பட மூலாதாரம், Reuters
டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபரான பிறகு, சில வாரங்களில் வாஷிங்டன் சென்று அவரை பார்த்த முதல் உலகத் தலைவர்களில் மோதியும் ஒருவர்.
டிரம்ப் மோதியை தனது “நல்ல நண்பர்” என்று குறிப்பிட்டார். இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான வர்த்தகத்தை 2030ம் ஆண்டுக்குள் 500பில்லியன் டாலராக அதிகரிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருந்தன.
ஆனால் ஆறு மாதங்கள் கழித்து, இந்த உறவு மிக மோசமான நிலையை எட்டியிருப்பதாக தெரிகிறது.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் சரக்குகளுக்கு டிரம்ப் மொத்தமாக 50% வரிகள் விதித்துள்ளார்.
இதை தவிர சீனா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை நிறுவன உறுப்பினர்களாக கொண்டுள்ள பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிப்பதற்காக 10% வரி இந்தியா மீது விதிக்கப்படும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
முதலில் டிரம்ப் இந்திய சரக்குகள் மீது 25% வரி விதித்திருந்தார். பிறகு புதன்கிழமை, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக மேலும் 25% வரியை அறிவித்தார். இதனை இந்தியா, “நியாயமற்ற” செயல் என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த வாரம்தான், டிரம்ப் இந்திய பொருளாதாரத்தை “வீழ்ச்சியடையும்” பொருளாதாரம் என்று குறிப்பிட்டு பேசினார்.
கடந்த இருபது ஆண்டுகளாக இரு நாடுகளிலும் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் முயற்சிகள், இருபுறம் வழங்கப்பட்ட ஆதரவு மற்றும் உலகளாவிய பிரச்னைகளில் ஒருமித்த கருத்து ஆகியவற்றின் காரணமாக மேலும் மேலும் வலுவடைந்து வந்த உறவில் இது ஓர் அதிர்ச்சியூட்டும் தலைகீழ் மாற்றமாகும்.
கடந்த சில வாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான உடனடி வர்த்தக ஒப்பந்தத்துக்கான நேர்மறை சமிக்ஞைகள் இந்தியாவில் இருந்தும், அமெரிக்காவில் இருந்தும் வந்தன. ஆனால் இப்போது அது மிக சிரமமாக இருக்கும் என்று தெரிகிறது.
பட மூலாதாரம், Andrew Harnik/Getty
எங்கு தவறு நடந்தது?
தொடர்ச்சியான தவறான நடவடிக்கைகள், பெருமை பேசுதல், புவிசார் அரசியல் மற்றும் உள்நாட்டு அரசியல் அழுத்தம் ஆகியவை பேச்சுவார்த்தைகளை முறித்ததாகத் தெரிகிறது.
டிரம்பின் வசைமொழிகளுக்கு இந்தியா இதுவரை பதிலளிப்பதில் கட்டுப்பாடுகளுடன் இருந்து வந்துள்ளது. ஏனெனில் இறுதியில் இப்படியான ராஜதந்திரம் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தைப் பாதுகாக்க உதவும் என்று இந்தியா நம்புகிறது. ஆனால் டிரம்பின் நிர்வாகத்தில், எந்த உத்தரவாதமும் கிடையாது.
தொடக்கூடாத புள்ளிகளாக இந்தியா கருதும் பல விசயங்களில் டிரம்ப் கருத்து கூறி வந்துள்ளார். அதில் மிக முக்கியமானது இந்தியாவையும் அதன் எதிரி நாடான பாகிஸ்தானையும் ஒரே அளவுகோலில் வைத்து டிரம்ப் பேசியது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு கசப்பான மோதல் நடைபெற்ற சில வாரங்களிலேயே பாகிஸ்தான் ராணுவ தலைவர் அசீம் முனீரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்தளித்தார் டிரம்ப்.
பிறகு பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திட்டார். அதில் பாகிஸ்தானுக்கு சாதகமான வகையில் 19% வரிகள் மட்டுமே விதிக்கப்பட்டன. மேலும் பாகிஸ்தானின் எண்ணெய் வளங்களை மேம்படுத்தும் வகையிலும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஒரு நாள் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எண்ணெய் விற்கக்கூடும் என்று சொல்லும் அளவுக்கு டிரம்ப் சென்றார்.
இந்தியாவுக்கு எரிச்சல் தரும் மற்றொரு விசயம், இந்தியா பாகிஸ்தான் இடையில் தானே சண்டை நிறுத்தத்தை கொண்டுவந்ததாக டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறிக்கொள்வது.
காஷ்மீர் குறித்து பாகிஸ்தானுடனான தனது மோதலை இந்தியா எப்போதும் தனது பிரச்னையாகவே பார்க்கிறது. இதில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை இந்தியா எப்போதும் எதிர்த்துள்ளது.
பெரும்பாலான உலகத் தலைவர்கள் இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாட்டை புரிந்துக் கொண்டவர்களாகவே இருந்துள்ளனர். முதல் முறை அதிபராக இருந்த போது டிரம்பும் அப்படிதான் இருந்தார். ஆனால் இனியும் அப்படி இல்லை.
“எந்த நாடும் மத்தியஸ்தம் செய்யவில்லை” என்று மோதி நாடாளுமன்றத்தில் கூறிய பிறகும், டிரம்ப் தனது கூற்றை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
மோதி டிரம்ப் அல்லது அமெரிக்கா என்று குறிப்பிடவில்லை, ஆனால் வெள்ளை மாளிகைக்கு தலைவணங்கக் கூடாது என்று அவர் மீது உள்நாட்டு அரசியல் அழுத்தம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
“இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு பின்பு அமெரிக்காவின் உயரிய மட்டத்தில் பாகிஸ்தானுடன் உறவுக் கொண்டிருக்கும் நேரத்தில் இவை எல்லாம் நடப்பது இந்திய அரசுக்கும், மக்களுக்கும் மிகவும் எரிச்சலூட்டுவதாக இருக்கும். அமெரிக்காவை ஒரு நம்பத்தகுந்த கூட்டளியாக கருத முடியாது என்று இந்தியாவில் சிலர் கூறி வரும் கருத்தை மேலும் கூர்மையாக்குவதாகவே இந்த நிகழ்வுகள் அமையும்” என்று தெற்கு ஆசிய நிபுணர் மைக்கேல் குகல்மேன் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கு இருக்கும் கோபம் சில, “பனிப்போர் காலத்திலிருந்து” வருவதாக இருக்கலாம் என்றும் ஆனால் இந்த முறை அவை சமீபத்திய நிகழ்வுகள் மூலம் தீவிரமடைந்துள்ளன என்றும் அவர் கூறுகிறார்.
தேசியவாத விவகாரங்களை வைத்தே மோதி அரசு நடைபெறுகிறது, எனவே இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிரான வலுவான எதிர்வினையை அரசிடமிருந்து அதன் ஆதரவாளர்கள் எதிர்ப்பார்ப்பார்கள்.
இது ஒரு இக்கட்டான சூழல், இந்தியாவுக்கு அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் வேண்டும். அதே நேரம் டிரம்பின் அழுத்தத்துக்கு படிந்து போனதாகவும் இருக்கக் கூடாது.
இந்தியா தான் கொண்டிருந்த கட்டுப்பாடுகளை மெதுவாக தளர்த்தி வருவதாக தெரிகிறது.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது குறித்து அமெரிக்காவின் கோபத்துக்கு பதில் அளித்த இந்தியா தனது “தேசிய நலனையும் பொருளாதார பாதுகாப்பையும்” உறுதி செய்ய “அனைத்து முயற்சிகளையும்” எடுக்க உறுதி பூண்டுள்ளது என கூறுகிறது.
ஆனால் கேள்வி என்னவென்றால், இந்தியாவின் விருந்தோம்பலை விரும்பிய டிரம்ப், இந்தியாவை நல்ல நாடு என்று முன்பு கூறிய டிரம்ப், தனது நம்பதகுந்த கூட்டாளிக்கு எதிராக ஏன் வசைப்பாட தொடங்கினார்.
டிரம்பின் ராஜதந்திர உத்தியா?
சில நிபுணர்கள், அமெரிக்காவுக்கு சாதகமான வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான உத்தியாக இந்தியா மீது திணிக்கப்படும் அழுத்தத்தை பார்க்கின்றனர்.
“டிரம்ப் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர், பேச்சுவார்த்தைகளில் கடுமையானவர். அவரது பாணி ராஜதந்திர ரீதியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ராஜதந்திரத்தின் மூலம் என்ன விளைவுகள் கிடைக்குமோ, அதைதான் அவர் எதிர்ப்பார்க்கிறார். எனவே அவரது நடவடிக்கைகளை பேச்சுவார்த்தை உத்தியின் ஒரு பகுதியாகவே நான் பார்க்கிறேன்” என்று இந்திய முன்னாள் தூதரும் தற்போது ஒபி ஜிண்டால் குலோபல் பல்கலைகழக பேராசிரியருமான ஜிதேந்திர நாத் மிஸ்ரா கூறுகிறார்.
இந்தியா அமெரிக்காவுக்கு பல சலுகைகள் கொடுத்ததாக இந்திய அரசில் உள்ள ஒருவர் கூறினார்.
தொழிற்சாலை சார்ந்த சரக்குகளுக்கு வரி விலக்கு, கார் மற்றும் மதுவுக்கு படிப்படியாக வரி குறைப்பு, ஈலோன் மஸ்கின் ஸ்டார் லிங்க் இந்தியாவில் தனது நடவடிக்கைகளை தொடங்க ஒப்பந்தம் ஆகியவற்றை இந்தியா வழங்கியது என்றார்.
ஆனால் இந்தியாவுடன் வர்த்தகத்தில் உள்ள 45பில்லியன் டாலர் பற்றாக்குறையை குறைக்க இந்தியாவின் விவசாய மற்றும் பால் துறைகளில் நுழைய விரும்பியது.
ஆனால் இந்த துறைகள் மோதிக்கு தொடக் கூடாத சிவப்பு புள்ளிகளாகும்.மோதி மட்டுமல்ல எந்த இந்திய பிரதமருக்கும் இது பொருந்தும்.
இந்தியாவில் விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகள் 45% வேலைவாய்ப்புக்கு காரணமானவை. அடுத்தடுத்த வந்த அரசுகள் விவசாயிகளை மிக தீவிரமாக பாதுகாத்துள்ளன.
அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்வது இந்தியாவுக்கு சாத்தியமில்லை என்கிறார் குகல்மேன்.
“முதலில் மக்களின் கோபத்தை தணிக்க வேண்டும், அழுத்தத்துக்கு பணிய மாட்டோம் என்று தெளிவுப்படுத்த வேண்டும். இவை உள்நாட்டு அரசியல் காரணங்களுக்கு முக்கியமானதாகும்” என்கிறார் அவர்.
ரஷ்ய அதிபர் புதினுடன் டிரம்புக்கு அதிகரித்து வரும் கோபம் காரணமாகவே இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்துவதாக அவர் கருதுகிறார்.
“ரஷ்யாவுடன் வணிகம் செய்ததற்காக அபராதம் விதிப்பதன் மூலம் ரஷ்யாவை அதன் மிக முக்கியமான எண்ணெய் வாங்குபவர்களிடமிருந்து துண்டிக்க முயற்சித்து, டிரம்ப் தொடர்ந்து தனது அழுத்த தந்திரோபாயங்களை முடுக்கி விடுவதை பார்க்கிறோம்,” என்று அவர் கூறுகிறார்.
ஆனால் இந்தியா ஒரே நாளில் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட முடியாது.
பட மூலாதாரம், Bloomberg via Getty Images
இந்திய – ரஷ்யா உறவு
கச்சா எண்ணெய் பயன்பாட்டில் இந்தியா உலகில் மூன்றாவது பெரிய நாடாக உள்ளது.
2030க்குள் சீனாவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்துக்கு வந்துவிடக் கூடும். இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நடுத்தர வர்த்தகத்தின் காரணமாக அதன் ஆற்றல் தேவையும் அதிகரித்து வருகிறது என்று சர்வதேச ஆற்றல் அமைப்பு கூறுகிறது
இந்தியாவின் என்ணெய் இறக்குமதியில் 30%க்கும் மேல் ரஷ்யாவிடமிருந்து பெறப்படுகிறது. இது 2021-22 ஆண்டில் இருந்த 1% என்ற அளவை விட மிகவும் அதிகமாகும்.
ரஷ்யாவின் போருக்கு இந்தியா மறைமுகமாக உதவுவதாக மேற்குலகில் உள்ள பலர் இதனை பார்க்கின்றனர். ஆனால் இந்தியா இதனை மறுக்கிறது. ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலை எண்ணெய் வாங்குவது லட்சக் கணக்கான இந்தியர்களின் ஆற்றல் தேவையை பூர்த்தி செய்கிறது என்று கூறுகிறது.
எந்த சூழலில் நட்பு உறவு கொள்ளும் கூட்டாளியாகவே ரஷ்யாவை இந்தியா பார்க்கிறது. கடந்த கால சிக்கல்களில் இந்தியாவுக்கு எப்போதும் ரஷ்யா துணை நின்றுள்ளது. இந்திய பொது மக்களிடம் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைபாடு உள்ளது.
மேலும், இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்கும் பெரிய நாடு ரஷ்யா. எனினும் ரஷ்யாவிடமிருந்தான ஆயுத இறக்குமதி 2016-20 ஆண்டில் 55% ஆக இருந்து, 2020-25 காலக்கட்டத்தில் 36% ஆக குறைந்தது என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் கூறுகிறது.
இதற்கு காரணமான இந்தியா உள்நாட்டு உற்பத்தி அதிகரித்ததும், அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி அதிகரித்ததும் ஆகும்.
ஆனால் இந்தியாவின் பாதுகாப்பு உத்தியில் ரஷ்யாவின் பங்கை மிகைப்படுத்த முடியாது. இதை மேற்கத்திய நாடுகள் புரிந்துகொண்டன. ஏற்கெனவே நிறுவப்பட்ட விதிமுறைகளிலிருந்து முறித்துக் கொள்ள டிரம்ப் முடிவு செய்யும் வரை, யாரும் இதை கேள்விக்குள்ளாக்கவில்லை.
இதுவரை ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகள் குறித்து மேற்கத்திய நாடுகள் கவலைப்படாத வகையில் இந்தியாவில் வெற்றிகரமான ராஜதந்திரத்தை கையாள முடிந்தது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் மேலாதிக்கத்திற்கு எதிரான ஒரு பாதுகாப்பு அரணாக அமெரிக்கா நீண்டகாலமாக இந்தியாவை பார்த்து வருகிறது.
அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்கி வரும் இந்தியா குறித்து ரஷ்யா (சில நேரங்களில் தயக்கத்துடன் இருந்தாலும்) கடுமையாக எதிர்வினையாற்றியதில்லை.
ஆனால் இப்போது இந்த நிலைப்பாட்டை டிரம்ப் கேள்விக்குளாக்குகிறார். இந்தியா எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பது இந்திய-அமெரிக்க உறவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியா இதுவரை தான் பதில் அளிப்பதில் அளவுடன் இருந்து வந்துள்ளது. ஆனால் முழுமையாக பின்வாங்கவும் இல்லை. இந்தியா வெளியிட்ட அறிக்கையில், உலகளாவிய எரிசக்தி சந்தையின் ஸ்திரத்தன்மைக்காக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா தொடர்ந்து ஊக்குவித்ததாக அது கூறியது.
ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி, உரம், சுரங்கம் மற்றும் ரசாயன பொருட்களை தொடர்ந்து வாங்கி வரும் நிலையில், இந்தியா குறிவைப்பது நியாயமற்றது என்றும் இந்தியா கூறியுள்ளது.
விஷயங்கள் மோசமாகத் தோன்றினாலும், சில நிபுணர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. இந்தியாவும் அமெரிக்காவும் பல துறைகளில் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளன, அவற்றை ஒரே இரவில் பிடுங்கி எறிய முடியாது என்கின்றனர்.
விண்வெளி தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், கல்வி மற்றும் பாதுகாப்பு துறைகளில் இரு நாடுகளுக்கும் நெருக்கமாக உறவுகள் உள்ளன.
பல பெரிய இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவில் பெருமளவில் முதலீடு செய்துள்ளன. அதே போன்று பெரும்பாலான அமெரிக்க ஐடி நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வருகின்றன.
“இரு நாட்டு உறவின் அடிப்படைகள் பலவீனமடையவில்லை என்று நான் நினைக்கிறேன். டிரம்ப் 25% வரிகள் மற்றும் குறிப்பிடப்படாத அபராதங்களை அறிவித்த அதே நாளில்தான், இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு கூட்டு முயற்சியை மேற்கொண்டன. இந்தியா -அமெரிக்கா கூட்டாக உருவாக்கிய செயற்கைக்கோளை இந்திய ராக்கெட் விண்வெளிக்கு அனுப்பியது” என்று மிஸ்ரா கூறுகிறார்.
பட மூலாதாரம், NASA
டிரம்பின் கூர்மையான வார்த்தைகளுக்கு இந்தியா எப்படி பதில் அளிக்கப் போகிறது என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.
“டிரம்ப் தனது வெளியுறவுக் கொள்கை குறித்த அணுகுமுறையில் எந்தவித வருத்தமும் இன்றி பரிவர்த்தனை சார்ந்து, வணிக ரீதியாக செயல்படுகிறார். இந்தியா போன்ற நெருக்கமான கூட்டாளியை அந்நியப்படுத்தும் இப்படியான கடுமையான தந்திரங்களை பயன்படுத்துவதில் அவருக்கும் எந்த மன உறுத்தலும் இல்லை” என்று குகல்மேன் கூறுகிறார்.
ஆனால் கடந்த இருபது ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை தக்க வைக்க பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதால், இந்த கூட்டாண்மையில் நிறைய நம்பிக்கை உள்ளது என்கிறார் அவர்.
“எனவே இழந்ததை மீண்டும் பெற முடியும். ஆனால் தற்போதைய சிக்கலின் தீவிரம் காரணமாக அதற்கு நீண்ட காலம் ஆகலாம்” என்று அவர் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு