்கு அதிகாரத்தின் உச்சியில் எனது நல்ல நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்,” என்று கூறினார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எகிப்துக்கு சென்றார்.
டிரம்ப் தனது உரையின் போது, “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு இருக்கும்,” என்று கூறினார்.
இதைச் சொன்ன பிறகு, டிரம்ப் தனக்குப் பின்னால் நின்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிஃப்பை நோக்கித் திரும்பினார். இதற்கு ஷாபாஸ் ஷெரிஃப் சிரித்தபடி பதிலளிப்பதைக் காணொளியில் காண முடிந்தது.
எனினும், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடங்கிய சண்டையைத் தான் தடுத்து நிறுத்தியதாக டிரம்ப் திங்கள்கிழமை மீண்டும் வலியுறுத்தினார்.
சண்டையை தொடர்ந்தால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மீது 100%, 150%, 200% வரை வரி விதிக்கப்படும் என டிரம்ப் அச்சுறுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
டிரம்பின் இந்தக் கூற்றுக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மீண்டும் பிரதமர் மோதியைத் விமர்சித்தார்.
காஸா விவகாரத்தில் டிரம்ப் பேசியதற்குப் பாராட்டு தெரிவிக்கும் பிரதமர், இந்தப் பிரச்னையில் தொடர்ந்து மௌனம் சாதிப்பதாக ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
பட மூலாதாரம், Reuters
ஆசிம் முனீரையும் புகழ்ந்த டிரம்ப்
இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடர்ந்து மே மாதத்தில் இந்தியாவுடன் நடந்த மோதல் குறித்து எகிப்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிஃப் பேசினார்.
“இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டையை நிறுத்துவதில் செய்த அசாதாரண பங்களிப்புக்காக அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நோபல் பரிசை பாகிஸ்தான் முதலில் பரிந்துரைத்தது”என்று ஷாபாஸ் ஷெரிஃப் கூறினார்.
டொனால்ட் டிரம்ப் தனது உரையின் போது, கூட்டத்தில் இல்லாத பாகிஸ்தான் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீரைப் பாராட்டினார்.
“எனக்குப் பிடித்த பாகிஸ்தான் ஃபீல்ட் மார்ஷல் இங்கு இல்லை,” என்று அவர் கூறினார். அதன்பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிஃப்பை மேடைக்கு அழைத்து பேச சொன்னார்.
“இவர் (டிரம்ப்) இல்லையென்றால், அணு ஆயுத பலம் கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சண்டையின் நிலை என்னவாகியிருக்கும் என்று யாருக்குத் தெரியும்? அவருடைய அற்புதமான குழுவுடன் அந்த நான்கு நாட்களிலும் அவர் தலையிடாமல் இருந்திருந்தால், சண்டை மேலும் பெரிய அளவில் பரவி இருக்கும்,” என்று ஷாபாஸ் ஷெரிஃப் கூறினார்.
“அதேபோல், மத்திய கிழக்கின் இந்தப் பகுதியில் உங்களுடைய (டிரம்ப்) மற்றும் அதிபர் சிசியின் (எகிப்து) பங்களிப்பை வரலாறு நினைவில் கொள்ளும்,” என்றும் அவர் கூறினார்.
அதிபர் டிரம்ப்பை மீண்டும் ஒருமுறை நோபல் அமைதிப் பரிசிற்குப் பரிந்துரைக்க விரும்புவதாக ஷாபாஸ் ஷெரிஃப் கூறினார்.
பட மூலாதாரம், @MEAIndia
இந்தியா என்ன கூறியது?
எகிப்தில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் காஸா அமைதித் திட்டத்தில் கையெழுத்திட்டதை இந்தியா வரவேற்றுள்ளது.
இந்தத் திட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எகிப்து, கத்தார், துருக்கி நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.
இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கலந்து கொண்டார். அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “பிரதமர் நரேந்திர மோதியின் சிறப்புப் பிரதிநிதியாக இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், காஸா அமைதி மாநாட்டில் கலந்து கொண்டார்,” என்று தெரிவித்தார்.
“இந்த வரலாற்று அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை இந்தியா வரவேற்கிறது. மேலும், இந்தப் பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை இது ஏற்படுத்தும் என்று நம்புகிறது,” என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
கேள்வி எழுப்பிய சசி தரூர்
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், பிரதமர் நரேந்திர மோதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் எகிப்துக்கு அனுப்பப்பட்டது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு பதிவில் கருத்து தெரிவித்தார்.
“இது உத்திரீதியான தவிர்ப்பா அல்லது இழந்த வாய்ப்பா?” என்று அவர் ‘எக்ஸ்’ தளத்தில் எழுதினார்.
தரூர் கருத்துப்படி, “இது ஒரு தனிநபரின் (கீர்த்தி வர்தன் சிங்) தகுதி பற்றிய கேள்வி அல்ல. ஆனால், இத்தனை நாட்டுத் தலைவர்களும் பிரதமர்களும் அங்கு இருக்கும்போது, இந்தியா சார்பில் இத்தகையப் பிரதிநிதித்துவம் நமது குரலையும் அணுகலையும் குறைக்கலாம்.”
“மரபுகளை பின்பற்றவில்லை என்ற காரணத்தினாலேயே புனரமைப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை குறித்த பிரச்னைகளில் இந்தியாவின் குரலுக்குக் கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் உச்சிமாநாட்டில் கிடைக்காமல் போகலாம். தன்னை மறுவடிவமைத்துக் கொண்டிருக்கும் ஒரு பிராந்தியத்தில், ஒப்பீட்டளவில் நமது பங்கேற்பு இல்லாமல் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது,” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
காஸா ஒப்பந்தம்
எகிப்தில் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, டிரம்ப், “ஒரு புதிய அழகான நாள் உதயமாகிறது. இப்போது மீண்டும் கட்டுமானம் தொடங்கும்,” என்று கூறினார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தத்திற்கு உதவிக் கரம் நீட்டிய பிராந்தியத் தலைவர்களையும் அவர் பாராட்டினார்.
முன்னதாக, இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய டிரம்ப், “ஒரு நீண்ட மற்றும் வேதனையான கனவு முடிவுக்கு வந்துவிட்டது,” என்று கூறினார்.
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 250 பாலத்தீன கைதிகளையும், காஸாவில் இரண்டு ஆண்டுகளாக நடந்த ராணுவ நடவடிக்கையின் போது பிடிபட்ட 1,700 க்கும் மேற்பட்ட பாலத்தீனர்களையும் விடுவிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.
இதற்கு ஈடாக, உயிருடன் உள்ள 20 இஸ்ரேலியக் பணையக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது.
28 இறந்த இஸ்ரேலியக் பணையக்கைதிகளின் உடல்களைத் திருப்பி அனுப்புவது உட்பட இந்தக் கைதிகள் பரிமாற்றம் டிரம்பின் போர் நிறுத்த திட்டத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாகும்.
எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வந்த 20 க்கும் மேற்பட்ட தலைவர்களுடன் இந்தக் கூட்டத்தின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் சிரித்துக் கொண்டிருந்ததைக் காணமுடிந்தது.
“எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நான் இதற்கு முன்பும் பெரிய ஒப்பந்தங்களைச் செய்திருக்கிறேன். ஆனால், இது ஒரு ராக்கெட் போலப் பறந்தது. இந்த நிலையை அடைய 3,000 ஆண்டுகள் ஆனது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இது இப்போது நீடிக்கும்,” என்று அவர் கூறினார்.
கூட்டத்திற்கு பிறகு, எகிப்து அதிபர் எல்-சிசி டிரம்புக்கு ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ என்ற எகிப்தின் மிக உயரிய விருதை வழங்கினார்.
இந்த நாளை அவர் “வரலாற்றில் ஒரு மைல்கல்” என்று வர்ணித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு