- எழுதியவர், ஜோ டைடி
- பதவி, சைபர் நிருபர், பிபிசி உலக சேவை
-
சீன ஏஐ சாட்பாட் டீப்சீக்கின் எழுச்சி உலகளவில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.
ஆனால், சீனாவின் வளர்ச்சியை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த வெற்றி ஆச்சரியமளிக்கவில்லை.
ஏனென்றால், ‘மேட் இன் சீனா 2025’ என்ற லட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த பத்து ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட உயர் தொழில்நுட்பத் தயாரிப்புகளில் தனது நிபுணத்துவத்தை சீனா மெதுவாக வளர்த்து வருகிறது.
ஆய்வாளர்களைப் பொறுத்தவரை, டீப்சீக்கின் வெற்றி என்பது பிரமாண்டமான ஒரு திட்டம் வெற்றியடைந்தது என்பதற்கான மற்றுமொரு சான்றாகும்.
‘மேட் இன் சைனா 2025’ எனும் திட்டம் 2015-இல் சீன அரசால் பெரும் ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்டது.
லட்சக்கணக்கான அன்றாடப் பொருட்களின் அடியில் காணப்படும் பொதுவான லேபிளை மலிவான மற்றும் குறைவான தரம் கொண்ட உற்பத்தியின் அடையாளம் என்பதில் இருந்து, மேம்பட்ட, உயர்தர தொழில்நுட்பத்தின் அடையாளமாக மாற்றுவதே அத்திட்டத்தின் குறிக்கோளாக இருந்தது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்குள் சீனா ஆதிக்கம் செலுத்த வேண்டிய பகுதிகளாக பத்து தொழில்நுட்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், மின்சார கார்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பேட்டரி தொழில்நுட்பம் போன்ற துறைகள், அந்த திட்டத்துக்கான விரிவான ஆவணங்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட இந்த தொழில்நுட்பங்கள் பலவற்றில் சீனா ஒரு பெரிய சாதனையாளராக உருவாகி வெற்றி பெற்றுள்ளது. மேலும் சில தொழில்நுட்பங்களில் மிகுந்த நம்பிக்கை தரும் இலக்குகளையும் எட்டியுள்ளது.
மேட் இன் சீனா 2025
“‘மேட் இன் சீனா 2025’ எனும் திட்டம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது என்பது என் கருத்து. பல தொழில்களில் சீனா முன்னணி இடத்தை அடையும் போட்டியில் உள்ளது மற்றும் சில தொழில்களில் சீனா முன்னணி இடத்தில் உள்ளது,” என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் வளர்ச்சிப் பொருளாதாரத்தின் நிபுணர் டாக்டர் யுண்டன் காங் தெரிவித்தார்.
குறிப்பாக, பிஒய்டி போன்ற மின்சார கார் தயாரிப்பாளர்கள் காரணமாக, மோட்டார் வாகன தொழில்களில் முன்னணி இடங்களில் உள்ள நாடுகளை (ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா) சீனா முந்தியுள்ளது.
உலகின் மிகப்பெரிய பேட்டரி தயாரிப்பாளராக இருப்பது சீனாவிற்கு மின்சார வாகனங்கள் தயாரிக்கும் தொழில் துறையில் பெரும் நன்மையை அளித்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலில், சர்வதேச எரிசக்தி ஏஜென்சியின் (IEA) படி, சோலார் பேனல்கள் தயாரிப்பின் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் 80-95 சதவீதம் சீனாவின் வசம் உள்ளது.
சீனா, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையமாக இருப்பதாகவும், 2028 ஆம் ஆண்டுக்குள் உலகின் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் 60 சதவீதம் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதேபோல், ட்ரோன் தொழிலும் சீனா முன்னணியில் உள்ளது. ஷென்செனை தளமாகக் கொண்ட டிஜேஐ நிறுவனம், உலகளாவிய சந்தையில் 70 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.
உலகின் முதல் 10 ட்ரோன் உற்பத்தியாளர்களில் மூவர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று பிபிசி ஆராய்ச்சியின் படி அறியப்படுகின்றது.
முன்னதாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தனது நோக்கங்களை அடைவதற்காக, 250க்கும் மேற்பட்ட சிறு இலக்குகளைக் கொண்ட ஒரு விரிவான திட்டத்தை உருவாக்கியது.
சவுத் சீனா மார்னிங் போஸ்ட் பகுப்பாய்வின்படி, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளில் 86 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் மார்ஷல் ஃபண்ட் சிந்தனைக் குழுவின் நிர்வாக இயக்குநரும், அமெரிக்க அதிபர் பைடனின் முன்னாள் ஆலோசகருமான லிண்ட்சே கோர்மன் கூறுகையில், “அரசு ஆதரவு பெற்ற முதலாளித்துவத்தின் மாதிரியைப் பயன்படுத்துவதில் சீனா வெற்றி பெற்றுள்ளது” எனக் குறிப்பிடுகிறார்.
வெளிநாட்டுத் திறன்களை ஈர்ப்பதிலும், கூட்டு முயற்சிகள் மூலம் சீன நிறுவனங்களுடன் ஒத்துழைக்க சர்வதேச நிறுவனங்களை ஊக்குவிப்பதிலும் சீனா வெற்றிகரமாக உள்ளது என்பதை லிண்ட்சே கோர்மன் எடுத்துரைக்கிறார்.
அதற்காக பெரும் தொகையும் செலவிடப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆய்வின்படி, சீன அரசாங்கம் 1.5 டிரில்லியன் டாலர்களை ஆராய்ச்சி, மேம்பாடு அல்லது வெளிநாட்டு நிறுவனங்களை வாங்குவதற்கு மானியமாக சேகரிக்க திட்டமிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில் 627 பில்லியன் டாலருக்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளது என அறியப்படுகின்றது.
‘மேட் இன் சீனா 2025’ எனும் திட்டம் மிகப்பெரும் வெற்றியடைந்தது. அதனால் மற்ற நாடுகளுடன் பதற்றம் ஏற்பட்டதால், சில ஆண்டுகளுக்குப் பிறகு சீன அரசாங்கம் இதனைப் பயன்படுத்துவதை நிறுத்தியது.
ஆனால் அந்த நடவடிக்கை மிகவும் தாமதமாகத் தான் எடுக்கப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில் மேற்கில் உள்ள பல நாடுகள் தங்கள் தொழில்நுட்பம் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கு கடுமையான தடைகளை விதித்துள்ளன.
அதாவது, சில தொழில்நுட்பங்களில் சீனாவின் வளர்ச்சியை மட்டுப்படுத்துவதே மேற்கத்திய நாடுகளின் திட்டம். எடுத்துக்காட்டாக, மைக்ரோசிப் கண்டுபிடிப்பில், இந்த உத்தி பயனுள்ளதாக இருக்கிறது என அறியப்படுகின்றது.
மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட தடைகள்
மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், இந்த தடை நடவடிக்கைகளின் மூலம், சில தொழில்நுட்பங்களில் கடினமாக முயற்சி செய்ய சீனா ஊக்கம் பெற்றதாக சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, சீனா தற்சார்புடன் செயல்படத் தொடங்கியிருப்பது, ‘மேட் இன் சீனா 2025’ எனும் திட்டத்துக்கான முக்கிய உந்துதலாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
“சீனாவில் ஒரு பழைய பழமொழி உள்ளது. வாழ்க்கை எப்போதும் அதன் சொந்த வழியைக் கண்டுபிடிக்கும், என்பது தான் அந்தப் பழமொழி” என நினைவுகூருகிறார் கார்டிஃப் யுனிவர்சிட்டி பிசினஸ் ஸ்கூலின் பயன்பாட்டு பொருளாதாரப் பேராசிரியரான பெங் சோவ்.
“கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் அதன் வேரை மட்டுமே மாற்றுகின்றன, அதன் திசையை அல்ல,” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
பேராசிரியர் சோவ் போன்ற வல்லுநர்கள் டீப்சீக் தொழில்நுட்பத்தை இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகக் குறிப்பிடுகின்றனர்.
அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி கட்டுப்பாடுகள் இருப்பதால், மிகவும் சக்தி வாய்ந்த சிப்களை டீப்சீக் நிறுவனத்தால் பெற முடியவில்லை.
அதற்குப் பதிலாக, பழைய மற்றும் சக்தி குறைந்தவற்றைக் கொண்டு டீப்சீக்கின் சிப்களைச் செய்ததாகவும், மிகக் குறைவான கிட் மூலம், மிகக் குறைந்த பணத்தில், கவனம் ஈர்க்கும் அதன் தொழில்நுட்பத்தை உருவாக்க புதிய திட்டங்களை கண்டுபிடித்ததாகவும் அந்நிறுவனம் கூறுகிறது.
இந்த கூற்றுகள் சில போட்டியாளர்களால் நிராகரிக்கப்படுகின்றன. ஆனால் டீப்சீக் அமெரிக்காவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு “எச்சரிக்கை ஒலி” என்று அதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அலிபாபா மற்றும் பைட் டான்ஸ் போன்ற சீனாவின் தொழில்நுட்ப முன்னோடிகள் கூகுள் மற்றும் ஓபன் ஏஐ போன்றவற்றைப் போலவே அதிக முதலீடு செய்கின்றன.
ஆனால், ‘மேட் இன் சீனா 2025’ திட்டம் இருந்த போதிலும், ஏஐ தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைமையாக, தற்போதும் அமெரிக்காவே கருதப்படுகிறது.
அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள சீனா
சீன விஞ்ஞானிகள் மற்ற எந்த நாட்டையும் விட குவாண்டம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை ஆண்டுதோறும் வெளியிட்டாலும், குவாண்டம் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்கள் பெரும்பாலானவற்றில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது.
மறுபுறம், நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் மதிப்பிலான தனியார் மற்றும் பொதுப் பணத்தை மைக்ரோசிப் உற்பத்தி, அறிவியல் மற்றும் ஏஐ உட்கட்டமைப்பு ஆகியவற்றில் செலுத்துவதன் மூலம் சீனாவின் சவாலை எதிர்கொள்ள அமெரிக்காவும் முன்னேறி வருகிறது.
ஆனால், தொழில்நுட்பத்தில் சீனா அடைந்துள்ள வேகமான முன்னேற்றங்கள் பிற நாடுகளில் தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன.
அமெரிக்காவைச் சாராத உலகளவில் பிரபலமான முதல் சமூக வலைதள நிறுவனமாக டிக் டாக் அறியப்படுகின்றது.
அதன் பெரும் வெற்றியானது, உளவு பார்க்க பயன்படுத்தப்படலாம் என்ற பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.
அதன் எதிரொலியாக அமெரிக்கா விதித்துள்ள தடையின் மூலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது சீனா.
டீப்சீக்கின் வெற்றியைத் தொடர்ந்து, டெமு மற்றும் ஷீன் போன்ற சீன இணையவழி பயன்பாடுகளும் பாதுகாப்பு காரணங்களுக்கான தடை போன்ற அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு