பட மூலாதாரம், EPA
உடனடியாக பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் டொனால்ட் டிரம்புடன் நேர்மறையான சந்திப்பை நடத்திவிட்டு, யுக்ரேனின் கனிம வளங்களை அணுக அமெரிக்காவுக்கு அனுமதியளிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை உறுதி செய்துவிட்டு, வெள்ளை மாளிகையில் இருந்து திரும்ப வொலோதிமிர் ஸெலன்ஸ்கி நினைத்தார்.
ஆனால், இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா, யுக்ரேனுக்கு அளித்த ஆதரவிற்காக ஸெலன்ஸ்கி நன்றி விசுவாசத்துடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், துணை அதிபர் ஜே.டி.வான்ஸும் அறிவித்த பிறகு ஸெலன்ஸ்கி உலக ஊடகங்கள் முன்பு குறைமதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டதைப் போல் உணர்ந்தார்.
விளாதிமிர் புதினுடன் இணைந்து போர் நிறுத்தப் பணிகளுக்காக அதிகம் உழைக்க வேண்டும் என்று யுக்ரேன் அதிபருக்கு அவரின் சக்தி வாய்ந்த கூட்டாளிகள்(அமெரிக்க அதிபர், துணை அதிபர்) பரிந்துரை செய்தனர். ஆனால், இதனை ஸெலன்ஸ்கி ஏற்கவில்லை. அவரின் இந்த நடத்தையை ‘மரியாதையற்ற செயல்’ என்று இருவரும் ஸெலன்ஸ்கியை விமர்சனம் செய்தனர்.
திட்டமிடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு முன்னதாகவே ஸெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.
இந்த வாரத்தில் இரு தரப்பாலும் பாராட்டப்பட்ட கனிம வளம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. ஸெலன்ஸ்கியின் வாகனம் அங்கிருந்து வெளியேறியதும், தன்னுடைய சமூக வலைதள பக்கமான ட்ரூத் சோசியலில் “அமைதிக்கு நீங்கள் தயாராக இருக்கும் போது மீண்டும் வாருங்கள்,” என்று பதிவிட்டார் டிரம்ப்.
வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற சந்திப்பின் போது விவாதமான நான்கு முக்கிய அம்சங்கள் என்ன?
பட மூலாதாரம், EPA
ஸெலன்ஸ்கிக்கும் வான்ஸுக்கும் இடையே ஏற்பட்ட வாதம்
சந்திப்பு ஆரம்பித்த முதல் 30 நிமிடங்கள் மரியாதை நிமித்த பேச்சுகளுடன் இனிமையாக துவங்கியது இந்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை.
ஓவல் அலுவலகத்தில் இந்த மூன்று தலைவர்களும் பேசிக் கொண்டிருந்த போது துணை அதிபர் வான்ஸ், “அமைதிக்கான, அபிவிருத்திக்கான பாதை என்பது ராஜ்ஜீய ரீதியான செயல்பாடுகளில் ஈடுபடுவதுதான்,” என்று கூறினார்.
அதன் பின்னரே இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை சர்ச்சைக்கு வழிவகுத்தது.
மேற்கொண்டு பேசிய வான்ஸ், “அந்த ராஜ்ஜீய செயல்பாடுகளில்தான் டிரம்ப் ஈடுபட்டுள்ளார்,” என்று கூறினார்.
இதனை உடனடியாக இடைமறுத்து பேசிய ஸெலன்ஸ்கி, யுக்ரேன் மீதான முழு படையெடுப்பை துவங்கும் முன்பு ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினார். 2019-ஆம் ஆண்டு போர் நிறுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்ததையும் சுட்டிக்காட்டிய அவர், ரஷ்ய அதிபர் புதினைக் குறிப்பிட்டு, “அவரை யாரும் தடுத்து நிறுத்தவில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், “எந்த ராஜ்ஜீய நடவடிக்கைகள் குறித்து நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் வான்ஸ்? என்ன கூற விரும்புகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார் ஸெலன்ஸ்கி.
இதற்கு வான்ஸ் “உங்களின் நாட்டை அழிவில் இருந்து தடுத்து நிறுத்தும் வகையிலான ராஜ்ஜீய நடவடிக்கைகள்,” என்று பதில் அளித்த போது அங்கே நிலவிய பதற்றம் வெளிப்படையாகவே தெரிந்தது.
அமெரிக்க ஊடகங்கள் முன்பு தேவையற்ற சூழலை உருவாக்கியதாகவும், ஸெலன்ஸ்கி மரியாதையின்றி நடந்து கொண்டார் என்றும் பின்னர் துணை அதிபர் குற்றஞ்சாட்டினார்.
புதினுடனான உறவை மீண்டும் ஆரம்பித்து, விரைவாக ஒரு போர் நிறுத்தத்தை அமல்படுத்தி போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்பின் அணுகுமுறையை ஆதரிக்கும் வகையில் வான்ஸ் இவ்வாறு பேசினார். இதுதான் முதலில் யுக்ரேன் அதிபர் உடனான பதற்றத்தை தூண்டியது.
பட மூலாதாரம், Getty Images
‘நாங்கள் எப்படி உணர வேண்டும் என்று நீங்கள் கூற வேண்டாம்!’
யுக்ரேன் ராணுவத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து ஸெலன்ஸ்கியிடம் வான்ஸ் கூறியபோது, ”போர்க் காலத்தில் அனைவருக்கும் பிரச்னை இருக்கும். உங்களுக்கும் கூட. ஆனால் உங்களிடம் பெருங்கடல் உள்ளதால் நீங்கள் அதை தற்போது உணரவில்லை. ஆனால் வருங்காலத்தில் நீங்களும் அதை உணர்வீர்கள்,” என்று தெரிவித்தார் ஸெலன்ஸ்கி.
அது நேரம் வரை ஸெலன்ஸ்கியும் ஜே.டி.வான்ஸுமே பேசிக் கொண்டிருந்த நிலையில் ஸெலன்ஸ்கியின் இந்த பேச்சு டிரம்பை அதிருப்தி அடையச்செய்தது. அந்த வார்த்தைப் போரில் தன்னையும் இணைத்துக் கொண்டார் டிரம்ப்.
யுக்ரேன் – ரஷ்யாவுக்கு இடையேயான போரில் தாக்குதலை ஆரம்பித்த நாட்டை கையாள்வதில் உள்ள தார்மீக ஆபத்தை டிரம்ப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார் என்று ஸெலன்ஸ்கி கூறினார்.
ரஷ்யாவை கையாளுவதில் டிரம்ப் செய்த அடிப்படை தவறு என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டியதை ஸெலன்ஸ்கியின் இந்த பேச்சும் சுட்டிக்காட்டியது.
அமெரிக்கா ரஷ்யாவைவை தனிமைப்படுத்துதலை முடித்து வைப்பதன் மூலமாகவும், விரைவான போர்நிறுத்தத்தை நாடுவதன் மூலமாகவும் டிரம்ப், புதினை தைரியப்படுத்தும், ஐரோப்பாவை வலுவிழக்க செய்யும், யுக்ரேனை ஒன்றுமில்லாமல் ஆக்கும் ஆபத்தான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என விமர்சிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இந்த போர் இரு தரப்புக்கும் இடையிலான் சண்டை. இந்த சண்டைக்கான சுமை அல்லது பழிசொல்லை இரு தரப்பும் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என டிரம்ப் இந்த போரை வகைப்படுத்த முயல்கிறார்
ஆனால் இப்படி சிந்திப்பதில் உள்ள விபரீதங்கள் குறித்து எச்சரிக்கிறார் ஸெலன்ஸ்கி. ஓவல் அலுவலகத்தில் அமர்ந்து டிரம்பை பார்த்து ஸெலன்ஸ்கி, “ரஷ்யாவை நீங்கள் திருப்திப்படுத்துங்கள். பிறகு போர் ஒன்று உங்களை நோக்கிவரும்,” என்று கூறினார்.
இந்த கருத்து டிரம்பை மிகவும் கோபப்படுத்தியது. “நாங்கள் எப்படி உணர வேண்டும் என்று கூறும் இடத்தில் நீங்கள் இல்லை,” என்று கூறும் போது டிரம்ப் மிகவும் சத்தமாக பேசினார்.
“உங்களுக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை. நீங்கள் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறீர்கள்,” என்று கூறினார் டிரம்ப்.
டிரம்புக்கு எதிராக ஸெலன்ஸ்கி பேச வேண்டும் என்று நினைத்த பலருக்கும் இந்த பேச்சுவார்த்தை மகிழ்ச்சியை அளித்திருக்கக் கூடும். ஆனால் இந்த ஒரு நிகழ்வு ஐரோப்பாவின் போர் மற்றும் அமைதியின் காலத்தை தீர்மானிக்கும் ஒன்றாகவும் இருக்கக் கூடும்.
பட மூலாதாரம், Getty Images
‘நீங்கள் ஒன்றும் தனியாக இல்லை’ – டிரம்ப் பதிலடி
இந்த பேச்சுவார்த்தையின் ஒரு கட்டத்தில் ஸெலன்ஸ்கி, “போரின் ஆரம்ப காலத்தில் இருந்தே நாங்கள் தனியாகதான் இருக்கின்றோம். நாங்கள் நன்றி உணர்வோடும் இருக்கிறோம்,” என்று கூறினார்.
அமெரிக்கா மக்களின் வரிப்பணத்தை போர்கள் விழுங்கிவிடுகின்றன என்று அடிக்கடி போர் குறித்து குறிப்பிடும் டிரம்புக்கு ஸெலன்ஸ்கியின் இந்த பதில் மேலும் கோபமூட்டியது.
“நீங்கள் ஒன்றும் தனியாக இல்லை. நாங்கள் அந்த முட்டாள் அதிபர் (பைடன்) மூலமாக உங்கள் நாட்டுக்கு 350 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாக வழங்கியுள்ளோம்,” என்று டிரம்ப் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, அமெரிக்காவுக்கு நன்றி கூறினீர்களா என ஸெலன்ஸ்கியிடம் வான்ஸ் கேள்வி எழுப்பினார். மேலும் அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸெலன்ஸ்கி ஜனநாயகக் கட்சியினருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
அமெரிக்காவில் நவம்பரில் தேர்தல் நடைபெற இருப்பதற்கு சில வாரங்கள் இருக்கும்போது ஜோ பைடனின் சொந்த ஊரான பென்சில்வேனியாவில் அமைந்துள்ள ஆயுத தொழிற்சாலையை பார்வையிட்டார் ஸெலன்ஸ்கி. அதைக் குறிப்பிட்டே இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுக் கட்சியினர் இந்த பயணத்தால் கோபம் அடைந்தனர். வெற்றியைத் தீர்மானிக்கும் மாகாணம் ஒன்றில் இந்த சுற்றுப்பயணத்தை கமலா ஹாரிஸுக்கு சார்பான ஒரு பிரசார நிகழ்வாக ஸெலன்ஸ்கி மாற்றிவிட்டார் என்று குற்றம் சுமத்தினார்கள்.
வருங்கால உலக பாதுகாப்பு தொடர்பாக நடத்தப்பட்ட முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றில் அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களும் விவாதத்திற்கு வந்தன.
“நீங்கள் போர் பற்றி சத்தமாக பேசினால்…” என்று ஸெலன்ஸ்கி கூறும் போதே அவரை இடைமறித்தார் டிரம்ப்.
“அவர் ஒன்றும் சத்தமாக பேசவில்லை” என்று டிரம்ப் திருப்பி பேசினார். அவர் மிகவும் அதிருப்தியாக இருப்பது வெளிப்படையாக தெரிந்தது.
“உங்களின் நாடு மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது. நீங்கள் இதில் வெற்றி பெறப் போவதில்லை. நீங்கள் இதில் வெற்றி அடையப் போவதில்லை,” என்று டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறினார்.
“நீங்கள் இதிலிருந்து வெளியே வருவதற்கான ஒரு வாய்ப்பு எங்களால் ஏற்பட்டுள்ளது” என்றும் டிரம்ப் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
பதிலடி தந்த ஸெலன்ஸ்கி – இதனால் ஏற்பட இருக்கும் தாக்கங்கள் என்ன?
“இது மிகவும் சவாலாக இருக்கப் போகிறது,” என்று டிரம்ப் கூறினார். “இங்கு அனைத்தின் போக்கும் மாறிவிட்டதால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவது மிகவும் சவாலானதாக இருக்கப் போகிறது,” என்று கூறினார் டிரம்ப்.
அதிபரும் துணை அதிபரும் ஸெலன்ஸ்கியை கண்டித்தனர். ஸெலன்ஸ்கியின் ”நடத்தை” என அவர்கள் கருதிய விஷயம் அவர்களை மிகவும் கோபப்படுத்தியதாக தெரிகிறது.
“நன்றி என்று கூறுங்கள்,” என்று வான்ஸ் ஒரு கட்டத்தில் கூறினார். உண்மையில் உலகின் இரண்டு சக்தி வாய்ந்த தலைவர்களின் பேச்சைக் கேட்டு அதற்கு ஏற்ற வகையில் வாதிட வேண்டும் என்ற நிலையில் ஸெலன்ஸ்கி இருந்தார்.
தன்னுடைய நாட்டை படையெடுப்பில் இருந்து மூன்று ஆண்டுகள் பாதுகாத்து வருகிறார் ஸெலன்ஸ்கி. மேலும் புதின் பிரிக்க முயற்சித்த யுக்ரேன் சமூகத்தையும் அதன் அரசியல் தலைமையையும் ஒன்றாக வைத்திருக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
ஆனால், இந்த பிரதான காட்சிகளுக்கு மத்தியில் அந்த அறையில் மற்றொரு காட்சியும் இருந்தது. அமெரிக்காவுக்கான யுக்ரேன் தூதர் ஒக்ஸானா மார்கரோவா, இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்த போது, தன்னுடைய தலையில் கையை வைத்தவாறு அமர்ந்திருந்தார்..
போரில் ரஷ்யாவை துரத்த நினைக்கும் ஸெலன்ஸ்கி மற்றும் அவருக்கு இதுகாலம் உதவி வந்த ‘சூப்பர்பவர் ஸ்பான்சர்’ நாட்டுக்கும் இடையேயான ராஜ்ஜீய உறவை குறிக்கும் காட்சி இது தான்.
வெள்ளிக்கிழமை அன்று டிரம்புக்கு எதிராக ஸெலன்ஸ்கி பேசியது உண்மையில் போரில் ரஷ்யாவிடம் வீழ்வதையே குறிக்கும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு