நகரின் பொது இடங்களிலிருந்து சுமார் 950 கொடிகளை அகற்றியுள்ளதாக டெர்பி மாநகராட்சி நிர்வாகம் (Derby City Council) அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையின் கீழ், நகரின் பாலங்கள், சுவர்கள் மற்றும் விளக்குக் கம்பங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கொடிகள் அகற்றப்பட்டன.
சமூக ஊடகங்களில் “ஆபரேஷன் ரெய்ஸ் தி கலர்ஸ்” (Operation Raise the Colours) என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட இந்த இயக்கம், தேசப்பற்று மற்றும் பெருமையின் வெளிப்பாடாக அதன் ஆதரவாளர்களால் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இங்கிலாந்தில் குடிவரவு குறித்த சமூக பதற்றங்கள் நிலவி வரும் நிலையில், St George cross கொடி பெரும்பாலும் தீவிர வலதுசாரி குழுக்களால் பயன்படுத்தப்படுவதால், இந்த இயக்கம் சிலரிடையே அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக அச்சுறுத்தும் நடத்தைகள் மற்றும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நவம்பர் மாத இறுதியில் மூன்றாம் தரப்பு பாதுகாப்பு காவலர்களை மாநகராட்சி நியமித்தது. இது போன்ற நடத்தைகளை மாநகராட்சி நிர்வாகம் வன்மையாகக் கண்டிப்பதோடு, பணியாளர்கள் தங்களது கடமைகளை அச்சமின்றி செய்ய உரிமை உண்டு என்றும் வலியுறுத்தியுள்ளது.
மாநகராட்சி கவுன்சிலர் சாரா சேம்பர்ஸ் இது குறித்து கூறுகையில், பொது இடங்களில் கொடி பறக்கவிடும் இந்த பிரச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் இது என்று குறிப்பிட்டார்.
அதேவேளை, பொதுமக்கள் தங்களது சொந்த இடங்களில் கொடி ஏற்றுவதை தாம் முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார். பொது இடங்களைப் பாதுகாப்பாகவும், முறையாகவும் பராமரிக்க வேண்டிய சட்டரீதியான பொறுப்பின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி செய்தித் தொடர்பாளர் விளக்கியுள்ளார்.
The post டெர்பி நகரில் சுமார் 950 கொடிகள் அகற்றம்: ஒப்பந்ததாரர்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு appeared first on Vanakkam London.