திருச்சி: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்டா உள்ளிட்டபல்வேறு மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் தாமதம் ஆனதால், அங்கு விவசாயிகள் கொட்டி வைத்திருந்த நெல்மணிகள் முளைவிடத் தொடங்கியுள்ளன. அத்துடன், பாதிக்கப்படாத நெல்மணிகளின் ஈரப்பத அளவும் அதிகரித்து விட்டது.
எனவே, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17-ல் இருந்து 22 சதவீதமாக மத்திய அரசு உயர்த்த வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, தமிழகத்தில் நேற்றும், இன்றும் (அக்.25, 26) ஆய்வு செய்ய 3 குழுக்களை மத்திய உணவுத் துறை அனுப்பியுள்ளது.
இதில், திருச்சி, புதுக்கோட்டை, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்ய மத்திய உணவுத் துறை துணை இயக்குநர் ஆர்.கே.சஹி தலைமையிலான குழுவினரும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்ய இணை இயக்குநர் பி.கே.சிங் தலைமையிலான குழுவினரும் நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்து தனியார் ஓட்டலில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், மத்திய உணவுத் துறை அமைச்சகத்தில் இருந்து வந்த உத்தரவையடுத்து, செறிவூட்டப்பட்ட அரிசி உற்பத்தி ஆலைகளில் ஆய்வு செய்ய ஆர்.கே.சஹி தலைமையிலான குழுவினர் நாமக்கல்லுக்கும், பி.கே.சிங் தலைமையிலான குழுவினர் கோவைக்கும் திடீரென புறப்பட்டுச் சென்றனர். அந்தக் குழுவினருடன் நுகர்பொருள் வாணிபக்கழக தரக்கட்டுப்பாடு முதுநிலை மேலாளர் செந்தில், மேலாளர் மணிகண்டன் ஆகியோரும் சென்றனர்.
இதனால், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நேற்று நடைபெற இருந்த ஆய்வுப் பணிகள் இன்று (அக்.26) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.