பட மூலாதாரம், Getty Images
மிகப்பெரிய பணக்காரருக்கும், மிகவும் சக்திவாய்ந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இடையே மோதல்கள் ஏற்படும் போது என்ன நடக்கும்?
அத்தகைய ஒரு காட்சியைத் தான் நாம் காண்கிறோம். டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈலோன் மஸ்க் இடையேயான ஒரு கருத்து வேறுபாடு இப்போது வார்த்தைப் போராக மாறியுள்ளது. இருவருமே, தங்களுக்கான சொந்த சமூக ஊடக தளங்களை வைத்திருப்பதால் பரஸ்பரம் எதிர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
பல டிரில்லியன் டாலர் வரி விலக்குகள் மற்றும் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும் டிரம்பின் பட்ஜெட் மசோதாவால் ‘ஏமாற்றம்’ அடைந்ததாக ஈலோன் மஸ்க் அண்மையில் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, மே மாத இறுதியில், அதிபர் டொனால்ட் டிரம்பின் செலவுக் குறைப்பு பணிக்குழுவை (டோஜ்- DOGE) வழிநடத்தும் தனது பதவிக்காலம் ‘முடிவுக்கு வருகிறது’ என்று ஈலோன் மஸ்க் தெரிவித்தார்.
பின்னர் தனது எக்ஸ் தளத்தில், டோஜ் துறையை வழிநடத்த வாய்ப்பு அளித்தமைக்காக டிரம்புக்கு நன்றி தெரிவித்து, ‘சிறப்பு அரசாங்க ஊழியர்’ எனும் பொறுப்பிலிருந்து வெளியேறினார்.
ஆனால், டிரம்பின் பட்ஜெட் மசோதாவை விமர்சித்திருந்த நிலையில், மஸ்க் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன் பிக் பியூட்டிஃபுல் பில் (One big beautiful bill) எனப்படும் அந்த மசோதா டிரம்ப் நிறைவேற்ற நினைக்கும் முக்கியமான மசோதாவாகும்.
அதன் பிறகு, அந்த மசோதா குறித்தும், டிரம்ப் குறித்தும் பல விமர்சனங்களை முன்வைத்தார் மஸ்க். இந்த மோதல் நேற்று (ஜூன் 5) உச்சக்கட்டத்தை எட்டியது.
டிரம்ப் மிரட்டலுக்கு மஸ்கின் பதிலடி என்ன?
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அரசாங்கத்துடனான மிகப்பெரிய வணிக ஒப்பந்தங்கள் ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் திட்டத்திற்கு உயிர்நாடியாக உள்ளன. இப்போது அவற்றை ரத்து செய்யப் போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
“நமது பட்ஜெட்டில் பில்லியன்கணக்கான டாலர்கள் பணத்தை மிச்சப்படுத்துவதற்கான எளிதான வழி, ஈலோனின் அரசாங்க மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாகும்” என்று டிரம்ப் தனது சொந்த சமூக ஊடக வலைத்தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளார்.
டிரம்ப், அமெரிக்க அரசாங்க இயந்திரத்தை மஸ்க்கிற்கு எதிராகத் திருப்பினால், அது மஸ்க்கிற்கு வேதனை தரக்கூடிய ஒரு நகர்வாக இருக்கும். இந்த மோதலைத் தொடர்ந்து வியாழக்கிழமை (ஜூன் 5) அன்று டெஸ்லாவின் பங்கு விலை 14% சரிந்தது.
இருப்பினும், இது ஒரு வழிப் பாதை அல்ல. இந்த வார்த்தை மோதல்களைத் தொடர்ந்து, டிரம்பை பதவி நீக்கம் செய்ய அழைப்பு விடுத்த மஸ்க், தனது நிறுவனங்களுக்கான நிதியைத் தடுக்க முடியுமென்றால், அதைச் செய்யுமாறு டிரம்புக்கு சவால் விடுத்தார்.
அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்ல, ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலங்களை சார்ந்துள்ளது அமெரிக்கா (நாசா).
டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக, நாசாவிற்கான தனது டிராகன் விண்கல சேவையை நிறுத்தும் பணியை துரிதப்படுத்தவிருப்பதாக மஸ்க் தெரிவித்தார்.
மஸ்க் முன் உள்ள வாய்ப்புகள் என்ன?
பட மூலாதாரம், Getty Images
டிரம்புக்கு பதிலடி தர மஸ்க்கிற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. உதாரணத்திற்கு, அடுத்த வருட தேர்தல்கள் மற்றும் முதன்மைத் தேர்தல்களில், குடியரசுக் கட்சியின் எதிர் தரப்பு வேட்பாளர்களுக்கு அவர் நிதியுதவி அளிக்கலாம்.
வியாழக்கிழமை பிற்பகலில், தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ‘ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய செய்தியை சொல்ல வேண்டிய நேரம்’ என்று பதிவிட்ட மஸ்க் – மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வெளியிடப்படாத கோப்புகளில் டிரம்பின் பெயரும் இடம்பெற்றுள்ளது எனக் கூறினார். ஆனால் தனது கூற்றுக்கு ஆதாரங்கள் எதையும் அவர் அளிக்கவில்லை.
மஸ்க்கின் கூற்றுகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் ஒரு லேசான மறுப்பை மட்டுமே வழங்கினார்.
“ஒன் பிக் பியூட்டிஃபுல் மசோதாவின் மீதான ஈலோனின் அதிருப்திக்குக் காரணம், அதில் அவர் விரும்பிய கொள்கைகள் இல்லை என்பது தான். இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்” என்று கூறினார்.
டிரம்பின் ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கும் எதிரான போராட்டத்தில் மஸ்க் வெற்றி பெறாமல் போகலாம், ஆனால் டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினருக்கு தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியாக மிகப்பெரிய இழப்பை அவரால் ஏற்படுத்த முடியும்.
இதை நன்கு அறிந்த டிரம்ப், நேற்றைய நாளின் (ஜூன் 5) இறுதிக்குள் பதற்றத்தை சற்றே தணித்தார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற காவல்துறை பாராட்டு நிகழ்வில் பொதுவில் தோன்றியபோது மஸ்க் குறித்து கருத்து தெரிவிப்பதை அவர் தவிர்த்தார்.
பின்னர் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் “அவருக்கு (மஸ்க்) எதிராகத் திரும்புவதில்” தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், ஆனால் பல மாதங்களுக்கு முன்பே அரசாங்க வேலையிலிருந்து மஸ்க் ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அவர் தனது ‘ஒன் பிக் பியூட்டிஃபுல்’ மசோதா மற்றும் செலவுச் சட்டத்தை ஆதரித்து பேசுவதில் கவனம் செலுத்தினார்.
இருப்பினும், வியாழக்கிழமை நடந்த மோதல்களைத் தொடர்ந்து, ஈலோன்- டிரம்ப் இடையே மீண்டும் இயல்பான சூழல் ஏற்படலாம் என்பதை கற்பனை செய்வது கடினம்.
டிரம்ப் குற்றச்சாட்டுக்கு மஸ்க் பதில் என்ன?
பட மூலாதாரம், Getty Images
கடந்த வாரம் தொடங்கிய இந்த மோதல், புதன்கிழமை தீவிரமடைந்து, வியாழன் அன்று அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில் உச்சகட்டத்தை எட்டியது. அன்றைய தினம், விருந்தினராக வெள்ளை மாளிகைக்கு வந்திருந்த ஜெர்மனியின் அதிபர் ஃபிரீட்ரிக் மெர்ஸ் சங்கடத்துடன் மௌனமாக அமர்ந்திருந்த போது, அதிபர் டிரம்ப் ஒருவித விரக்தியுடன் பேசுவதைக் காண முடிந்தது.
தன்னுடைய ‘ஒன் பிக் பியூட்டிஃபுல்’ மசோதாவை மஸ்க் விமர்சித்தது குறித்த ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார் டிரம்ப்.
‘மஸ்க்கின் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் நிதியுதவி இல்லையென்றால் கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்றிருப்பார்’ என்ற கருத்துக்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்தார்.
மின்சார வாகனங்களுக்கான வரிச் சலுகைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான குடியரசுக் கட்சியின் அழுத்தத்தால் மஸ்க்கின் கார் நிறுவனமான டெஸ்லா பாதிக்கப்படும் என்பதே மஸ்க் தனக்கு எதிராக திரும்ப காரணம் என டிரம்ப் கூறினார்.
இதற்கு உடனடியாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிலளித்தார் மஸ்க். அவரை எக்ஸ் தளத்தில் 22 கோடி பேர் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கார் மானியங்களைப் பற்றி தனக்கு கவலையில்லை என்றும், தேசியக் கடனைக் குறைக்க விரும்புவதாகவும், அது நாட்டின் இருப்பு சார்ந்த அச்சுறுத்தல் என்றும் அவர் கூறினார்.
தனது உதவி இல்லாமல் கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்ப் மற்றும் அவரது கட்சியினர் வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“டிரம்பிற்கு நன்றியுணர்வு இல்லை” என்று அவர் விமர்சித்தார்.
பின்னர், நேற்று பிற்பகலில், ஈலோன் மஸ்க் தனது தொடர்ச்சியான எக்ஸ் தள பதிவுகள் மூலம் டிரம்புக்கு எதிரான அதிர்ச்சியூட்டும் தாக்குதல்களைத் தொடங்கினார். அதன் பிறகு தான் இந்த மோதல் தீவிரமடையத் தொடங்கியது.
மஸ்க் – டிரம்ப் சக்தி வாய்ந்த கூட்டணி பிரிந்தது எப்படி?
பட மூலாதாரம், Getty Images
மஸ்க்கும் டிரம்பும் ஒரு சக்தி வாய்ந்த ஆனால் சாத்தியமற்ற கூட்டணியை உருவாக்கினர். அதன் விளைவாக டிரம்பின் நிர்வாகத்தில் அரசின் பட்ஜெட்டைக் குறைக்கும் திட்டத்தில் ஒரு முக்கிய பதவியைப் பெற்றார் மஸ்க்.
அதிபர் டொனால்ட் டிரம்பின் செலவுக் குறைப்பு பணிக்குழுவை (DOGE) வழிநடத்தும் பொறுப்பு ஈலோன் மஸ்க்கிடம் கொடுக்கப்பட்டது. அமெரிக்க அதிபராக டிரம்பின் ‘முதல் 100 நாட்கள்’ என்ற பிரசாரத்தில் இந்த செலவுக் குறைப்பு பணிக்குழு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அது பல நிறுவனங்களை மூட வழிவகுத்தது, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
சிறந்த நண்பர்களாக டிரம்பும் மஸ்க்கும் தங்களை காட்டிக்கொண்ட போதும், இந்த இரு ஆளுமைகள் எங்கே, எப்போது வேண்டுமானாலும் மோதிக் கொள்ளக் கூடும் என்பது பற்றிய ஊகங்கள் சமீபத்தில் தான் வெளிவரத் தொடங்கின.
அந்த கணிப்புகள் தொடக்கத்தில் தவறாகத் தோன்றின. மஸ்க்கின் புகழ் குறைந்து வந்தாலும், நிர்வாகத்தில் அதிகாரிகளுடன் அவருக்கு பகைமைகள் இருந்தபோதிலும் டிரம்ப் மஸ்க்கிற்கு ஆதரவாகவே இருந்தார்.
ஒரு பிரிவு வரும் என எதிர்பார்க்கப்பட்ட ஒவ்வொரு முறையும், ஓவல் அலுவலகத்திலோ, அமைச்சரவை அறையிலோ அல்லது மார்-எ-லாகோவிற்கு அதிபர் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பயணிக்கும் போதோ மஸ்க் உடனிருப்பார்.
அமெரிக்க அரசில், மஸ்க் ஒரு “சிறப்பு அரசாங்க ஊழியர்” ஆக நியமிக்கப்பட்டிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் 130 நாட்கள் அரசு வேலையில் பணியாற்ற அவர் அனுமதிக்கப்பட்டார். ஜனவரி 20-ஆம் தேதி டிரம்ப் பதவியேற்றதிலிருந்து கணக்கிட்டால், மே மாத இறுதியில் அவரது பணிக்காலம் முடிவடைந்தது.
மஸ்க்கிற்கு ஓவல் அலுவலகத்தில் ஒரு ஆடம்பரமான ‘ஃபேர்வல்’ விழா நடத்திய டிரம்ப் வெள்ளை மாளிகைக்கான தங்கச் சாவியை பரிசளித்தார். மஸ்க் எப்போதாவது திரும்பி வரக்கூடும் என்ற குறிப்பும் வழங்கப்பட்டது.
ஆனால், இனி திரும்பி வருவதற்கான அழைப்பு வராது என்பதையும், தங்கச் சாவிக்கு பயன் இருக்காது என்பதையும் நாம் இப்போது சொல்ல முடியும்.
“ஈலோனுக்கும் எனக்கும் இடையே ஒரு சிறந்த உறவு இருந்தது,” என்று டிரம்ப் வியாழக்கிழமை கூறினார். இங்கு அவர் ‘இருந்தது’ என்ற கடந்த கால வார்த்தையை குறிப்பிட்டது முக்கியமானது.
புதன்கிழமை இரவு டிரம்ப் திடீரென அறிவித்த 12 நாடுகளுக்கான புதிய பயணக் கட்டுப்பாடுகள், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மீதான கூடுதல் தடைகள் மற்றும் முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் தொடர்பான விசாரணை ஆகியவை மஸ்க்கின் விமர்சனத்திலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்கான முயற்சிகள் என்று சிலர் கருதினர்.
மஸ்க்கின் முந்தைய விமர்சனங்களுக்குப் பிறகு, வெள்ளை மாளிகையும், அதன் ஆதரவாளர்களும் மஸ்க்கை மேலும் பகைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனர்.
பின்னர் டிரம்ப் பேசினார், அதற்குப் பிறகு மஸ்க்கிடமிருந்து எதிர்வினைகள் குவிந்தன.
அடுத்து என்ன நடக்கும்?
பட மூலாதாரம், Getty Images
இப்போது மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், இந்தப் பதற்றம் அடுத்து எந்தத் திசையில் செல்லும் என்பதுதான். ஈலோன் மஸ்க்கின் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு மத்தியில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சித் தலைவர்கள் டிரம்பின் மசோதாவை ஆதரிப்பது சற்று கடினம்.
குறிப்பாக, அவ்வாறு எதிர்ப்பவர்களுக்கு வாய்மொழியாக மட்டுமல்லாது, நிதி பாதுகாப்பையும் மஸ்க் வழங்க முடியும்.
மஸ்க் உடனான அரசாங்க ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டு வருவதாக டிரம்ப் ஏற்கனவே எச்சரித்துள்ளார்.
இருப்பினும், அவர் செலவுக் குறைப்பு பணிக்குழுவில் (DOGE) மஸ்க்கின் முன்னாள் நண்பர்களை குறிவைக்கலாம் அல்லது பைடன் அதிபராக இருந்தபோது மஸ்க்கின் நிறுவனங்களின் பரிவர்த்தனைகள் குறித்த விசாரணைகளை மீண்டும் தொடங்கலாம். தற்போது, அவருக்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன.
இதற்கிடையில், இருவருக்கும் இடையே நடந்து வரும் மோதலைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களால் எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்பதை இன்னும் தீர்மானிக்க முடியவில்லை.
மஸ்க் இதற்கு முன்பு ஜனநாயகக் கட்சிக்கு நன்கொடை அளித்தவர் என்பதைக் கருத்தில் கொண்டாலும், மிகச் சில ஜனநாயகக் கட்சி தலைவர்களே மஸ்க்கை மீண்டும் தங்கள் முகாமிற்கு வரவேற்க விரும்புகிறார்கள். ஆனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்று ஒரு பழைய பழமொழி உண்டு.
“ஆனால் இந்த விளையாட்டில் இருவருக்குமே லாபம் இல்லை” என்று ஜனநாயக கட்சியின் மூலோபாய நிபுணர் லியாம் கெர், பொலிட்டிகோ எனும் டிஜிட்டல் நாளிதழிடம் கூறினார்.
“அவர் ஜனநாயகக் கட்சியினரை நோக்கி எந்த வகையில் காய் நகர்த்தினாலும், அது குடியரசுக் கட்சியினருக்கு தீங்கு விளைவிக்கும்” என்கிறார்.
இப்போதைக்கு, ஜனநாயகக் கட்சியினர் இந்தப் பிரச்னையில் அமைதியாக இருக்க விரும்புவதாகவும், டிரம்ப்- மஸ்க் இடையிலான மோதல் தொடர்வதை அனுமதிப்பதாகவும் தெரிகிறது.
இருவருக்கும் இடையிலான இந்த கூச்சல், குழப்பம் அடங்காத வரை, அமெரிக்க அரசியலில் உள்ள மற்ற அனைத்து விஷயங்களும் இருட்டடிப்பு செய்யப்பட வாய்ப்புள்ளது.
ஆனால் இந்த மோதல் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்க முடியாது.
“டிரம்பின் அதிபர் பதவி என்பது இன்னும் மூன்றரை ஆண்டுகள் தான, ஆனால் எனக்கு இன்னும் 40 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது” என்று எக்ஸ் தளத்தில் மஸ்க் பதிவிட்டுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு