பட மூலாதாரம், Getty Images
அரசியல் பதற்றங்கள் மற்றும் நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில், சனிக்கிழமை முதல் இந்தியா மற்றும் இலங்கையில் ஐசிசிஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடங்க உள்ளது.
வங்கதேசம் ஏற்கனவே தொடரைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தாங்கள் விளையாடப் போவதில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் போட்டி விதிகளின்படி, பாகிஸ்தான் போட்டியில் விளையாட மறுத்தால், அந்தப் போட்டிக்கான புள்ளிகளை அவர்கள் இழக்க நேரிடும். அதே நேரத்தில், அந்தப் போட்டிக்காக நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச புள்ளிகள் இந்தியாவுக்கு வழங்கப்படும்.
இதற்கிடையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் வாரியத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் இந்தியாவுடன் விளையாடாத முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த முடிவின் விளைவாகத் தாங்கள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும் என்று இலங்கை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் விளையாடாததால் ஏற்படும் தாக்கம் என்ன என்பது குறித்த நிச்சயமற்ற நிலை இன்னும் நீடிக்கிறது.
பாகிஸ்தானைப் பெரிய அபராதத்திலிருந்து காப்பாற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படும் டி20 உலகக் கோப்பை ஒப்பந்தத்துடன் தொடர்புடைய ஒரு விதியைப் பற்றிய விவாதமும் எழுந்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
இலங்கை எழுதிய கடிதம்
செய்தி நிறுவனமான பிடிஐ, இலங்கை ஊடக நிறுவனமான நியூஸ்வைர் தகவலை மேற்கோள் காட்டி, இலங்கை கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் விளையாடாதது இலங்கை கிரிக்கெட் வாரியத்தை மட்டுமல்லாமல், தொடரில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு பங்குதாரர்களையும் பாதிக்கும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேசத் தனிமைப்படுத்தலில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட்டை மீட்டெடுப்பதில் இலங்கை எவ்வாறு பங்காற்றியது என்பதையும் கடிதத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியம் நினைவுபடுத்தியுள்ளது.
மற்ற கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்யத் தயங்கியபோது, தாங்கள் பலமுறை பாகிஸ்தானுக்குச் சென்றதாக இலங்கை எழுதியுள்ளது.
இது 2009-ல் லாகூரில் இலங்கை அணியின் பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, மற்ற அணிகள் பாகிஸ்தான் செல்வதை நிறுத்திய காலத்தைக் குறிப்பிடுகிறது.
பட மூலாதாரம், Getty Images
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் கருத்துகள் என்ன?
தொடருக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் பிப்ரவரி 15 அன்று நடைபெறும் போட்டிக்காக இந்திய அணி இலங்கை செல்லும் என்பதை உறுதிப்படுத்தினார்.
போட்டியில் விளையாட வேண்டாம் என்று தங்கள் அணிக்கு எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்றும் அவர் கூறினார்.
“மனநிலை தெளிவாக உள்ளது… நாங்கள் விளையாட மறுக்கவில்லை. அவர்கள் தரப்பில்தான் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி கால அட்டவணை கொடுத்துள்ளது, பொதுவான இடத்தை முடிவு செய்துள்ளது. எங்களுடைய கொழும்பு விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் செல்கிறோம். மற்றதை அங்கே பார்த்துக் கொள்வோம்” என்றார் சூர்யகுமார் யாதவ்.
அதேசமயம், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் ஆகா ஒரு செய்தியாளர் சந்திப்பில், “இந்தியாவுடனான போட்டி எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இது அரசாங்கத்தின் முடிவு, அதை நாங்கள் மதிக்கிறோம். அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை நாங்கள் செய்வோம்” என்றார்.
இருப்பினும், அரையிறுதியில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதினால் என்ன செய்யப்படும் என்று அவரிடம் கேட்டபோது, “நாங்கள் மீண்டும் அவர்களுடன் (இந்தியா) அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் விளையாட வேண்டியிருந்தால், நாங்கள் மீண்டும் எங்களுடைய (அரசாங்கத்திடம்) செல்வோம், அவர்களின் ஆலோசனைப்படியே அடுத்த கட்டத்தை எடுப்போம்” என்றார்.
அதாவது, குரூப் சுற்றுக்குப் பிந்தைய போட்டிகள் குறித்தும் பாகிஸ்தானின் நிலைப்பாட்டில் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது.
கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்பும் அணிகள் தொடரின் போட்டிகளிலிருந்து விலகியுள்ளன. 1996 உலகக் கோப்பையில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து நடத்திய அந்தத் தொடரில், ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரு அணிகளும் இலங்கைக்குச் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தன.
இங்கிலாந்தும் 2003 உலகக் கோப்பையில் ஹராரேயில் நிலவிய பாதுகாப்பு கவலைகள் மற்றும் சமூக அமைதியின்மையைச் சுட்டிக்காட்டி ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் விளையாட மறுத்தது.
இவற்றில் எந்தவொரு நாட்டின் மீதும் பின்னர் ஐசிசி அபராதம் விதிக்கவில்லை அல்லது தண்டனை வழங்கவில்லை. இருப்பினும் அனைவரும் அவரவர் போட்டிகளுக்கான புள்ளிகளை இழக்க வேண்டியிருந்தது.
ஆனால் விளையாட்டில் அரசாங்கம் தலையிடும்போது ஐசிசி ஏற்கனவே பல நாடுகளுக்குத் தண்டனை வழங்கியுள்ளது. எனவே பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுமே சில நடவடிக்கைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
ஐசிசி-யின் சட்டவிதிகள் 2.4-வது பிரிவில், கிரிக்கெட் வாரியங்கள் தங்களது விவகாரங்களைத் தன்னாட்சியுடன் கையாள வேண்டும் என்றும், கிரிக்கெட்டின் நிர்வாகம், ஒழுங்குமுறை அல்லது செயல்பாடுகளில் எந்தவிதமான அரசாங்கத் தலையீடும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
2019-ல் ஜிம்பாப்வே அரசு கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்ததால், மூன்று மாதங்களுக்கு ஐசிசியின் தடையை எதிர்கொண்டது.
இதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மோசமான செயல்பாடுகள் காரணமாக இலங்கை அரசு கிரிக்கெட் வாரியத்தை கலைத்தது. இதன் விளைவாக, இலங்கையிடமிருந்து 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை நடத்தும் உரிமை பறிக்கப்பட்டது.
பின்னர், இரு நாடுகளின் ஐசிசி உறுப்பினர் அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட்டது.
தீவிர விவாதம்
பட மூலாதாரம், Getty Images
ஐசிசி மற்றும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து இதுவரை தெளிவு கிடைக்காத நிலையில், எம்பிஏ எனப்படும் ‘உறுப்பினர் பங்கேற்பு ஒப்பந்தம்’ மீது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. குறிப்பாக இதில் உள்ள ‘ஃபோர்ஸ் மேஷ’ என்ற விதி குறித்து விவாதம் தீவிரமடைந்துள்ளது.
இந்த விதியைப் பயன்படுத்தி பாகிஸ்தான் அபராதத்திலிருந்து தப்பிக்கும் என்று கூறப்படுகிறது.
உண்மையில், டி20 உலகக் கோப்பையில் விளையாடும் அனைத்து அணிகளும் எம்பிஏ-வில் கையெழுத்திட்டுள்ளன. ‘ஃபோர்ஸ் மேஷ ‘ என்பது தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் ஒரு உறுப்பினர் ஒப்பந்த விதிகளைப் பின்பற்றாமல் இருக்க அனுமதி அளிக்கும் விதியாகும். பொதுவாகப் போர், பயங்கரவாதம் அல்லது இயற்கை பேரழிவுகள் இதில் அடங்கும்.
இஎஸ்பிஎன் கிரிக்இன்போ தனது செய்தியில், தன்னிடம் எம்பிஏ-வின் பிரதி உள்ளதாகவும், அதன் அடிப்படையில் சட்ட வல்லுநர்கள் நந்தன் காமத் மற்றும் ரசா அலி பாகிஸ்தானின் புறக்கணிப்பு விளைவுகள் குறித்துப் பேசியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த உரையாடலின் படி, எம்பிஏ-வின் 12-வது பிரிவில் ஐசிசி நிகழ்வின் போது இத்தகைய சூழ்நிலைகள் ஏற்பட்டால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது விளக்கப்பட்டுள்ளது. ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதில் அரசாங்க உத்தரவும் ‘ஃபோர்ஸ் மேஷ’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்கள் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டிருப்பதால் இந்தியாவுக்கு எதிரான குரூப் போட்டியில் விளையாடும் நிலையில் தாங்கள் இல்லை என்று பாகிஸ்தான் வாதிட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
போட்டியில் விளையாடாத அணி இது குறித்த முறையான தகவலை ஐசிசி-க்கு வழங்க வேண்டும் என்றும் எம்பிஏ-வில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தனது அரசாங்கத்தின் எழுத்துப்பூர்வ உத்தரவை ஐசிசி-க்குத் தெரிவிக்க வேண்டும்.
இந்தத் தகவலில், அத்தகைய உத்தரவு ஏன், எப்படி மற்றும் எந்த அளவிற்கு ஒப்பந்தம் தொடர்பான பொறுப்புகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றும் திறனைத் தடுக்கிறது என்பதையும் பாகிஸ்தான் விளக்க வேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?
பிப்ரவரி 15 அன்று இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் தனது அணி களம் இறங்காது என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
விதிகளின்படி, பாகிஸ்தானின் முடிவு நேரடியாகப் புள்ளிப் பட்டியலில் பாதிப்பை ஏற்படுத்தும், அங்கு ஒவ்வொரு போட்டியின் புள்ளிகளும் அரையிறுதிப் பாதையைத் தீர்மானிக்கின்றன.
பாகிஸ்தான் விளையாடாதது எதிர்காலத்தில் இத்தகைய சூழல் மீண்டும் ஏற்படும் அபாயமும், எதிர்காலத் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் (TV Rights) தொடர்பான ஒப்பந்தங்களில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி அதிக வருமானம் தரக்கூடியது என்பதால் இக்கேள்வி முக்கியமானது.
பிபிசி ஸ்போர்ட்ஸ் டி20 உலகக் கோப்பை தொடரின் போட்டி விதிகளை ஆய்வு செய்துள்ளது. அதன்படி, “ஒரு அணி தோல்வியை ஒப்புக்கொண்டாலோ அல்லது விளையாட மறுத்தாலோ மேட்ச் ரெஃபரியின் கருத்துப்படி அந்த அணி போட்டியில் தோற்றதாகக் கருதப்படும்.”
போட்டி விதிகளில், “போட்டியில் விளையாட எந்த விதமான மறுப்பும் தெரிவித்தால்” ஐசிசி நன்னடத்தை விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட அணி மற்றும் அதன் கேப்டன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் மீது தண்டனைகள் விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்தியா திட்டமிட்டபடி கொழும்பு செல்லும், பயிற்சி எடுக்கும் மற்றும் போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பையும் நடத்தும்.
இதற்குப் பிறகும் பாகிஸ்தான் விளையாட மறுத்தால், அந்தப் போட்டி ‘ஃபார்ஃபிட்’ (விளையாடாமல் தோற்றதாக) கருதப்படும். இந்தியாவுக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும், பாகிஸ்தானுக்கு எந்தப் புள்ளியும் கிடைக்காது. மிக முக்கியமாக, பாகிஸ்தானின் நிகர ரன் ரேட் மீதும் இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்தியாவும் இந்தப் போட்டிக்காக இலங்கைக்குச் செல்லவில்லை என்றால், இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இருப்பினும், தற்போதைய நிலையில் இதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.
உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் ஒரு போட்டியின் இரண்டு புள்ளிகள் மிகவும் முக்கியமானவை. இந்த இழப்பு பாகிஸ்தானை மற்ற அணிகளை விடப் பின்தள்ளக்கூடும்.

பாகிஸ்தான் குரூப் சுற்றில் நான்கு போட்டிகளில் விளையாட வேண்டும். இதில் இந்தியாவுடனான போட்டியில் விளையாடப் போவதில்லை என்று அந்த அணி ஏற்கனவே கூறிவிட்டது.
பாகிஸ்தான் தனது மற்ற குரூப் போட்டிகளில் நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் நமீபியாவுடன் விளையாட வேண்டும். இந்த அணிகளை வெல்வது எளிதாகத் தோன்றலாம், ஆனால் 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அமெரிக்க அணியிடம் அதிர்ச்சிகரமான தோல்வியைச் சந்தித்தது.
இந்தத் தொடரிலும் அமெரிக்க அணி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினால் பாகிஸ்தானுக்குச் சவாலாக அமையலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு