பட மூலாதாரம், AFP
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இந்த வார இறுதியில் வாஷிங்டனுக்குச் செல்கிறார். அங்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்திக்கும் போது, ஒருவரையொருவர் அன்பைப் பரிமாறிக்கொள்வர். ஆனால், அது மட்டுமே சந்திப்பின் நோக்கம் அல்ல.
டிரம்பும் மோதியும் காலப்போக்கில் நெருங்கிய உறவை உருவாக்கியுள்ளனர். இது அவர்களிடையே நடந்த உயர்நிலை சந்திப்புகள் மற்றும் பொது நிகழ்வுகளில் இருந்து தெளிவாகிறது.
2017ம் ஆண்டில் வாஷிங்டனில் நடந்த அவர்களது முதல் சந்திப்பிலிருந்து, ஹூஸ்டன் மற்றும் அகமதாபாத்தில் நடந்த மாபெரும் கூட்டங்களில் அவர்கள் இணைந்து பங்கேற்றது உட்பட பல்வேறு நிகழ்வுகளின் மூலம் அவர்களது உறவு வலுப்பெற்றுள்ளது.
ஒரே மாதிரியான அரசியல் கண்ணோட்டம் மற்றும் சீனாவை எதிர்கொள்வதில் இரு நாடுகளுக்கும் உள்ள பொதுவான கவனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, அவர்களது உறவு வலுவடைந்துள்ளது.
மேலும் இந்த கண்ணோட்டம் அமெரிக்க – இந்திய கூட்டுறவையும் பலப்படுத்தியுள்ளது.
அது மட்டுமல்ல, டிரம்ப் இந்தியாவை அடிக்கடி விமர்சித்தாலும் மோதியை விமர்சித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே மோதியின் பயணத்தின் போது, இரு தலைவர்களும் தற்போது வலுவான கூட்டணி உத்திகளுடன் உள்ள அமெரிக்க-இந்தியா கூட்டணியின் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக, டிரம்பின் அமைச்சரவையில் உள்ள பல உறுப்பினர்களையும், வர்த்தகத் தலைவர்கள் மற்றும் இந்திய-அமெரிக்க சமூகத்தை சேர்ந்தவர்களையும் மோதி சந்திக்கவுள்ளார் என அறியப்படுகின்றது.
மேலும், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா தலைவர் ஈலோன் மஸ்கையும் மோதி சந்திக்கலாம்.
இந்தியாவில் வளர்ந்து வரும் மின்சார வாகனத் துறையை அதிகரிக்க ஆர்வம் காட்டும் மோதி, இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலையை மஸ்க் திறந்தால் மகிழ்ச்சி அடைவார்.
பட மூலாதாரம், Getty Images
டிரம்ப்-மோதியின் நட்புறவு மற்றும் இருநாடு உறவுகள் பற்றிய உற்சாகமான பேச்சுகள் ஒரு உண்மையை மறைக்கக்கூடும்
அதாவது, மோதியின் வருகையின் போது, இந்த உறவின் பரஸ்பர நலன் சார்ந்த தன்மை வெளிப்படும், குறிப்பாக டிரம்ப் பல்வேறு கோரிக்கைகளுடன் தயார் நிலையில் இருப்பார்.
டிரம்பைக் குறித்து இந்திய அரசுக்கு நன்றாகத் தெரியும். மோதியின் தற்போதைய அமைச்சர்கள் பலர் அவரது முந்தைய ஆட்சிக் காலத்திலும் பணியாற்றியுள்ளனர். டிரம்பின் முதலாவது ஆட்சியின்போது, மோதி தலைமையிலான அரசு இணைந்து பணியாற்றியுள்ளது.
கடந்த மாதம் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, இந்திய அரசாங்கம் வரிகளைக் குறைப்பதற்கும், அமெரிக்காவில் ஆவணமற்றுக் குடியேறிய இந்தியர்களை திரும்ப பெற்றுக்கொள்வதற்கும், அமெரிக்க எண்ணெயை வாங்குவதற்கும் தனது விருப்பத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியா ஏற்கனவே சில வரிகளைக் குறைத்துள்ளது. அமெரிக்காவில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட ஆவணமற்ற 104 இந்தியர்ளைக் கொண்ட முதல் விமானம், கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்தது.
இந்த நடவடிக்கைகள், இந்தியாவிடம் குறிப்பிட்ட கோரிக்கைகளை டிரம்ப் முன் வைப்பதைத் தடுப்பதற்காகவும், டிரம்பின் புதிய நிர்வாகத்துடன் பதற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளன.
ஆனாலும், சமீபத்திய ஆண்டுகளில் 46 பில்லியன் டாலரை நெருங்கியுள்ள இந்தியாவுடனான அமெரிக்க சரக்கு மற்றும் சேவை வர்த்தகப் பற்றாக்குறையை மேலும் குறைக்கும் நோக்கில், கூடுதலாக வரிகளைக் குறைக்குமாறு மோதியிடம் டிரம்ப் கேட்கலாம்.
ஆனால் ஒரு தடையானது ஒரு வாய்ப்பாகவும் மாறலாம். அதாவது, இரு நாடுகளுக்கும் வரிகளைக் குறைக்கும் வகையில், ஒருங்கிணைந்த பொருளாதார ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான நேரடிப் பேச்சுக்களை தொடங்குமாறு டிரம்பிற்கு மோதி பரிந்துரை செய்யலாம்.
சமீபத்திய ஆண்டுகளில், வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்வதற்கு இந்தியாவின் விருப்பம் அதிகரித்து வருகிறது.
புதிய வர்த்தக உடன்படிக்கைகளில் கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் நிபந்தனைகளை விதித்த பைடன் நிர்வாகத்துடன் ஒப்பிடுகையில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு டிரம்ப் நிர்வாகம் அதிக விருப்பத்துடன் இருக்கலாம்.
பட மூலாதாரம், Getty Images
தொழில்நுட்ப உறவு
இன்னும் அதிகமான ஆவணமற்ற இந்தியர்களை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு மோதியிடம் டிரம்ப் கேட்கலாம்.
அமெரிக்காவில் 7,00,000-க்கும் மேற்பட்ட ஆவணமற்ற இந்தியர்கள் இருப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அதனால் இது இந்திய அரசாங்கத்திற்கு ஒரு சவாலான மற்றும் சிக்கலான பிரச்னையாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம், ஆவணமற்றுக் குடியேறிய இந்தியர்கள் கை விலங்கிடப்பட்டு அழைத்துவரப்பட்ட செய்திகள் கோபத்தைத் தூண்டிய பின்னர், நாடு கடத்தப்படும்போது அவர்கள் தவறாக நடத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய இந்திய அரசாங்கம் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுகிறது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் கூறினார்.
மேலும் அதிகமான அமெரிக்க எண்ணெயை வாங்குவதற்கு மோதிக்கு டிரம்ப் அழைப்பு விடுக்கலாம்.
2021ஆம் ஆண்டில், அமெரிக்காவின் எண்ணெய் ஏற்றுமதியில் இந்தியா முதல் இடத்தில் இருந்தது. ஆனால், யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு உலகளாவிய எண்ணெய் சந்தைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.
இந்த மாற்றங்கள், ரஷ்யாவிலிருந்து மலிவான எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க இந்தியாவுக்கு வழிவகுத்தது.
மேலும் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா எவ்வளவு எண்ணெய் வாங்க விரும்புகிறது என்பதைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக விலையும் உள்ளது.
மறுபுறம், இந்திய அணுசக்தியில் முதலீடு செய்யுமாறு டிரம்பிடம் மோதி கேட்கலாம்.
இந்தியா தனது அணுசக்தி பொறுப்பு சட்டத்தை மாற்றி, அணு எரிபொருளில் சர்வதேச முதலீட்டை ஈர்க்கும் வகையில் புதிய அணுசக்தி திட்டத்தை அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2030ஆம் ஆண்டிற்குள், தனது ஆற்றல் தேவைகளில் பாதியை பூர்த்தி செய்வதற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.
அணு எரிபொருள், புதைபடிவ எரிபொருட்களை விட தூய்மையானது. ஆனால் சூரிய மற்றும் காற்றாலை சக்தியிலிருந்து வேறுபட்டது என்பதால் இது டிரம்ப் நிர்வாகத்தை ஈர்க்காது.
மேலும் தொழில்நுட்பம் பற்றியும் இச்சந்திப்பில் விவாதிக்கப்படும். இது பைடன் காலத்தில் இருதரப்பு உறவுகளுக்கு உதவிய வேகமாக வளர்ந்து வரும் துறையாக இருந்தது.
2022ஆம் ஆண்டில் கிரிடிகல் மற்றும் எமர்ஜிங் டெக்னாலஜிஸ் (iCET) மீதான முன்முயற்சி நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இரு நாடுகளும் தங்களின் கூட்டணி உத்திக்கான ஒரு புதிய அடித்தளமாக இதனைக் கருதுகின்றனர்.
அரசு இயந்திரத்தில் சிக்கித் தவிப்பதைத் தவிர்க்க, இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களாலும் iCET நேரடியாகக் கண்காணிக்கப்பட வேண்டும். அதாவது இரு நாடுகளும் தனிப்பட்ட முறையில் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.
டிரம்ப் மற்றும் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோர் இதில் உறுதியாக இருப்பதற்கான உத்தரவாதத்தை மோதி பெறுவார். உலகளாவிய தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளில் இந்தியாவை மேலும் ஒருங்கிணைப்பதன் மூலம் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா நினைப்பதால் அவர்கள் அந்த உத்தரவாதங்களை வழங்கலாம்.
மேலும், இந்திய பணியாளர்களை அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கும் ஹெச்-1பி விசா திட்டத்தை தொடர்ந்து தக்கவைக்குமாறு மோதி டிரம்பை கேட்டுக் கொள்ளலாம்.
மிகவும் திறமையான வெளிநாட்டு ஊழியர்களுக்கான இந்த விசாக்கள், அமெரிக்காவில் உள்ள ஏராளமான இந்திய தொழில்நுட்ப ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும் சில செல்வாக்கு மிக்க டிரம்ப் ஆதரவாளர்களால் இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பட மூலாதாரம், Getty Images
உறவை வலுவாக்குமா குவாட்?
வாஷிங்டனில் மோதியின் பேச்சுவார்த்தையின்போது, மற்ற நாடுகள், குறிப்பாக இரான் குறித்தும் விவாதிக்கப்படலாம்.
இந்தியா இரானுடன் இணைந்து சாபஹார் துறைமுகம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது இரான் மற்றும் ஆப்கானிஸ்தான் வழியாக மத்திய ஆசியாவுடனான வர்த்தகம் மற்றும் இணைப்பை மேம்படுத்தும் இந்தியாவின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
ஆனால் கடந்த வாரம், இரானுக்கு எதிரான டிரம்பின் ‘அதிகபட்ச அழுத்தம்’ எனும் நடவடிக்கையை விவரிக்கும் அதிபர் குறிப்பை அமெரிக்க நிர்வாகம் வெளியிட்டது.
இது சாபஹாரில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கு, பொருளாதாரத் தடைகளில் இருந்து விலக்கு அளிப்பதை நீக்குவதை குறிக்கிறது. இதனால் இந்தியாவுக்கு என்ன விளைவு ஏற்படும் என்பது குறித்த விளக்கத்தை அமெரிக்காவிடம் மோதி கேட்கலாம்.
அமெரிக்க வெளியுற கொள்கையின் முன்னுரிமைகளான, யுக்ரேன் மற்றும் காஸா போர்களை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து மோதியின் நிலைப்பாட்டை அறிந்துக்கொள்ள டிரம்ப் முயற்சி செய்யலாம்.
போர்கள் முடிவடைவதைக் காண இந்தியா மிகவும் ஆர்வமாக உள்ளது.
யுக்ரேன் போர் குறித்த மோதியின் நிலைப்பாடு, புதினையோ அல்லது ரஷ்யாவையோ விமர்சிக்காமல் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற டிரம்பின் நிலைப்பாட்டை எதிரொலிக்கிறது.
இந்தியா ரஷ்யாவுடன் சிறப்பான உறவையும், இஸ்ரேலுடன் நெருக்கமான உறவையும் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில், மோதி மூன்றாம் தரப்பு மத்தியஸ்தராக இருக்க விரும்புகிறாரா என்பதை அறிய டிரம்ப் விரும்பலாம். ஆனால் சம்பந்தப்பட்ட நாடுகள் வேறொரு நாடு மத்தியஸ்தம் செய்வதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே மோதி ஒப்புக்கொள்வார்.
ஆனால், பேச்சுவார்த்தையின்போது சில நுட்பமான விவகாரங்கள் விவாதிக்கப்பட்டாலும், இரு தலைவர்களும் நேர்மறையான சூழலையே காட்ட விரும்புவார்கள்.
அந்த நேர்மறையான அணுகுமுறையைப் பராமரிக்க, இந்தோ-பசிபிக் குவாட் அமைப்பு சரியான தீர்வாக இருக்கும்.
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவைக் கொண்ட இந்த அமைப்பை டிரம்ப் வலுவாக ஆதரிக்கிறார் மற்றும் சீனாவை எதிர்ப்பதில் கவனம் செலுத்துகிறார்.
தனது முதல் பதவிக்காலத்தில், குவாடின் வருடாந்திர கூட்டங்களை அந்நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொள்ளும் அளவுக்கு உயர்த்தினார் டிரம்ப்.
தொடர்ந்து வந்த பைடன், குவாட் மாநாடுகளில் அந்நாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்ளும் நிலைக்கு உயர்த்தினார்.
இந்த ஆண்டு குவாட் மாநாட்டை, இந்தியா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு டிரம்புக்கு மோதி அழைப்பு விடுக்கலாம்.
அதிபர் டிரம்ப் சர்வதேச பயணங்களை பெரிதளவில் விரும்புவதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அவர் இந்தியாவுக்கு வர ஆர்வமாக இருப்பார்.
மேலும் பிரதமர் மோதியுடனான டிரம்பின் தனிப்பட்ட உறவை வலுப்படுத்தவும், வாஷிங்டனில் நடக்கவுள்ள சந்திப்பின்போது வர்த்தக பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டு, பன்முகத்தோடு உள்ள இருதரப்பு கூட்டணியை மேலும் மேம்படுத்தவும் இந்த பயணம் உதவும்.
மைக்கேல் குகல்மேன் வாஷிங்டனில் உள்ள வில்சன் மையத்தின் தெற்காசிய நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு