பட மூலாதாரம், Getty Images
டிரம்பின் வரிவிதிப்பால் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள வைர வியாபாரிகள் பெரும் கவலையில் உள்ளனர்.
உலகிலேயே வைரத்தை வெட்டி, பட்டை தீட்டுவதற்கு பெயர்போன இடம் சூரத். ஆனால், இப்போது இதைச் சார்ந்து இருக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா விதித்துள்ள 50% வரி, இத்துறையில் உள்ள வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களை கவலைகொள்ள வைத்துள்ளது. வைர தொழிலில் தொடர்புடைய 25 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்படக்கூடும்.
சூரத்தின் வைரத் தொழில் அமெரிக்க ஏற்றுமதியையே நம்பியுள்ளதால், டிரம்பின் 50% வரிவிதிப்பால், இந்தியாவில் பெரிதும் பாதிப்படைந்துள்ள துறை இதுதான்.
வரி குறைக்கப்படாவிட்டால், நிறைய வியாபாரிகள் வைரத் தொழிலை விட்டு வெளியேறுவார்கள் என்றும், நிறைய பேர் வேலையை இழப்பார்கள் என்றும், இதனால் கடுமையான பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்றும் சிலர் நம்புகின்றனர்.
எனினும் மறுபுறம், இந்த வரி விதிப்பு வியாபாரத்தில் சிறிது மந்தநிலையை ஏற்படுத்தினாலும், காலப்போக்கில் நிலைமை சீராகிவிடும் என சூரத் வைரக் கூட்டமைப்பு, தெற்கு குஜராத்தின் வணிக சங்கம் போன்ற வைர தொழிற்சங்கங்கள் நம்புகின்றனர்.
இந்தியாவில் வைரத் தொழிலுக்கான தேவை இருக்கும்வரை, அமெரிக்காவிலும் வைரத்துக்கான தேவை இருக்கும் என அவர்கள் கூறுகின்றனர். அதனால்தான் மக்களும், தொழிலதிபர்களும் இப்பிரச்னைக்கு தீர்வு காண விழைகின்றனர்.
சூரத் தொழிற்சாலைகள் மீது டிரம்ப் வரிகளின் தாக்கம்
பட மூலாதாரம், Rupesh Sonwane
வைர கைவினைஞர்கள் வேலைக்கு சென்று திரும்பும் நேரம் என்பதால் சூரத் சந்தைகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் இருசக்கர வாகனங்களின் நெரிசல் வழக்கமானதுதான்.
இந்நகரில் இருக்கும் பெரும்பாலான தொழிற்சாலைகளில் 20 முதல் 200 பேர் வரை வேலை செய்கின்றனர். சில தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 500 வரை உள்ளது. சூரத்தில் இத்தகைய ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன.
சூரத்தின் கதர்காம் பகுதியில் உள்ள ஒரு வைரம் பட்டைதீட்டும் தொழிற்சாலையில், மேசைகளில் தூசி படிந்துள்ளது, மேலும் வைரங்களை பட்டை தீட்டும் கருவிகள் பல நாட்களாக பயன்படுத்தப்படவில்லை.
வெறிச்சோடிய மேஜை வரிசைகளில் ஆறு பேர் மட்டுமே வேலை செய்கின்றனர்.
“ஒரு காலத்தில் இங்கு கைவினைஞர்களின் பெரும் கூட்டம் இருந்தது. சமீபத்தில் பலர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இனி எங்களுக்கு என்ன நடக்கும் என்று கூட எங்களுக்குத் தெரியவில்லை,” என கைவினைஞர்களில் ஒருவர் கூறினார்.
சூரத்தில் உள்ள பல சிறு மற்றும் பெரிய தொழிற்சாலைகளின் நிலை இதுவாக உள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்பு, ஷைலேஷ் மங்குகியா ஒரே ஒரு பட்டைதீட்டும் கருவியுடன் பட்டறையை தொடங்கினார்.
படிப்படியாக வணிகம் வளர்ந்து, தொழிற்சாலையில் தொழிலாளர்களின் எண்ணிக்கை மூவரிலிருந்து 300 ஆக உயர்ந்தது. ஆனால், இப்போது அவரது தொழிற்சாலையில் 70 பேர் மட்டுமே உள்ளனர்.
பிபிசி குஜராத்தியிடம் பேசிய அவர், “எல்லா ஆர்டர்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. தொழிலாளர்களிடம் வேலை இல்லை என்று சொல்ல வேண்டியுள்ளது. இது மிகவும் துயரமானது, ஏனெனில் யாரை நீக்குவது, யாரை வைத்திருப்பது என்று புரியவில்லை. எல்லோரும் என் குடும்ப உறுப்பினர்களைப் போலவே உள்ளனர். ஆனால் ஆர்டர்கள் இல்லாததால் வேலை இல்லை, வேலை இல்லாததால் அவர்களுக்கு ஊதியம் வழங்க என்னிடம் பணம் இல்லை,” என கூறினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், அவரது தொழிற்சாலையில் மாதம் சராசரியாக 2,000 வைரங்கள் கையாளப்பட்டன, ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்டில் இந்த எண்ணிக்கை 300 ஆகக் குறைந்துவிட்டது. இந்த நிலை தொடர்ந்தால், தொழிற்சாலையை விரைவில் மூட வேண்டியிருக்கும் என்று மங்குகியா அஞ்சுகிறார்.
வரிகளால் ஏற்பட்ட மந்தநிலை தொழிலாளர்களை பாதிக்கத் தொடங்கியுள்ளது.
“பொதுவாக ஜன்மாஷ்டமியின் போது எங்களுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கும். இந்த முறை எங்களுக்கு 10 நாட்கள் ஊதியமில்லா விடுமுறை வழங்கப்பட்டது. இப்படி நாங்கள் எப்படி வாழ முடியும்? ஆனால் முதலாளி என்ன செய்ய முடியும், எந்த ஆர்டரும் இல்லை,” என பிபிசி குஜராத்தியிடம் பேசிய தொழிலாளி சுரேஷ் ரதோட் கூறினார்.
‘பல தொழிலாளர்களின் ஊதியம் குறைப்பு’
பட மூலாதாரம், Rupesh Sonwane
சுரேஷ் ரதோட் போன்ற பல கைவினைஞர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பல வைர வணிகர்கள் தங்கள் ஊதியம் குறைக்கப்பட்டதாகவோ அல்லது வேலையிலிருந்து நீக்கப்படவிருப்பதாகவோ புகார் அளிக்க சூரத் வைரம் பட்டைதீட்டும் தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர் பாவேஷ் டாங்கின் அலுவலகத்துக்கு வருகின்றனர்.
“பல ஊழியர்களின் ஊதியம் குறைக்கப்பட்டதாக புகார்கள் வந்துள்ளன. ஜன்மாஷ்டமியின் போது பலருக்கு ஊதியமில்லா விடுமுறை வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஊழியர்கள் 3-5 நாட்கள் வரை வீட்டிலேயே இருக்க வேண்டியிருந்தது,” என பிபிசி குஜராத்தியிடம் பேசிய அவர் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, ஆகஸ்ட் 1-க்கு முன்பே பல தொழிற்சாலைகள் பொருட்களை விரைவாக அனுப்பியதால், இப்போது புதிய ஆர்டர்கள் கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வருமானம் குறைந்து வருகிறது.
வைர ஏற்றுமதியாளர்களின் பிரச்னை
பட மூலாதாரம், Rupesh Sonwane
ஏற்றுமதியாளர்களும் நிச்சயமற்ற நிலையால் சூழப்பட்டுள்ளனர். தொழில்துறைத் தலைவர்கள் ஒரு சிறப்பு வைரப் பணிக்குழுவை உருவாக்கியுள்ளனர், இது இந்த நிலைமைக்கு தீர்வு காண முயற்சிக்கும்.
தெற்கு குஜராத் வர்த்தக மற்றும் தொழிலக சபையின் தலைவர் நிகில் மத்ராசி இது குறித்து பிபிசி குஜராத்தியிடம் பேசினார்.
“அமெரிக்க சந்தையைப் பெரிதும் நம்பியிருப்பதால், நீண்ட காலத்தில் பெரிய பாதிப்பு ஏற்படும். பழைய ஆர்டர்கள் முடிந்துவிட்டன, ஆனால் புதிய ஆர்டர்களின் எதிர்காலம் தெளிவற்றதாக உள்ளது. அரசு உடனடியாக உதவ வேண்டும்,” என அவர் கூறினார்,
பல வணிகர்கள் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் வாய்ப்புகளைத் தேடுகின்றனர், மேலும் சிலர் ‘மாற்று வழிகள்’ மூலம் அமெரிக்காவுக்கு பொருட்களை அனுப்ப முயற்சிக்கின்றனர் என்று அவர் கூறினார்.
எனினும், அவரது கூற்றுப்படி, இப்போது வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளில் புதிய சந்தைகளைத் தேட வேண்டிய தேவை உள்ளது.
சூரத்தின் வைரத் தொழிலை எவ்வாறு காப்பாற்ற முடியும்?
பட மூலாதாரம், Rupesh Sonwane
இந்த தொழிலில் உள்ள மற்றவர்கள், வரவிருக்கும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் என்று கூறுகின்றனர்.
ஜெம் அண்ட் ஜுவல்லரி எக்ஸ்போர்ட் புரோமோசன் கவுன்சிலின் (GJEPC) குஜராத் தலைவர் ஜயந்திபாய் சாவ்லியா, அமெரிக்காவை நம்பியிருப்பதை குறைத்து, மற்ற சந்தைகளை நோக்கி பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கருதுகிறார்.
“ஆர்டர்கள் கிடைக்காவிட்டால், தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பு நிச்சயமாக பாதிக்கப்படும். உண்மையான தாக்கம் வரும் மாதங்களில் தெரியவரும். இப்போது துபை, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா போன்ற சந்தைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.
“தற்போது அமெரிக்காவுக்கு செய்யப்படும் மொத்த ஏற்றுமதி சுமார் 12 பில்லியன் டாலர்கள். இதில் பாதியையாவது மற்ற நாடுகளிடமிருந்து பெற முடிந்தால், சூரத்தின் வைரத் தொழில் காப்பாற்றப்படலாம்,” என அவர் மேலும் கூறினார்.
‘அமெரிக்காவுக்கும் இந்திய வைரங்கள் தேவை’
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் திருமணங்கள் மற்றும் பிற மங்கள நிகழ்ச்சிகளில் தங்கம் பெரிய அளவில் பயன்படுத்தப்படுவதைப் போலவே, அமெரிக்காவிலும் மங்கள நிகழ்ச்சிகள் வைரங்கள் இல்லாமல் முழுமையடையாது என நிபுணர்கள் கருதுகின்றனர்.
“நாங்கள் நிதி அமைச்சகத்துடன் பேசி வருகிறோம். அமெரிக்கா இந்திய வைரங்கள் இல்லாமல் இருக்க முடியாது. உலகில் உள்ள 15 வைரங்களில் 14 குஜராத்தில் வெட்டப்பட்டு பட்டை தீட்டப்படுகின்றன. அமெரிக்கா இந்திய வைரங்கள் இல்லாமல் இருக்க முடியாது என்பதால், அங்குள்ள வணிகர்களும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு தேடி வருகின்றனர்,” என சூரத் வைர சங்கத்தின் தலைவர் ஜகதீஷ் குண்ட், பிபிசி குஜராத்தியிடம் தெரிவித்தார்.
ஜெம் அண்ட் ஜுவல்லரி எக்ஸ்போர்ட் பிரமோஷன் கவுன்சில் (GJEPC) கூற்றுப்படி, கடந்த ஆண்டு அமெரிக்கா இந்தியாவிலிருந்து 11.58 பில்லியன் டாலர் மதிப்புள்ள வைரங்கள் மற்றும் நகைகளை இறக்குமதி செய்தது. இதில் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் 5.6 பில்லியன் டாலர்கள் மதிப்புடையவை. எஞ்சியவை தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் வண்ணக் கற்கள் ஆகும்.
கடந்த ஆண்டு வரை பட்டை தீட்டப்பட்ட வைரங்களுக்கு எந்த வரியும் இல்லை, ஆனால் இப்போது உயர்த்தப்பட்ட வரிகள் முழு வணிகத்தையும் பாதித்துள்ளன.
மங்கலான எதிர்காலப் பாதை
பட மூலாதாரம், PUNIT PARANJPE/AFP via Getty Images
சூரத்தின் தொழிற்சாலைகளில் தற்போது கவலை மற்றும் குழப்பமான சூழல் நிலவுகிறது. தினக்கூலியில் வாழும் தொழிலாளர்களுக்கு ஊதியக் குறைப்பு அல்லது ஊதியமில்லா விடுமுறையில் இருப்பது கடினமாக உள்ளது.
வணிகர்கள் புதிய சந்தைகளைத் தேடுவது பற்றி பேசுகின்றனர், அதேநேரம் தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழக்கும் அச்சத்தில் உள்ளனர்.
“இங்கு இருந்த பளபளப்பு படிப்படியாக மங்கி வருகிறது… இது மீண்டும் வருமா என்று எனக்குத் தெரியவில்லை,” என கலங்கிய கண்களுடன் மங்குகியா கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு