பட மூலாதாரம், BCCI
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மற்றும் நாட்டின் இடைக்கால அரசுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்திய பிறகு, இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதில்லை என வங்கதேச கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) முடிவு செய்துள்ளது.
தனது முயற்சிகளைத் தொடருவதாக பி.சி.பி கூறினாலும், டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. இதன் காரணமாக, இந்தத் தொடரின் திட்டமிடப்பட்ட அட்டவணையில் இனி எந்த மாற்றமும் செய்ய வாய்ப்பில்லை என்பதை ஐ.சி.சி கிட்டத்தட்ட தெளிவுபடுத்தியுள்ளது.
ஐ.சி.சி நடத்தும் இதுபோன்ற தொடர்கள் கிரிக்கெட் வாரியங்களுக்கும் வீரர்களுக்கும் வருமானத்துக்காக ஒரு முக்கிய ஆதாரமாகும். இத்தகைய சூழ்நிலையில், டி20 உலகக் கோப்பையில் பங்கேற்காததால், வங்கதேச கிரிக்கெட் வாரியம், அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரும் நிதி இழப்பைச் சந்திக்க நேரிடும்.
இந்தத் தொடரில் பங்கேற்பதன் மூலம் வங்கதேச கிரிக்கெட் வாரியம், வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் சுமார் 40 மில்லியன் வங்கதேச டாக்கா (சுமார் ரூ.2.75 கோடி) வருமானம் ஈட்டியிருக்க முடியும்.
இருப்பினும், போட்டியின் முதல் 12 அணிகளுக்குள் இடம் பெறும் எந்தவொரு அணியும் சுமார் 450,000 அமெரிக்க டாலர்களைப் (சுமார் ரூ.4.12 கோடி) பெறும், இது வங்கதேச நாணயத்தில் 55 மில்லியன் டாக்காவுக்குச் சமம்.
ஸ்பான்சர்ஷிப் வருவாயும் பாதிக்கப்படும்.
பட மூலாதாரம், Getty Images
வங்கதேச வீரர்கள் தங்கள் போட்டி ஊதியம், சிறப்பான செயல்திறனுக்கான ஊக்கத்தொகை மற்றும் பரிசுத் தொகையையும் இழப்பார்கள்.
இது தேசிய அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு குறிப்பிடத்தக்க தனிப்பட்ட நிதி இழப்பை ஏற்படுத்தும்.
இத்தகைய சூழ்நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியமும் நிதி இழப்பைச் சந்திக்கும்.
இந்தத் தொடரில் பங்கேற்றிருந்தால், ஐசிசியிடமிருந்து 3 முதல் 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை நிதி கிடைக்க வாய்ப்பிருந்தது. ஆனால் இப்போது அந்தப் பணம் அவர்களுக்குக் கிடைக்காது. இது வாரியத்திற்குப் ஒரு பெரிய இழப்பாக அமையக்கூடும்.
உலகில் அதிக வருமானம் ஈட்டும் தொடர்களில் டி20 உலகக் கோப்பையும் ஒன்று. இதில் பங்கேற்காதது கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வாரியம் ஆகிய இரு தரப்பிற்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தும்.
ஒருவேளை வங்கதேசம் இந்தத் தொடரில் பங்கேற்காவிட்டால், ஒளிபரப்பு உரிமம் மற்றும் ஸ்பான்சர்ஷிப் மூலம் கிடைக்கும் வருமானமும் பாதிக்கப்படும்.
இந்தியத் துணைக்கண்டத்தில் நடைபெறும் வங்கதேசத்தின் போட்டிகள் பொதுவாக தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும்.
இப்போது வங்கதேசம் அங்கு விளையாடவில்லை என்றால், டிஆர்பி மதிப்பீடு வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது விளம்பரதாரர்கள் மற்றும் ஸ்பான்சர்களின் ஆர்வத்தையும் குறைக்கக்கூடும்.
வங்கதேசத்தின் போட்டிகள் குறைந்தால், இந்தத் தொடரின் வணிக ரீதியான தாக்கம் குறையும் என்று பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் வர்ணனையாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
ஒரு சர்வதேச டி20 போட்டியில் விளையாடுவதற்கு வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் குறைந்தது 2.5 லட்சம் டாக்கா (வங்கதேச நாணயம்) (சுமார் ரூ.18 லட்சம்) ஊதியமாகப் பெறுகிறார்கள்.
புள்ளிவிவரங்களின்படி, 2024-ல் நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையின் பரிசுத் தொகை, அந்தத் தொடரின் வரலாற்றிலேயே மிக அதிகமானதாக இருந்தது. அந்தத் தொடரின் ஒன்பதாவது பதிப்பு மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஒன்பது இடங்களில் நடைபெற்றது, அதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன.
அந்த நேரத்தில் அணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது மிகப்பெரிய டி20 உலகக் கோப்பையாக அமைந்தது. அந்தத் தொடரில் இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு குறைந்தது 12.80 லட்சம் அமெரிக்க டாலர்கள் (ரூ.10.72 கோடி) கிடைத்தன.
பட மூலாதாரம், BCB/Reuters
அரையிறுதியில் தோல்வியடைந்த இரண்டு அணிகளுக்கு தலா 7,87,500 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.7.21 கோடி) வழங்கப்பட்டன.
இரண்டாவது சுற்றோடு வெளியேறிய அணிகளுக்கு 3,82,500 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.3.5 கோடி) கிடைத்தன.
அச்சமயத்தில், 9 முதல் 12 இடங்களைப் பிடித்த அணிகளுக்கு 2,47,500 அமெரிக்க டாலர்களும், (சுமார் ரூ.2.26 கோடி) 13 முதல் 20 இடங்களைப் பிடித்த அணிகளுக்கு 2,25,000 அமெரிக்க டாலர்களும்(சுமார் ரூ.2.06 கோடி) வழங்கப்பட்டன. இதுதவிர, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி தவிர, மற்ற ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற அணிக்கு கூடுதலாக 31,154 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.28.55 லட்சம்) வருமானமாகக் கிடைத்தன.
ஐ.சி.சி-க்கு எவ்வளவு இழப்பு ஏற்படும்?
வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் புல்புல் கூறுகையில், வங்கதேசம் இல்லாமல் உலகக் கோப்பை போன்ற ஒரு தொடரை நடத்துவது ஐசிசி-க்கும் நஷ்டத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயமாகும் என்று தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, சுமார் 20 கோடி பார்வையாளர்களை ஐ.சி.சி இழக்க நேரிடும்.
இருப்பினும், இதுபோன்ற நிகழ்வுகளுக்கான ஒளிபரப்பு உரிமைகள் முன்கூட்டியே விற்கப்படுகின்றன.
எனவே, ஐசிசி-யை விட ஒளிபரப்பாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு ஏற்படும் இழப்பு மிக அதிகமாக இருக்கும்.
இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்துள்ள அரசியல் பதற்றத்தின் காரணமாக, வங்கதேசம் மற்றும் இந்தியா இடையிலான சுற்றுலா விசா சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, ஒருவேளை வங்கதேசம் உலகக் கோப்பையில் பங்கேற்றிருந்தாலும் கூட, கிரிக்கெட் ரசிகர்கள் வெறும் போட்டியைப் பார்ப்பதற்காக மட்டும் இந்தியாவிற்குப் பயணம் செய்வது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்திருக்கும்.
உலகக் கோப்பையில் வங்கதேசம் கொல்கத்தாவில் மூன்று போட்டிகளிலும், மும்பையில் ஒரு போட்டியிலும் விளையாட வேண்டியிருந்தது.
ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்ட பிறகு, வங்கதேச இடைக்கால அரசு கவலை தெரிவித்தது.
ஒரு கிரிக்கெட் வீரரின் பாதுகாப்பையே உறுதி செய்ய முடியாதபோது, இந்தத் தொடரின் போது மற்ற வீரர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
பட மூலாதாரம், Screen Grab
இந்தியாவுக்குப் போவதில்லை என்ற முடிவு
முன்னதாக, இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் வங்கதேச அணி பங்கேற்காது என்பதை இடைக்கால அரசு மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் வியாழக்கிழமை மாலை தெளிவுபடுத்தின.
இடைக்கால அரசின் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் மற்றும் பிசிபி தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல் ஆகியோர் ஐசிசியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஆசிப் நஸ்ருல் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அரசின் முடிவு தெளிவாக உள்ளது. இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகளில் வங்கதேச அணி பங்கேற்காது,” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “ஐ.சி.சியிடம் இருந்து எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. எங்களது பாதுகாப்பு கவலைகளைக் கருத்தில் கொண்டு, போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை ஐ.சி.சி ஏற்கும் என்று நம்புகிறோம்,” எனத் தெரிவித்தார்.
விளையாட்டு ஆலோசகர் மேலும் கூறுகையில், “மௌனமாக இருப்பதன் மூலம் நமது குடிமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிப்பதன் விளைவுகளை நாம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்”என்று கூறினார். இந்த விவகாரம் குறித்து கிரிக்கெட் வீரர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும் ஆசிப் கூறினார்.
பாதுகாப்பு குறித்த கவலைகளை வெளிப்படுத்திய அவர், இது கற்பனையான விஷயம் அல்ல என்றும், இதன் பின்னணியில் உறுதியான காரணம் இருப்பதாகவும் கூறினார்.
இதுகுறித்துக் ஆசிப் கூறுகையில், “நமது நாட்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான முஸ்தபிசுர் ரஹ்மானின் பாதுகாப்பையே உறுதி செய்ய முடியவில்லை. இத்தகைய சூழ்நிலையில், மற்ற வீரர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு எவ்வாறு உறுதி செய்யப்படும் என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான்,” என்றார்.
இதற்கிடையில், வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல் கூறுகையில், “வங்கதேச கிரிக்கெட்டை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம், ஆனால் ஐ.சி.சியின் பங்கு குறித்து சந்தேகங்கள் உள்ளன. உலகளவில் கிரிக்கெட்டின் புகழ் குறைந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், சுமார் 20 கோடி மக்களை இப்படி அலட்சியப்படுத்துவது ஏமாற்றமளிக்கிறது,” என்றார்.
இருப்பினும் வாரியம் இன்னும் நம்பிக்கையைக் கைவிடவில்லை என்று அவர் கூறினார்.
புல்புல் கூறுகையில், “நாங்கள் மீண்டும் ஐ.சி.சியைத் தொடர்புகொள்வோம். நாங்கள் இந்தியாவில் அல்ல, இலங்கையில் விளையாட விரும்புகிறோம்,” என்றார்.
வங்கதேசத்தின் இந்த நிலைப்பாடு, அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் அந்நாடு பங்கேற்பது குறித்த நிச்சயமற்ற தன்மையை மேலும் அதிகரித்துள்ளது.
பட மூலாதாரம், AFP via Getty Images
‘இது தவறான முன்னுதாரணமாக அமையக்கூடும்’
இருப்பினும், புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு ஐ.சி.சி கூறுகையில், உலகக் கோப்பையில் பங்கேற்க வேண்டுமானால், வங்கதேசம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அட்டவணையின்படி இந்தியாவில் தான் தனது போட்டிகளில் விளையாட வேண்டும் என்று தெரிவித்தது.
அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், தொடரிலிருந்து நீக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும்.
அவ்வாறு நிகழும் பட்சத்தில், அவர்களுக்குப் பதிலாக மற்றொரு அணி தொடரில் சேர்க்கப்படலாம்.
தொடர் தொடங்குவதற்குச் சற்று முன்பாக அட்டவணையை மாற்றுவது சாத்தியமில்லை அல்லது நடைமுறைக்கு ஒத்து வராத ஒன்று என்று ஐ.சி.சி வாதிடுகிறது.
முறையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லாத நிலையில் போட்டிகளை இடமாற்றம் செய்வது, எதிர்கால ஐ.சி.சி தொடர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும் என்றும், இது ஒரு உலகளாவிய அமைப்பாக ஐ.சி.சியின் நடுநிலைத்தன்மையை மோசமாகப் பாதிக்கலாம் என்றும் அது கூறியது.
இந்த சிக்கலைத் தீர்க்க பிசிபி-யுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
இதனுடன், தொடருக்கான விரிவான பாதுகாப்புத் திட்டம் மற்றும் மத்திய – மாநில அளவிலான சட்ட அமலாக்க முகமைகளின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தகவல்களும் பகிரப்பட்டுள்ளன.
“பாரபட்சமற்ற பாதுகாப்பு மதிப்பீடு, போட்டியை நடத்தும் நாடு வழங்கும் உத்தரவாதங்கள் மற்றும் போட்டியின் நிபந்தனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இடம் மற்றும் அட்டவணை தீர்மானிக்கப்படுகிறது,இவை பங்கேற்கும் அனைத்து 20 அணிகளுக்கும் சமமாகப் பொருந்தும்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதற்கான உறுதியான மற்றும் தெளிவான சான்றுகள் இல்லாத நிலையில் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றுவது சாத்தியமில்லை” என்று ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு