• Mon. Nov 25th, 2024

24×7 Live News

Apdin News

டி20 உலகக் கோப்பை: சூப்பர் ஓவரில் வரலாற்று சாதனை படைத்த நமீபியா

Byadmin

Nov 25, 2024


பிரிட்ஜ்டவுன்:

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய 3-வது ஆட்டத்தில் பி பிரிவில் உள்ள நமீபியா-ஓமன் அணிகள் மோதின.

டாஸ் வென்ற நமீபியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 19.4 ஓவர்களில் 109 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக காலித் கைல் 34 ரன்கள் எடுத்தார். நமீபியா தரப்பில் டிரம் பெல்மேன் 4 விக்கெட்டும் டேவிட் வைஸ் 3 விக்கெட் டும் எராஸ்மஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் விளையாடிய நமீபியா அணியும் 20 ஓவரில் 6 விக்கெட் 109 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டையில் முடிந்தது. ஆட்டம் டையில் முடிந்ததால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடை பிடிக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணியில் டேவிட் வைஸ், எராஸ்மாஸ் களம் இறங்கினர். பிலால் கான் வீசிய அந்த ஓவரில் ஒரு சிக்சர், மூன்று பவுண்டரி உள்பட 21 ரன்கள் எடுக்கப்பட்டது.

டேவிட் வைஸ் 13 ரன்னும், எராஸ்மாஸ் 8 ரன்னும் எடுத்தார். அடுத்து 22 ரன் இலக்குடன் ஓமன விளையாடியது. டேவிட் வைஸ் வீசிய அந்த ஓவரில் ஓமன் அணியால் ஒரு விக்கெட் இழந்து 10 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் நமீபியா வெற்றி பெற்றது.

இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 12 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் ஓவர் போட்டி நடைபெற்றுள்ளது. மேலும் டி20 உலகக் கோப்பையில் நடைபெற்ற சூப்பர் ஓவரில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை நமீபியா படைத்துள்ளது. இதற்கு முன்பு 19 ரன்கள் எடுத்ததே சூப்பர் ஓவரில் அதிக ரன் ஆகும். இதனை நமீபியா முறியடித்துள்ளது.

2012-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் 2 சூப்பர் ஓவர் நடைபெற்றது. ஒரு போட்டியில் இலங்கை -நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இலங்கை 13 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்தது.

2-வது சூப்பர் ஓவர் போட்டியில் நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் 19 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 17 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

2007-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் மோதிய ஆட்டம் டை ஆனது. ஆனால் அப்போது சூப்பர் ஓவருக்கு பதிலாக பவுல் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பை சூப்பர் ஓவர்களின் பட்டியல்:-

1. நியூசிலாந்து 174/7 (20 ஓவர்கள்) – இலங்கை 174/6 (20 ஓவர்கள்) – இலங்கை வெற்றி சூப்பர் ஓவர், 13/1 – 7/1 – கண்டி, 2012

2. மேற்கிந்திய தீவுகள் 139 (19.3 ஓவர்கள்) – நியூசிலாந்து 139/7 (20 ஓவர்கள்) – மேற்கிந்திய தீவுகள் சூப்பர் ஓவர் வெற்றி, 19/0 – 17/0 – கண்டி, 2012

3. ஓமன் 109 (20 ஓவர்கள்) – நமீபியா 109/7 (20 ஓவர்கள்) – நமீபியா சூப்பர் ஓவர் வென்றது, 21/0 – 10/1 – பார்படாஸ், 2024

By admin