படக்குறிப்பு, சென்னையில் இருந்து விஜய் கிளம்பியபோது
கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று ஆஜரானார்.
விசாரணைக்காக விஜய் தனி விமானத்தில் டெல்லி வந்தடைந்தார். அவரிடம் காலை சுமார் 11.30 மணி முதல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்தநிலையில், விசாரணை முடிந்து மாலை சிபிஐ அலுவலகத்தில் இருந்து விஜய் வெளியே வந்தார்.
கூட்டத்துக்குத் தாமதமாக வருகை தந்த குற்றச்சாட்டு, கூட்ட மேலாண்மை, மேலும் கரூர் நிகழ்வுடன் தொடர்புடைய அமைப்புசார்ந்த பொறுப்புகள் ஆகியவை தொடர்பாக இந்த விசாரணையின்போது சிபிஐ கவனம் செலுத்துவதாக ஏ.என்.ஐ செய்தி முகமை கூறியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
தவெக நிர்வாகிகளிடம் ஏற்கெனவே விசாரணை
இந்த வழக்கில் ஏற்கனவே அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகளிடம் டெல்லியில் கடந்த மாதம் விசாரணை நடத்தப்பட்டது.
கரூரில் கூட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை, கரூருக்கு வரவழைத்து ஆய்வும் நடத்தப்பட்டது. அந்த வாகனத்தின் ஓட்டுநரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் சி.பி.ஐ. பதிவுசெய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் விஜயின் பெயர் இல்லை. இருந்தபோதும் அவரிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்தது. அதன்படி ஜனவரி 12ஆம் தேதி டெல்லியில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
பட மூலாதாரம், ANI
மேல்முறையீடு
கரூர் கூட்ட நெரிசலை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளை கொண்டு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை இந்த மனு எதிர்த்தது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்ன?
பட மூலாதாரம், Getty Images
மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது.
சிபிஐ விசாரணையை கண்காணிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மேற்பார்வைக் குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
சிபிஐ விசாரணையை இந்தக் குழு கண்காணிக்கும். சிபிஐக்கு முறையான வழிகாட்டுதல்களை வழங்கவும், சிபிஐ சேகரித்த ஆதாரங்களை மறுபரிசீலனை செய்யவும் அதற்கு சுதந்திரம் உள்ளது. விசாரணையின் முன்னேற்றம் குறித்து சிபிஐ அதிகாரிகள் மாதாந்திர அறிக்கைகளை இந்த மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிப்பார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் மாவட்ட வாரியாக பரப்புரை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில், கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் 11 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரித்தது.
மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரித்தது.
இந்தநிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.