பட மூலாதாரம், Getty Images
பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பையில், இந்தியாவிற்கு எதிரான தனது லீக் போட்டியில் விளையாட பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த முடிவு பாகிஸ்தானின் உலகக் கோப்பை பயணத்தில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் எழுந்துள்ளது.
நாக் அவுட் சுற்றுகளில் இரு அணிகளும் மோதும் சூழல் ஏற்பட்டால், அப்போதும் பாகிஸ்தான் இதே முடிவை எடுக்குமா என்றும் கேள்வி எழுகிறது.
டி20 உலகக் கோப்பையின் ஆரம்பக்கட்ட போட்டிகளுக்காக பிரிக்கப்பட்ட நான்கு பிரிவுகளில், இந்தியாவும் பாகிஸ்தானும் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளன.
இந்த போட்டிகளுக்குப் பிறகு, ஒவ்வொரு பிரிவிலிருந்தும் தலா இரண்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறினால், அவை வெவ்வேறு பிரிவுகளில் இருக்கும்.
அதாவது, ஆரம்ப கட்டத்திற்குப் பிறகு, இந்த இரு அணிகளும் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் மட்டுமே ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள முடியும்.
பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு?
பட மூலாதாரம், Photo by AAMIR QURESHI/AFP via Getty Images
டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் இந்தியாவுடன் விளையாடாவிட்டால், இரு அணிகளின் புள்ளிகள் மற்றும் ரன் ரேட் மீதான தாக்கம் குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலின் சாத்தியமான விளைவுகள் குறித்து சமூக வலைதளப் பயனர்கள் விவாதித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் அணி விலகுவதால் இந்தியா இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இரண்டு புள்ளிகளைப் பெறும், அதே நேரத்தில் பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற மற்ற போட்டிகளில் நல்ல ரன் ரேட்டுடன் வெற்றி பெற வேண்டியிருக்கும்.
ரன் சராசரி அல்லது ரன் ரேட் குறித்து, ஐசிசி-யின் “விளையாட்டு நிபந்தனைகள்” பிரிவு 16.10.7-ன் படி, ஒரு அணி போட்டியில் விளையாட மறுத்தால், விலகும் அணியின் நிகர ரன் ரேட் குறைக்கப்படும், அதே நேரத்தில் மற்ற அணியின் ரன் ரேட் பாதிக்கப்படாது.
அதாவது, இந்தப் போட்டியில் விளையாட மறுப்பதால் பாகிஸ்தானின் நிகர ரன் விகிதம் பாதிக்கப்படும் என்பது தான் இதன் பொருள்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் தவிர, ‘ஏ’ பிரிவில் அமெரிக்கா, நமீபியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் அமீர் மிர்ரிடம், தொடரின் அடுத்த கட்டங்களில் இந்தியாவிற்கு எதிரான போட்டிகளை பாகிஸ்தான் அணி புறக்கணிக்குமா என்று பிபிசி கேட்டபோது, அந்த நேரத்தில் அதற்கான முடிவு எடுக்கப்படும் என்றும், இந்த முடிவை அரசாங்கம் எடுக்குமே தவிர “நாங்கள் அல்ல” என்றும் அவர் கூறினார்.
ஐ.சி.சி போட்டிகளில் பங்கேற்க மறுத்த அணிகளின் வரலாறு
பட மூலாதாரம், AFP via Getty Images
அரசியல் காரணங்களுக்காக விளையாட்டுப் போட்டிகளைப் புறக்கணிப்பதற்கு நீண்ட வரலாறு உண்டு. ஐசிசி தொடர்களிலும் இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன.
அரசியல் காரணங்களுக்காக விளையாட்டைப் புறக்கணித்த ஒரு நிகழ்வு 1979-இல் நடந்தது. அப்போது ஐசிசி டிராபி (உலகக் கோப்பை தகுதிச் சுற்றுத் தொடர்) போட்டியில் இஸ்ரேலுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடாமல் விலகிய இலங்கை புள்ளிகளை இழந்தது. இந்த முடிவு இலங்கை அணி உலகக் கோப்பையிலிருந்து வெளியேறும் அபாயத்தை ஏற்படுத்தியது, இருப்பினும் அவர்கள் பின்னர் 1979 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றனர்.
1980 மற்றும் 1990-களில், ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய அணிகள் அரசியல் மோதல்கள் அல்லது மைதானப் பிரச்னைகள் காரணமாக சில போட்டிகளிலிருந்து விலகியுள்ளன.
1982-ஆம் ஆண்டு பெண்கள் உலகக் கோப்பையில் பங்கேற்க மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா, பிரிட்டன், இந்தியா, நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தன.
இருப்பினும், 1981-இல் நிறவெறி காலத்தில் தென்னாப்பிரிக்க ரக்பி அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கிந்தியத் தீவுகள் பங்கேற்கவில்லை.
நெதர்லாந்து அணியும் நிதிப் பிரச்னையால் பங்கேற்கவில்லை.
இந்த இரண்டு அணிகளுக்கும் பதிலாக இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து வீரர்களைக் கொண்ட ‘சர்வதேச லெவன்’ அணி சேர்க்கப்பட்டது.
1986-ஆம் ஆண்டில், இலங்கையில் தமிழர்கள் நடத்தப்படும் விதம் குறித்து அதிருப்தி தெரிவித்த இந்தியா, அங்கு நடைபெறவிருந்த ஆசியக் கோப்பையில் பங்கேற்க மறுத்துவிட்டது.
1988-ஆம் ஆண்டில், இந்தியப் பெண்கள் அணி உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை. ஏனெனில் அவர்களது நுழைவுக்கான பதிவு நடைமுறைகள் முடிக்கப்படவில்லை.
1990-91 காலப்பகுதியில், ‘காஷ்மீர் பிரச்னை’ காரணமாக ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை.
1993 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு மற்றும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்ட விரிசல்களைத் தொடர்ந்து 1993 ஆசியக் கோப்பை ரத்து செய்யப்பட்டது.
1996-ஆம் ஆண்டில், இலங்கையில் நிலவி வந்த உள்நாட்டுப் போர் மற்றும் கொழும்பு குண்டுவெடிப்புகளை காரணம் காட்டி ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் அங்கே சென்று விளையாட மறுத்துவிட்டன. அந்த தொடரில் லாகூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை உலக சாம்பியன் பட்டத்தை முதன் முறையாக வென்றது.
2003 கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது, ஜிம்பாப்வேவின் அப்போதைய அதிபர் ராபர்ட் முகாபேயின் அரசாங்கத்திற்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு, ஜிம்பாப்வேயுடன் விளையாட இலங்கை மறுத்துவிட்டது.
ஜிம்பாப்வேயில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக பிரிட்டிஷ் அரசாங்கம் கவலை தெரிவித்ததை அடுத்து, அங்கு விளையாடுவது ஆபத்தானது என இங்கிலாந்து வீரர்கள் கருதினர். அதன் விளைவாக, இங்கிலாந்து அணி அந்தப் போட்டியை கைவிட முடிவு செய்தது.
அதே தொடரில், நியூசிலாந்து அணியும் வீரர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக கென்யா சென்று விளையாடவில்லை. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் இந்தப் போட்டிகளை ஒரு மூன்றாவது நாட்டிற்கு, குறிப்பாகத் தென்னாப்பிரிக்காவிற்கு மாற்ற விரும்பின. அது நடக்கவில்லை.
விதிகளின்படி, இந்தப் போட்டிகளில் எதிரணிகளான ஜிம்பாப்வே மற்றும் கென்யா ஆகிய அணிகளுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டன.
2009-ஆம் ஆண்டில், இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே பங்கேற்கவில்லை. அரசாங்க மோதல்கள் காரணமாக வீரர்களுக்கு விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதே இதற்கு காரணமாகும்.
அந்த நேரத்தில், பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வீரர்களுக்கு விசா வழங்க முடியாது என்று தமக்குத் தெரிவிக்கப்பட்டதாக ஜிம்பாப்வே கிரிக்கெட் தலைவர் பீட்டர் சிங்கோகா கூறினார். அதனால் அந்த அணி பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்ததாகவும் கூறினார்.
அந்த டி20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து விளையாடியது.
2016-ஆம் ஆண்டில், டாக்காவில் இத்தாலிய தன்னார்வலர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணி, வங்கதேசத்தில் நடைபெறவிருந்த உலகக் கோப்பை தொடரை ரத்து செய்தது.
வங்கதேசத்தில் ஆஸ்திரேலியர்களின் நலன்களுக்கு ஆபத்து இருப்பதால் வீரர்களை அனுப்ப வேண்டாம் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு அறிவுறுத்தியது. அதன்பின்னர் ஆஸ்திரேலியாவிற்கு பதிலாக அயர்லாந்து அணி அழைக்கப்பட்டது.
கொரோனா தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகள் காரணமாக 2022-ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் நியூசிலாந்து பங்கேற்கவில்லை. அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி விளையாடியது.
இந்திய அணிக்கு அனுமதி கிடைக்காதபோது நடந்தது என்ன?
பட மூலாதாரம், ANI
29 ஆண்டுகளில் பாகிஸ்தானில் நடைபெறும் முதல் ஐசிசி தொடராக 2025 சாம்பியன்ஸ் டிராபி திட்டமிடப்பட்டிருந்தது. 2021 நவம்பரில் பாகிஸ்தான் தொடரை நடத்தும் நாடாக அங்கீகரிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் உறவுகள் மோசமடைந்ததால், 2008-க்குப் பிறகு பாகிஸ்தானில் விளையாடாத இந்தியா அங்கு பயணம் செய்யுமா என்பதே மிகப்பெரிய கேள்வியாக இருந்தது.
ஆனால், 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் இந்தியாவிற்குப் பயணம் செய்திருந்தது.
இறுதியாக, அரசாங்கத்தின் அனுமதி இல்லாததால் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு பயணம் செய்யாது என்று பிசிசிஐ தெரிவித்தது.
இரு வாரியங்களுக்கும் ஐசிசி-க்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 2024-2027 காலப்பகுதி போட்டிகளுக்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியா அல்லது பாகிஸ்தானில் நடைபெறும் எந்தவொரு ஐசிசி தொடர்களிலும், சம்பந்தப்பட்ட அணிகளின் போட்டிகள் பொதுவான இடங்களில் நடத்தப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதன் விளைவாக, 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கான போட்டிகள் துபையில் நடைபெற்றன.
இதற்கிடையில், பாதுகாப்பு மற்றும் அரசியல் சிக்கல்களைத் தீர்க்க, பெண்கள் உலகக் கோப்பையில் தனது போட்டிகளை பொதுவான இடங்களில் விளையாட பாகிஸ்தான் முடிவு செய்தது. இந்தியா தனது ஆட்டங்களை துபையில் விளையாட, பாகிஸ்தான் தனது அனைத்துப் போட்டிகளையும் கொழும்பில் விளையாடியது.
2026-ஆம் ஆண்டில், வங்கதேசத்தின் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரில் விளையாட பிசிசிஐ தடை விதித்ததை அடுத்து, பாதுகாப்பு கவலைகளைக் குறிப்பிட்டு டி20 உலகக் கோப்பைக்காகத் தனது அணியை இந்தியாவிற்கு அனுப்ப வங்கதேசம் மறுத்துவிட்டது.
வங்கதேச அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று தனது மதிப்பீடுகளின் படி ஐசிசி வாதிட்டது. வங்கதேசத்தின் மறுப்பைத் தொடர்ந்து, அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி டி20 உலகக் கோப்பையில் சேர்க்கப்பட்டது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவ்வாறு தொடர்ச்சியாக நடப்பது ஏன்?
பட மூலாதாரம், Getty Images
பிரபல கிரிக்கெட் பத்திரிகையாளரும், வர்ணனையாளரும், ஆய்வாளருமான ஜாரெட் கிம்பர் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‘கிரிக்கெட்டில் அரசியல் தலையிடாது என்று சொல்வது சரியல்ல, மாறாக அரசியல்தான் கிரிக்கெட்டிற்கான வாய்ப்புகளைத் திறந்து விடுகிறது’ என்று அவர் கூறுகிறார்.
“தொடக்கத்திலிருந்தே விளையாட்டை அரசியல் கட்டுப்படுத்தியுள்ளது. இப்போது நாம் ஒரு உலகக் கோப்பையை நெருங்கியுள்ளோம், அங்கு அரசியல் காரணமாக ஒரு அணி நீக்கப்பட்டுள்ளது, மற்றொரு அணி இன்னொன்றுக்கு எதிராக விளையாட மறுத்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கிரிக்கெட் நாடுகளை கட்டமைத்துள்ளது, ஆனால் அதே நாடுகளின் அரசியல் பெரும்பாலும் விளையாட்டைப் பிரிக்க முயன்றது” என்று கூறிய ஜாரெட்,
“அரசியல் ஒரு விசித்திரமான விஷயம்… அனைவரும் அதை விளையாட்டிலிருந்து பிரித்தே வைக்க விரும்புகிறார்கள், ஆனால் அது நீரிலிருந்து ஈரப்பதத்தைப் பிரிக்க முயல்வதைப் போன்றது. அரசியலை எதிலிருந்தும் முழுமையாகப் பிரிக்க முடியாது, ஏனெனில் அதன் இயல்பிலேயே அது எல்லாவற்றுடனும் பின்னிப் பிணைந்துள்ளது”என்றும் குறிப்பிட்டார்.
2023 ஆஷஸ் தொடரின் போது லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஒரு ஸ்டம்பிங் சம்பவத்தை அவர் உதாரணமாகக் கூறுகிறார். இது இரு நாடுகளின் (பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா) பிரதமர்கள் கருத்து கூறும் அளவுக்கு கவனம் பெற்றது. “இது அவர்கள் இருவரும் விளையாட்டை அவ்வளவு நேசித்ததால் அல்ல, மாறாக புகழ் பெறுவதற்கான எளிதான வழி என்பதால் தான்”என விளக்கினார் ஜாரெட்.
ஆஸ்திரேலியாவின் சாண்ட்பேப்பர் முறைகேடு விவகாரத்தை ஒரு முன்னாள் பிரதமர் பெரிய அரசியல் பிரச்னையாக மாற்றியிருந்தார்.
சமீபத்திய ஆண்டுகளில் தென்னாப்பிரிக்க அரசாங்கம் கிரிக்கெட் நிர்வாகத்தில் தலையிட்டது, அமெரிக்காவின் டி20 லீக் அரசியலில் சிக்கியது மற்றும் தற்போதைய ஐசிசி தலைவர் இந்தியாவின் உள்துறை அமைச்சரின் மகனாக இருப்பது ஆகிய இவை அனைத்தும் கிரிக்கெட்டின் ஒவ்வொரு மட்டத்திலும் அரசியல் இருப்பதற்கான எடுத்துக்காட்டுகள் என்று ஜாரெட் கூறுகிறார்.
“விளையாட்டு எப்போதும் பணம் மற்றும் அரசியலின் பிணைப்பால் இயக்கப்படுகிறது. உலகக் கோப்பை என்ற கருத்தே பணம் ஈட்டும் விருப்பத்திலிருந்து தான் பிறந்தது, காலப்போக்கில் ஏற்பட்ட ஒவ்வொரு மாற்றமும் கிரிக்கெட்டில் அதிக முதலீட்டிற்கு வழிவகுத்தது.”
முன்னதாக, ஒரு நாட்டிற்குச் சென்று விளையாடுவதில் ஏதேனும் ஒரு அணிக்கு ஆட்சேபனை இருந்தால், அந்த அணி போட்டியில் விளையாட வேண்டாம் என்று முடிவு செய்து புள்ளிகளை விட்டுக் கொடுத்துவிடும்.

இருப்பினும், கிரிக்கெட் இப்போது பல பில்லியன் டாலர் தொழிலாக மாறிவிட்டது.
சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானில் விளையாட இந்தியா மறுத்தது என்பது வெறும் புள்ளிகளை விட்டுக்கொடுக்கும் விஷயம் மட்டுமல்ல.
போட்டி எங்கு நடந்தாலும், ஒருவருக்கொருவர் பங்கேற்பதன் மூலம் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் பொருளாதார ரீதியாகப் பயனடைகின்றன.
ஜாரெட்டின் கூற்றுப்படி, இங்குதான் கிரிக்கெட்டின் பலவீனமான நிர்வாகம் வெளிப்படுகிறது. விளையாட்டு ஒரு வலுவான நிர்வாகத்தால் நடத்தப்பட்டு, ஒரே ஒரு சந்தையைச் சார்ந்திருப்பதிலிருந்து விடுவிக்கப்பட்டால், சிறந்த முடிவுகளை எடுக்க முடியும். ஆனால் கிரிக்கெட் எப்போதும் முரண்பட்ட நலன்களின் நுணுக்கமான பிணைப்பாகவே இருந்து வருகிறது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு