அழுத்தம் கூட்டப்பட்ட காற்று, மாட்டுத்தோலை மென்மையாக்குகிறது. சீனாவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் அமெரிக்க ‘கவ்பாய்’ காலணிகள் இப்படிதான் உயிரோட்டம் தரப்பட்டு, உருவாக்கப்படுகின்றன.
காலணிகளை தைத்தல், வெட்டுதல் மற்றும் ஒட்டுதல் போன்ற அந்த தொழிற்சாலையின் இயந்திர ஒலிகள் உயர்ந்த கூரையில் பட்டு எதிரொலிக்கின்றன.
“நாங்கள் ஒரு வருடத்திற்கு ஒரு மில்லியன் ஜோடி பூட்ஸை விற்பனை செய்தோம்,” என்று 45 வயதான விற்பனை மேலாளர் பெங் கூறுகிறார். பெங் தனது முழுப் பெயரையும் வெளியிட விரும்பவில்லை.
ஆனால், அது டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வரும் வரைதான் என்கிறார் பெங்.
டிரம்பின் முதல் பதவிக் காலத்தில், உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான வர்த்தகப் போருக்கு, தொடர்ச்சியாக விதிக்கப்பட்ட வரிகள் வழிவகுத்தன.
தற்போது, டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பதால், மீண்டும் வரிகளை எதிர்கொள்ள சீன வணிகங்கள் தயாராகி வருகின்றன.
டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலம், அவருக்கும் அவரது சக தொழிலார்களுக்கும், சீனாவுக்கும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து நிச்சயமற்ற சூழல் உள்ளதாக கூறும் பெங் “எதிர்காலத்தில் நாங்கள் எந்த திசையில் செல்ல வேண்டும்?” என கேட்கிறார்.
மேற்கத்திய சந்தைகள் சீனாவின் குறிக்கோள்களைக் அறிந்து, எச்சரிக்கையாக உள்ளன. அதனால், வர்த்தகத்தை ஒரு குறிப்பிடத்தக்க பேரம் பேசும் கருவியாகப் பயன்படுத்துகின்றன.
சீனாவின் பொருளாதாரம் மந்தமடைந்து, ஏற்றுமதியை அதிகம் சார்ந்து இருப்பதால், வர்த்தகம் சீனாவுக்கு இன்னும் முக்கியமானதாக உள்ளது.
மறுபுறம், சீனப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்ற வாக்குறுதியுடன் டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்துள்ளார்.
மேலும் 10 சதவீதம் அதிக வரி விதிக்கப்படும் என அச்சுறுத்தியுள்ளார். இது பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகத்தை மறு ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளார் டிரம்ப்.
இந்த மறு ஆய்வு நடவடிக்கையால் வர்த்தகம் குறித்து சிந்திக்க சீனாவிற்கு அதிக நேரம் கிடைக்கும். அமெரிக்காவாலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும்.
அதனையடுத்து, கனடா மற்றும் மெக்ஸிகோ போன்ற அமெரிக்க நட்பு நாடுகளுக்கு எதிராக, டிரம்ப் கடுமையான விமர்சனங்களை முன் வைப்பதையும் , அதிக வரி விதிப்பதாகவும் அறியமுடிகிறது.
அதே சமயம், சீனாவுடனான வர்த்தகப் போரை டிரம்ப் இடைநிறுத்தியிருக்கலாம், ஆனால் அது எப்போது வேண்டுமானாலும் மீண்டும் தொடங்கலாம் என பலரும் நினைக்கிறார்கள்.
சீனாவை விட்டு வெளியேறும் வணிக நிறுவனங்களின் சரியான எண்ணிக்கையைக் குறிப்பிடுவது கடினமானது என்றாலும், நைக், அடிடாஸ் மற்றும் பூமா போன்ற பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே வியட்நாமுக்கு நகர்ந்துள்ளன.
சீன நிறுவனங்கள் கூட புதிய இடங்களுக்குச் சென்று, தங்கள் தயாரிப்பு முறைகளையும் வர்த்தக முறைகளையும் மாற்றி வருகின்றன. ஆனாலும் வர்த்தகத்தில் சீன ஒரு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.
அதனால், தான் பணிபுரியும் தொழிற்சாலையின் உரிமையாளர், பல போட்டியாளர்களைப் போலவே, தென்கிழக்கு ஆசியாவிற்கு தனது உற்பத்தியை நகர்த்துவது பற்றி யோசித்ததாக பெங் குறிப்பிட்டார்.
தென்கிழக்கு ஆசியாவிற்கு உற்பத்தியை நகர்த்துவது நிறுவனத்தை காப்பாற்றும். ஆனால் அப்படிச் செய்தால், அவர்களின் நீண்டகால ஊழியர்களை இழக்க நேரிடும். ஏனெனில் பெரும்பாலான ஊழியர்கள் அருகிலுள்ள நகரமான நான்டோங்கிலிருந்து வந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பணியாற்றி வருகின்றனர்.
தனது மகன் சிறுவனாக இருந்தபோதே, மனைவியை இழந்த பெங், இந்தத் தொழிற்சாலை தனக்கு ஒரு குடும்பம் போன்றது எனக் கூறுகிறார்.
“இந்த ஊழியர்களை கைவிடக்கூடாது என்பதில் எங்கள் நிறுவனத்தின் உரிமையாளர் உறுதியாக இருக்கிறார்,” என்கிறார் பெங்.
பெங், தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையைப் புரிந்துகொள்கிறார். ஆனால் அவரும் அவரது சக தொழிலாளர்களும் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு தேவையானவற்றை செய்து வருவதாக அவர் கூறுகிறார்.
ஏனெனில், 2019-ஆம் ஆண்டு வரி விதிப்பின் தாக்கத்திலிருந்து அவர்கள் இப்போது வரை மீண்டு வருகிறார்கள். அப்போது சீனாவால் தயாரிக்கப்பட்ட நுகர்வுப் பொருட்களான ஆடைகள் மற்றும் காலணிகள் மீது, நான்காவது கட்டமாக 15 சதவீத வரி விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக வரி விதிக்கப்பட்டதால், ஆர்டர்கள் குறைந்தன. அதனால் 500க்கு மேல் இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 200க்கு மேல் குறைந்துள்ளது என தொழிற்சாலையின் பாதிப்புகளை விளக்கி, காலியான பணியிடங்களை சுட்டிக்காட்டுகிறார் பெங்.
அவரைச் சுற்றியுள்ள மற்ற தொழிலாளர்கள் காலணி செய்ய பயன்படும் தோலை சரியான வடிவங்களில் வெட்டி இயந்திரங்களுக்கு அனுப்புகிறார்கள்.
அவை துல்லியமாக இருக்க வேண்டும். ஏனெனில் சிறு தவறுகள் கூட விலையுயர்ந்த தோலை அழித்துவிடக் கூடும். மேலும் அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
மறுபுறம், சில அமெரிக்க வாடிக்கையாளர்கள் வரி அச்சுறுத்தல் காரணமாக அவர்களுடன் வியாபாரம் செய்வதை நிறுத்தக்கூடும் என்பதால், தொழிற்சாலை பணத்தை சேமிக்க முயற்சிக்கிறது.
அதனால் திறமையான தொழிலாளர்களை, அத்தொழிற்சாலை இழக்க நேரிடும். தோலைத் தட்டையாக்குவது முதல் அவற்றை மெருகூட்டுவது, மற்றும் ஏற்றுமதிக்காக பேக் செய்வது வரை ஒரு ஜோடி பூட்ஸ் தயாரிக்க, அவர்களுக்கு ஒரு வாரம் வரை ஆகலாம்.
உழைப்பு மற்றும் தீவிர உற்பத்தியை நம்பியதன் மூலம் சீனா உலகின் சிறந்த உற்பத்தியாளராக உருவானது.
பொருட்கள் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, வலுவான விநியோகச் சங்கிலியின் உதவியால், விலை மலிவாகும்.
மேலும் இந்த செயல்முறை பல ஆண்டுகளாக அங்கு தொடர்ந்துவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
“சரக்குகளை சரிபார்த்து, அவற்றை தொடர்ச்சியாக விற்பனைக்கு அனுப்பி வைப்போம். அதனால் நான் மகிழ்ச்சியாக இருந்தேன்,” என்று 2015-ஆம் ஆண்டு முதல் இங்கு பணிபுரியும் பெங் கூறுகிறார்.
“ஆனால் இப்போது ஆர்டர்கள் குறைவதால், நான் அமைதியற்றும் கவலையாகவும் உணர்கிறேன்” என்று வருத்தம் தெரிவிக்கிறார் பெங்.
இந்த கவ்பாய் பூட்ஸ், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
ஜியாங்சு மாகாணத்தின் தெற்கில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இவற்றை தயாரிப்பதில் அனுபவம் உள்ளது. யாங்சே ஆற்றங்கரையில் உள்ள இந்த தொழிற்சாலைகள் ஜவுளி முதல் மின்சார வாகனங்கள் வரை பலதரப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
சீனா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிற்கு அனுப்பும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களில் இவையும் அடங்கும்.
சீனாவின் மிகப்பெரிய வர்த்தகப் கூட்டாளியாக அமெரிக்கா மாறியதால், இந்த எண்ணிக்கை காலப்போக்கில் கணிசமாக வளர்ந்தது.
ஆனால், டிரம்ப் அதிபரான பிறகு, சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதிக்கத் தொடங்கியது.
ஜோ பைடன் பதவியேற்றபோதும், பெரும்பாலான வரிகள் நீக்கப்படவில்லை. அதனையடுத்து, இரு நாட்டு வர்த்தக உறவுகள் பாதிக்கப்பட்டது.
மறுபுறம், சீனா அதிகமாக உற்பத்தி செய்வதாக குற்றம் சாட்டி, சீனாவில் இருந்து மின்சார வாகன இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரி விதித்துள்ளது. சீனாவில் மின்சார வாகன உற்பத்திக்கு அரசு மானியங்கள் அளிக்கப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ்சாட்டியது
அதன் தொடர்ச்சியாக, டிரம்பும் அந்த கருத்தை ஆதரித்தார். சீனாவின் “நியாயமற்ற” வர்த்தக நடைமுறைகள் வெளிநாட்டு போட்டியாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்துகின்றன என்று அவர் கூறினார்.
மேற்குலக நாடுகள் கூறும் இத்தகைய கருத்துக்களை, தனது வளர்ச்சியைத் தடுக்கும் முயற்சிகளாக சீனா கருதுகிறது. மேலும் வர்த்தகப் போர் ஏற்பட்டால், அதில் யாரும் வெற்றியடைய மாட்டார்கள் என்று தொடர்ச்சியாக அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
அதே சமயம், “வேறுபாடுகளை சரியாகக் கையாள்வது” குறித்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் சீனா கூறியுள்ளது.
மேலும் சீனா மீது விதிக்கப்படும் வரிகள்தான், “தனது பெரிய சக்தி” என்று விவரித்த அதிபர் டிரம்பும், நிச்சயமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புகிறார்.
டிரம்ப், தனது முதல் பதவிக் காலத்தில், வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உனைச் சந்திக்க, ஷி ஜின்பிங்கின் உதவியை நாடி சீனாவிற்கு வருகை தந்தார்.
தற்போது, அதேபோல், யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினுடன் ஒப்பந்தம் செய்ய அவருக்கு ஷி ஜின்பிங்கின் ஆதரவு தேவைப்படலாம் என நம்பப்படுகிறது.
“அந்த சூழ்நிலையில் சீனாவுக்கு அதிக அதிகாரம் உள்ளது” என்று டிரம்ப் சமீபத்தில் குறிப்பிட்டார்.
“மெக்ஸிகோ மற்றும் கனடாவிற்கு ஃபென்டனில் எனும் மருந்துப் பொருளை, சீனா அனுப்புகிறது” என்று அமெரிக்கா கருதுவதன் அடிப்படையில், 10 சதவீத வரிவிதிப்பு அச்சுறுத்தல் அமைந்துள்ளது.
எனவே, அதனைத் தடுக்க சீனா வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சீனாவுடனான பேச்சுவார்த்தையில் டிரம்ப் குறிப்பிடலாம். டிக் டாக் விற்பனைக்கு சீனாவின் ஒப்புதல் தேவைப்படும் என்பதால், அதன் உரிமையை அல்லது அதன் பயன்பாட்டின் பின்னால் உள்ள மதிப்புமிக்க தொழில்நுட்பத்தைப் விற்பது குறித்த பேச்சுவார்த்தையில் டிரம்ப் ஈடுபடலாம்.
ஒப்பந்தம் எதுவாக இருந்தாலும், அது அமெரிக்க-சீனா உறவுகளை மேம்படுத்த உதவும்.
ஆனால், ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், இரு நாடுகளுக்கிடையேயான உறவு பாதிப்படையும். மேலும் டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங்க்கு இடையே அதிக மோதல் அதிகரிக்க வழிவகுக்கும்.
ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவு பதட்டமாக உள்ளது.
சீனாவில் உள்ள அமெரிக்க வர்த்தக சபையின் வருடாந்திர கணக்கெடுப்பின்படி, அந்த கணக்கெடுப்புக்கு பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்க – சீனா உறவு மோசமடைவதைப் பற்றி கவலை கொண்டுள்ளனர் என அறியப்படுகின்றது.
சீனா மீதான டிரம்பின் மென்மையான அணுகுமுறை அவர்களுக்கு சற்று நிம்மதி அளிக்கிறது.
ஆனால், வரி அச்சுறுத்தலால், வாடிக்கையாளர்கள் சீனாவிடம் இருந்து விலகுவார்கள் என்றும், உற்பத்தி மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்பும் என்றும் டிரம்ப் இன்னும் நம்புகிறார்.
சில சீன வணிகங்கள் நகரத் தொடங்கியுள்ளன. ஆனால் அமெரிக்காவை நோக்கி அல்ல.
கம்போடியாவின் தலைநகரான ப்னோம் பென்னிலிருந்து ஒரு மணி நேர தொலைவில், அமெரிக்க நிறுவனங்களான வால்மார்ட் மற்றும் காஸ்ட்கோவிலிருந்து வரும் அதிகப்படியான ஆர்டர்களைக் கையாள புதிய தொழிற்சாலையை உருவாக்கியுள்ளார், தொழிலதிபர் ஹுவாங் ஜாடோங்.
கம்போடியாவில் உள்ள ஹுவாங் ஜாடோங்கின் இரண்டாவது தொழிற்சாலை இது. அவரது இரு தொழிற்சாலையிலும் சட்டை முதல் உள்ளாடைகள் வரை மாதத்திற்கு 5 லட்சம் ஆடைகளை உற்பத்தி செய்கின்றனர்
காட்டன் கால்சட்டைகளை ஏந்திய கம்பிகள், தானியங்கி இயந்திரத்தின் மூலம் வரிசையாக நகர்வதை நாம் காணலாம். ஒவ்வொரு நிறுத்தத்திலும் , தொழிலாளர்கள், அந்த ஆடைகளுக்கு இடுப்புப் பட்டைகளை சேர்த்து, கால்சட்டையின் கீழ் விளிம்புகளை நேர்த்தியாக தைத்து முடிக்கிறார்கள்.
‘உங்கள் தொழிற்சாலை’ எங்கு உள்ளது என்று அமெரிக்க வாடிக்கையாளர்கள் முதலில் கேட்கும் கேள்விக்கு ‘சீனாவில் இல்லை’ என்ற சரியான பதிலை வைத்திருக்கிறார் ஹுவாங்.
”சில சீன நிறுவனங்களை ‘உங்கள் உற்பத்தியை வெளிநாடுகளுக்கு மாற்றவில்லை என்றால், உங்கள் ஆர்டர்களை நான் ரத்து செய்வேன்’ என அவர்களின் வாடிக்கையாளர்கள் எச்சரித்துள்ளனர்.”
காரணம் வரிகள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு கடினமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன. ஏனென்றால், பெரும்பாலான செலவுகளை யார் ஏற்பார்கள் என்பது தெளிவாக தெரிவதில்லை. சில நேரங்களில் வாடிக்கையாளர் அதிக பணம் செலுத்துகிறார், என்கிறார் ஹுவாங்.
“உதாரணமாக வால்மார்ட்டை எடுத்துக் கொள்ளுங்கள். நான் அவர்களுக்கு ஆடைகளை 5 டாலருக்கு விற்கிறேன், ஆனால் அவர்கள் வழக்கமாக, அதை 3.5 மடங்கு அதிக விலைக்கு விற்கிறார்கள். அதிக வரியின் காரணமாக விலை அதிகரித்தால், நான் அவர்களுக்கு விற்கும் விலை 6 டாலராக உயரக்கூடும். எனவே அவர்கள் அதிலிருந்து, 3.5 மடங்கு அதிக விலைக்கு விற்றால், சில்லறை விலை உயரக்கூடும்” என்று விளக்குகிறார் அவர்
ஆனால் பொதுவாக, விநியோகஸ்தர் தான் செலவை ஏற்கிறார் என ஹுவாங் கூறுகிறார்.
அதாவது, அவரது உற்பத்தி சீனாவில் இருக்கும் பட்சத்தில், கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்பட்டால் அவரது வருமானம் 800,000 டாலராகக் (644,000 யூரோவாகக்) குறையும் என்று அவர் மதிப்பிடுகிறார்.
இத்தகைய வரி நிபந்தனைகளின் கீழ், சீனாவில் எங்களால் ஆடைகளை தயாரிக்க முடியாது” என்றும் அவர் தெரிவிக்கிறார்.
தற்போது,சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் முதல், எஃகு மற்றும் அலுமினியம் மீது 25 சதவீதம் வரை அமெரிக்கா வரி விதித்துள்ளது.
ஆனால், மின்னணு சாதனங்களான தொலைக்காட்சி மற்றும் ஐபோன்கள் உட்பட, அதிகம் விற்பனையாகும் சில பொருட்களுக்கு இப்போது வரை இந்தக் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் டிரம்ப் முன்மொழிந்துள்ள 10 சதவீத வரியால், சீனாவில் தயாரிக்கப்பட்டு, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் பாதிக்கப்படலாம்.
பொம்மைகள், தேநீர் கோப்பைகள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற பல தயாரிப்புகளுக்கும் இந்த வரி பொருந்தும்.
அது மட்டுமின்றி, டிரம்ப் முன்மொழிந்துள்ள இந்த வரிகளால், மேலும் பல தொழிற்சாலைகள் இடமாற்றம் செய்யப்படலாம் என்று ஹுவாங் குறிப்பிடுகிறார். அவரது தொழிற்சாலையை சுற்றி பல தொழிற்சாலைகள் தோன்றியுள்ளன. மேலும் ஷான்டாங், ஜெஜியாங், ஜியாங்சு மற்றும் குவாங்டாங் போன்ற ஜவுளி சீன மையங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் குளிர்கால ஜாக்கெட்டுகள் மற்றும் கம்பளி ஆடைகளைத் இங்கு தயாரிக்கின்றன என்கிறார் ஹுவாங் .
பகுப்பாய்வு குழுவான ரிசெர்ச் அண்ட் மார்கெட்ஸின் அறிக்கையின் படி, கம்போடியாவில் உள்ள சுமார் 90 சதவீத ஆடை தொழிற்சாலைகள் இப்போது சீன நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன அல்லது சீனாவுக்கு சொந்தமாக உள்ளன என அறியப்படுகின்றது.
மேலும், கம்போடியாவின் வெளிநாட்டு முதலீட்டில் பாதி, சீனாவில் இருந்து வருகிறது. கூடுதலாக, நாட்டின் 70 சதவீத சாலைகள் மற்றும் பாலங்கள் சீனா வழங்கிய கடனைப் பயன்படுத்தி கட்டப்பட்டன என்றும் அறியப்படுகின்றது.
அங்குள்ள உணவகங்கள் மற்றும் கடைகளில் உள்ள பல அடையாளங்கள் சீன மொழியிலும், கம்போடியாவின் உள்ளூர் மொழியான கெமர் மொழியிலும் உள்ளன.
சீனாவிடமிருந்து முதலீடுகளைப் பெறும் நாடு கம்போடியா மட்டுமல்ல. புதிய பட்டுப்பாதை (பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ்) திட்டத்தின் கீழ் , உலகின் பல்வேறு பகுதிகளில் சீனா அதிக அளவில் முதலீடு செய்துள்ளது.
அதன் விளைவாக, உலகளவில் சீனாவின் செல்வாக்கும் அதிகரித்து வருகிறது. அதனால், பிற நாடுகளிலும் சீனாவால் முதலீடு செய்ய முடியும்.
சீனாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளில் பாதிக்கும் மேற்பட்டவை இப்போது புதிய பட்டுப்பாதை நாடுகளில் இருந்து வருவதாகவும், அவற்றில் பெரும்பாலானவை தென்கிழக்கு ஆசியாவில் உள்ளதாகவும் சீனாவின் அரசு ஊடகம் கூறுகிறது.
இவையனைத்தும் ஒரே இரவில் நடக்கவில்லை என்று அலீஸ்பார்ட்னர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கென்னி யாவ் கூறுகிறார்.
கென்னி யாவ், வரிகளை எவ்வாறு கையாள்வது என சீன நிறுவனங்களை வழி நடத்தும் ஆலோசகராக உள்ளார்.
டிரம்பின் முதல் பதவிக் காலத்தில், பல சீன நிறுவனங்கள் அவரது வரி அச்சுறுத்தலை சந்தேகித்ததாக அவர் பிபிசியிடம் கூறினார்.
ஆனால், வர்த்தகச் சங்கிலியுடன் தொடர்புடைய மற்ற நாடுகளுக்கும் டிரம்ப் வரிகளை நீட்டிக்கக்கலாம் என இப்போது அந்த நிறுவனங்கள் கவலைப்படுவதாகத் தெரிவித்தார் கென்னி யாவ்.
ஒருவேளை டிரம்ப் அப்படிச் செய்தால், சீன வணிகங்கள் பிற நாடுகளில் விற்பனையை விரிவுபடுத்துவது புத்திசாலித்தனமாக இருக்கும் என்று யாவ் பரிந்துரைக்கிறார்.
“உதாரணமாக, ஆப்பிரிக்கா அல்லது லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகள். அங்கு வணிகம் செய்வது மிகவும் சவாலானதாக இருந்தாலும், இந்தப் பகுதிகளை வர்த்தக நோக்கில் ஆராய்வது நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்” என்று குறிப்பிடுகிறார்.
தற்போது, அமெரிக்கா முதலில் தனது சொந்த நலன்களில் கவனம் செலுத்துவதால், தன்னை ஒரு நிலையான வர்த்தக கூட்டாளியாக காட்ட, சீனா கடுமையாக உழைத்து வருகிறது.
இந்த உத்தி நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகளும் உள்ளன.
சிங்கப்பூரில் உள்ள ஐசியாஸ் யூசோஃப்-இஷாக் சிந்தனைக் குழுவின் ஆய்வின்படி, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகள் வர்த்தகம் செய்ய, அமெரிக்காவை விட சீனாவை அதிகளவில் தேர்ந்தெடுக்கின்றன என அறியப்படுகின்றது.
உற்பத்தி வெளிநாடுகளுக்குச் சென்றாலும், அதன் லாபம் இன்னும் சீனாவுக்குப் கிடைக்கிறது.
கம்போடியாவில் உள்ள ஹுவாங்கின் தொழிற்சாலைகளில் ஆடைகளைத் தயாரிக்கப் பயன்படும் பொருட்களில் அறுபது சதவீதம் சீனாவில் இருந்து வருகிறது.
சோலார் பேனல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் போன்ற உயர்தர பொருட்களின் உற்பத்தியில், சீனா அதிக முதலீடு செய்வதால் ஏற்றுமதிகள் சிறப்பாக செயல்படுகின்றன.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், சீனாவின் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஏறக்குறைய 6 சதவீதம் அதிகரித்ததைத் தொடர்ந்து, 992 பில்லியன் டாலர் வர்த்தக உபரியை, சீனா பதிவு செய்தது.
ஆனாலும், சீனாவின் ஜியாங்சு மற்றும் கம்போடியாவில் உள்ள சீன வணிகங்கள் நிச்சயமற்ற மற்றும் கொந்தளிப்பான காலத்திற்கு தயாராகி வருகின்றன.
மறுபுறம், அமெரிக்காவும் சீனாவும் “நியாயமான வரம்பிற்குள்” வரி வரம்புகளை வைத்திருக்கவும், வர்த்தகப் போரைத் தவிர்க்கவும் “இணக்கமான மற்றும் அமைதியான” விவாதத்தை நடத்த முடியும் என்று பெங் நம்புகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு