பட மூலாதாரம், Getty Images
சில தினங்களுக்கு முன் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், ஒருகட்டத்தில் டெம்பா பவுமாவும், மார்கோ யான்சனும் இணைந்து பேட்டிங் செய்துகொண்டிருந்தனர்.
ஓவர்களுக்கு இடையே அவர்கள் அருகருகே நின்று விவாதித்துக் கொண்டிருந்தபோது, வர்ணனையாளர்கள் இப்படிப் பேசினார்கள்: “சர்வதேச கிரிக்கெட்டில் உயர வித்தியாசம் அதிகமாக இருக்கும் ஜோடி இதுவாகத்தான் இருக்கும்.”
அந்த இருவரும் அருகருகே இருக்கும் காட்சியைப் பார்த்த பலரும் அதைப் பற்றித்தான் பேசுகிறார்கள்.
அவர்களுக்கு இடையே சுமார் 40 சென்டிமீட்டர் அளவுக்கும் மேல் உயர வித்தியாசம் இருப்பதால் அது பேசுபொருளாகிவிடுகிறது.
குறிப்பாக இன்று சர்வதேச கிரிக்கெட்டில் உயரம் குறைவான வீரர்களில் பவுமாவும் ஒருவர் என்பதால், அதை பற்றிக் குறிப்பிடாமல் பெரும்பாலான உரையாடல்கள் முடிவதில்லை.
இதே போட்டியின் முதல் நாளில் பவுமாவுக்கு எதிராக ரிவ்யூ எடுப்பது பற்றி ரிஷப் பந்த் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் பேசிய உரையாடலில் ‘பௌனா’ என்ற இந்தி வார்த்தை (உயரம் குறைவானர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பேச்சு வழக்கு வார்த்தை) பயன்படுத்தப்பட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
அது பவுமாவை நேரடியாகக் குறிக்கும் வார்த்தை இல்லை என்று சிலர் கூறினாலும், அதைத் தவிர்த்திருக்கலாம் என்று சிலர் வாதிட்டனர்.
பவுமா பற்றிப் பேசினாலே அவரது உயரம் பற்றி பேச்சு வந்துடுவிடுகிறதே என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரும் வருத்தம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தமிழ் வர்ணனையாளர்கள் இந்தப் போட்டியின்போது பவுமாவின் உயரம் பற்றி வேறொரு பரிமாணத்தில் பேசினார்கள்.
ஒவ்வொரு பேட்டரும் இந்தப் போட்டியில் பேட்டிங் செய்யத் தடுமாறும்போது, பவுமா மட்டும் எப்படி சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கிறார் என்று பேசியவர்கள், “பவுமாவின் உயரம் அவருக்கு சாதகமான அம்சமாக இருக்கிறது.” என்று குறிப்பிட்டார்கள்.
அவரது குறைவான உயரம்தான் அவரை நீண்ட நேரம் விளையாட வைத்தது என்றார்கள். அதுதான் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க எதிர்பார்த்ததை விட பெரிய ஸ்கோரை எட்டக் காரணம் என்றும் கூறினார்கள்.
தென்னாப்பிரிக்கா பெரிய ஸ்கோர் எடுக்கவும், இந்தியாவை அவர்கள் வீழ்த்தவும், பவுமாவின் உயரம் உதவியதா?
கடினமான களத்தில் பவுமாவின் போராட்டம்
இந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 100 பந்துகளுக்கும் மேலாக சந்தித்த, அரைசதம் அடித்த ஒரே வீரர் பவுமா மட்டும்தான்.
தென்னாப்பிரிக்க அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் நீண்ட நேரம் போராடிய அவர், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 136 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார்.
இந்தப் போட்டி நடந்த ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பேட்டர்கள் அனைவரும் பெரும் சவாலை எதிர்கொண்டிருந்தனர். மொத்தம் இரண்டே முக்கால் நாள்களிலேயே முடிந்திருந்த இந்த ஆட்டத்தில் 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே 594 ரன்கள் தான் எடுக்கப்பட்டிருந்தது.
அதிலும் குறிப்பாக ஸ்பின்னர்களை எதிர்கொள்வது அனைவருக்குமே மிகவும் சிரமமாக இருந்தது. பெரும் விமர்சனங்களுக்குள்ளான இந்த ஆடுகளத்தில் பந்துகளைக் கணிப்பது கடினமாக இருந்தது.
பந்தின் ‘டர்ன்’, ‘பவுன்ஸ்’, ‘டிப்’ போன்ற விஷயங்களை சரியாக யூகிக்க பேட்டர்கள் தடுமாறினார்கள். .
பட மூலாதாரம், Getty Images
இரண்டாவது நாளின் இறுதியில் வர்ணனை செய்துகொண்டிருந்தபோது, இந்த ஆடுகளத்தில் நான்காவது இன்னிங்ஸுக்கு 120 ரன்கள் என்ற இலக்கே கடினமாக இருக்கும் என்று கூறியிருந்தார் இந்திய முன்னாள் வீரர் ஶ்ரீதரன் ஶ்ரீராம்.
ஆனால், முதல் இன்னிங்ஸில் 30 ரன்கள் பின்தங்கியிருந்த தென்னாப்பிரிக்க அணி, இரண்டாம் இன்னிங்ஸில் ஒருகட்டத்தில் 75/6 என்ற நிலையில் இருக்க, 150 ரன்களெல்லாம் வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்டது. ஆனால், அவர்களை 153 என்ற ஸ்கோருக்கு எடுத்துச் சென்றார் பவுமா.
தென்னாப்பிரிக்க அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஒருகட்டத்தில் இந்திய ஸ்பின்னர்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தினார்கள். குறிப்பாக ஜடேஜா விக்கெட்டுகள் மேல் விக்கெட்டுகளாக வீழ்த்தினார். அதிலும் இரண்டாவது நாளின் மூன்றாவது செஷனில் ஆடுகளம் பேட்டிங் செய்யக் கடினமாக இருந்தது. அப்போது தன்னுடைய போராட்டத்தைத் தொடங்கினார் பவுமா.
ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டே இருந்தாலும், அவர் நிலைத்து நின்று விளையாடினார். யான்சன் மற்றும் கார்பின் பாஷ் உடன் சிறு பார்ட்னர்ஷிப்களும் அமைத்தார். அனைவரையும் அச்சுறுத்திய ஜடேஜாவுக்கு எதிராக 46 பந்துகள் சந்தித்திருந்தாலும், அதை அற்புதமாகக் கையாண்டார் அவர்.
அப்போதுதான் தமிழ் வர்ணனையாளளர்கள் அவரது உயரம் அவருக்கு எப்படி சாதகமாக இருக்கிறது என்று பேசினார்கள்.
பவுமாவின் ஈர்ப்பு மையம் (சென்ட்டர் ஆஃப் கிராவிட்டி – Centre of Gravity) நன்கு தாழ்ந்து இருப்பதாலும், அவரது அடித்தளம் நன்கு திடமாக இருப்பதாலும், அது அவருக்கு இந்தப் போட்டியில் உதவியதாக பிபிசி தமிழிடம் கூறினார் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான கே.பி.அருண் கார்த்திக்.
அவரது தாழ்ந்த ஈர்ப்பு மையத்தின் காரணமாக மற்ற வீரர்களைவிட எளிதாக அவரால் இந்த ஆடுகளத்தையும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களையும் எதிர்கொள்ள முடிந்தது என்றார் அவர்.
தாழ்ந்த ஈர்ப்பு மையம் என்றால் என்ன? அதன் சாதகம் என்ன?
ஒரு பொருளின் மொத்த எடை, ஒரே புள்ளியில் செயல்படுவதாகக் கொள்ளப்படுவதே ஈர்ப்பு மையம் (Centre of Gravity) எனப்படும்.
உதாரணமாக ஒரு பேனாவின் மையப் பகுதியை நம் விரலில் வைத்து நம்மால் சமநிலைப்படுத்த (balance) முடிகிறது அல்லவா, அதற்குக் காரணம் அந்தப் பேணாவின் ஈர்ப்பு மையம் அந்த நடுப்பகுதியில் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் அதன் ஈர்ப்பு மையம் ஒவ்வொரு இடத்தில் இருக்கும்.
”மனிதர்களைப் பொறுத்தவரை ஈர்ப்பு மையம் நம் நிலையைப் பொறுத்து மாறும். நாம் கால்களை அகன்று வைத்திருக்கும்போது ஈர்ப்பு மையம் கீழே இருக்கும். அப்போது நல்ல நிலைத்தன்மை இருக்கும். அதுவே கால்களை ஒட்டி வைத்திருக்கும்போது ஈர்ப்பு மையம் மேலே இருக்கும். அப்படியான சூழ்நிலைகளில் நாம் எளியில் விழுந்துவிடுவோம். சுமோ வீரர்களோ, மல்யுத்த வீரர்களோ சண்டையிடும்போது கால்களை அகற்றி வைப்பதற்கான காரனம் இதுதான்” என்று பிபிசி தமிழிடம் கூறினார் விளையாட்டு மருத்துவரான ஹரிணி முரளிதரன்.
சுறுக்கமாகச் சொன்னால், ஈர்ப்பு மையம் தாழ்வாக இருந்தால் நிலைத்தன்மை அதிகமாக இருக்கும்.
பட மூலாதாரம், Getty Images
பவுமாவின் உயரம் சாதகமாக அமைந்தது எப்படி?
பவுமாவின் உயரம் மற்றும் தாழ்ந்த ஈர்ப்பு மையம் பற்றிப் பேசிய கே.பி.அருண் கார்த்திக், “பொதுவாக ‘லோ சென்ட்டர் ஆஃப் கிராவிட்டி’ இருக்கும் வீரர்களிடம் நல்ல சமநிலை இருக்கும். பவுமா உயரம் குறைவாக இருப்பதால் அவரது சென்ட்டர் ஆஃப் கிராவிட்டி தாழ்ந்து இருக்கிறது. மேலும், அவரது பேட்டிங் ஸ்டான்ஸ் (பேட்டர்கள் பந்தை சந்திப்பதற்குத் தயாராகும்போது நிற்கும் முறை) சற்று அகலமாக இருக்கிறது. இதனால் அவரால் திடமாக நகர முடிகிறது” என்று கூறினார்.
“பந்து நன்கு திரும்பும் விக்கெட்டுகளில் இது சாதகமான ஒரு அம்சம். பந்தைப் பற்றி அவரால் நன்கு கணிக்க முடியும். அது எப்படியான பந்து என்பதையும் சீக்கிரம் அறிந்துகொள்ள முடியும். பொதுவாக ‘லென்த்தில்’ வீசப்படும் பந்துகளுக்கு பெரும்பாலான வீரர்கள் ‘ஃப்ரன்ட் ஃபூட்’ (கால்களை முன் நகர்த்தி) வைத்து ஆடுவார்கள். ஆனால் அவர் அந்தப் பந்துகளை பேக் ஃபூட்டில் (கால்களைப் பின் நகர்த்தி) ஆடினார். அதனால் பந்தின் தன்மையை இன்னும் சரியாகக் கணிக்க முடிகிறது, அதை எதிர்கொள்வதற்கான கூடுதல் அவகாசமும் அவருக்குக் கிடைக்கிறது” என்றும் அருண் கார்த்திக் கூறினார்.
ஒருவேளை பந்துகள் திரும்பினாலும் கூட அவர் பேட்டுக்கு வெளியே செல்கிறதே தவிர, உள்ளே வரவில்லை என்றும் அவர் கூறினார்.
அதேசமயம் பவுமாவின் உயரம், ஒரு கட்டத்தில் யான்சன், பாஷ் போன்ற வீரருக்கும் உதவியது என்று கூறினார் அருண் கார்த்திக்.
“மிகவும் உயர வித்தியாசம் கொண்ட வீரர்கள் ஆடும்போது பௌலர்கள் தங்களின் ‘லென்த்தை’ மாற்றவேண்டிய நிலை ஏற்படும். அது அவர்களுக்கு சற்று பாதகமான அம்சம். சீராக ஒரே போல் வீசிக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த மாற்றம் பின்னடைவைக் கொடுக்கும். அது பேட்டர்களுக்கு சாதகமாக அமையும்” என்றார் அவர்.
வர்ணனையின்போது இந்த விவாதத்தைத் தொடங்கிவைத்த இந்திய முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் இந்த தாழ்வான ஈர்ப்பு மையமும், பவுமான டிஃபன்ஸிவ் மனநிலையும் இணைந்து ஒரு மிகச் சிறந்த இன்னிங்ஸைக் கட்டமைத்தது என்றார்.
பட மூலாதாரம், Getty Images
பிபிசி தமிழிடம் இதுபற்றிப் பேசிய அபினவ் முகுந்த், “தன்னுடைய உயரத்தை நன்கு சாதகமாக்கிக்கொண்ட பவுமா, பந்துகளுக்கு அதிகமாக ‘கமிட்’ (commit) ஆகவில்லை” என்றார்.
”அவர் அதிகமாக ‘இனிஷியல் மூவ்மென்ட்’ எதுவும் கொடுக்கவில்லை. அதிகம் முன்னே நகராமல் ரொம்பவும் கொஞ்சமாகதான் கால்களை முன்பு நகர்த்தினார் (a small front press). அதனால் எந்தப் பந்துக்கும் அவர் முன்கூட்டியே சென்றுவிடவில்லை. இது டிஃபன்ஸிவ் கிரிக்கெட் விளையாடுவதற்கான ஒரு நல்ல வழிமுறை.” என்று கூறினார்.
தற்போது டி20 போட்டிகளில் அதிகம் விளையாடாத பவுமாவால் தடுப்பு ஆட்டத்தின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்கா 75/6 என்ற தடுமாறிக்கொண்டிருந்தபோது யான்சன் மற்றும் பாஷ் உடன் கூட்டணி அமைத்துத்தான் தென்னாப்பிரிக்காவின் ஸ்கோரை உயர்த்தினார் பவுமா.
பவுமாவுக்கு அடுத்து அந்த இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவுக்காக அதிக ரன்கள் அடித்தது பாஷ் (25 ரன்கள்) மற்றும் யான்சன் (13 ரன்கள்) இருவரும்தான். இந்த எதிர்பாராத இன்னிங்ஸ்கள்தான் தென்னாப்பிரிக்கா 123 என்ற பெரிய முன்னிலை (அந்த ஆடுகளத்துக்கு அது பெரிய இலக்காகவே கருதப்பட்டது) பெறக் காரணமாக அமைந்தது.
கவாஸ்கர், சச்சின் போன்றவர்களுக்கும் உதவியது
பவுமா மட்டுமல்ல, சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் முதல் மெஸ்ஸி வரை உயரம் குறைவான வீரர்கள் அதீத நிலைத்தன்மையோடு காணப்பட்டதற்கு அந்த ஈர்ப்பு மையம் தாழ்வாக இருந்ததுதான் காரணம் என்று வல்லுநர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கூட பாட்காஸ்ட்டில் சில மாதங்கள் முன்பு இதுபற்றிப் பேசியிருந்தார்.
தனக்கு முந்தைய தலைமுறை வீரர்களிடம் பேட்டிங் பற்றி டிராவிட் ஏதும் பின்பற்றியிருக்கிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதுபற்றிப் பேசிய டிராவிட், “கவாஸ்கர் அற்புதமான நிலைத்தன்மை கொண்டவர். அதை நான் எப்போதும் வியந்திருக்கிறேன். நான் சற்று உயரம் அதிகம் என்பதால், என்னால் எதையும் பின்பற்ற முடியவில்லை. அதனால் எனக்கு ஏற்ற வகையில் நான் நின்றேன். அதேசமயம் டெண்டுல்கரும் நன்கு நிலைத்தன்மை கொண்டிருந்தார். உயரம் குறைவான வீரர்களுக்கு ‘லோ சென்ட்டர் ஆஃப் கிராவிட்டி’ இருப்பதால் அவர்களுக்கு எப்போதுமே அதிக நிலைத்தன்மை கொண்ட பார்வை ஏற்படும் என்று சொல்வார்களே” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
மேலும், “கடந்த காலத்தில் விளையாடிய வீரர்களில் பல சிறந்த பேட்டர்கள் உயரம் குறைவானவர்களாக இருந்திருக்கிறார்கள். கவாஸ்கர், டெண்டுல்கர், லாரா, பான்டிங்… அந்தக் காலத்தில் பிராட்மேன் வரை பாருங்கள். கோலி கூட கொஞ்சம் உயரம் குறைவானவர்தான். அவருக்கு நான் அப்படி சொல்வது பிடிக்காமல் போகலாம்” என்றும் டிராவிட் கூறியிருந்தார்.
தற்போது கிரிக்கெட் மாறிவரும் சூழலில், டி20 கிரிக்கெட் எழுச்சி பெற்றிருக்கும் நிலையில், அது உயரமான வீரர்களுக்கு சாதகமாக இருப்பதாகக் கூறினார் டிராவிட்.
உயரமான வீரர்கள் பந்தை எட்டுவதற்கும் நன்கு பலம் கொடுத்து அடிப்பதற்கும் அவர்கள் உயரம் உதவுவதாகக் கூறிய டிராவிட், கெவின் பீட்டர்சன், கரன் பொல்லார்ட் போன்றவர்களை உதாரணமாகக் கூறினார்.
அதேசமயம், டெஸ்ட் போட்டிகளில் உயரம் குறைவான வீரர்களால் மற்றவர்களைவிட அதிகம் சோபிக்க முடியும் என்கிறார் கே.பி.அருண் கார்த்திக்.
ஆலன் டொனால்டுக்கு எதிராக ஈர்ப்பு மையத்தை மேலும் தாழ்வாக்கிய சச்சின்
“அரௌண்ட் தி ஸ்டம்ப் (around the stump line) வந்து எனது விலாவைக் குறிவைத்து பந்துவீசிக்கொண்டிருந்தார் ஆலன் டொனால்ட். ‘உயரமான வீரர்கள் பந்துக்கு மேலே சென்று ஆடுவதுபோல், நாம் ஏன் பந்துக்கு கீழே சென்று ஆடக்கூடாது’ என்று யோசித்தேன். உடனே என்னுடைய ஈர்ப்பு மையத்தைத் தாழ்த்தி, பந்துக்குக் கீழே செல்லத் தொடங்கினேன். அதன்பிறகு அவரை எதிர்கொள்வது சற்று எளிதானது,” என்று கூறியிருக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
மேலும், “ஒருவேளை பந்து ‘ஷார்ட் ஆஃப் குட் லென்த்தில்’ (short of good length) பிட்ச் ஆனாலும், என்னால் அதற்குக் கீழே செல்ல முடிந்தது. அதைத் தொடர்ச்சியாக செய்ய நான் என் ஸ்டான்ஸை அகலப்படுத்தி, இன்னும் கீழே செல்லத் தொடங்கினேன். அதன்பிறகு பந்தின் லென்த்தைக் கணிப்பதுதான் விஷயம். அதை நான் சரியாகக் கணித்தபின், பந்தைப் பற்றி நன்கு அறிந்துகொள்ளும் நிலையில் இருந்தேன்.” என்றும் சச்சின் கூறினார்.
ஈடன் கார்டனில் பவுமா இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொண்டது கிட்டத்தட்ட இப்படித்தான்.
உயர்ந்து நின்ற பவுமா
ஈர்ப்பு மையம் தாழ்வாக இருப்பதோடு, நன்கு அகலமான ஸ்டான்ஸ் கொண்டிருந்ததால், வீசப்படும் பந்துகளைப் பவுமாவால் நன்கு அறிந்திருக்க முடிந்தது என்றார் அருண் கார்த்திக். அதனால் தான் ஜடேஜாவுக்கு எதிராக அனைவரும் விக்கெட்டுகள் இழந்தபோது பவுமா உறுதியாக நின்றார் என்கிறார் அவர்.
ஜடேஜா அன்று வீசியது மிகச் சிறந்த ஸ்பெல்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. அவர் வீசிய 20 ஓவர்களில், 17 ஓவர்களில் குறைந்தது ஒரு பந்தையாவது சந்தித்திருந்தார் பவுமா.
பட மூலாதாரம், Getty Images
மற்ற பேட்டர்கள் ஜடேஜாவின் பந்தைக் கணிக்கத் தவறியபோது, பவுமா அதில் எந்தத் தவறும் செய்யவில்லை. காரணம், தமிழ் வர்ணனையாளர்கள் சொன்னதுபோல், பவுமாவின் உயரமும், அவரது ஸ்டான்ஸும்.
அந்த இன்னிங்ஸ் இல்லாமல் இருந்திருந்தால் தென்னாப்பிரிக்கா விரைவில் ஆல் அவுட் ஆகியிருக்கும். இலக்கு குறைவாக இருந்திருந்தால் இந்தியா அந்தப் போட்டியை வென்றிருக்கும். ஆனால், பவுமாவின் அந்த இன்னிங்ஸ் அதைத் தடுத்துவிட்டது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு