பட மூலாதாரம், Getty Images
மெக்ஸிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரிகளை விதித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமீபத்தில் சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியை இரு மடங்காக உயர்த்தியுள்ளார்.
ஆனால், இவை அமலுக்கு வந்த மறுநாள், மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கக் கார் உற்பத்தியாளர்களுக்கு, வரி விதிப்புகளில் இருந்து ஒரு மாத கால விலக்கு அளிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
அனைத்து எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதி மீதும் வரிகளை அவர் முன்பு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் அமெரிக்க பொருட்களுக்கு எதிராக கனடாவும் சீனாவும் வரிகளை விதித்து பதிலடி கொடுத்துள்ளன. இதனால் உலகளாவிய வர்த்தகப் போரும் விலை உயர்வும் ஏற்படக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறு செயல்படுகின்றன?
பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்த வரி விதிக்கப்படுகிறது. அதாவது, வெளிநாட்டு பொருட்களை நாட்டிற்கு கொண்டு வரும் நிறுவனங்கள் அரசுக்கு வரி செலுத்துகின்றன.
பொதுவாக, ஒரு பொருளுடைய மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வரியாக விதிக்கப்படும்.
உதாரணமாக சீனப் பொருட்களுக்கு 20 சதவீத வரி விதிக்கப்படுகின்றது என்றால், 10 டாலர்கள் மதிப்புள்ள பொருளுக்கு கூடுதலாக 2 டாலர்கள் வரி விதிக்கப்படும்.
அந்த வரியில் சில சதவீதம் அல்லது மொத்த வரியையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க நிறுவனங்கள் முடிவு செய்யலாம்.
பொதுவாகவே பிற நாடுகளைக் காட்டிலும், அமெரிக்கா குறைந்த அளவிலான இறக்குமதி வரிகளை விதித்து வந்துள்ளது.
ஆனால், டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு முறை, அதிக வரி உயர்வுக்கும், பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும்.
பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் வரி விதிப்பு முறையை ஏன் பயன்படுத்துகிறார்?
டிரம்பின் பொருளாதாரத் திட்டங்களில் வரிகள் ஒரு மையப் பகுதியாகும். வரிகள் அமெரிக்க உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் வேலைகளைப் பாதுகாக்கும், அத்துடன் வரி வருவாயை உயர்த்தி பொருளாதாரத்தை வளர்க்கும் என்று டிரம்ப் கூறுகிறார்.
2024ஆம் ஆண்டில், சீனா, மெக்ஸிகோ மற்றும் கனடாவிலிருந்து வரும் பொருட்கள், அமெரிக்காவின் மொத்த இறக்குமதியில் 40 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தன.
“சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்துவது மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த ஃபெண்டானில் உள்ளிட்ட பிற போதை பொருட்கள் நம் நாட்டிற்குள் நுழைவதை தடுப்பது குறித்து அவர்கள் அளித்த வாக்குறுதிகளுக்கு [மூன்று நாடுகளையும்] பொறுப்பேற்கச் செய்யும் வகையில் அதிபர் துணிச்சலான நடவடிக்கை எடுத்துள்ளார்” என புதிய வரிகளுக்கான திட்டங்களை டிரம்ப் முதலில் அறிவித்தபோது வெள்ளை மாளிகை தெரிவித்தது.
அதிகளவிலான போதை பொருட்களை எடுத்துக்கொள்வதால் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் ஏற்படும் ஆயிரக்கணக்கான மரணங்களுடன் ஃபெண்டானில் தொடர்புடையதாக உள்ளது.
டிரம்ப் நிர்வாகம் இதற்கான ரசாயனங்கள் சீனாவிலிருந்து வருவதாக கூறுவதுடன், மெக்ஸிகோவைச் சேர்ந்த கும்பல்கள் அவற்றை சட்டவிரோதமாக வழங்கி, கனடாவில் ஃபெண்டானில் ஆய்வகங்களை நடத்துவதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கு ஃபெண்டானில் நுழைவதில், அவரது நாட்டின் பங்களிப்பு 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார், மேலும் அதில் பெரும்பாலானவை மெக்ஸிகோவிலிருந்து வருவதாக அறியப்படுகின்றது.
சீனாவுக்கு எதிரான வரிவிதிப்பில் நடப்பது என்ன?
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீத வரி விதிப்பு நடவடிக்கை பிப்ரவரி 4 அன்று தொடங்கியது.
பின்னர், 800 டாலருக்கும் குறைவான மதிப்புள்ள ஏற்றுமதிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று டிரம்ப் கூறினார்.
பிப்ரவரி 10 அன்று சீனா தன் பங்குக்கு வரி விதித்து பதிலடி கொடுத்தது. சில அமெரிக்க வேளாண் பொருட்களுக்கான 10-15 சதவீத வரிகளை சீனா விதித்தது.
மேலும், பல்வேறு அமெரிக்க விமான போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை “நம்பிக்கையில்லா நிறுவனங்களின் பட்டியலில்” சேர்த்து, சீனா அவற்றுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மார்ச் 4 அன்று, 10 சதவீத வரியை இரட்டிப்பாக்கி 20 சதவீதமாக அதிகரித்தது அமெரிக்கா. அதனைத் தொடர்ந்து, கூடிய விரைவில் பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு அமெரிக்காவை சீனா வலியுறுத்தியது.
“அமெரிக்கா… வரிப் போர், வர்த்தகப் போர் அல்லது வேறு எந்த வகையான போரையும் தொடர்ந்து நடத்தினால், சீனா இறுதிவரை அவர்களை எதிர்த்துப் போராடும்” என்று சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் எச்சரித்தார்.
பட மூலாதாரம், Getty Images
கனடாவுக்கு எதிரான வரிகளில் என்ன நடக்கிறது?
அமெரிக்காவின் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய இரு நாடுகளின் பொருட்களுக்கு 25 சதவீத வரிகளை டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இவை முதலில் பிப்ரவரி 4 ஆம் தேதி தொடங்கவிருந்தன. ஆனால் இறுதியாக மார்ச் 4 ஆம் தேதி தொடங்கப்பட்டன.
இதற்கிடையில், கனடா எரிசக்தி இறக்குமதிகள் 10 சதவீத வரியை எதிர்கொள்கின்றன.
வரி விதிப்பு நடவடிக்கைகளின் ஒரு மாத கால தாமதம், “கனடாவுடன் இறுதிப் பொருளாதார ஒப்பந்தத்தை எட்ட முடியுமா இல்லையா” என்பதை அமெரிக்கா தெரிந்துகொள்ள அனுமதிக்கும் என்று டிரம்ப் முன்பு கூறியிருந்தார்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ , வரிகள் “மிகவும் முட்டாள்தனமான செயல்” என்று விமர்சித்தார், மேலும் டிரம்ப் “கனடாவின் பொருளாதாரத்தை முழுமையாக முடக்க திட்டமிட்டு உள்ளார். ஏனெனில் அது எங்கள் நாட்டை அமெரிக்காவுடன் இணைப்பதை எளிதாக்கும்” என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும், தனது நாடு அமெரிக்காவிலிருந்து வரும் 30 பில்லியன் கனடா டாலர் மதிப்புள்ள பொருட்களை உடனடியாக வரி விதிக்கும் என்றும், 21 நாட்களில் 125 பில்லியன் கனடா டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு வரி விதிக்கும் என்றும் அவர் கூறினார்.
அது மட்டுமின்றி, அமெரிக்கா தனது ஆற்றலை அணுகுவதையும் கனடா கட்டுப்படுத்தலாம். கனடா அமெரிக்காவிற்கு அதிக எண்ணெய் வழங்கும் நாடாகவும் 30 சதவீத மாகாணங்களுக்கு மின்சாரம் வழங்கும் நாடாகவும் உள்ளது.
மிஷகன், நியூயார்க் மற்றும் மினசோட்டா ஆகிய மூன்று அமெரிக்க மாகாணங்களுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும்போது 25 சதவீத கூடுதல் கட்டணத்தை அமல்படுத்துவதாக ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் கூறினார்.
மேலும் அமெரிக்க வரிகள் அதிகரித்தால், அந்த மாகாணங்களுக்கான கனடாவின் மின் விநியோகத்தை முற்றிலும் துண்டிப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் அவர் கூறினார்.
மெக்ஸிகோவிற்கு எதிரான வரிகளில் என்ன நடக்கிறது?
வரி விதிப்பு நடவடிக்கைகளில் அமெரிக்காவின் தொடக்க கால தாமதத்திற்குப் பிறகு, அதற்கான பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நடவடிக்கையை மெக்ஸிகோ தாமதப்படுத்தியது.
அதனையடுத்து,” குறிப்பாக ஃபெண்டானைல் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கு” 10,000 தேசிய காவலர்களை அமெரிக்க – மெக்ஸிகோ எல்லைக்கு அனுப்ப மெக்ஸிகோ அதிபர் கிளவ்டியா ஷேன்பாம் ஒப்புக்கொண்டார்.
இதற்குப் பதிலாக, மெக்ஸிகோவிற்குள் அதிக சக்தி வாய்ந்த அமெரிக்க ஆயுதங்கள் கடத்தப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை அதிகரிக்க, அமெரிக்கா ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.
டிரம்பின் வரிகள் மார்ச் 4 அன்று அமலுக்கு வந்த பிறகு பேசிய ஷேன்பாம், 25 சதவீத வரிகளை அமல்படுத்திய அமெரிக்காவின் முடிவில் “எந்த நியாயமும் இல்லை” என்று கூறினார். மேலும் மெக்ஸிகோ தனது வடக்கு அண்டை நாடுகளிடமிருந்து மரியாதையை விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.
கார் உற்பத்தியாளர்களின் வரி விலக்கு எப்படி வேலை செய்யும்?
வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கையின் கீழ், வட அமெரிக்காவில் தயாரிக்கப்படும் கார்களுக்கு ஒரு மாதத்திற்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்டா மற்றும் மெக்ஸிகோ மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள், கார் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற அச்சத்தைத் தூண்டியது.
ஏனென்றால் ஒரு வாகனம் முழுவதுமாக தயாரிக்கப்படுவதற்கு முன், அதன் பாகங்கள் பொதுவாக அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா நாட்டு எல்லைகளை பலமுறை கடக்கின்றன.
இறக்குமதி வரிகள் காரணமாக சராசரி அமெரிக்க கார் விலை 3,000 டாலர் அதிகரிக்கலாம் என நிதி ஆய்வுத்தளமான டிடி எக்கனாமிக்ஸ் தெரிவித்துள்ளது.
அந்த அறிவிப்புக்குப் பிறகு ஃபோர்டின் பங்குகள் 5 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்தன. ஜெனரல் மோட்டார்ஸ் பங்குகள் 7 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்தன.
பட மூலாதாரம், Getty Images
எஃகு மற்றும் அலுமினியத்துக்கான வரிகள் எவ்வாறு செயல்படும்?
எஃகு மற்றும் அலுமினியத்துக்கு , விதிவிலக்குகள் இல்லாமல் 25 சதவீத வரி விதிப்பு மார்ச் 12 முதல் அமலுக்கு வருகிறது என டிரம்ப் கூறினார்.
அமெரிக்கா உலகின் மிகப்பெரிய எஃகு இறக்குமதியாளராக உள்ளது. அதற்கு எஃகு வழங்கும் மூன்று முக்கிய நாடுகளாக கனடா, பிரேசில் மற்றும் மெக்ஸிகோ உள்ளன.
2024 இல் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அலுமினியத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை கனடா வழங்கியது.
வரிகள் அவற்றின் விலைகளை உயர்த்தக்கூடும் என்று எஃகு மற்றும் அலுமினியத்தைப் பயன்படுத்தி பொருட்களைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
கனடா அரசாங்கம் வரிகள் “முற்றிலும் நியாயமற்றது” என்று கூறியதுடன் விரைவான பதிலடி கொடுப்பதாகவும் உறுதியளித்தது.
டிரம்ப் 2018 ஆம் ஆண்டில், எஃகு மீது 25 சதவீதம் மற்றும் அலுமினியம் மீது 15 சதவீதம் வரிகளை, தனது முதல் பதவிக் காலத்தில் அறிவித்தார். இருப்பினும், அவர் பின்னர் ஆஸ்திரேலியா, கனடா மற்றும் மெக்ஸிகோ உள்ளிட்ட பல நாடுகளுக்கு விதிவிலக்குகளுக்கான பேச்சுவார்த்தை நடத்தினார்.
விதிவிலக்குகள் இருந்தபோதிலும், அமெரிக்க சர்வதேச வர்த்தக ஆணையத்தின்படி, வரிகள் அமெரிக்காவில் எஃகு மற்றும் அலுமினியத்தின் சராசரி விலையை முறையே 2.4 சதவீதம் மற்றும் 1.6 சதவீதம் உயர்த்தியது என அறியப்படுகின்றது.
எந்தெந்த பொருட்கள் பாதிக்கப்படும் ? விலை உயருமா?
800 டாலருக்கும் அதிகமான மதிப்பில், சீனாவிலிருந்து வரும் அனைத்துப் பொருட்களுக்கும் வரிகள் உள்ளன.
உலகம் முழுவதிலும் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து எஃகுப் பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
மெக்ஸிகோ மற்றும் கனடாவின் பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும். கனடா எரிசக்தி ஏற்றுமதியில் 10 சதவீத வரி சேர்க்கப்பட்டுள்ளது .
மெக்ஸிகோவிலிருந்து வரும் பழங்கள், காய்கறிகள் மற்றும் மதுபானங்கள் பாதிக்கப்படலாம்.
எஃகு தவிர, மரங்கள், தானியங்கள் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற கனடா பொருட்களின் விலை உயரவும் வாய்ப்புள்ளது.
மேலும் கனடா எண்ணெய் மற்றும் மின்சாரத்தின் விலை அதிகரிப்பு ஒட்டுமொத்தமாக விலைகளை உயர்த்தக்கூடும்.
2018 மற்றும் 2023 க்கு இடையில் இறக்குமதி செய்யப்பட்ட சலவை இயந்திரங்கள் மீதான அமெரிக்க வரிகள், சலவை இயந்திரங்களின் விலையை 34 சதவீதம் அதிகரித்துள்ளது எனச் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. வரிகள் காலாவதியானவுடன் விலைகள் குறைந்தன.
மெக்ஸிகோ மற்றும் கனடாவின் வரிகளுடன், சீனப் பொருட்களுக்கு மேலும் 10 சதவீத வரியை அதிகரித்திருப்பது, தினசரி வாங்கும் பொருட்களின் விலையை 0.81 சதவீதம் முதல் 1.63 சதவீதம் வரை உயர்த்தக்கூடும் என்று அட்லாண்டா மத்திய வங்கி மதிப்பிட்டுள்ளது.
டிரம்பின் புதிய வரிகள் ஒரு பரந்த வர்த்தகப் போரைத் தூண்டும் என்று சில நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதன் விளைவாக விலைகள் உயரக்கூடும்.
பட மூலாதாரம், Getty Images
பிரிட்டனும் ஐரோப்பாவும் வரி செலுத்த வேண்டுமா?
டிரம்ப் முன்பு பிபிசியுடன் பேசியபோது, பிரிட்டன் “சரியான பாதையில் இல்லை” என்று குறிப்பிட்டார், ஆனால் ஒரு தீர்வை “கொண்டுவரலாம்” என்று பரிந்துரைத்தார்.
மருந்து பொருட்கள், கார்கள் மற்றும் அறிவியல் கருவிகளை பிரிட்டன் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது.
பிரிட்டனை வரியிலிருந்து விலக்க வேண்டும், ஏனெனில் அது அங்கு விற்பதை விட அதிகமாக அமெரிக்காவிடமிருந்து வாங்குகிறது என்று பிரிட்டனின் வணிகம் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஜொனாதன் ரெனால்ட்ஸ் கூறினார்.
பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, “மிக விரைவில்” ஐரோப்பிய ஒன்றிய பொருட்கள் மீதான வரியை அறிவிப்பேன் என்று டிரம்ப் கூறினார்.
“இது பொதுவாக 25 சதவீதமாக ஆக இருக்கும், அது கார்கள் மற்றும் பிற அனைத்து பொருட்களுக்கும் இருக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.
2024 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் 213 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறையை அமெரிக்கா கொண்டிருந்தது. இதனை டிரம்ப் “ஒரு கொடுமை” என்று முன்பு விவரித்துள்ளார் .
இதற்கு பதிலளிக்கும் விதமாக, “நியாயமற்ற வரிகளுக்கு எதிராக உறுதியாகவும் உடனடியாகவும்” செயல்படுவோம் என ஐரோப்பிய ஆணையம் கூறியது.
மேலும் அமெரிக்க நிறுவனங்களான ஹார்லி டேவிட்ஸன் மற்றும் ஜேக் டேனியல்ஸ் ஆகியவை இதற்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிகளை எதிர்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு