மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி இடையில் சந்திப்பு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்று வருகிறது.
யுக்ரேன் போரை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்பது குறித்து இரு தலைவர்களும் பேச உள்ளனர்.
யுக்ரேனின் அரிய தாதுக்களை அணுக அமெரிக்காவுக்கு அனுமதி வழங்குவது குறித்த ஒப்பந்தமும் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் இந்த ஆண்டு பதவியேற்ற பிறகு இரண்டு தலைவர்களும் பரஸ்பர வார்த்தை யுத்தத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் சந்திப்பு நடந்தது.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு படையெடுப்பு தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
“சுலபமான வழியோ, கடினமான வழியோ, போர் நிறுத்த ஒப்பந்தம் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது,” என ஜனவரியில் டிரம்ப் தெரிவித்தார்.
ரஷ்ய -யுக்ரேன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஒரு ஒப்பந்தம் ஏற்படுவதற்கு ஸெலன்ஸ்கியும் வரவேற்பு தெரிவித்திருந்தாலும் பின்னர் செளதி அரேபியாவில் நடைபெற்ற போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்க – ரஷ்ய பேச்சுவார்த்தையில் யுக்ரேன் சேர்க்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்தார்.
முக்கியமான பேச்சுவார்த்தைக்கு முன்னர் ஸெலன்ஸ்கி குறித்த அமெரிக்க அதிபரில் பேச்சில் சற்று மென்மை கூடியிருந்தது, யுக்ரேனுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரே விஷயமாக இருக்கிறது.
கடந்த வாரம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு சமூக வலைதள பதிவில் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியை “ஒரு சர்வாதிகாரி” என குறிப்பிட்டது தலைப்புச் செய்தியானது.
ஸெலன்ஸ்கி “மோசமாக செயல்படுவதாகவும்”, அவர் யுக்ரேனில் தேர்தல் நடத்த மறுப்பதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.
பட மூலாதாரம், Reuters
ரஷ்யாவின் ஆட்சியில் உள்ள ”தவறான தகவல்கள் நிறைந்த பகுதியில்” டிரம்ப் வசிப்பதாக யுக்ரேன் அதிபர் கூறியிருந்தார்.
ஆனால் வியாழக்கிழமை டிரம்ப் தனது குற்றச்சாட்டுகளிலிருந்து பின்வாங்குவதாக தோன்றும் வகையில், தாம் இதைச் சொன்னதாக நம்பமுடியவில்லை எனக் கூறியதோடு, ஸெலன்ஸ்கியை மிகவும் தைரியசாலி எனவும் விவரித்தார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் மற்றும் பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் ஆகியோர் இந்த வாரத்தில் தனித்தனியாக வெள்ளை மாளிகைக்கு சென்று யுக்ரேன் யுத்தம் குறித்து பேசிவிட்டு வந்த பின்னணியில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, கடந்த ஆண்டு டிரம்ப்-ஸெலன்ஸ்கி இடையிலான சந்திப்பின்போது
யுக்ரேனின் பரந்த இயற்கை வளங்களை அணுக அமெரிக்காவிற்கு அனுமதி வழங்குவதற்கு பதிலாக யுக்ரேனுக்கு என்ன கிடைக்கும் என்பதில் தெளிவில்லை.
யுக்ரேனுக்கு படைகளை அனுப்புவதற்கோ அல்லது நேட்டோவில் சேர்ப்பதற்கோ ஒப்புதல் அளிக்க அமெரிக்கா மறுத்துவிட்டது.
உண்மையில் தொடர்ந்து ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை அமெரிக்கா குறைந்த அளவிலேனும் வழங்குவதை உறுதி செய்வதுதான் அதிபர் ஸெலன்ஸ்கி முன் உள்ள சிறந்த வாய்ப்பு.