பட மூலாதாரம், Getty Images
வெள்ளிக்கிழமை யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.
ரஷ்யா – யுக்ரேன் போர் குறித்த கேள்வியில் இருவருக்கும் இடையேயான விவாதம் சூடுபிடித்தது.
ஸெலன்ஸ்கிக்கும் டிரம்புக்கும் இடையிலான இந்த சந்திப்பு மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இருவருக்கும் இடையே வெடித்த வார்த்தைப் போரினால், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இரு அதிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையே பேசப்பட்டதாகக் கூறப்படும் உடன்பாட்டையும் அவர்களால் எட்ட முடியவில்லை.
இந்த ஒப்பந்தம் ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையில் போர் நிறுத்தத்திற்கு வழி வகுக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் சர்ச்சையுடன் முடிவடைந்த இந்த உரையாடல், தற்போது இந்த நம்பிக்கையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக கருதப்படுகின்றது.
முன்னதாக, யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி அமெரிக்காவிற்கு ஒரு ‘பெரிய ஒப்பந்தம்’ செய்ய வருவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
டிரம்பின் அறிவிப்புக்கு முன்பு, அமெரிக்காவுடன் ஒரு கனிம ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டிருந்தார் ஸெலன்ஸ்கி.
உலகத் தலைவர்கள் சொல்வது என்ன ?
பட மூலாதாரம், Getty Images
இப்போது டிரம்புக்கும் ஸெலன்ஸ்கிக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் முடிவு குறித்து உலகெங்கிலும் உள்ள தலைவர்களிடமிருந்து கருத்துக்கள் வரத் தொடங்கியுள்ளன.
பல ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் யுக்ரேனுக்கு ஆதரவளித்துள்ளனர்.
அதே வேளையில், சில அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸையும் குற்றம் சாட்டியுள்ளனர்.
“ரஷ்யா யுக்ரேனை சட்டவிரோதமாகவும் அநியாயமாகவும் தாக்கியுள்ளது” என்று கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
“மூன்று ஆண்டுகளாக, யுக்ரேன் தன்னம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் போராடியுள்ளது. ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கான அவர்களின் போராட்டம் அனைவருக்கும் முக்கியமான ஒரு போராட்டம்” என்று ட்ரூடோ தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் யுக்ரேனுக்கு கனடா தனது ஆதரவைத் தொடர்ந்து அளிக்கும் என்றும் ட்ரூடோ கூறியுள்ளார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, “ஆக்கிரமிப்பாளர் என்றால் அது ரஷ்யா, தாக்குதலுக்குள்ளான மக்கள் என்றால் அது யுக்ரேனியர்கள்” என பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோங் கூறியுள்ளார்.
டிரம்புக்கும் ஸெலன்ஸ்கிக்கும் இடையிலான விவாதம் குறித்து கேட்டபோது, ” அவர்கள் (யுக்ரேன்) தங்களின் கண்ணியத்திற்காக, சுதந்திரத்திற்காக, குழந்தைகளுக்காக மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்பிற்காக சண்டையிடுவதால் அவர்களை மதிக்கிறோம்” என்று போர்ச்சுகல் பயணத்தின் போது அவர் தெரிவித்தார்.
“மூன்றாண்டுகளுக்கு முன்னர் யுக்ரேனுக்கு உதவுவது, ரஷ்யா மீது தடைகளை விதிப்பது என நாம் சரியானதைச் செய்தோம் என நான் நினைக்கிறேன், மேலும் அதையோ தொடர்ந்து செய்யப்போகிறோம். நாம் என்றால், அமெரிக்கா, ஐரோப்பியர்கள், கனேடியர்கள், ஜப்பானியர்கள் மற்றும் பலரும். மேலும் உதவியவர்கள் அனைவருக்கும் நன்றி செலுத்த வேண்டும் மற்றும் முதலில் இருந்தே போர்க்களத்தில் இருப்பவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.” என்றும் அவர் கூறினார்.
“யுக்ரேனிய நண்பர்களே, நீங்கள் தனியாக இல்லை” என்று போலந்து அதிபர் டொனால்ட் டஸ்க் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“யுக்ரேன், ஸ்பெயின் உங்களுடன் நிற்கிறது” என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பதிவிட்டுள்ளார்.
அவரைத் தொடர்ந்து, “இந்த மோதலில் நாங்கள் யுக்ரேனின் பக்கம் இருக்கிறோம், நிலையான அமைதிக்காக நாங்கள் யுக்ரேனின் பக்கம் இருக்கிறோம்” என்று நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சனும் யுக்ரேனை ஆதரித்துள்ளார்.
“ஸ்வீடன் யுக்ரேனுடன் நிற்கிறது. நீங்கள் உங்களுக்காக மட்டுமல்ல, முழு ஐரோப்பாவின் சுதந்திரத்திற்காகவும் போராடுகிறீர்கள்” என்று தெரிவித்துள்ளார் உல்ஃப் கிறிஸ்டர்சன்.
“ரஷ்யாவின் சட்டவிரோத தாக்குதலுக்கு யுக்ரேனைக் குறை கூற முடியாது. இந்தப் போருக்கு யுக்ரேனைக் குறை கூற முடியாது. நாங்கள் யுக்ரேனுடன் இருக்கிறோம்”என்று அயர்லாந்தின் துணைப் பிரதமர் சைமன் ஹாரிஸ் பதிவிட்டுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர், டிரம்ப்புடனும் ஸெலன்ஸ்கியுடனும் பேசியுள்ளார்.
“யுக்ரேனுக்கான அவரின் (கியர் ஸ்டாமர்) ஆதரவு தொடர்கிறது. யுக்ரேனின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை மனதில் கொண்டு அமைதிக்கான வழியைக் கண்டுபிடிக்க அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார்” என்று பிரிட்டன் பிரதமரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
“ஞாயிற்றுக்கிழமை அதிபர் ஸெலன்ஸ்கி உட்பட சர்வதேச தலைவர்களைச் சந்திக்க பிரதமர் காத்திருக்கிறார்” என்றும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
அது மட்டுமின்றி, அமெரிக்கத் தலைவர்களிடமிருந்தும் எதிர்வினைகள் வரத் தொடங்கியுள்ளன.
பேச்சுவார்த்தை முற்றிலும் தோல்வியடைந்ததாகவும்,ஸெலன்ஸ்கி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, சிஎன்எனுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
மேலும், “அவர் அங்கு சென்று அத்தகைய எதிர் நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய அவசியமில்லை” என்றும் ரூபியோ தெரிவித்துளார் .
“டிரம்ப் மற்றும் வான்ஸ் மோசமான வேலைகளைச் செய்கிறார்கள்” என்றும் ” ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்கள், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காகப் போராடுவதை ஒருபோதும் நிறுத்த மாட்டார்கள்” என்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட் சபை உறுப்பினர் சக் ஷுமர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் “இது அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு மோசமான நாள்” என்று குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டான் பேகன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“சுதந்திரம், சுதந்திரமான வர்த்தகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை யுக்ரேன் விரும்புகிறது. அது மேற்கத்திய நாடுகளின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறது. ரஷ்யா நம்மையும் நமது மேற்கத்திய மதிப்புகளையும் வெறுக்கிறது. நாம் சுதந்திரத்திற்காக நிற்கிறோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்று அவர் அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஸெலென்ஸ்கி கூறியது என்ன?
பட மூலாதாரம், Reuters
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, யுக்ரேன் அமைதியை விரும்புகிறது என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார் ஸெலன்ஸ்கி.
“அமெரிக்காவிற்கு நன்றி, உங்கள் ஆதரவிற்கு நன்றி, இந்த சந்திப்பிற்கு நன்றி, அமெரிக்க அதிபர், நாடாளுமன்றம் மற்றும் அமெரிக்க மக்களுக்கு நன்றி. யுக்ரேன் அமைதியை மட்டுமே விரும்புகிறது, அதற்காக நாங்கள் பாடுபடுகிறோம்” என்று அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள்ளது.
மேலும் அமெரிக்க தொலைக்காட்சியான ஃபாக்ஸ் நியூஸுக்கும் அவர் நேர்காணல் வழங்கினார்.
அந்த நேர்காணலின் போது, உலக ஊடகங்கள் முன்னிலையில் அதிபர் அலுவலகத்தில் நடந்தது ‘சரியானதல்ல’ என்று ஸெலன்ஸ்கி கூறினார்.
இருப்பினும், இந்த நேரத்தில் டிரம்புடனான தனது உறவைக் காப்பாற்ற முடியும் என்பதில் தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துளார்.
மேலும் “இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகள் இரண்டு அதிபர்களை விட உயர்ந்தவை” என்றும் அவர் கூறினார்.
“அதனால் நான் என் மக்களுக்கும், உங்கள் மக்களுக்கும் (அமெரிக்கர்கள்) நன்றி சொல்லத் தொடங்கினேன். உங்கள் மக்கள் எங்கள் மக்களின் உயிரைக் காப்பாற்ற உதவினார்கள்” என்றார்.
மேலும் “நாங்கள் உங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்,” நடந்ததற்கு நான் வருந்துகிறேன்” என்றும் ஸெலன்ஸ்கி தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு