2026 டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் இன்று (பிப்ரவரி 26) நடக்கும் முக்கியமான போட்டியில் ஜிம்பாப்வே அணியை சென்னை சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது இந்திய அணி. முந்தைய போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தோற்றிருந்த நிலையில், இந்தியாவுக்கு இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது அவசியமாகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆமதாபாத்தில் நடந்த போட்டியில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது. அதன் பிறகு பல விஷயங்கள் ரசிகர்களாலும் வல்லுநர்களாலும் விமர்சிக்கப்பட்டன. துணைக் கேப்டன் அக்சர் பட்டேலை அணியில் சேர்க்காதது, அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோரின் ஃபார்ம் போன்றவை பெரும் பேசுபொருளாகின. அதனால் இந்தப் போட்டியில் இந்த வீரர்கள் விஷயத்தில் ஏதேனும் மாற்றங்கள் நிகழும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அபிஷேக் ஷர்மா 4 போட்டிகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். 5 போட்டிகளில் ஆடியிருக்கும் திலக் வர்மா 118.9 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 107 ரன்கள் எடுத்திருக்கிறார். ரிங்கு சிங் 5 போட்டிகளில் 24 ரன்கள் எடுத்திருக்கிறார். இந்நிலையில், சஞ்சு சாம்சன் அணியில் இருப்பதால், இந்தப் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்ற வாதம் எழுந்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், டாப் 3 வீரர்கள் மூவருமே இடது கை பேட்டர்களாக இருப்பதால், எதிரணிகள் ஆஃப் ஸ்பின்னர்களோடு போட்டியைத் தொடக்கி சவால் கொடுக்கின்றன. சாம்சனை சேர்ப்பது அந்த பிரச்னைக்கும் முடிவு கட்டும் என்று கருதப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்கு முன்பே இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் இதை வலியுறுத்தியிருந்தார். தன் எக்ஸ் தள பதிவில், “டாப் ஆர்டரில் அதிக இடது கை பேட்டர்கள் இருப்பது, எதிரணிகள் நன்கு திட்டமிட்டு ஆஃப் ஸ்பின்னர்களை ‘மேட்ச் அப்’களாக பயன்படுத்த உதவிவிடுகின்றன. சாம்சனை சேர்ப்பது அதை சரிசெய்யும்” என்று எழுதியிருந்தார்.
அதேபோல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அக்சர் பட்டேல் சேர்க்கப்படாதது குறித்து ரவிச்சந்திரன் அஷ்வின், யோ மகேஷ் உள்பட பல கிரிக்கெட்டர்கள் கேள்விகளை எழுப்பியிருந்தார்கள்.
‘சேப்பாக்கம் ஆடுகளம் இந்தியாவுக்கு உதவும்’
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ‘ஜிம்பாப்வே அணி மெதுவான சுழலும் இலங்கை ஆடுகளங்களில் சிறப்பாக செயல்பட்டது.’
அதேசமயம் சேப்பாக்கம் ஆடுகளம் இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு உதவி செய்யலாம் என்று கருதப்படுகிறது. சமீபமாக சேப்பாக்கம் ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு உகந்ததாக இருக்கின்றன. முன்பைப்போல் சுழலும் ஆடுகளங்களாக இல்லை.
அதனால், இந்திய பேட்டர்கள் இங்கு நல்ல தாக்கம் ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது. வான்கடே போன்ற பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளத்தில் ஜிம்பாப்வே தடுமாறியதால், சேப்பாக்கம் இந்தியாவுக்கு சாதகமானதாக இருக்கும் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டுப்ளெஸி, “இந்திய அணி ஜிம்பாப்வே போன்ற ஒரு அணியை எதிர்கொள்ள சேப்பாக்கம் உகந்த இடம். சேப்பாக்கம் பேட்டிங் செய்வதற்கு உகந்த இடமாக தற்போது விளங்குகிறது. ஜிம்பாப்வே அணி மெதுவான சுழலும் இலங்கை ஆடுகளங்களில் சிறப்பாக செயல்பட்டது. ஆம், அவர்களது வேகப்பந்துவீச்சாளர்களும் நன்றாகவே செயல்பட்டார்கள் தான். ஆனால், வான்கடே போன்ற ஒரு ஆடுகளத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர்களால் சோபிக்க முடியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்களின் பலத்தை ஜிம்பாப்வேயால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதே மாதிரியான பலம் இந்திய அணியிலும் இருக்கிறது” என்று கூறினார்.
இந்தப் போட்டியில் இன்று இரவு 7 மணிக்குத் தொடங்கும். ஆனால், மாலை 3 மணிக்கு நடக்கும் தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் போட்டியுமே இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பைத் தீர்மானிப்பதில் முக்கிய அங்கம் வகிக்கும். அதனால், அந்தப் போட்டியின் முடிவும் இந்தியாவுக்கு முக்கியமானது.
சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 நிலவரம்
சூப்பர் 8 சுற்றில் குரூப் 1-இல் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் உள்ளன. இதிலிருந்து 2 அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும்.
நான்கு அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடியுள்ளன. இதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தியா மற்றும் ஜிம்பாப்வே தோல்வியடைந்துள்ளன.
வெஸ்ட் இண்டீஸ் அணி 5.35 என்ற நிகர ரன் ரேட்டுடன் (NRR) அந்தக் குழுவில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்க அணி உள்ளது, அதன் நிகர ரன் ரேட் 3.80 ஆகும்.
இந்தியா -3.80 என்ற நிகர ரன் விகிதத்துடன் மூன்றாவது இடத்திலும், ஜிம்பாப்வே -5.35 நிகர ரன் விகிதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளன.
இந்தியாவின் முன்னுள்ள சவால்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சூர்ய குமார் யாதவ்
சூப்பர் 8 சுற்றில் குரூப் ஒன்றில் இந்தியாவுக்கு தற்போதுள்ள ரன் ரேட் அதன் பாதையை மிகவும் கடினமாக்கியுள்ளது.
இந்தியா அடுத்தடுத்து விளையாடும் இரண்டு ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய இரண்டு அணிகளையும் வெற்றி பெறுவது மட்டும் போதாது. மற்ற காரணிகளும் சாதகமாக இருந்தால் மட்டுமே இந்தியாவால் அரையிறுதிக்கு முன்னேற முடியும்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, “ஆமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்தால் மட்டுமே இந்தியா அரையிறுதிக்கு வர முடியும். ஆனால் தென்னாப்பிரிக்கா தோற்றால், ஜிம்பாப்வே தென்னாப்பிரிக்காவை தோற்கடிக்க வேண்டிய நிலை ஏற்படும்” என்று கூறுகிறார்.
“ஏனென்றால், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் சூழ்நிலை ஏற்பட்டால் இந்தியாவுக்கு அதில் எந்த வாய்ப்பும் இல்லை, ஏனெனில் இந்தியா நிகர ரன் விகிதத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது” என்று அவர் கூறுகிறார்.
இந்த தொடரில் ஜிம்பாப்வே அணி சிறப்பாக செயல்பட்டாலும், தென்னாப்பிரிக்காவை வீழ்த்துவது அவர்களுக்கு கடினமானதாக இருக்கும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் நம்புகின்றனர்.
அதேநேரத்தில், வெஸ்ட் இண்டீஸின் தற்போதைய ஆட்டத்தை கருத்தில் கொண்டால், தென்னாப்பிரிக்கா அவர்களைத் தோற்கடிப்பது எளிதானதல்ல. இந்தத் தொடர் முழுவதும் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
“வெஸ்ட் இண்டீஸ் அனைவருக்கும் மிகவும் வலுவான செய்தியை அனுப்புகிறது” என்று கிரிக்கெட் நிபுணர் ஹர்ஷா போக்லே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
விளையாட்டுப்பிரிவு பத்திரிகையாளர் விக்ராந்த் குப்தா, “இந்தியா வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். தென்னாப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தினால், இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறும். ஆனால் மூன்று அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெல்லும் நிலை வந்தால், இந்தியா நிகர ரன் விகிதத்தில் மிகவும் பின்தங்கியிருக்கும், அதனால் தொடரில் இருந்து வெளியேற்றப்படும்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எனவே, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தால், இந்தியா வெளியேறும் ஆபத்து இன்னும் அதிகரிக்கும். இதன்மூலம், மீதமுள்ள இரண்டு சூப்பர்-8 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றாலும், மற்ற அணிகள் ஆடும் போட்டிகளின் முடிவை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
தனது முதல் சூப்பர் 8 போட்டியில், இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன் விளைவாக இந்தியாவின் நிகர ரன் ரேட் -3.80 ஆக உள்ளது. இந்த மிகப்பெரிய தோல்வி இந்திய அணியை ஒரு நெருக்கடியான நிலையில் தள்ளியுள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட அரையிறுதியில் இந்தியா இடம் பெறுவதை உறுதி செய்ய முடியாது. தனது குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகள் ஆடும் போட்டிகளின் முடிவைப் பொருத்தே இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு இறுதியாகும்.
வெஸ்ட் இண்டீஸ் முன் உள்ள சில சவால்கள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வெஸ்ட் இண்டீஸ் அணி
வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுமே இந்த டி20 உலகக் கோப்பையில் இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளிலுமே வெற்றி பெற்றிருக்கின்றன. இரண்டு அணிகளிலுமே அதிரடி வீரர்கள் நிறைந்து இருப்பதால் இந்தப் போட்டியில் பெரிய ஸ்கோர் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்க அணி இந்த உலகக் கோப்பையில் விளையாடியுள்ள 5 போட்டிகளில் நான்கை ஆமதாபாத்தில் தான் ஆடியிருக்கிறது. அதனால் அவர்களுக்கு இந்த மைதானத்தின், ஆடுகளத்தின் தன்மை ஓரளவு நன்கு தெரியும். இது அந்த அணிக்கு சாதகமான விஷயம்.
வெஸ்ட் இண்டீஸ் அணி ஆமதாபாத்தில் ஆடப்போகும் முதல் போட்டி இது. அதுமட்டுமல்லாமல், அந்த அணி இதுவரை வான்கடே, ஈடன் கார்டன்ஸ் போன்ற சிறிய பவுண்டரிகள் கொண்ட மைதானங்களிலேயே ஆடியிருக்கிறது. அதனால், சற்றே பெரிதான பவுண்டரி எல்லை கொண்ட ஆமதாபாத் அவர்கள் பேட்டர்களுக்கு சிரமத்தைக் கொடுக்கலாம்.
ஒருவேளை இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றுவிட்டால், ஜிம்பாப்வே போட்டியில் களமிறங்குவதற்கு முன்பே இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்படக்கூடும். அதேசமயம், அடுத்த போட்டி இந்தியாவுடன் என்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இந்தப் போட்டி சவால் நிறைந்ததுதான். ஏனெனில், இவ்விரு போட்டிகளிலும் தோற்றுவிட்டால் அவர்கள் வெளியேறிவிடக்கூடும்.