நாகப்பட்டினம்: தான் டெல்டாகாரன் என்று பெருமையாக கூறிக் கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்டா பகுதி மக்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறினார்.
நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அனைவரும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட உள்ள நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டும் தீபாளியை சிறப்பாகக் கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர். அரசு கொள்முதல் கிடங்குகள் போதிய அளவில் இல்லாததாலும், வழக்கத்தைவிட 3-ல் ஒரு பங்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாலும் விளைந்த நெல் மணிகள் மழையில் நனைந்து, முளைத்து வருகின்றன. இதனால், குறுவை சாகுபடி செய்த விவசாயிகளின் வாழ்வு கேள்விக்குறியாக உள்ளது.
உற்பத்தி செய்த நெல்லை விற்க முடியாத நிலை விவசாயிகளுக்கு மிகவும் மோசமானது. நெல்லைக் கொள்முதல் செய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசின் அக்கறையின்மையாலும், மெத்தனப் போக்காலும் நாகை, தஞ்சை, திருவாரூர் பகுதி விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
வீண் விளம்பரத்துக்காக செலவு செய்யும் திமுக அரசு, விவசாயிகளுக்குத் தேவையான கொள்முதல், சேமிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையங்களை அமைக்காததால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னை டெல்டாகாரன் என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறார். ஆனால், டெல்டா விவசாயிகள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர் எப்படி தமிழக மக்களை பாதுகாப்பார்? இவ்வாறு அவர் கூறினார்.