பட மூலாதாரம், DImman/Facebook
இசையமைப்பாளர் டி. இமான் இன்று (ஜனவரி 24) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
துள்ளலிசை பாடல்கள் தான் அவரின் பலம் மற்றும் அடையாளம். அந்த பாணியில் ஏகப்பட்ட பாடல்களை கொடுத்து இருக்கிறார் என்று திரையுலகில் பேசப்படும் நிலையில், ”நீங்கள் இசையமைத்த 10 துள்ளலிசை பாடல்களை வரிசைப்படுத்த முடியுமா? அந்த பாடல்கள் உருவான பின்னணி மற்றும் பாடலின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் விவரிக்க முடியுமா?” என்று பிபிசி தமிழ் சார்பில் அவரிடம் பேசினோம்.
“இதுவரை 125-க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துவிட்டேன். என் இசைப்பயணம் நிறைவாகவே செல்கிறது. இந்த ஆண்டு 4 படங்கள் வர இருக்கிறது. அதற்கான பணிகளில்தான் தீவிரமாக இருக்கிறேன்.” என்று பேசத் தொடங்கினார் இமான்.
தொடர்ந்து தன் இசையமைப்பில், தனக்கு பிடித்த பத்து துள்ளலிசை பாடல்களை பட்டியலிட்ட அவர், அவை உருவான விதம் குறித்தும் பேசினார்.
1) ‘அடிச்சு துாக்கு….அடிச்சு துாக்கு’ (விஸ்வாசம்)
பட மூலாதாரம், Lahari Music
சினிமாவுக்கு வந்த புதிதில் அஜித்துடன் எனக்கு அதிகம் பழக்கமில்லை. ஒருமுறை ஐஸ்கீரிம் கடை ஒன்றில் அவர் இருப்பதை பார்த்தேன். அவருடன் பேசலாமா? அவர் என்ன நினைப்பாரோ என தயங்கி நின்றேன். அதற்குள் அவரே என்னை பார்த்துவிட்டு அழைத்துப் பேசினார். என் படங்கள், இசைப்பணிகள் குறித்து அக்கறையாக விசாரித்தார். இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என வியந்தேன். அவருக்காக நான் இசையமைத்த முதல் படம் படம் ‘விஸ்வாசம்’. சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.
அந்த படத்தில் ரசிகர்கள் சந்தோஷத்துக்காக, அவர்களை ஆட வைக்க, கதையின் சூழலுக்கு ஏற்ப இந்த பாடலை உருவாக்கினோம். முதலில் வேறு யாரையாவது பாட வைக்கலாம் என நினைத்து, நான் டிராக் பாடிக்கொடுத்தேன். அது இயக்குனருக்கு, அஜித்துக்கு பிடிக்க, என் குரலிலே பாடல் பதிவு வந்தது. அந்த பட கதைப்படி, தமிழகத்தில் இருந்து மும்பை சென்று வசிப்பார் ஹீரோ. அங்கே ஒரு கொண்டாட்ட மனநிலையில் இந்த பாடல் வரும்.
ஆனால், கொஞ்சம் வட இந்திய டச் பாடலில் இருக்கணும் என்று முடிவெடுத்தோம். அதனால், ஆதித்யா காட்வி என்பவரையும் இணைத்து பாட வைத்தேன். அவர் பாடிய போக் ஸ்டைல் பாடலுக்கு பிளஸ் ஆனது. விவேகா பாடலை எழுதியிருந்தார்.
விஸ்வாசம் வெளியான நாளில் சென்னையில் உள்ள தியேட்டருக்கு சென்று முதல்காட்சியை ரசித்தேன். ‘அடிச்சு துாக்கு’ பாடலை ரசிகர்கள் கொண்டாடினார்கள். இன்றும் அஜித் ரசிகர்களின் விருப்பப் பாடலாக இருப்பது மகிழ்ச்சி.
விஸ்வாசம் படத்துக்காக எனக்கு தேசியவிருது கிடைத்தபோது மீண்டும் அஜித்சாரை நேரில் சந்தித்து பேசினேன். ‘கண்ணான கண்ணே பாடல்’, இந்தப் பாடல் உட்பட பல விஷயங்களை குறித்துப் பாராட்டி பேசினார் என்று கூறினார் இமான்.
2) ‘டண்டனக்கா நக்கா நக்கா நக்கா…எங்க தல எங்க தல டி ஆரு’ (ரோமியோ ஜூலியட்)
பட மூலாதாரம், SonyMusicSouthVEVO
லட்சுமணன் இயக்கத்தில் ரவி மோகன் நடித்த ‘ரோமியோ ஜூலியட்’ திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது. என்னிடம் இயக்குனர் கதை சொல்லும்போது ஹீரோ டி.ஆர் ரசிகராக வருகிறார் என்றார். அதை வைத்து ஒரு பாடல் உருவாக்கலாமா என யோசித்து டி.ஆரின் புகழ்பெற்ற டயலாக்குகளை வைத்து அந்த பாடலை உருவாக்கினோம். ரோகேஷ் பாடலை எழுதினார்.
பாடலில் டி.ஆரின் சில மேடை பேச்சுகளும் இடம் பெற்றன. அந்த சமயத்தில் இந்த பாடலுக்கு அவர் கொஞ்சம் எதிர்ப்பு தெரிவித்தார். நான் உங்கள் ரசிகன் என ரவி மோகன் விளக்கம் அளித்தார். உங்களை புகழும் பாடல் என தயாரிப்பாளர் தெரிவித்தார். டி.ஆர் கட்அவுட் பின்னணியில் அந்த பாடல் படமாக்கப்பட்டது. அனைத்தையும் புரிந்து கொண்டு டி.ஆர்.சமாதானம் ஆனார்.
அந்தப் பாடலை பாடியவர் இசையமைப்பாளர் அனிருத். அதற்கு முன் அனிருத் என் இசையில் ‘நீ என்ன பெரிய அப்பாடக்கரா’ என்ற பாடலை பாடியிருக்கிறார். அந்த நட்பில் இந்த பாடலையும் அழகாக பாடிக்கொடுத்தார் என நினைவுகூர்ந்தார் இமான்.
3) ‘மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா சொல்லபோற…’ (தமிழன்)
பட மூலாதாரம், DImman/Facebook
நான் இசையமைத்த முதல் திரைப்படம் தமிழன். அந்த அனுபவத்தை எந்த காலத்திலும் மறக்க முடியாது. கதாநாயகன் விஜய். அதில், வைரமுத்து வரிகளில், நானும், அனுராதா ஸ்ரீராமும் இணைந்து பாடியது ‘மாட்டு மாட்டு’ பாடல்.
முதல் படம் என்பதால் நிறைய புது அனுபவங்கள், சந்தோஷங்கள். இன்றைக்கு பெரிய டான்ஸ் மாஸ்டராக இருக்கிற தினேஷ் இந்தப் பாடலின் மூலம் அறிமுகம் ஆனார்.
ஜி.வி. இந்தத் திரைப்படத்தை தயாரித்து இருந்தார். இசையமைப்பாளராக மட்டுமல்ல, பாடகராகவும் எனக்கு தனி சம்பளம் கொடுத்தார். “நீங்க பாடியிருக்கீங்க. அதற்கான ஊதியம் பெறணும்” என்று அன்பை பொழிந்தார். இன்றுவரை எந்த தயாரிப்பாளரும், இப்படி நான் பாடியதற்காக தனி சம்பளம் கொடுத்தது இல்லை.
விஜய், பிரியங்கா சோப்ரா ஆடிய அந்த குத்து பாடல் தனி அனுபவம், ‘மாட்டு மாட்டு’ படமாக்கப்பட்ட விதமும் சிறப்பாக இருக்கும் என்கிறார் இசையமைப்பாளர் இமான்.
4) ‘பாட்டு ஒன்னு…கட்டுக் கட்டுத் தோதா’ ( ஜில்லா)
பட மூலாதாரம், Star Music Spot
மோகன்லால், விஜய் என இரண்டு பெரிய ஸ்டார்கள் இணைந்து ஆடிய பாடல் அது. எஸ்.பி.பி, ஷங்கர் மகாதேவன் என இரண்டு பிரபல பாடகர்கள் இணைந்த பாடலும் கூட. யுகபாரதி எழுதியிருந்தார்.
கதைப்படி இரண்டு பேரும் இணைந்து ஆடுகிற பாடல் என்பதால், எப்படியெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என யோசித்து ட்யூன் உருவாக்கினேன். மோகன்லால் இருந்ததால் செண்டை மேளத்தை பாடலில் கொண்டு வந்தேன். இதில் என்ன புதிதாக செய்யப் போகிறோம் என நடிகர் விஜய்யும் ஆர்வமாக இருந்தார். அதை பூர்த்தி செய்யும்வகையில் பாடலை உருவாக்கினோம்.
எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களை எந்த காலத்திலும் மறக்க மாட்டேன். நான் தொலைக்காட்சிக்கு இசையமைத்த காலத்தில் கூட அவரை வைத்து பாட வைத்து இருக்கிறேன். அந்த காலத்தில் மெலோடி குறைந்துவிட்டதே என கேள்விகள் வந்தபோது, பல இடங்களில் இமான் நல்ல மெலோடி போடுகிறாரே என பேசியிருக்கிறார். இந்த பாடலில் இடம் பெற்ற சிவனும் சக்தியும் சேர்ந்தால் மாசுடா என்ற வரிகள் வெகு பிரபலம் ஆனது என விவரித்தார் இமான்.
5) ‘லாலா கடை சாந்தி’ (சரவணன் இருக்க பயமேன்)
இன்றைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடித்த சரவணன் இருக்க பயமேன் படத்தில் இடம் பெற்ற குத்து பாட்டு இது. யுகபாரதி அந்த அழகான வரிகளை எழுத, பென்னி தயாள், சுனிதி சௌகான் இணைந்து பாடினார்கள். இன்றைக்கும் தொலைக்காட்சியில் இந்தப் பாடல் பிரபலமாக இருக்கிறது.
‘சரவணன் இருக்க பயமேன்’ திரைப்படத்தை எழில் இயக்கி இருந்தார். அவர் வித்தியாசமானவர். இப்படிப்பட்ட பாட்டு வேண்டும் என்று சொல்லிவிட்டு போய்விடுவார். மற்றபடி எதிலும் தலையிடமாட்டார். நீங்களே எல்லாத்தை நல்லபடியாக முடித்துகொடுங்கள் என்பார். நமக்கு பொறுப்புணர்வு அதிகமாக இருக்கும். இந்த பாடலுக்கு நன்றாகவும் ஆடியிருந்தார் உதயநிதி என்கிறார் இமான்.
6) மாஸ்டர் ஓ மை மாஸ்டர் (மை டியர் பூதம்)
பட மூலாதாரம், Think Music India
ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த ஃபேண்டசி படம். பென்னி தயாள் இந்த பாடலை பாடியிருந்தார். இந்த பாடலையும் யுகபாரதி தான் எழுதியிருந்தார். இந்த படத்தின் பூஜைக்கு சென்று இருந்தேன். இந்த பாடலின் படப்பிடிப்பும் நடந்தது.
பிரபுதேவா மீது எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு பாசம் உண்டு. நான் முதலில் இசையமைத்த ‘காதலே சுவாசம்’ படத்தில் அவர் தான் ஹீரோவாகி இருக்க வேண்டும். அந்த வகையில் அவரிடம் பலமுறை பேசியிருக்கிறேன். கடைசியில் அந்தத் திரைப்படத்தில் கார்த்திக் நடித்தார். திரைப்படமும் தாமதமாக வந்தது. எனவே, பிரபுதேவா படம் என்பதால் கூடுதல் பாசம்.
பிரபுதேவா பெரிய டான்ஸ் மாஸ்டர் என்றாலும், அவரால் எதையும் மாற்றமுடியும் என்றாலும் அந்த பாடலின் மாஸ்டர் சொல்படி அர்ப்பணிப்புடன் ஆடினார். அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்.
7) ‘வாடா வாடாப் பையா…’ (கச்சேரி ஆரம்பம்)
பட மூலாதாரம், Star Music Spot
ஜீவா நடித்த கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம் பெற்று இருந்தது. எம்.எல்.ஆர் கார்த்திகேயன், அனிதா பாடியிருந்தார்கள். அப்போது வரை நான் இசையமைத்த பாடல்களில் இந்த திரைப்பட பாடல்களுக்குதான் பெரிய செட் போட்டு பிரமாண்டமாக எடுத்தார்கள். ஐதராபாத்தில் நடந்த இந்த பாடல் படப்பிடிப்புக்கும் நான் சென்றேன்.
அசோக்ராஜா கொரியோகிராபி செய்தார். நானும் ஒரு சீனில் ஆடினேன். இன்றைக்கு சிறந்த குத்து பாடலாக கொண்டாடப்படுகிறது. தனிப்பட்ட முறையில் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி சாரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அவருக்கு இசை ரசனை அதிகம் உண்டு. பாடலை உன்னிப்பாக கேட்டு, அதில் இருக்கும் விஷயங்களை விரிவாக சொல்வார் என்கிறார் இமான்.
8) ‘பை பை கலாச்சி பை’ (பாண்டிய நாடு)
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான பாண்டிய நாடு திரைப்படத்தில் விஷால், லட்சுமிமேனன் ஆடிய பாடல். இந்த பாடலை பாடியவர் பிரபல நடிகை ரம்யா நம்பீசன். அவரின் ஒரு மலையாள பாடல் கேட்டு, போனில் பேசி இந்த பாடலின் ஒலிப்பதிவிற்கு வரவழைத்துவிட்டேன். அவரை நேரில் பார்த்தபிறகுதான் ‘அட, இவரா’ என ஆச்சரியப்பட்டேன்.
அந்த சமயத்தில் ‘பை பை கலாச்சி பை’ பாடல் சூப்பர் ஹிட் ஆனது. எத்தனையோ மேடைகளில் ரம்யா இந்த பாடலை பாடியிருக்கிறார். பாடலை மதன் கார்க்கி எழுதியிருந்தார். பாடலின் ஒளிப்பதிவு, நடன அமைப்பு கூட அவ்வளவு அழகாக இருக்கும்.
9) ‘சொய்… சொய்’ (கும்கி)
பட மூலாதாரம், SonyMusicSouthVEVO
கும்கி, யானை சம்பந்தப்பட்ட கதை என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. யானை எந்த நேரமும் வரலாம் என்ற பயம், அந்த சமயத்தில் அந்த மக்களின் கொண்டாட்டப் பாடலாக இது வரும். அதனால், பாடலில் வரிகளை, இசைக்கருவிகளை அதற்கேற்ப பயன்படுத்தி ஒரு வித ‘மூட்’ கொண்டு வந்தோம். இடையில் ‘கொம்பு’ மாதிரியான இசைக்கருவி வரும். அது பாடலுடன், கதை, காட்சியுடன் ஒட்டிப்போனது. பல்லவி, சரணம் இல்லாமல் பாடல் ஒலிக்கும்.
மகிழினி மணிமாறன் இந்த பாடலை பாடினார். வேடந்தாங்கலில் இருந்து வந்த அவர் இந்த பாடலுக்கு பின் அவர் உலக அளவில் பிரபலம் ஆனார். சென்னையில் கணவருடன் இணைந்து ‘பறை இசைப் பள்ளி’ தொடங்கினார். ஒரு நாட்டுப்புற இசைக்கலைஞரை சினிமாவுக்கு கொண்டு வந்ததில் எனக்கும் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி.
எப்போதும், எனக்கும் இயக்குநர் பிரபு சாலமானுக்கும் எளிதில் ஒத்துப்போகும். அதிகம் சிரமப்படாமல், டென்ஷன் ஆகாமல் எளிதாக ஹிட் பாடல்களை உருவாக்கி இருக்கிறோம். யுகபாரதி தான் இந்தப் பாடலை எழுதினார். விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படமும், பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன என்கிறார் இமான்.

10) ‘காந்த கண்ணழகி’ (நம்ம வீட்டுப்பிள்ளை)
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான நம்ம வீட்டுப்பிள்ளை திரைப்படத்தில் அனிருத், நீத்தி மோகன் இந்தப் பாடலை பாடினார்கள். ஹீரோ சிவகார்த்திகேயன் பாடலை எழுதினார்.
நான் நடிகர் கவுண்டமணியின் தீவிர ரசிகன். அவரின் வசனங்களை மிகவும் ரசிப்பேன். ‘சூரியன்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘காந்த கண்ணழகி’ வசனம் மிகவும் பிடிக்கும். அந்த பாதிப்பில் இந்த பாடல் உருவானது. தவிர, கதாநாயாகி அனு இமானுவேலின் கண்கள் பெரிதாக இருக்கும். எனவே காந்த கண்ணழகி பொருத்தமாக இருந்தது.
இந்தப் பாடலில் இடம்பெற்ற ஜிப்ரிஷ் வார்த்தையான ‘கும்முறு டப்பர….கும்முறு டப்பர’ என்பது எளிதாக மக்களை, குறிப்பாக, குழந்தைகளை சென்றடைந்தது. இப்படிப்பட்ட சில வார்த்தைகளில் நான் கவனம் செலுத்துவேன். என் பாடல்களில் இப்படிப்பட்ட வரிகள் நன்றாக ஹிட்டாகி இருக்கின்றன என்று கூறி முடித்தார் இசையமைப்பாளர் இமான்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு