பட மூலாதாரம், Reuters
-
- எழுதியவர், சாக்ஷி வெங்கட்ராமன்
- பதவி, பிபிசி
- எழுதியவர், க்வாஸி அசெய்டு
- பதவி, பிபிசி
- எழுதியவர், பெர்ண்ட் டிபஸ்மன் ஜூனியர்
- பதவி, பிபிசி
-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமைக்கும் புதிய நடன மண்டபத்திற்காக (Ballroom) வெள்ளை மாளிகையின் கிழக்குச் பிரிவின் சில பகுதிகள் இடிக்கப்பட்டுள்ளன.
கட்டுமானப் பணியாளர்கள் திங்களன்று கிழக்குச் பிரிவில் உள்ள ஒரு மூடிய நுழைவாயில் மற்றும் ஜன்னல்களின் பெரும் பகுதிகளை இடித்தனர். இது “முழுமையாக நவீனப்படுத்தப்படுவதாக” டிரம்ப் கூறினார்.
தனது 255 மில்லியன் டாலர் (186 மில்லியன் பவுண்டுகள்) மதிப்பிலான வெள்ளை மாளிகை நடன மண்டபம் ஏற்கனவே உள்ள கட்டடத்திற்கு “அருகில்” இருக்குமே தவிர, அதை மாற்றாது என்று அதிபர் முன்பு தெரிவித்திருந்தார்.
“இது தற்போதைய கட்டடத்தில் தலையிடாது. அதற்கு அருகில் இருக்குமே தவிரத் தொடாது – மேலும் நான் மிகப்பெரிய ரசிகனாக இருக்கும் தற்போதுள்ள கட்டடத்திற்கு இது முழு மரியாதை செலுத்துகிறது,” என்று டிரம்ப் ஜூலையில் கூறினார். “இது எனக்குப் பிடித்தது. இது எனக்கு மிகவும் பிடித்த இடம். நான் அதை விரும்புகிறேன்.”
இந்தக் கட்டுமானப் பணி “மிகவும் தேவைப்படும்” நடன மண்டபத்திற்காக “தொடங்கப்பட்டுள்ளது” என்று சமூக ஊடகப் பதிவில் டிரம்ப் அறிவித்தார்.
“150 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒவ்வொரு அதிபரும் பெரிய விருந்துகள், அரசுப் பயணங்கள் போன்றவற்றுக்காக வெள்ளை மாளிகையில் ஒரு நடன மண்டபம் இருக்க வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார்கள்,” என்று அவர் எழுதினார்.
பட மூலாதாரம், BBC/Bernd Debusmann Jr
‘தேசபக்தர்கள் நிதி’
இந்தத் திட்டத்திற்கு “தாராள மனம் கொண்ட பல தேசபக்தர்களால்” தனிப்பட்ட முறையில் நிதியளிக்கப்படுவதாக அவர் கூறினார். யார் நிதியளிக்கிறார்கள் என்பது குறித்த எந்தப் பெயரையும் வெள்ளை மாளிகை வெளியிடாததால் அவர்களின் அடையாளங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
வெள்ளை மாளிகை இரண்டு நூற்றாண்டுகளாக அமெரிக்க அதிபரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லமாக இருந்து வருகிறது. கிழக்குப் பிரிவு 1902-ல் கட்டப்பட்டது. கடைசியாக 1942-ல் மாற்றியமைக்கப்பட்டது.
கிழக்குப் பிரிவின் அருகே அமெரிக்கக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட சில பெரிய கட்டுமான உபகரணங்களை கட்டடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து பிபிசி கண்டது.
கிழக்குச் பிரிவு வெள்ளை மாளிகையிலிருந்து “முற்றிலும் தனியாக” இருப்பதாக டிரம்ப் தனது பதிவில் எழுதினார், இருப்பினும் அது பிரதான கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
கிழக்குப் பிரிவின் தெற்குப் பகுதி முழுவதும் பரவியிருக்கும் மூடிய நுழைவாயில் அகற்றப்பட்டு வருவது போலத் தெரிந்தது. நூற்றுக்கணக்கான மீட்டர் தூரத்திலிருந்து பார்த்தாலும், கான்கிரீட் குப்பைகள் மற்றும் உலோகக் கம்பிகள் தெளிவாகத் தெரிந்தன.
பட மூலாதாரம், Reuters
சர்ச்சை மற்றும் வரலாற்றைப் பாதுகாத்தல்
வெள்ளை மாளிகையும் அதனுடன் இணைந்த பூங்காக்களும் தேசியப் பூங்கா சேவையால் ( என்பிஎஸ்) நிர்வகிக்கப்பட்டாலும், பொதுவாகப் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள அதிபருக்கு விரிவான அதிகாரங்கள் உள்ளன.
வெள்ளை மாளிகையில் கட்டுமானம் நடக்கும்போதெல்லாம் பொதுமக்கள் மத்தியில் கவலைகள் எழுவதுண்டு என்று என்பிஎஸ்-ன் முன்னாள் தலைமை வரலாற்றாசிரியர் ராபர்ட் கே சட்டன் பிபிசியிடம் தெரிவித்தார்.
“வெள்ளை மாளிகை கட்டப்பட்டதில் இருந்து அதில் தொடர்புடைய எதுவாக இருந்தாலும் அதைப் பற்றி எப்போதும் சர்ச்சை இருந்துள்ளது,” என்று அவர் கூறினார்.
எந்தவொரு கட்டுமானத்திற்கும் என்பிஎஸ் வழிகாட்டுதல்களையும், ஒரு கடுமையான ஆய்வு செயல்முறையையும் கொண்டுள்ளது. இதில் ஒரு திட்டத்திற்கான ஆழமான திட்டங்களை மதிப்பாய்வு செய்தல், கட்டட வடிவமைப்பாளரையும் வடிவமைப்புகளையும் சரிபார்த்தல் மற்றும் செலவுகளை மதிப்பாய்வு செய்தல் ஆகியவை அடங்கும்.
ஆனால் இந்த விஷயத்தில் அவ்வாறு செய்யப்படவில்லை என அவர் கூறினார்.
“இந்தக் கட்டடம் மிகவும் முக்கியமானது. இது உலகின் மிக முக்கியமான நிர்வாகக் கட்டடமாக கருதப்படுகிறது என்று நான் நினைக்கிறேன் – இருந்தும் இங்கு என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அது மிகவும் பொருத்தமற்றது என்று நான் நினைக்கிறேன்.”
புதிய நடன மண்டபத்தில் எத்தனை பேர் பங்கேற்கலாம் என்பதற்கான எண்ணிக்கை 600 முதல் 900 வரை பல்வேறு விதமாக கூறப்படுகிறது என்று சட்டன் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டம் குறித்து வெள்ளை மாளிகை சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் அதன் அளவு, நூற்றுக்கணக்கானவர்களுக்கான இருக்கை மற்றும் கவர்ச்சியான தங்கச் சரவிளக்குகளை உள்ளடக்கிய ஒரு புதிய உட்புற அமைப்பு ஆகியவற்றைக் காட்டும் வரைபடங்கள் உள்ளன.
கட்டுமானப் பணிகள் செப்டம்பரில் தொடங்கும் என்றும் டிரம்ப் தேசியப் பூங்கா சேவை மற்றும் அமெரிக்க ரகசிய சேவை (US Secret Service) உள்ளிட்டவற்றுடன் இந்தத் திட்டம் குறித்து விவாதித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்குத் தலைமை தாங்க கிளார்க் கன்ஸ்ட்ரக்ஷன் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், மெக்ரெரி ஆர்கிடெக்ட்ஸ் அதை வடிவமைத்ததாகவும் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த கட்டடத்திற்குத் தேவையான பாதுகாப்பு மேம்பாடுகள் மற்றும் மாற்றங்களை ரகசிய சேவை வழங்கும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
“இந்த மக்கள் இல்லத்தின் பாரம்பரிய வடிவமைப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தின் நேர்த்தியை பாதுகாத்து இந்த அழகான மற்றும் அவசியமான புதுப்பித்தலை மேற்கொள்ளும் பொறுப்பை அதிபர் டிரம்ப் எனக்கு அளித்திருப்பது எனக்கு பெருமையளிக்கிறது,” என்று மெக்ரெரி ஆர்கிடெக்ட்ஸ் தலைவர் ஜிம் மெக்ரெரி கூறினார்.
வெள்ளை மாளிகை கட்டுமானத்தில் செய்யப்படும் மாற்றங்கள் அதிபர்களைத் தாண்டி பல தலைமுறைகளைத் தாண்டி நீடிக்கும் என்பதால் எந்த மாற்றம் கொண்டு வந்தாலும் அந்த மாற்றத்திற்கு ஒரு பயன்பாடு இருப்பதையும், வெள்ளை மாளிகை தனது கம்பீரத் தோற்றத்தை தொடர்ந்து கொண்டிருப்பதையும் உறுதி செய்வதற்காகத்தான் விரிவான சீராய்வு முறை வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது என சட்டன் கூறினார்.
இந்த நடைமுறை அவசரப்படுத்தப்படுவதாகவும், நாட்டின் வரலாறுக்குப் பதிலாக டிரம்ப் மற்றும் அவரது தனிப்பட்ட பாணியின் பிரதிபலிப்பாக இருக்கும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
“இது எப்போதும் மக்கள் இல்லம் என்றே அழைக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
டிரம்ப் இந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் பல மாற்றங்களைச் செய்துள்ளார். அதில் ஓவல் அலுவலகத்தைத் தங்க அலங்காரங்களால் மீண்டும் அலங்கரித்தல் மற்றும் ரோஸ் கார்டனில் உள்ள புல்வெளியில் கான்கிரீட் போட்டு மேசைகள் மற்றும் நாற்காலிகளைச் சேர்த்தது ஆகியவை அடங்கும்.
ஒபாமா முதல் ட்ரூமன் வரை அதிபர்கள் மாற்றங்களைச் செய்துள்ளனர்
புதிய வெள்ளை மாளிகை புதுப்பிப்புத் திட்டம் உலகளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களின் பாதுகாப்பை ஆய்வு செய்யும் சர்வதேச லாப நோக்கற்ற குழுவான கட்டடக்கலை வரலாற்றாசிரியர்கள் சங்கத்தாலும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
“முன்மொழியப்பட்ட நடன மண்டபச் சேர்க்கைகள் குறித்துப் பெரும் கவலையைத் தெரிவிப்பதாக” இந்த அமைப்பு கடந்த வாரம் ஒரு அறிக்கையில் கூறியது.
இது “கடந்த 83 ஆண்டுகளில் (1942-ல் கிழக்குப் பிரிவு அதன் தற்போதைய வடிவத்தில் கட்டப்பட்டதில் இருந்து) அதன் வெளிப்புறத் தோற்றத்தில் முதல் பெரிய மாற்றமாக” இருக்கும் என்று அது குறிப்பிட்டது.
“எனவே, முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கட்டடத்தில் இத்தகைய குறிப்பிடத்தக்க மாற்றம் ஒரு கடுமையான மற்றும் கவனமான வடிவமைப்பு மற்றும் ஆய்வுக் செயல்முறையைப் பின்பற்ற வேண்டும்.”
அமெரிக்க கட்டடக் கலைஞர்கள் நிறுவனமும் கவலையை வெளிப்படுத்தி, திட்டத்தின் வெளிப்படையான ஆய்வுக்கு அழைப்பு விடுத்தது.
ஆனால் அந்த கட்டடத்தில் தனது முத்திரையைப் பதித்த முதல் அதிபர் நிச்சயமாக டிரம்ப் இல்லை.
டிரம்பிற்கு முன் அதிபராக இருந்த பராக் ஒபாமா, வெள்ளை மாளிகைத் டென்னிஸ் மைதானத்தை கூடைப்பந்து போட்டிகளையும் நடத்தக்கூடியதாக மாற்றினார்.
ரிச்சர்ட் நிக்சன் அதிபர் பதவிக்காலத்தில் வெள்ளை மாளிகையின் நீச்சல் குளம் வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் அறையாக மாற்றப்பட்டது. அதிபர்கள் ஒரு காலத்தில் நீச்சலில் ஈடுபட்ட அறையில் இப்போது வழக்கமாக செய்தியாளர் சந்திப்புகள் நடைபெறுகின்றன.
உள்ளரங்க நீச்சல் குளம் முதலில் 1933-ல் அதிபர் ஃபிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டிற்காக நிறுவப்பட்டது. அவர் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டதால், அவர் வழக்கமாக உடற்பயிற்சிக்காக நீச்சல் மேற்கொண்டார்.
அது மூடப்பட்ட பிறகு, ஜெரால்ட் ஃபோர்டு 1975-ல் ஒரு வெளிப்புற நீச்சல் குளத்தை நிறுவினார்.
அதற்கு முன், மிகப் பெரிய புதுப்பித்தல்களில் ஒன்று ஹாரி ட்ரூமன் காலத்தில் வந்தது. அவர் 1948 முதல் 1952 வரை வெள்ளை மாளிகை முழுவதுமாக அகற்றப்பட்டு மீண்டும் கட்டப்படுவதைக் கண்டார். இந்த விரிவான திட்டத்தின் போது ட்ரூமன் வெள்ளை மாளிகையிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு