உதகை அருகேயுள்ள ஒரு கிராமத்தில் சுற்றித் திரிந்த டி37 என்ற ஆண் புலி நவம்பர் 24ஆம் தேதியன்று பழங்குடிப் பெண் ஒருவரைத் தாக்கியதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து தேடப்பட்டு வந்த அந்தப் புலி வனத்துறையினர் வைத்த கூண்டில் இன்று(டிசம்பர் 11) சிக்கியுள்ளது.
இதுகுறித்துப் பேசியுள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குநர் எம்.ஜி. கணேசன், அது வேட்டைத் திறனை இழந்த வயதான புலி என்பதால், சென்னையிலுள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் நடந்தது என்ன? புலியை வனத்துறை பிடித்தது எப்படி? வேட்டைத் திறனை இழந்த புலி என்றால் என்ன?
பழங்குடிப் பெண்ணை தாக்கிய புலி
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள மாவனல்லா கிராமத்தில் நவம்பர் 24ஆம் தேதியன்று தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த நாகியம்மாள் என்ற பழங்குடிப் பெண்ணை புலி தாக்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தின் தாக்கத்தால், உள்ளூர் பொது மக்கள் புலியைப் பிடித்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் வனத்துறையினர் “தானியங்கி கேமராக்களை பொருத்தி, நான்கு குழுக்களுடன்” தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதன் மூலம், மாவனல்லா பகுதியில் ஒரு வயதான புலி சுற்றி வருவதையும், அது ஆண் புலி என்பதும் அடையாளம் காணப்பட்டது.
வனத்துறையின் அறிக்கைப்படி, பழங்குடியினப் பெண் உயிரிழந்த மறுநாளான நவம்பர் 25ஆம் தேதியன்று, தானியங்கி கேமராக்களை ஆய்வு செய்தபோது சம்பவம் நடந்த இடத்தில் டி37 எனப் பெயரிடப்பட்ட வயதான ஆண் புலி இருப்பது கண்டறியப்பட்டது.
படக்குறிப்பு, கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்ட புலியைக் காட்டுமாறு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
கூண்டில் சிக்கிய புலி
இதைத் தொடர்ந்து டி37 புலியைப் பிடிக்க நான்கு வெவ்வேறு இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது.
“புலியின் நடமாட்டத்தை ரோந்துப் பணிகள், டிரோன் மூலமாகவும், 29 தானியங்கி கேமராக்கள் வாயிலாகவும்” வனத்துறை கண்காணித்து வந்தது.
புலி கடந்த 24ஆம் தேதி பழங்குடிப் பெண்ணை தாக்கியது முதல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த கண்காணிப்புகளின் விளைவாக, “டிசம்பர் 11ஆம் தேதியன்று அதிகாலையில் செம்மநத்தம் சாலை பகுதிக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் புலி சிக்கியதாக” தனது அறிக்கையில் முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குநர் எம்.ஜி. கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த முயற்சியின்போது மயக்க மருந்து பயன்படுத்தப்படவில்லை எனவும் துணை இயக்குநர் கணேசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
படக்குறிப்பு, முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குநர் எம்.ஜி. கணேசன்
புலியை பார்க்க விடுமாறு மக்கள் போராட்டம்
சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக புலி குறித்த அச்சத்தில் இருந்து வந்த மாவனல்லா கிராமத்தைச் சேர்ந்த மக்கள், பிடிக்கப்பட்ட புலியைக் காணக் கூடியிருந்தனர். ஆனால், வனத்துறை புலி இருந்த பகுதிக்கு யாரையும் அனுமதிக்கவில்லை.
அதுமட்டுமின்றி, புலி சிக்கிய கூண்டு மூடப்பட்டு இருந்ததால், “அது பெண்ணைத் தாக்கிய புலி இல்லை” என்றும் பிடிக்கப்பட்ட புலியை பொது மக்களுக்குக் காட்ட வேண்டும் என்றும் கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதோடு, வனத்துறை வைத்த கேமராவில் ஒன்றுக்கும் மேற்பட்ட புலிகள் பதிவாகி இருப்பதால், பிடிக்கப்பட்டது பழங்குடிப் பெண்ணை தாக்கிய புலிதானா என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.
ஆனால், செய்தியாளர்களிடம் பேசியபோது இதற்குப் பதிலளித்த துணை இயக்குநர் கணேசன், “கூண்டில் சிக்கிய புலி, பழங்குடிப் பெண் தாக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்ட தானியங்கி கேமராவில் பதிவான அதே புலிதான் என்பது உறுதி செய்யப்பட்டது” என்று தெரிவித்தார்.
மேலும், அது வயதான புலி என்பதால் வேட்டையாடும் திறனை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், “அதன் கோரப் பற்கள், முன்னங்கால்கள், மூக்கு ஆகிய பகுதிகளில் காயங்கள் இருப்பதாகவும்” கூறியதோடு, “சுமார் 14 முதல் 15 வயது மதிக்கத்தக்க புலியாக அது இருக்கக்கூடும்” என்றும் தெரிவித்தார்.
அதோடு, “அது தனது வேட்டைத் திறனை இழந்துவிட்டதால், எளிதில் கிடைக்கக்கூடிய இரைகளான கால்நடைகளைக் குறிவைத்து வந்தது. அப்படிப்பட்ட ஒரு முயற்சியின்போதே பழங்குடிப் பெண்ணை தவறுதலாக புலி தாக்கியுள்ளது” எனவும் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Mudumalai Forest Department
படக்குறிப்பு, பழங்குடிப் பெண்ணை தாக்கிய புலியின் உடலில் மூக்கு, முன்னங்கால் ஆகிய பகுதிகளில் காயங்கள் இருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
வயதான புலிக்கு காட்டில் நேரும் அவலநிலை
புலிகள் பொதுவாக பன்னிரண்டு வயதை நெருங்கும்போது முதிர்ச்சி அடைவதன் விளைவுகளை அனுபவிக்கத் தொடங்குவதாகக் கூறுகிறார் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயிர் உயிரியலாளராக இருக்கும் பீட்டர் பிரேம் சக்கரவர்த்தி.
“ஒரு புலியால், வயதாகிவிட்டால் இரை உயிரினங்களை வேகமாகச் செயல்பட்டு துரத்திப் பிடிக்க முடியாது. இதன் காரணமாக, எளிதில் பிடிக்க ஏதுவான இரைகளாகப் பார்த்து வேட்டையாடத் தொடங்கும்.
நோய்வாய்ப்பட்ட விலங்கு, அடிபட்ட உயிரினங்கள் போன்றவற்றைக் குறிவைக்கலாம். அப்படியான வாய்ப்புகளும் கிடைக்காமல் போகும் சூழலில், அவை கால்நடைகள் அல்லது மனிதர்களை வேட்டையாடும் முயற்சியில் ஈடுபடக்கூடும்,” என்று விவரித்தார்.
அவரது கூற்றுப்படி, தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் அந்தப் புலியை அதன் வாழ்விடத்தில் இருந்து துரத்தும் செயல்களில் பிற இளம் புலிகள் ஈடுபடலாம். “அந்தச் சூழலில், காட்டின் வெளிப்பகுதிகளை நோக்கி அவை தள்ளப்படுகின்றன. அப்போது கால்நடைகள் போன்ற எளிதில் பிடிக்கவல்ல இரைகள் மீது அவை குறிவைக்கின்றன.”
இந்தக் குறிப்பிட்ட டி37 புலியின் உடலில்கூட முன்னங்கால்கள், மூக்கு ஆகிய பகுதிகளில் காயங்கள் இருப்பதாக முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் கணேசன் செய்தியாளர்களிடம் பேசியபோது குறிப்பிட்டிருந்தார்.
அதற்கும் ஒருவேளை காட்டுயிர் உயிரியலாளர் பீட்டர் கூறுவதைப் போல் பிற புலிகளுடன் ஏற்பட்ட வாழ்விட மோதல் காரணமாக இருக்கக்கூடுமா என்ற கேள்வி எழுந்தது.
அதுகுறித்து விளக்கியபோது, “அதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக இருப்பதாக” குறிப்பிட்ட கணேசன், புலிகளிடையே நிகழும் அத்தகைய மோதல்களின் விளைவாகவே இப்படிப்பட்ட காயங்கள் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
தற்போது பிடிக்கப்பட்டுள்ள டி37 புலி, முதிர்ச்சி காரணமாக அதன் வேட்டைத் திறனை இழந்துவிட்டதை கால்நடை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
எனவே, “அதைக் காட்டில் விடுவிப்பது சாத்தியமில்லை என்று முடிவு செய்துள்ள வனத்துறை, சென்னையிலுள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அதைக் கொண்டு செல்லத் தீர்மானித்துள்ளது” என்று முதுமலை துணை இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளார்.